Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?


காய்ந்த சருகாய்
உதிர்ந்து கிடக்கின்றன
உன் ஞாபகங்கள்.
மிச்சமிருக்கும் இலைகளுக்கு
என்னையும் அறியாமல்
உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன
என் நிழல்கள்.
பொலிவிழந்து பட்டுப் போய்
உனக்காக காத்துக் கிடக்கும்
என் மரத்திற்கு
சிதையூட்டும் முன்
. . . .
விண்ணைத் தாண்டி வருவாயா?

Tuesday, February 16, 2010

Top 10 Songs-February

1)விண்ணைத் தாண்டி வருவாயா-மன்னிப்பாயா-‍இசை:A.R.ரகுமான்

2)கோவா-இது வரை இல்லாத உணர்விது-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3)முன் தினம் பார்த்தேனே-பேசும் பூவே-‍இசை:S.தமன்

4)சித்து +2-பூவே பூவே-‍இசை:தரன்

5)பையா-என் காதல் சொல்ல‌-‍இசை:யுவன் சங்கர் ராஜா

6)தம்பிக்கு இந்த ஊரு-யாரடி நீ யாரடி-‍இசை:தரன்

7)அப்பாவி-ர‌யிலின் பாதையில்-‍இசை:ஜோஷ்வா ஸ்ரீத‌ர்

8)லீலை-உன்னைப் பார்த்த பின்பு-‍இசை:சதீஷ் சக்கரவர்த்தி

9)தீராத‌ விளையாட்டுப் பிள்ளை-ஒரு புன்ன‌கைதானே-‍இசை:யுவன் சங்கர் ராஜா

10)அவ‌ள் பெயர் த‌மிழர‌சி-வ‌ட‌க்கா தெற்கா-‍இசை:விஜய் ஆண்ட‌னி

Monday, February 15, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை‍-திரை விமர்சனம்


இன்றைய இளைஞர்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுப்பது கல்வியா?செல்வமா?வீரமா? என்பதைச் சொல்ல 'முற்போக்கு சிந்தனையுடன்(?)' வந்திருக்கும் படம்தான் 'தீராத விளையாட்டுப் பிள்ளை‍'.

தான் தேர்ந்தெடுக்கும் எதுவுமே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் விஷால்,கல்யாணம் என்று வரும்போது,மூன்று பெண்களைக் காதலித்து,அந்த மூவரில் மிகச் சிறந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறார்.இதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் மூன்று பெண்கள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் சரா ஜானே,கோடீஷ்வரியான நீத்து சந்திரா,விளையாட்டில் சிறந்த தனுஸ்ரீ தத்தா.இந்த மூன்று பெண்களில் விஷால் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதுதான் தீராத விளையாட்டுப் பிள்ளை‍யின் கதை.

ஆக் ஷன் அதிரடியைக் கைவிட்டு விட்டு இந்த மாதிரி படத்தில் 'நடிக்க' முயற்சித்ததற்காகவே விஷாலைப் பாராட்டலாம்.மூன்று பெண்களும் அறிமுகமாகும் போது 'யுவன் சங்கர் ராஜா' கொடுக்கும் 'Intro Music' நன்றாக இருக்கிறது.படத்தின் மிகப் பெரிய பலமே சந்தானம்,மயில்சாமி,சத்யன் இவர்களோடு விஷால் சேர்ந்து பண்ணும் காமெடிதான்.இதுக்கும் மேல காசு புரட்டனும்னா 'ட்ரெயினைத்தான்' போய் நிப்பாட்டனும் என்று சத்யன் சொல்வதெல்லாம் 'ரொம்பவே' ஓவர்.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழ்ப்படம் பார்ப்பவர்கள் கூட ஆரம்பத்திலேயே மிக எளிதாகச் சொல்லிவிடலாம்,விஷால் எந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று.தன்னைப் போலவே மற்ற இரு பெண்களையும் விஷால் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வரும்போது,அந்த பெண்ணை விஷால் உடனே நிராகரிப்பதும்,அந்த பெண்தான் ஏதோ தப்பு செய்தது போல் பழியைத் தூக்கிப் போட முயற்சிப்பதும் உறுத்தலாக உள்ளது.'Annonymous' இடமிருந்து ஒரு பெண் 'பாம்' வைத்திருப்பதாக வரும் 'Call'கெல்லாம் 'போலீஸ்' இப்படித்தான் நடந்து கொள்வார்களா எனத் தெரியவில்லை.மூன்று ஹுரோயின்களில் தனுஸ்ரீ தத்தாதான் நடிப்பு,கவர்ச்சி என்று இரண்டுக்கும் வழி இல்லாமல் 'தேமே' வென்று இருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்."உண்மையான காதல் எதையும் சந்தேகப்படாது,அப்படி சந்தேகப்பட்டால் அந்தக் காதல் நிலைக்காது" என்பதை சொல்ல வந்த படம்,அதைச் சொல்லிய முறையில் கொஞ்சம் சொதப்பினாலும்,'ஜாலியாக' இரண்டரை மணி நேரத்தை செலவழிக்க விரும்பினால்,இந்தப் படத்திற்கு போகலாம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை‍-நான் அவன் இல்லை

