Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - திரை விமர்சனம்


திருச்சி பக்கமிருக்கும் பொன்மலை என்ற ஊரில். நான்கு பேர்கள்(விமல், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இன்னொருவர்) வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் இவர்கள் திருந்தி, வாழ்க்கையில் செட்டில் ஆனார்களா என்பதுதான் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கேடி பில்லா, கில்லாடி ரங்கா' படத்தின் கதை.

படம் பார்ப்பவர்களை சிரிக்காமல் வீட்டுக்கு அனுப்பக்கூடாது என்று முடிவோடு படம் எடுத்திருப்பார்கள் போல. படத்தின் முதல் இரண்டு மணி நேரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பதற்கும், கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவும்,கர்சீப் இல்லாமல் யாரும் இந்தப் படத்திற்கு செல்ல வேண்டாம். சண்டைக்காட்சி முதற்கொண்டு அனைத்தும் சிரிப்பு வெடிதான்.'தேனீ' கேசவனாக விமல், 'பட்டை' முருகனாக சிவகார்த்திகேயன். விமலும், சிவகார்த்திகேயனும் அநாயசமாக நகைச்சுவையில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவியும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினாவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு ஹீரோ அவர்களுக்கு இரண்டு நண்பர்கள். இரண்டு ஹீரோக்களின் அப்பா அம்மாக்கள், அவர்களின் வீட்டில் இரண்டு நாய்கள். அப்புறம், இரண்டு ஹீரோயின்கள், அவர்களின் அப்பா, அம்மாக்கள் என்று அனைத்து கேரக்டர்களையும் வைத்துக் கொண்டு நகைச்சுவைப் பட்டாசு வெடித்திருக்கிறார்கள்.

விமல், வீட்டில் தனக்கு சாப்பாடு கொடுக்கும்போது 'விஷம்' கலந்திருக்கிறதா என்று நாய்க்கு முதலில் சாப்பாடு கொடுத்து செக் செய்வது, அப்பாவுக்கு 'பீட்டர்' என்று பேர் வைப்பது என்று ஒரு பக்கம் கலக்கினால், மறுபக்கத்தில் சிவகார்த்திகேயன் காதலுடன் ரெஜினா பின்னாடியே சுற்றுவதும், நடிச்சு பேசுறாளா இல்லை புடிச்சு பேசுறாளா என்று புலம்புவதும், ரெஜினா அனுப்பிய ஆட்கள் சிவகார்த்திகேயனை "நையப்(?)" புடைப்பதும் குபீர் சிரிப்பு அளிக்கும் காட்சிகள். மாமாஸ் கிஃப்ட் என்று பைக்கில் ஸ்டிக்கரோடு சூரி ஊர் சுற்றிக் கொண்டிருப்பதும், சிவகார்த்திகேயனிடம் "லிஃப்ட் கேட்கும் போது ஸ்விப்ட் கார்தான் வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது, ஓட்டை சைக்கிளா இருந்தாலும் போகனும்" என்று அட்வைஸ் பண்ணுவதும், பச்சப் புள்ள காசுல குடிக்கிறோமுன்னு தோணுதா என்று கேட்பது, அதேபோல் எலக்சன் ரிசல்ட் வந்தவுடன் சிவகார்த்திகேயனிடம், எல்லாம் ஓகே, ஆனால் பெட்டியைத் தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு நைட் ஃபுல்லா முழிக்க வச்சதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதும்,சூரியும் காமெடியில் தன்னுடைய பங்கை நன்றாக அளித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பிந்து மாதவி விமலிடமும், ரெஜினா சிவகார்த்திகேயனிடமும் உடனே காதலில் விழுவது நம்பும்படி இல்லை.

படத்தின் காமெடிக்குப், படத்தின் வசனகர்த்தாவும் மிகப் பெரிய காரணம்("நான் பசியா இருக்கேன்; அப்புறம் கூப்பிடு", "போன பஸ்ஸுக்கு ஏன் கையக் காட்டுற"). படம் ஆரம்பத்தில், இடைவேளையில் மற்றும் அடிக்கடி காட்டப்படும் 'ரெயிலை'ப் படத்தின் க்ளைமாக்ஸில் பயன்படுத்தியிருப்பதில் இயக்குனர் தெரிகிறார்.பொதுவாகக் காமெடிப் படங்களில் சென்டிமென்ட் எடுபடாது. ஆனால் இந்தப் படத்தில் கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகள் 'பாண்டிராஜின்' திறமையைக் காட்டுகின்றன.

படம் முடிந்தவுடன், இந்த 'மாதிரி' ஒரு படம் பார்த்து 'எவ்வளவு' நாளாச்சு என்று தோன்றுவதுதான், இந்தப் படத்தின் வெற்றி.

Saturday, March 16, 2013

பரதேசி - திரை விமர்சனம்


பெரிதாக காசு ஏதுமில்லையென்றாலும் சொந்த ஊரில் சந்தோஷமாகவே இருக்கும் மக்கள், பஞ்சம் பிழைக்க வெளியூருக்கு சென்று, படும் அவலத்தை சொல்லும் படம்தான் பாலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'பரதேசி' படத்தின் கதை.

