Thursday, February 11, 2010

க‌விதைக் காத‌லி


அவனுக்கு அவளை முதலில் எப்போது பார்த்தோம்,எப்போதிலிருந்து அவள் மேல் காதல் வந்தது என்று எதுவும் நினைவில் இல்லை.ஆனால்,அவளைப் பற்றியே தினமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.எத்தனையோ பெண்களைத் தினமும் பார்க்க,பேச நேர்ந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டும்,அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் என்றே யோசித்துக் கொண்டும் இருப்பது அவனுக்கு புது வித அனுபவமாகவும் இருந்தது.

எல்லாப் பெண்களையும் போல் இவளும் அழகாக சிரிப்பாள்;அதிகமாக பேசுவாள்.இவனுக்கு அவளென்றால் உயிர்.அவளுக்கு கவிதைகள் என்றால் உயிர்.எப்போதும் ஏதாவது கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்பாள்;இல்லையென்றால் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள்;இல்லையென்றால் ஏதாவது கவிதை எழுதிக் கொண்டிருப்பாள்.இவனுக்கோ கதைகளே புரியாது;இதில் எப்படி கவிதைகளைப் படித்து புரிந்து அவளிடம் பேசுவது.ஆனாலும்,கடந்த மூன்று மாதங்களாக, ஒவ்வொரு வார இறுதி நாளன்றும் மாலை வேளைகளில் அருகில் இருக்கும் "Coffee Shop"-ல் சந்திப்பது இருவரின் வழக்கமாயிருந்தது.அவளுடன் இருக்கும் வேளைகளிலெல்லாம் தாயின் கதகதப்பில் அமைதியாகத் தூங்கும் குழந்தை போல் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.தான் அவளை விரும்புவது போன்றே அவளும் தன்னை விரும்புவதாக அவனுக்குத் தோன்றிற்று.ஒரு பொண்ணு எப்ப ஒரு பையன் மேல் அக்கறை செலுத்த ஆரம்பிக்குறாளோ, அப்பவே பசங்களுக்குப் பெண்களைப் பிடித்துப் போய்விடுகிறது.அதனால்தான் எல்லாப் பசங்களுக்கும் அவர்களுடைய அம்மா மற்றும் சகோதரிகளை அதிகமாகப் பிடிக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு முறை அவளை சந்திக்கும்போதும்,அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பான்.அவள் தனக்குப் பிடித்த ஆரஞ்சு கலர் சுடிதாரில் வரும் நாளன்று அவளிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவு செய்திருந்தான் அவன்.
"இன்னைக்கு ஒரு அழகான கவிதை ஒன்றை எழுதினேன்" என்றாள் அவள் மஞ்சள் சுடிதாரின் நுனியைப் பிடித்துக் கொண்டே.
"என்ன கவிதை என்றான்?" இவன்
"ஒரு பெண் தன் கனவு காதலனைப் பிரிந்து படும் துயரங்களை பற்றிய கவிதை" என்றாள் அவள்.
சுவாரசியம் ஏதுமில்லாமல் "ம்" என்றான்.அவளிடம் கவிதை வரிகளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.எங்கே சொல்லி விடுவாளோ என்றும் பயந்தான்.
தன் கவிதை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வான் என்று நினைத்தவளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.அவள் எழுதிய கவிதைகளிலே இதுதான் அவளுடைய "Best" என்று வேறு நினைத்திருந்தாள் அவள்.

"உனக்கு ஏன் கவிதைகள் என்றாலே பிடிப்பதில்லை"?.சிலருக்கு கவிதை எழுதுவது வராவிட்டாலும் படிப்பதிலோ,கேட்பதிலோவாவது விருப்பம் இருக்கும்.வர வர உன்னிடம் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை.உனக்கு கவிதை,இலக்கியம் போன்றவற்றிலெல்லாம் விருப்பமே இருப்பதில்லை.என்னுடைய கவிதைக் கேட்டு என்னைப் பாராட்டுவாய் என்று வந்தேன்.உன்னுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம் நான் வெறுமையாக உணர்கிறேன் என்று கோபமாகக் கிளம்பிச் சென்றாள்.