Thursday, February 11, 2010

பிரிய‌ச‌கி-4

உன்னைப் பார்க்க
வரும் போதெல்லாம்
என் இதயம்
ஆம்புலன்ஸ் சைரனாகிறது!

எல்லாக் குழந்தைக‌ளும்
அழகாய் இருப்ப‌துபோல்-உன்
எல்லா பாக‌ங்க‌ளும் அழகு!

தொட்டு விடும் தூரத்தில்
இருக்கிறேன் நான்
மொட்டு பூவாகிடும் கணத்தில்
பார்க்கிறாய் நீ!

ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக் காண்கிறேன்
உன் சிரிப்பினில்
இறைவனாய் ஆகின்றேன்!

தாவணியில்
தாவும் அணிலாகிறாய்
சுடிதாரில்
சுடர் விடும் ஒளியாகிறாய்
புடவையிலோ
புறாக் கூண்டாகிறாய்!

க‌விதைக் காத‌லி


அவனுக்கு அவளை முதலில் எப்போது பார்த்தோம்,எப்போதிலிருந்து அவள் மேல் காதல் வந்தது என்று எதுவும் நினைவில் இல்லை.ஆனால்,அவளைப் பற்றியே தினமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.எத்தனையோ பெண்களைத் தினமும் பார்க்க,பேச நேர்ந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டும்,அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் என்றே யோசித்துக் கொண்டும் இருப்பது அவனுக்கு புது வித அனுபவமாகவும் இருந்தது.

எல்லாப் பெண்களையும் போல் இவளும் அழகாக சிரிப்பாள்;அதிகமாக பேசுவாள்.இவனுக்கு அவளென்றால் உயிர்.அவளுக்கு கவிதைகள் என்றால் உயிர்.எப்போதும் ஏதாவது கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்பாள்;இல்லையென்றால் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள்;இல்லையென்றால் ஏதாவது கவிதை எழுதிக் கொண்டிருப்பாள்.இவனுக்கோ கதைகளே புரியாது;இதில் எப்படி கவிதைகளைப் படித்து புரிந்து அவளிடம் பேசுவது.ஆனாலும்,கடந்த மூன்று மாதங்களாக, ஒவ்வொரு வார இறுதி நாளன்றும் மாலை வேளைகளில் அருகில் இருக்கும் "Coffee Shop"-ல் சந்திப்பது இருவரின் வழக்கமாயிருந்தது.அவளுடன் இருக்கும் வேளைகளிலெல்லாம் தாயின் கதகதப்பில் அமைதியாகத் தூங்கும் குழந்தை போல் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.தான் அவளை விரும்புவது போன்றே அவளும் தன்னை விரும்புவதாக அவனுக்குத் தோன்றிற்று.ஒரு பொண்ணு எப்ப ஒரு பையன் மேல் அக்கறை செலுத்த ஆரம்பிக்குறாளோ, அப்பவே பசங்களுக்குப் பெண்களைப் பிடித்துப் போய்விடுகிறது.அதனால்தான் எல்லாப் பசங்களுக்கும் அவர்களுடைய அம்மா மற்றும் சகோதரிகளை அதிகமாகப் பிடிக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு முறை அவளை சந்திக்கும்போதும்,அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பான்.அவள் தனக்குப் பிடித்த ஆரஞ்சு கலர் சுடிதாரில் வரும் நாளன்று அவளிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவு செய்திருந்தான் அவன்.
"இன்னைக்கு ஒரு அழகான கவிதை ஒன்றை எழுதினேன்" என்றாள் அவள் மஞ்சள் சுடிதாரின் நுனியைப் பிடித்துக் கொண்டே.
"என்ன கவிதை என்றான்?" இவன்
"ஒரு பெண் தன் கனவு காதலனைப் பிரிந்து படும் துயரங்களை பற்றிய கவிதை" என்றாள் அவள்.
சுவாரசியம் ஏதுமில்லாமல் "ம்" என்றான்.அவளிடம் கவிதை வரிகளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.எங்கே சொல்லி விடுவாளோ என்றும் பயந்தான்.
தன் கவிதை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வான் என்று நினைத்தவளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.அவள் எழுதிய கவிதைகளிலே இதுதான் அவளுடைய "Best" என்று வேறு நினைத்திருந்தாள் அவள்.

