Tuesday, August 25, 2009

பிரிய‌ச‌கி-2


நான் தி.மு.க‌
நீ அ.தி.மு.க‌
உன் பெயருடன்
என் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்!

நீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்
என்னோடு சேர்ந்து
மல்லிகைப் பூவும் கிறங்குகிறது!

நீ ஊதிக் கொடுத்த பலூனால்
நான் மிதக்கிறேன் வானில்!

என் ஐம்புலன்க‌ளும்
ஒருங்கே வேலை செய்வ‌து
என்னுட‌ன் நீ இருக்கையில்தான்!

நீ நெற்றியில்
க‌ட‌னாகக் கொடுத்த‌ முத்த‌ம்
வட்டி போட்டு
இதழ் வ‌ரை வ‌ந்து நிற்கிறது இப்போது!

Saturday, August 22, 2009

கந்தசாமி‍-விமர்சனம்


தமிழ் சினிமாவின் கறுப்பு‍‍-வெள்ளை படக் காலத்திலிருந்து எல்லா ஹுரோக்களும் பண்ணிய,கறுப்பு பணத்தை எடுத்து வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு கொடுத்து உதவும் ஹுரோ பற்றிய கதையை 'ஷங்கர்' பட முலாம் பூசி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் சுசி கணேசனும்,விக்ரமும்.சி.பி.ஐ ஆஃபிசரான விக்ரம்,கெட்டவர்களிடமிருந்து பணத்தை அபகரித்து,கஷ்டப்படும் மக்களுக்கு,கடவுள் கொடுப்பது போல் கொடுத்து உதவுகிறார்.'இடையில்' ஷ்ரெயாவுடன் மோதல்,காதல்,மெக்சிகோ என்று காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒரே ஆறுதல் விக்ரம்.கொஞ்சம் வயசானது போல் தோன்றினாலும்,இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முழுப் படத்தையும் ஓரளவிற்காவது பார்க்கமுடிவது 'ஜென்டில்மேனா'க நடித்திருக்கும் விக்ரமால்தான்.கேமராமேனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.குறிப்பாக ஸ்ரெயாவை 'காட்டும்' இடங்களில்.
வடிவேலு காமெடியும் வர வர விவேக் காமெடி போல் மொக்கையாகிக் கொண்டே வருகிறது.தெலுங்கு நடிக‌ர் கிருஷ்ணா எப்படி ஒன்பது வயதிலேயே சி.பி.ஐ-ல் சேர்ந்தார் என்று தெரியவில்லை.பிரபுவிற்கு யாராவது பிரமோஷன் கொடுத்தால் தேவலை.'சாமுராய்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பின்னணி இசையை அதே போன்ற காட்சிகளுக்கு அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்திய தபால் துறையில் தேவையில்லாமல் ஏன் இவ்வளவு முழு நேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி(?) இப் படம் பார்க்கும்பொழுது எழுவதை தவிர்க்க முடியவில்லை.சுசி கணேசன் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன் 'படம் நன்றாக‌ வர வேண்டும்' என்று 'கந்த‌சாமிக்கு' ஒரு லெட்டர் எழுதி போட்டிருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

கந்த(ல்)சாமி.

Friday, August 21, 2009

பிரிய‌ச‌கி-1


கோபப்ப‌டுகையில்
அழகாய் இருக்கிறாய் என்றதற்கு
கோபப்பட்டாய்!

எங்கே பார்த்து விடுவேனோ என்று
நீ சேலைத் தலைப்பை
சரி செய்யும் போதெல்லாம்
பார்க்காத குற்றவுணர்ச்சியில் நான்!

உன் இதழ் ரேகைகளைப்
பிரதியெடுக்க‌த் தொட‌ங்கிய‌தில்
என் ஆயுள் ரேகை அதிகமாகிவிட்டது!

நான் குளித்துவிட்டு வருகையில்
எனக்கான துண்டு
உன் அழகிய நீண்ட கூந்தல்தான்!

என் த‌லைமுதல் பாதம் வ‌ரை
ஒவ்வொரு நர‌ம்பாய் இழுத்து
அழகிய‌ கோல‌மிட்ட‌வ‌ள் நீ!

தலை சாய்த்து
உதடு சுழித்து
புருவம் உயர்த்தி
நான் ஏன்
உன் இரு கைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய்
மார்புக்கு குறுக்கே
கைகளைக் கட்டிக்கொண்டு!.

Saturday, August 15, 2009

பிரிந்து பரிதவித்தல் (அ) பரிதவித்து பிரிதல்1) தசரதனை விட்டு
அவன்
அத்தனை மனைவிகளும்
ஒரே நேரத்தில் பிரிந்தால்
அவனுக்கு ஏற்படும்
வலியை விட‌
நீ ஒருத்தி பிரிந்ததில்
எனக்கு ஏற்பட்ட வலி அதிகம்
என் எலும்பிலும்
உன் பிரிவின்
தழும்புகள் இன்று.


2) காலச் சிறையில்
ம‌ரணம்தான் விடுதலை
காதல் சிறையில்
விடுதலையே மரணம்.

Sunday, August 9, 2009

தொலைந்(த்)த கனவு...பெருமழை பெய்து ஓய்ந்திருந்த‌
ஒரு பின்னிரவில்
ஆழ் மனப்பரப்பில் இருந்த‌
என் கனவுகள்
ஒவ்வொன்றாய் சேக‌ரித்து
புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒவ்வொரு க‌ன‌விலும் நீ
என்னுட‌ன் இருந்த‌ க‌ணங்க‌ள்
இதய‌ வெற்றிட‌த்தை
நிர‌ப்ப‌த் தொட‌ங்கிய‌ வேளையில்
க‌ழிவிர‌க்க‌ம் அதிக‌மாகி
என் க‌விதைக்கான‌
த‌லைப்பை எழுதத் தொட‌ங்கினேன்...

Sunday, August 2, 2009

தற்கொலைக்கான ஆயுதத்தை தீர்மானித்தல்


வாழ்க்கை சூன்யமாகிவிட்ட
ஒரு தருணத்தில்
தற்கொலைக்கான காரணங்கள் ஒவ்வொன்றாய்
பிரதியெடுக்கத் தொடங்கினேன்
கடைசி சிகரெட் ஒன்றை
புகைக்கலாம் என்று
நிலா காதலிக்கு
புகைகளால்
தூது அனுப்பிக் கொண்டிருந்த கணத்தில்
எதிர் வீட்டுப் பெண்
முற்றத்தில் அமர்ந்து
'டீ' குடிக்க ஆரம்பித்தாள்
இது அவளின்
கடைசி 'டீ' யாக இருக்குமோ என்று
அவளை பார்த்து சிரிக்கத் தொடங்கினேன்
சிகரெட் விரல்களை சுடத் தொடங்கியிருந்தது