சாளூர் என்ற கிராமத்தில், சுதந்திரத்திற்கு முன் வாழும் கிராமத்து மக்களின் கொண்டாட்டமான வாழ்க்கையோடு படம் ஆரம்பிக்கிறது. ஊர் மக்களுக்கு 'தண்டோரா' போட்டு கல்யாணம், கருமாதி போன்றவற்றை சொல்பவராக அதர்வா. அதர்வாவும், வேதிகாவும் காதலிக்கிறார்கள்.  அதன்பின் உள்ளூரில் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால், வெளியூரில் வேலைக்கு சென்று படும் அவலத்தைக் கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கிறார்கள்.

பாலா தன்னுடைய முந்தைய படங்களில் இருந்த 'க்ளிஷே'வை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.(ஹீரோ, ஹீரோயினை 'லந்து' பண்ணிக்கொண்டே இருப்பது, படத்தின் க்ளைமாக்ஸில் மெயினான கேரக்டர் இறப்பது, சண்டைக்காட்சிகளில் மிக குரூரமாக அடிப்பது). அதேபோல் அவருடைய படங்களில் மிகக் கச்சிதமாக அமைந்த‌ திரைக்கதையும் இதுதான் என்று தோன்றுகிறது.  கல்யாணத்தன்று, ஊரில் ஒருவர்(விக்ரமாதித்யன்) இறந்துவிட,நெல்லுச் சோறு சாப்பிடுவதற்காக, ஊர் மக்கள் அனைவரும் அதை மறைப்பதிலேயே கிராமத்தின் வறுமையை அழகாகக் காட்டிவிடுகிறார்கள். அதனாலேயே கங்காணி ஆசை காட்டி, கிராம மக்களை எளிதாக அழைத்துச் செல்ல முடிகையில் நமக்கு எந்த கேள்வியும் எழுவதில்லை. 48 நாட்கள் நீளும் பயணத்தின் போது, ஒருவன் உயிருக்குப் போராடுவதும், அவனை அப்படியே விட்டுவிட்டு மக்கள் பயணத்தைத் தொடர்கையில், அவனின் விரல்கள் அவர்களை நோக்கி நீள்வது என்று படத்தின் பல காட்சிகள் படம் பார்ப்பவர்களை கலங்கடிக்கின்றன. அதர்வா, வேதிகா நினைவாக அவர் அனுப்பிய லெட்டரை எடுத்துப் பார்ப்பது க்ளாஸ். இத்தனை காலமும் தன்னுடைய மனைவியாவது குழந்தையுடன் ஊரில் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அதர்வா 'டீ எஸ்டேட்டில்' கஷ்டப்படுவதும், கடைசியில் அதர்வா வேதிகாவைப் பார்த்தவுடன் அழுவதும், அதர்வாவைப் பார்த்ததில் வேதிகா சந்தோஷப்படுவதும், பாலாவின் படங்களில் இதுதான் 'பெஸ்ட்' க்ளைமாக்ஸ் என்று தோன்றுகிறது.

எல்லா விதத்திலும் ஒரு டாக்குமென்டரி படம்போல் ஆகக் கூடிய விசயத்தை, மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் ஒரு திரைப்படமாக எடுத்திருப்பதே பாலாவின் வெற்றி என்று தோன்றுகிறது. அதேபோல்,படத்தின் ஆச்சரியப்படத்தக்க விசயம், இரண்டு மணி நேரப் படத்தில், பல விசயங்களை படத்தின் ஊடாகச் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்( தீண்டாமைப் பிரச்சனை, கல்யாணத்திற்கு முன் உறவு கொள்வது, பேஷன்ட் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், டாக்டர் அவரைக் காப்பாற்றாமல், கிறித்தவ மதத்தைப் பரப்புவதில் முனையாக இருப்பது,  அதர்வா விறகு வெட்டிப்போட்டு விட்டு, டீக்கடையில் காசு கிடைக்காமல் ஏமாற்றப்படுவது, காந்தி மேலான வெள்ளைக்காரர்களின் அபிப்ராயம்). பாலா படத்தில், படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

படத்தின் சில காட்சிகள் 'நான் கடவுளை' ஞாபகப்படுத்துவதும், படத்தில் அடுத்துவரும் காட்சிகள் எளிதாக ஊகிக்கக் கூடிய‌ அளவில் இருப்பதும் படத்தின் பலவீனம். ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை கொஞ்சம் பரவாயில்லை. செழியனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான 'மூடை'க் கொடுக்கிறது.

பொதுவாக பல பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அதிலிருந்து மூன்று மணி நேரமாவது விடுபடலாம் என்று சினிமாவுக்கு செல்வார்கள்.  திரைப்படங்களும் 'என்டெர்டைய்ன்' ஆக இருந்து, மக்களை 3 மணி நேரம் மட்டும் அவர்களுடைய பிரச்சனைகளை மறக்கச் செய்யும். பரதேசி போன்ற திரைப்படங்கள் பார்க்கையில், நமக்கு இருக்கும் பிரச்சனைகளெல்லாம் ஒன்றுமேயில்லை என்று படம் முடிந்தவுடன் தோன்ற செய்து, பிரச்சனைகளை மறக்கடிக்கும்.

பரதேசி - சக மனிதனை நேசி