"உனக்கு ஏன் கவிதைகள் என்றாலே பிடிப்பதில்லை"?.சிலருக்கு கவிதை எழுதுவது வராவிட்டாலும் படிப்பதிலோ,கேட்பதிலோவாவது விருப்பம் இருக்கும்.வர வர உன்னிடம் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை.உனக்கு கவிதை,இலக்கியம் போன்றவற்றிலெல்லாம் விருப்பமே இருப்பதில்லை.என்னுடைய கவிதைக் கேட்டு என்னைப் பாராட்டுவாய் என்று வந்தேன்.உன்னுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம் நான் வெறுமையாக உணர்கிறேன் என்று கோபமாகக் கிளம்பிச் சென்றாள்.

அவளுக்கு அவனிடம் கோபமாக பேசியது மிகுந்த வருத்தத்தை தந்தது.அதுவும் அவனைப் பார்க்க வருவதற்கு சற்று முன்புதான் அவள் அம்மாவிடம் எதற்கோ சண்டை போட்டு விட்டு வந்தாள்.அம்மா மேல் உள்ள கோபத்தைத் தேவையில்லாமல் அவனிடம் காட்டியது புரிந்தது.அவன் மேல் அவளுக்கு பரிதாபம் ஏற்பட்டது.அவனுக்குக் கவிதையைப் பற்றி ஏதும் தெரியாவிட்டாலும்,நன்றாக ஓவியம் வரைவான் என்பது அவளுக்கும் தெரியும்.தேவையில்லாமல் அவனைத் திட்டியதை நினைத்து வருந்தி அவனுக்கு "Sorry" என்று மெசேஜ் அனுப்பினாள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் விருப்பம் இருக்கும் என்பது இவளுக்கு ஏன் புரிவதில்லை;நான் மட்டும்தான் அவளை காதலித்துக் கொண்டிருக்கிறேன்;அவள் தன்னை ஒரு நல்ல நண்பனாக கூட நினைப்பதில்லை என்று அவள் மேல் கோபத்தில் இருந்ததால் அவன் பதில் எதுவும் அனுப்பவில்லை.சிறிது நேரம் சென்ற பிறகு "I am really very Sorry" என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.அதன் பின் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மெசேஜ்.

"கரையில் நிற்கும் உன் கால்களுக்கு
என் அலைகளைக் கொண்டு
எத்தனை முறை மன்னிப்பு கோருவது"

நான்கு,ஐந்து முறை படித்தபிறகுதான் அவள் எழுதியிருந்தது அவனுக்குப் புரிந்தது. அவளுக்குத் தொலைபேசி உன் மேல் கோபம் ஏதுமில்லை.அடுத்த வாரம் சந்திக்கலாம் என்றான்.காதலுக்காக ஒவ்வொருவனும் எது எதையோ செய்யும் பொழுது,அவளுக்குப் பிடித்த மாதிரி தானும் கவிஞனாகி விடலாம் என்று முடிவு செய்து,இனிமேல் அவளை சந்திக்கையில் தன் கவிதைகளோடுதான் சந்திப்பது என்றும் நினைத்துக்கொண்டு சங்க காலப் பாடல்களிலிருந்து நவீன கவிதைகள் வரை படிக்க ஆரம்பித்தான்.அடுத்த வாரம் அவள் அவனை "Coffee Shop" ற்கு அழைத்த பொழுது,வேலையில் 'பிஸி' என்று சந்திப்பதை தவிர்த்தான்.அவளுக்கோ, அன்று அவனிடம் கோபமாகப் பேசியதால்தான் தன்னை சந்திப்பதைத் தவிர்ப்பதாகத் தோன்றிற்று.