அவளுக்கு அவனிடம் கோபமாக பேசியது மிகுந்த வருத்தத்தை தந்தது.அதுவும் அவனைப் பார்க்க வருவதற்கு சற்று முன்புதான் அவள் அம்மாவிடம் எதற்கோ சண்டை போட்டு விட்டு வந்தாள்.அம்மா மேல் உள்ள கோபத்தைத் தேவையில்லாமல் அவனிடம் காட்டியது புரிந்தது.அவன் மேல் அவளுக்கு பரிதாபம் ஏற்பட்டது.அவனுக்குக் கவிதையைப் பற்றி ஏதும் தெரியாவிட்டாலும்,நன்றாக ஓவியம் வரைவான் என்பது அவளுக்கும் தெரியும்.தேவையில்லாமல் அவனைத் திட்டியதை நினைத்து வருந்தி அவனுக்கு "Sorry" என்று மெசேஜ் அனுப்பினாள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் விருப்பம் இருக்கும் என்பது இவளுக்கு ஏன் புரிவதில்லை;நான் மட்டும்தான் அவளை காதலித்துக் கொண்டிருக்கிறேன்;அவள் தன்னை ஒரு நல்ல நண்பனாக கூட நினைப்பதில்லை என்று அவள் மேல் கோபத்தில் இருந்ததால் அவன் பதில் எதுவும் அனுப்பவில்லை.சிறிது நேரம் சென்ற பிறகு "I am really very Sorry" என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.அதன் பின் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மெசேஜ்.

"கரையில் நிற்கும் உன் கால்களுக்கு
என் அலைகளைக் கொண்டு
எத்தனை முறை மன்னிப்பு கோருவது"

நான்கு,ஐந்து முறை படித்தபிறகுதான் அவள் எழுதியிருந்தது அவனுக்குப் புரிந்தது. அவளுக்குத் தொலைபேசி உன் மேல் கோபம் ஏதுமில்லை.அடுத்த வாரம் சந்திக்கலாம் என்றான்.காதலுக்காக ஒவ்வொருவனும் எது எதையோ செய்யும் பொழுது,அவளுக்குப் பிடித்த மாதிரி தானும் கவிஞனாகி விடலாம் என்று முடிவு செய்து,இனிமேல் அவளை சந்திக்கையில் தன் கவிதைகளோடுதான் சந்திப்பது என்றும் நினைத்துக்கொண்டு சங்க காலப் பாடல்களிலிருந்து நவீன கவிதைகள் வரை படிக்க ஆரம்பித்தான்.அடுத்த வாரம் அவள் அவனை "Coffee Shop" ற்கு அழைத்த பொழுது,வேலையில் 'பிஸி' என்று சந்திப்பதை தவிர்த்தான்.அவளுக்கோ, அன்று அவனிடம் கோபமாகப் பேசியதால்தான் தன்னை சந்திப்பதைத் தவிர்ப்பதாகத் தோன்றிற்று.

அவனுக்கு,அவன் மேலேயே மிகவும் கோபமாக இருந்தது.இத்துடன் அவளைப் பார்த்து முழுமையாக 90 நாட்கள் ஆயிற்று.அவனால் ஒரு வரி கூட இதுவரை எழுத முடியவில்லை.படிக்கின்ற காலத்தில் அல்ஜுப்ரா,Chemistry Equations,Java போன்றவற்றையெல்லாம் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காவிட்டாலும் கூட,அவனால் கொஞ்சமாவது அவற்றைப் புரிந்து கொள்ளவும்,எழுதவும் முடிந்தது.எத்தனையோ கவிதைப் புத்தகங்களைப் படித்தும்,ஒரு கவிதை கூட எழுத முடியாததின் காரணங்களும் அவனுக்குப் புரியவில்லை.கவிதை எழுதியபிறகுதான் அவளைப் பார்ப்பதென்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்றும் தோன்றியது.ஒருத்தவங்களை விட்டு விலகி இருக்கும்போதுதான்,அவங்க கூட நாம எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம் என்பதே தெரிய வருகிறது என்று நினைத்துக் கொண்டான்.அந்த நேரம் பார்த்து அவளும் Call பண்ணி இப்போது சந்திக்கலாமா என்று கேட்டாள்.தன்னைவிட அவளுக்குத் தன்னை சந்திக்க ஆர்வமிருப்பதை நினைக்கையில் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இன்று தன் காதலை எப்படியாவது சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான் அவன்.தான் பெற்ற பிள்ளையிடம் தான்தான் அதனுடைய அம்மா என்று சொல்ல முடியாத தாயின் வலியை விட,காதலிக்கும் பெண்ணிடம் 'காதலை' சொல்ல முடியாததின் வலி அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது.இன்னும் பத்து நிமிடங்களில் அவள் இங்கு இருப்பாள்.முழுமையாக தொன்னூறு நாட்களுக்குப் பிறகு அவளை சந்திக்கப் போகின்றான்.

