Friday, February 22, 2013

ஆதி பகவன் - திரை விமர்சனம்


தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஜெயம் ரவி, மும்பை தாதா 'ஒருவரின்' வலையில் விழுந்து, அவருக்குப் பதில் ஜெயில் செல்ல நேர்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிப்பில் அமீர் இயக்கியிருக்கும் 'ஆதி பகவன்' படத்தின் கதை.

ஆந்திராவில் இன்கம்டாக்ஸ் ஆஃபிஸர் போல் 'Special' ஆக நடித்து, கிரானைட் அதிபர்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஜெயம் ரவி தாய்லாந்து செல்லும் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. அதன் பின், ஆக் ஷன் படமான ஆதிபகவன், மெதுவாக செல்லும் திரைக்கதையால் இடைவேளை வரை தடுமாறுகிறது. இடைவேளைக்கு சற்று முன் வரும் ட்விஸ்டும், அதன் பின் வரும் மற்றொரு ட்விஸ்டும் படத்தைக் 'கொஞ்சம்' காப்பாற்றுகின்றன. கொஞ்சம் தாய்லாந்து பெண் சாயலில் இருக்கும் 'சாக் ஷி' ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார்.

படத்தின் பெரிய பலவீனம், இப்படத்திற்கு ஜெயம் ரவியைத் தேர்வு செய்ததுதான்(இப்படத்திற்கு அஜித் சரியான தேர்வாக இருந்திருப்பார்). ஜெயம் ரவி ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருந்தாலும்,தாதா வேடமும் அவருக்குப் 'பெரிதாக' பொருந்தவில்லை. பகவான் வேடத்திலும் அவருடைய 'குரல்' ஒத்துழைத்த அளவிற்கு 'முகம்' ஒத்துழைக்கவில்லை. ஹீரோயினான நீது சந்திரா படம் முழுவதும் வருகிறார்; கிடைத்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். நீது சந்திராவிற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் அசத்தியிருக்கிறார்.அரசியல்வாதியைக் கொல்ல அவர் எழுந்திருக்கும் வரை காத்திருந்துவிட்டு அவர் எழுந்தவுடன் 'காலை வணக்கம்' என்று ஜெயம் ரவி சொல்வதில் அவருடைய 'வாய்ஸ் மாடுலேஷன்' ரசிக்க வைக்கிறது. நீது சந்திரா, 'ஆதி' ஜெயம் ரவியைக் குறைவான தலை முடியோடு படமாக வரைவதில் இயக்குனர் தெரிகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

பெரிய தாதா போல் பில்ட் அப் கொடுக்கப்படும் ஜெயம் ரவி சாதாரணமாகப் பாரிலும், ரோட்டிலும் தனியாக சுற்றிக் கொண்டிருப்பதும், அவரைக் கொல்ல அவருடைய எதிரி பாபு ஆண்டனி திணறிக் கொண்டிருப்பதும் படத்தில் தனியாகக் 'காமெடி' காட்சிகள் இல்லாததை நிவர்த்தி செய்கின்றன. பெரிய தாதாவாகக் காட்டப்படும் 'ஆதி' ஜெயம் ரவியை, மும்பை தாதாவான 'பகவான்' ஜெயம் ரவி சுலபமாக வலையில் விழ வைப்பதில், மும்பை தாதாதான் பெரிய ஆள் என்று நினைத்தால், திரும்பவும் பகவானை, ஆதி சுலபமாக வீழ்த்துவது நம்பும்படி இல்லை.

நீண்ட இடைவேளைக்குப் பின்(பருத்தி வீரன்) இப்படத்தை இயக்கியிருக்கும் அமீர், இதுபோன்ற ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆதி பகவன் - பாதி பகவன்

Sunday, February 10, 2013

கடல் - திரை விமர்சனம்




கிறித்துவ ஆசிரியப் பள்ளியின் ஆசிரியர்களாக இருக்கும் அரவிந்த்சாமி மிகவும் ஒழுக்கமானவர். அர்ஜீன் அவருக்கு நேர் எதிரானவர். அர்ஜீன் செய்த  தவறைச் சுட்டிக்காட்டி,  அவரை பள்ளியிலிருந்து அரவிந்த்சாமி வெளியேறச் செய்கிறார். அதற்கு அர்ஜீன் அவரை பழிவாங்க முயற்சிப்பதுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடல்' படத்தின் கதை.