அவனுக்கு,அவன் மேலேயே மிகவும் கோபமாக இருந்தது.இத்துடன் அவளைப் பார்த்து முழுமையாக 90 நாட்கள் ஆயிற்று.அவனால் ஒரு வரி கூட இதுவரை எழுத முடியவில்லை.படிக்கின்ற காலத்தில் அல்ஜுப்ரா,Chemistry Equations,Java போன்றவற்றையெல்லாம் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காவிட்டாலும் கூட,அவனால் கொஞ்சமாவது அவற்றைப் புரிந்து கொள்ளவும்,எழுதவும் முடிந்தது.எத்தனையோ கவிதைப் புத்தகங்களைப் படித்தும்,ஒரு கவிதை கூட எழுத முடியாததின் காரணங்களும் அவனுக்குப் புரியவில்லை.கவிதை எழுதியபிறகுதான் அவளைப் பார்ப்பதென்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்றும் தோன்றியது.ஒருத்தவங்களை விட்டு விலகி இருக்கும்போதுதான்,அவங்க கூட நாம எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம் என்பதே தெரிய வருகிறது என்று நினைத்துக் கொண்டான்.அந்த நேரம் பார்த்து அவளும் Call பண்ணி இப்போது சந்திக்கலாமா என்று கேட்டாள்.தன்னைவிட அவளுக்குத் தன்னை சந்திக்க ஆர்வமிருப்பதை நினைக்கையில் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இன்று தன் காதலை எப்படியாவது சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான் அவன்.தான் பெற்ற பிள்ளையிடம் தான்தான் அதனுடைய அம்மா என்று சொல்ல முடியாத தாயின் வலியை விட,காதலிக்கும் பெண்ணிடம் 'காதலை' சொல்ல முடியாததின் வலி அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது.இன்னும் பத்து நிமிடங்களில் அவள் இங்கு இருப்பாள்.முழுமையாக தொன்னூறு நாட்களுக்குப் பிறகு அவளை சந்திக்கப் போகின்றான்.

ஆரஞ்சு கலர் சுடிதாரில் அட்டகாசமாக வந்தாள் அவள்.இன்னும் கூட என் மேல் கோபமா என்ன?போன வாரம் கூட சந்திக்கலாமென்றால் வெளியூர் போகிறேன் என்றாயே என்றாள்.உன்னைப் பார்க்காமல் இருந்தப்பதான் உன்னை எவ்வளவு தூரம் Miss பண்றேன்னு புரிஞ்சது.எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படி போயிக்கிட்டிருக்கு என்றாள்.அப்புறம், எனக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு.நேரில் உன்னைப் பார்த்துக் கொடுக்கலாம் என்று Phone பண்ணினால் நீ பிஸியாகவே இருந்தாய்.இந்தா Invitation,கண்டிப்பாக கல்யாணத்திற்கு வரணும் என்றாள்.

நீ கல்யாணம் பண்ணிக்கப் போகிறவருக்கு கவிதை எழுத வருமா என்றான்.அவரும் உன்னை மாதிரிதான் "கவிதைனா என்னன்னே தெரியாது" என்று சொல்லி சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,அன்று இரவு தன்னுடைய முதல் கவிதையை எழுத ஆரம்பித்தான்.

காதலைக் கொலை செய்தல்
------------------------------------
உன் அன்பும் கிடைக்காமல்
என் பிரியங்களும் கிடைக்காமல்
தனித்து விடப்பட்ட
ஒரு வெயில் காலத்தில்
நம் கால்களையே சுற்றித் திரிந்து
கத்திக் கதறி
தனித்து விடப்படப்பட்டதின் அவமானத்தில்
ஜீவித்திருக்க வேறு வழி தெரியாமல்
நம் காதல் தற்கொலை செய்து கொண்டது

கொலை செய்த குற்றவுணர்ச்சி
ஏதும் இல்லாமல்
அடுத்த கொலைகளுக்காக
ஆயத்தமாகிறோம் நாம்...

