Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல-திரை விமர்சனம்


வெண்ணிலா கபடி குழு' பட இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் கஜல் அகர்வால் ந‌டித்து வெளி வந்திருக்கும் படம் 'நான் மகான் அல்ல'.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வேலைக்காக காத்திருக்கும் கார்த்தி,கஜல் அகர்வாலைக் காதலிக்கிறார்.காலேஜில் படித்துகொண்டே பெண்களைக் கடத்திக் கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு ரவுடி கும்பல் செய்த கொலைக்கு,கார்த்தியின் அப்பா சாட்சியாகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சாதாரண ஒரு கதையை வைத்துக்கொண்டு திரைக்க‌தையின் மூல‌ம் ப‌ட‌த்தை சுவார‌சிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள்.ம‌ன‌தில் உள்ள‌தை அப்ப‌டியே வெளிக்காட்டிக் கொள்ளும் கேர‌க்ட‌ர் கார்த்திக்கு ந‌ன்றாக‌ப் பொருந்தியிருக்கிற‌து.கார்த்தி மற்றும் க‌ஜ‌ல் அக‌ர்வால் சம்ப‌ந்தப்ப‌ட்ட‌ காத‌ல் காட்சிகள் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.கார்த்தியின் சாயலை ஓரளவிற்கு கொண்டிருக்கும் ஜெய்ப்பிர‌காஷ்,அப்பா வேடத்திற்கு ந‌ல்ல‌ தேர்வு.ப‌ட‌ம் முழுவதும் ஆங்காங்கே வ‌ரும் குழந்தைக‌ள் ம‌ன‌தைக் கொள்ளை கொள்கிறார்க‌ள்.மானேஜ‌ரின் பைக்கை யாருக்கும் தெரியாம‌ல் தூக்கிவிட்டு,கார்த்தி ம‌றுப‌டியும் வேலையில் சேருவ‌து சுவார‌சியம். படம் ஆர‌ம்பித்த இடத்திலேயே க்ளைமாக்ஸும் வ‌ருவ‌து ந‌ன்றாக இருக்கிற‌து.வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்களும்,யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பெரிய‌ பலம்.(நல்ல மெலடியான 'ஒரு மாலை நேரம்' பாடலை படத்தில் வைத்திருந்திருக்கலாம்).

காலேஜ் மாணவ‌ர்கள் பெண்க‌ளைக் கட‌த்தும் காட்சிக‌ள் 'வேட்டையாடு விளையாடு' ப‌ட‌த்தையும் ம‌ற்ற‌ சில காட்சிக‌ள் ஷாம் நடித்த‌ 'பாலா' ப‌ட‌த்தையும் ஞாப‌க‌ப்ப‌டுத்துகின்றன.மிக‌ப் பெரிய‌ தாதாவாக காட்டப்படுபவர் காலேஜ் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு சாகும் காட்சி ந‌ம்பும்படியாக‌ இல்லை.இத்த‌னைக்கும் அந்த நேரத்தில் தாதாவின் கையில் செல்ஃபோன் வேறு இருக்கிற‌து.படத்தின் வில்லன்களாக லோக்கல் தாதா,கொலை மற்றும் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து தமிழ் சினிமா,கல்லூரி மாணவர்களிடம் வந்திருப்பது உறுத்தலாக‌ இருக்கிற‌து.

ஆனாலும் கார்த்தி மாதிரி ஒரு ந‌டிக‌ரை வைத்துக்கொண்டு பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்,மிகவும் குறைந்த‌ ப‌ட்ஜெட்டில்,அதிக‌மான‌ ச‌ண்டைக் காட்சிகளோ,பாடல் காட்சிகளோ இல்லாமல் விறு விறுப்பான‌ ஒரு ப‌ட‌த்தைக் கொடுத்த‌‌தில் வெற்றி பெற்றிருக்கிறார் இய‌க்குன‌ர் சுசீந்த‌ர‌ன்.

நான் மகான் அல்ல‌-கார்த்தி காட்டில் ம‌ழை.