இப்படத்தின் கதை, திரைக்கதை(மணிரத்னத்துடன் இணைந்து), வசனத்தை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவருடைய சமீபத்திய சாதாரண நாவல்களான அனல்காற்று, இரவு, உலோகம் போன்றவற்றில் தன்னுடைய வார்த்தை ஜாலத்தின் மூலம் இலக்கியமாக காட்ட முயற்சித்திருப்பார். அதேபோல் காலம்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும்(அண்ணன் தம்பியில் அண்ணன் நல்லவன்; தம்பி கெட்டவன், இரண்டு நண்பர்களில் ஒருவன் நல்லவன்;மற்றொருவன் கெட்டவன்) அரதப் பழசான கதையை தேவன், சாத்தான் என்று முலாம் பூசி பெரும் 'அறத்துடன்' வித்தியாசமான கதை போன்று கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் சிறு வயது எபிசோடும், மீனவ மக்களின் பின்னணியைச் சொல்லும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் அற்புதம். கடலை அதன் அத்தனை பிரம்மாண்டத்தோடு அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அனாதை போன்று இருக்கும் கவுதம் சிறு வயதில் பொறுக்கிபோல் சுற்றிக் கொண்டிருப்பதும், அரவிந்த் சாமியின் வருகைக்குப் பிறகு நல்ல இளைஞனாக வாழ்ந்து கொண்டிருப்பது, துளசி மேல் ஏற்படும் காதல் என்று படத்தின் முதல் பாதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் வசனங்களும் பல இடங்களில் பலே(ஏன் பார்க்க வந்திருக்கீங்க;பார்க்காம இருக்க முடியலை, என்ன தொழில் செய்றவங்கன்னு தெரியாது; கெட்ட தொழில் செஞ்சா நானும் செய்வேன்)இரண்டாம் பாதியின் இறுதியில்தான்  'கொஞ்சம்'சொதப்பியிருக்கிறார்கள்'. க்ளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம்; க்ளாமாக்ஸ் ஃபைட்டிற்கு ரஹ்மானின் இசையும் பொருந்தவே இல்லை. அதுவும் அர்ஜீன் தோற்ற பிறகு கவுதம், துளசியிடம் சென்று பேசிக் கொண்டிருக்கும் கடைசி 10 நிமிடக் காட்சிகளைத் தாரளமாக‌ வெட்டியிருக்கலாம்

கவுதம் கார்த்திக் முதல் படம் போலவே இல்லாமல் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். துளசியின் 'முகம்' கூட '15' வயது பெண் போல் இல்லை. துளசியின் நடிப்பைப் பார்த்த பின் மணிரத்னம் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து, அவருக்குக் 'கொஞ்சம்' மனநிலை சரியில்லாதவர் போல் மாற்றிவிட்டாரோ என்று தோன்றுகிறது. அர்ஜீன், அரவிந்த்சாமியின் நடிப்பு கனகச்சிதம். 'கண்ணோடு காண்பெதெல்லாம்' படத்திற்குப் பின் அர்ஜீன் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னத்னம் படங்களில் குறைவாகப் பேசுவார்கள். நமக்கு கொஞ்சம் புரியாது. இந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களும் அதிகமாகவே பேசுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் புரியவில்லை. கவுதம் போன்றே அர்ஜீனின் பழைய வாழ்க்கைதான் அவர் சாத்தானாக மாறக் காரணம் என்று தெரிகிறது. அதனால்தான் கவுதமைப் பார்த்தவுடன், அர்ஜீன் அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். ஒரு முறை அர்ஜீனால் அவமானப்பட்டு, சிறைக்கு சென்று வந்ததற்கே அரவிந்த்சாமி கடைசியில் அர்ஜீனைக் கொல்ல முயற்சிக்கிறார். அப்படி இருக்கையில் அரவிந்த்சாமியைத் தேவன் போன்று காட்டுவதும் ,அர்ஜீனைச் சாத்தான் போன்று சித்தரிப்பதும் பொருந்தாதது போன்று இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை வேறு ஏதாவது இயக்குனர்கள் இயக்கியிருந்தால், படம் மிகவும் 'மொக்கை'யாக இருந்திருக்கும். உண்மையிலேயே மணிரத்னம் இயக்கியிருப்பதால்தான் படம் ஓரளவிற்கு பார்க்கும்படி இருப்பதாகத் தோன்றுகிறது. மணிரத்னம் செய்த ஒரே தவறு இந்தக் 'கதை'யைத் தேர்வு செய்ததுதான். நல்ல இலக்கியங்களால் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் இலக்கியவாதிகளால் அல்ல‌.