ஆரஞ்சு கலர் சுடிதாரில் அட்டகாசமாக வந்தாள் அவள்.இன்னும் கூட என் மேல் கோபமா என்ன?போன வாரம் கூட சந்திக்கலாமென்றால் வெளியூர் போகிறேன் என்றாயே என்றாள்.உன்னைப் பார்க்காமல் இருந்தப்பதான் உன்னை எவ்வளவு தூரம் Miss பண்றேன்னு புரிஞ்சது.எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படி போயிக்கிட்டிருக்கு என்றாள்.அப்புறம், எனக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு.நேரில் உன்னைப் பார்த்துக் கொடுக்கலாம் என்று Phone பண்ணினால் நீ பிஸியாகவே இருந்தாய்.இந்தா Invitation,கண்டிப்பாக கல்யாணத்திற்கு வரணும் என்றாள்.

நீ கல்யாணம் பண்ணிக்கப் போகிறவருக்கு கவிதை எழுத வருமா என்றான்.அவரும் உன்னை மாதிரிதான் "கவிதைனா என்னன்னே தெரியாது" என்று சொல்லி சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,அன்று இரவு தன்னுடைய முதல் கவிதையை எழுத ஆரம்பித்தான்.

காதலைக் கொலை செய்தல்
------------------------------------
உன் அன்பும் கிடைக்காமல்
என் பிரியங்களும் கிடைக்காமல்
தனித்து விடப்பட்ட
ஒரு வெயில் காலத்தில்
நம் கால்களையே சுற்றித் திரிந்து
கத்திக் கதறி
தனித்து விடப்படப்பட்டதின் அவமானத்தில்
ஜீவித்திருக்க வேறு வழி தெரியாமல்
நம் காதல் தற்கொலை செய்து கொண்டது

கொலை செய்த குற்றவுணர்ச்சி
ஏதும் இல்லாமல்
அடுத்த கொலைகளுக்காக
ஆயத்தமாகிறோம் நாம்...

2 comments:

  1. கதைக்குள் இரண்டு கவிதைகளை கொண்டு வந்து அருமையாக அமைத்துள்ளீர்கள்.
    இரண்டு கவிதைகளும் அருமை

    // "கரையில் நிற்கும் உன் கால்களுக்கு
    என் அலைகளைக் கொண்டு
    எத்தனை முறை மன்னிப்பு கோருவது" // ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


    sorry-யை இதை விட எப்படி அழகாக கேட்கமுடியும் ?

    // கொலை செய்த குற்றவுணர்ச்சி
    ஏதும் இல்லாமல்
    அடுத்த கொலைகளுக்காக
    ஆயத்தமாகிறோம் நாம்... //

    இந்த நான்கு வரிகள் பொருள் புதைந்துள்ள வரிகள்.

    இது போன்ற புதிய முயற்ச்சிகள் உங்களிடம் இருந்து வரவேற்க்கப்டுகிறது.
    உங்களின் முதல் கதைக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி பழனி!இந்த மாதிரியும் எழுத இனி மேல் முயற்சி பண்றேன்!

    ReplyDelete