Wednesday, August 18, 2010

பதிவுலகில் நான்-தொடர்பதிவு

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மோக‌ன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னுடைய‌ முழு பெய‌ர் மோகன் ராம்குமார். ஆனால் எல்லோரும் என்னை மோக‌ன் என்றே கூப்பிடுவ‌தால் நானும் மோக‌ன் என்றே வைத்துக்கொண்டேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ரொம்ப‌ நாட்களாக‌வே ப‌ல‌ருடைய ப‌திவை ம‌ட்டுமே ப‌டித்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் க‌ன‌வில் நான் ஒரு ப்ளாக் ஆர‌ம்பித்து ஒரு ப‌திவு போடுவ‌து போல‌வும்,அத‌ற்கு நான்கு பேர் வ‌ந்து க‌மெண்ட் போடுவ‌து போல‌வும் ஒரு க‌ன‌வு வ‌ந்தது.ம‌றுநாளே மிக‌வும் குஷியாகிப்போய் இந்த‌ப் ப‌திவுலகில் என் கால‌டி(கை) எடுத்து வைத்தேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ந‌ண்ப‌ர்க‌ளை க‌மெண்ட் மட்டுமே போட‌ சொன்னால் ஒரு ப‌திவிற்கோ அல்ல‌து இர‌ண்டு ப‌திவிற்கோதான் போடுவார்கள் என்று நினைத்து ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரை ப்ளாக் ஆர‌ம்பிக்க‌ தூண்டினேன்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் அவ‌ர்க‌ளுக்கு நான் க‌மென்ட் போட‌ வேண்டுமே என்ப‌தற்காக‌ எனக்கு வந்து க‌மெண்ட் போடுவார்க‌ள் என்று நினைத்து).பெரும்பாலானோர் ப‌திவு போடுவ‌தற்காக‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் வைத்து இருந்தாலும் நான் எழுதுகின்ற க‌விதைக்கெல்லாம்(?) க‌மெண்ட் போட‌ வேண்டுமே என்பதற்காக பயந்து த‌ங்க‌ளுடைய‌ ப்ளாக்கையே அப்டேட் பண்ணுவதில்லை. தமிழிஷ்,த‌மிழ்ம‌ணத்தில் இணைப்பதன் வாயிலாக‌ என் ப்ளாக்கை மற்றவர்களிடம் எடுத்து செல்ல முடிகிறது..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என‌க்கு சொந்தமாக‌ எதுவுமே இல்லாமல் போய்விட்டதால், இப்ப‌ வ‌ரைக்கும் சொந்த‌ விச‌ய‌ம் எதுவுமே என் ப‌திவில் எழுதிய‌தில்லை.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப‌திவுகள் மூல‌ம் ச‌ம்பாதிப்பதற்காக‌-ந‌ண்ப‌ர்க‌ளை ம‌ட்டும்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

தாய் மொழி தமிழிலேயே பெரிதாக எதுவுமே எழுத‌ முடிய‌வில்லை என்ப‌தால் நீங்கள் படித்து கொண்டிருக்கின்ற இந்த‌ ஒரு ப்ளாக் ம‌ட்டும்தான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

தின‌மும் ஒரு ப‌திவு போட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌ சுவாரசியமில்லாத ஒன்றை ப‌திவாய் போடும் ப‌திவ‌ர்க‌ள் மேல் கோப‌ம். பொறாமைப் ப‌ட‌ வைத்த பதிவ‌ர்க‌ள் என்றால் நான் நெடு நாட்க‌ளாய் ப‌டித்து வ‌ரும் அய்ய‌னார்,ஜ்யோவ்ராம் சுந்த‌ர்,மோக‌ன் தாஸ்,ராஜா சந்திரசேகர் ம‌ற்றும் ப‌ல‌ர்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் ப‌திவை ப‌டித்து பாராட்டிய‌து ப‌ழனிய‌ப்ப‌ன்(க‌மென்ட் போட‌ சொல்லி அவனை ரொம்ப‌வே டார்ச்ச‌ர் ப‌ண்ணினேன் என்ப‌து வேறு விச‌ய‌ம்)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுப‌விப்ப‌தற்கு ப‌திவுல‌க‌ம் மிக‌வும் உறுதுணையாக இருக்கிற‌து.ப‌திவுல‌கின் மூல‌மாக‌ என்னுடைய‌ வேலை விச‌ய‌மாக‌வும் அதிக‌மாக க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்.பதிவுலகம் கூட பெண் போன்றுதான்,நம்மை ஆக்கவும் செய்யும்;அழிக்கவும் செய்யும்.

தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் மனோவிற்கு மிக்க நன்றி!

Sunday, August 8, 2010

பாணா காத்தாடி-திரை விமர்சனம்


அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், புதுமுகங்கள் அதர்வா,சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் பட்ம் 'பாணா காத்தாடி'.

வட சென்னையில் வசிக்கும் அதர்வாவுக்கும், ஃபேசன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் நடுவில் காதல் அரும்புகிறது.இவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவே, அதர்வா ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது.இதிலிருந்து அதர்வா எப்படி 'விடுபடுகிறார்(?)' என்பதுதான் 'பாணா காத்தாடி' படத்தின் கதை.

அதர்வாவும்,சமந்தாவும் அவர்களின் அறிமுகப் படங்கள் என்ற நினைப்பே நமக்கு தோன்றாத‌வாறு நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடகி-‍நடிகை வசுந்தரா தாஸ் மற்றும் காமிலினி முகர்ஜி இருவரையும் ஒன்றாக வைத்து குழைத்தது போல் அழகாக இருக்கிறார் சமந்தா.இதே போன்று நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது.பிரசான்னா தாதாவாக ஆர்ப்பாட்டமான அமைதியான நடிப்பில் வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார்.

அதர்வாவுடன் சண்டையிட்டபின் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவரை தியேட்டருக்கு வரவழைத்து,சமந்தா காட்டும் 'குறும் படம்' நன்றாக இருக்கிறது.படத்தில் நம்மை பெரிதும் கவர்பவர் படத்தின் வசனகர்த்தா. 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்' என்பதாகட்டும், மௌனிகா அதர்வாவிடம் சொல்லும் 'என்னமோ அண்ணா சிலை மாதிரி எப்பவும் கையில புக்கை வைச்சிருக்க' மற்றும் 'கிட்ட வா நாயேன்னா, மூஞ்சியை நக்குற' என்று கிடைத்த‌ இடங்களிலெல்லாம் சிக்ஸ்ர் அடித்திருக்கிறார். ஜெயிலிலிருந்து வரும் அதர்வாவிடம்,மௌனிகா சொல்லும் 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை' என்பது உருக்கம்.

வட சென்னையைக் களமாகக் கொண்டு வரும் படங்களுக்கெல்லாம் மொத்த குத்தகை எடுத்தது போல் இந்தப் படத்திலும் காமெடி கருணாஸ்.அவரின் காமெடியும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் வரும் எல்லா பாடல்களும்(கடைசி குத்துப்பாட்டு தவிர்த்து),படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கின்றன.அதர்வாவை ஒரு தலையாகக் காதலிக்கும் அந்த ஸ்கூல் பெண் கேரக்டர் நன்றாக இருக்கிறது.

பல முடிச்சுகளைப் போட்டு விட்டு அதனூடே அழகாக பயணிக்கவும் செய்து விட்டு, அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் 'அபிமன்யு' மாதிரி இரண்டாம் பாதியில் இயக்குனர் மாட்டிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. பரபரவென நகர வேண்டிய இரண்டாம் பாதி காட்சிகள் சமந்தா அதர்வாவிடம் மன்னிப்பு கேட்பதும்,அவர் அதை நிராகரிப்பதுமாக நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருந்தால் 'பாணா காத்தாடி' இன்னும் கொஞ்சம் உயரப் பறந்திருக்கும்.

Sunday, August 1, 2010

Top 10 Songs-July

1) அரிமா அரிமா-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) ஓ ஷலா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) முழு மதி-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) ஒரு மாலை நேரம்-‍நான் மகான் அல்ல‌-இசை:யுவன் சங்கர் ராஜா

5) பச்சைக்கிளி போலே-அய்யனார்-‍இசை:தமன்

6) தாக்குதே கண் தாக்குதே-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) Missing Something-அரிது அரிது-இசை:தமன்

8) இதுதான் காதல்-‍நந்தி-‍இசை:பரத்வாஜ்

9) சஞ்சீவனா-‍வந்தே மாதரம்-இசை:D.இமான்

10) கண்டேனே காதல்‍-மாசி-‍இசை:தினா