கடல் - முதல் பாதி தேவன்; இரண்டாம் பாதி சாத்தான்.

Friday, February 1, 2013

டேவிட் - திரை விமர்சனம்



விக்ரம், ஜீவா நடிப்பில், மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'டேவிட்'. ஒரே பேர்(டேவிட்) கொண்ட இருவரின் வாழ்க்கையின் சில பகுதிகளை மட்டும் நாம் கதறக் கதறக் காட்டியிருக்கிறார்கள்.

1999-ல் மும்பையில் ஜீவா, தன் தந்தை நாசருடன் வாழ்ந்து வருகிறார். மதபோதகரான நாசருக்கு, சில மத அமைப்புகளால் அவமானம் நேர்கிறது. 2000-ல் கோவாவில், விக்ரம் வாழ்ந்து வருகிறார். விக்ரம் வரும் காட்சிகளிலெல்லாம் 'மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது' என்று திரையில் வருகிறது. நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்(இஷா ஷெர்வானி) மீது விக்ரமிற்கு திடீரென்று காதல் வருகிறது. விக்ரமிற்கு காதலி கிடைத்தாரா, நாசருக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் பையன் ஜீவா துடைத்தாரா என்பதை நாம் சலிப்படையும் வகையில் திரையில் காட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை போய் ஏன் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளில் வேறு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

விக்ரமை விட ஜீவாவிற்குதான் ஸ்கோப் அதிகம்.விக்ரம், ஜீவா, நாசர் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. விக்ரம் வரும் போர்ஷனை விட, ஜீவா வரும் காட்சிகள் 'கொஞ்சம்' பரவாயில்லை. தன் குழந்தையுடன் இருக்கும் லார தத்தா ஜீவாவிற்கு நண்பி. அதேபோல் தபு, விக்ரமிற்கு.மொத்தப் படமுமே சுவாரஸ்யம் எதுவுமில்லாமல் நகர்கிறது. படத்தில் இறந்து போன விக்ரமின் அப்பா, ஆவியாக மற்றவர்களின் உடம்பில் புகுந்து பேசுவது எரிச்சல். படத்தின் ஒரே ஆறுதல், படம் இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.

படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தம் மீது கோபம் கொள்வார்கள் என்று தெரிந்தோ என்னவோ, படத்தில் விவரமாக 'உங்களுக்கு யார் தீங்கு செஞ்சாலும் மன்னிச்சுடுங்க' என்று ஒரு வசனம் வருகிறது. அதேபோல் 'கோடியில் ஒருத்தருக்குத்தான் கடவுள் வலியைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறார்' என்றும் ஒரு வசனம் வருகிறது. அந்த ஒருவர் நீங்களென்றால் தாராளமாக இந்தப் படத்தைப் போய் பார்க்கலாம்.

டைரக்டர் சார், திரும்பவும் மணிரத்னம் கிட்ட போய் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, இன்னும் கொஞ்சம் தொழிலைக் கத்துக்கிட்டு வந்து படம் எடுங்களேன், ப்ளீஸ்!