Tuesday, February 9, 2010

SMS



கொடும் கனவுகளூடே
கரையும் யாருமற்ற இரவு
மயான அமைதியைக் கிழிக்கும்
நாய்களின் ஊளல்
தானாகவே திறந்து மூடும்
சன்னல்களும்,கதவுகளும்
பேயறைந்த உணர்வில்
தூக்கமில்லாமல் தவிக்கும் கண்கள்
பயம் நிறைந்து நீளும் இரவை
ஒரே நொடியில்
இல்லாமல் செய்து விடுகிறது
உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.

Monday, February 8, 2010

அச‌ல்‍-விம‌ர்ச‌ன‌ம்


விஜய்க்கு சரியான போட்டியாளன் தான் மட்டுமே என்பதை நிரூபிக்க சரண் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தான் அசல்.

அப்பா அஜித்திற்கு,இரண்டு மனைவிகள்.மூத்த மனைவிக்கு பிறந்தவர்கள் சம்பத்தும்,ராஜிவ் கிருஷ்ணாவும்.இரண்டாவது மனைவியின் பிள்ளை அஜித்.இதில் அப்பாவிற்கு விசுவாசமான 'அசல்' பிள்ளை யார் என்பதுதான் அசல் படத்தின் கதை.

படத்தின் பெரும் பகுதி ஃப்ரான்சில் நடப்பதால் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் காட்சிகளெல்லாம் அழகாக இருக்கின்றன்.'Fashion Show'-ல் மாடல்கள் நடப்பது போல் இன்னும் எத்தனை படங்களில் அஜித் இப்படியே நடந்து கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை.படத்தின் டைட்டிலில் 'கோ-டைரக்டர்' மற்றும் கதை,திரைக்கதை,வசனம் உதவி 'அஜித்' என்று போட்டிருந்ததைப் பார்த்த பொழுது,சரணுக்கு தன்னுடைய படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக,பதிலுக்கு சரண் பண்ணிய உதவியோ என்று தோன்றியது.முழுப் படத்தையும் பார்க்கும் பொழுதுதான் அஜித் உண்மையிலேயே 'Involve(?)' பண்ணியிருப்பது தெரிகிறது.தன் பெயருக்கு முன்னால் 'அல்டிமேட் ஸ்டார்' என்று போடுவதை இந்தப் படத்திலிருந்து நிறுத்தியிருப்பது போல்,படத்தின் வசனங்களிலும் 'தலை' என்பதைத் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அதைத் தொடர்ந்து கேட்கும் பொழுது நமக்குத்தான் 'தலை' வலிக்கிறது.

யூகி சேதுவின் சில காட்சிக‌ளும்,பட‌த்தின் இர‌ண்டாம் ப‌குதியில் ச‌மீரா ரெட்டியும்,பாவ‌னாவும் பேசிக் கொள்ளும் சில‌ வ‌ச‌ன‌ங்களும் நன்றாக‌ இருக்கின்றன.எல்லாப் படங்களிலும் 'ஹீரோ' பறந்து பறந்து அடியாட்களை அடிப்பார்.இந்தப் படத்தில் 'பறந்து பறந்து' வரும் அடியாட்களை 'ஹீரோ' அடிக்கிறார்.‌டைரக்டருக்கு அஜித்துடன்,பாவனாவைத்தான் கடைசியில் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால்,சமீரா கேரக்டரையே,பாவனாவிற்கு கொடுத்திருந்திருக்கலாம்.

ஒரு திறமையான‌ பேட்ஸ்மேன்,மிக‌ச் சாத‌ர‌ண பாலுக்கு அவுட்டாவ‌து போல்,அஜித் போன்ற ந‌ல்ல‌ ந‌டிக‌ர் 'அச‌ல்' மாதிரி ப‌ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுத்து ந‌டிப்ப‌தைப் பார்க்கும் பொழுது வ‌ருத்த‌மாக‌த்தான் இருக்கிற‌து.

இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்த‌திலே ஏற்ப‌ட்ட‌ ஒரே உருப்ப‌டியான‌ விச‌ய‌ம் 'Mercy' என்கின்ற‌ ஃபிரென்ச் வார்த்தைக்கு 'ந‌ன்றி' என்பது‌ அர்த்த‌ம் என்பதைத் தெரிந்து கொண்ட‌துதான்.

அச‌ல்‍-ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் நக‌ல்.

Tuesday, February 2, 2010

த‌மிழ்ப்ப‌ட‌ம்‍-விம‌ர்ச‌ன‌ம்



பிறந்தவுடனே சாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த குழந்தை ஒன்று,எப்படி 'வளர்ந்தவுடன்' பெரிய ஹீரோவாகிறது (அ) தன்னுடைய‌ பேரனைப் பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக,ஒரு பாட்டி அனுபவிக்கும் இன்னல்களும்,துயரங்களும் கொண்ட 'கண்ணீர் காவியம்தான்' தமிழ்ப்படம் (அ) அட போங்கப்பா....கதையா இப்ப முக்கியம்.
வெங்கட்பிரபு தன்னுடைய படங்களில் சின்னதாக ஆரம்பித்து வைத்த ஒரு விசயத்தையே 'முதலாகக்' கொண்டு,எல்லோரும் இரசிக்கக்கூடிய வகையில்,முழுப்படத்தையும் காமெடியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதன்.

கருத்தம்மா,தளபதி,பாட்ஷா,பாய்ஸ்,காதலுக்கு மரியாதை,7G ரெயின்போ காலனி,நாயகன்,சிவாஜி,மொழி,கஜினி,தூள்,மௌன ராகம்,காதலன்,காக்க காக்க,அபூர்வ சகோதரர்கள்,வைதேகி காத்திருந்தாள்,பாண்டவர் பூமி,சமுத்திரம்,அந்நியன்,ரன்,கந்தசாமி,போக்கிரி,பில்லா...இப்படி ஹிட்டான படங்களையே கிண்டல் பண்ணுவதால்,படத்தோடு ஒன்றி,எல்லாக் காட்சிகளையும் இரசிக்க முடிகிறது.

ஹீரோ சிவா ஒவ்வொரு வில்லன்களையும் கொல்வதற்குப் பயன்படுத்தும் 'உக்தி' யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 'அட்டகாசமாக' உள்ளது.தன்னை நெருங்கவிடாமல் செய்ய, வில்லன் ஏற்படுத்தும் மின்சாரம்,புயல்,தீ போன்ற மூன்று தடைகளை முறியடிப்பதாகட்டும்,முக்கியமான வேலையாக(?) பாண்டிச்சேரி செல்வதற்காக மேலதிகாரியிடம் 'லீவ்' அப்ளை பண்ணுவதாகட்டும், சிவாவைத் தவிர இந்தப் படத்திற்கு ஹீரோவாக வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.படத்தில் ஹீரோவின் குடும்பப் பாடல் வரும்பொழுது சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்தப் படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் வசனகர்த்தாதான்.'நான் சாகறதுக்குள்ளே பரத நாட்டிய அரங்கேற்றம் பண்ணனும்‍‍-அப்ப உங்களுக்கு சாவே வராதா' என்று காட்சிக்கு காட்சி நம்முடைய வயிற்றைப் பதம் பார்க்கிறார்.படத்தின் மிகப் பெரிய மற்றொரு பலம்,படத்தின் டைரக்டர் எல்லாவற்றையும் 'மாற்றி யோசி'த்திருப்பது.பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோவின் வயது '50'ற்கு மேல் இருந்தாலும் அவரின் நண்பர்களின் உண்மையான வயது '25' ஆக இருக்கும்.ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவிற்கு 25 வயது. அவருடைய நண்பர்களுக்கெல்லாம் வயது '50'ற்கு மேல்.கிட்டத்தட்ட 'எல்லா' காட்சிகளையும் இப்படி 'உல்டா' வாக்கியிருப்பதுதான் படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்கிறது.இடைவேளைக்குப் பிற‌கு சிறிது நேர‌ம் ப‌ட‌ம் தொய்வாக‌ செல்வ‌து ஒரு குறை.

பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம்... போன்றோரின் பல படங்களால் எப்படி தமிழ் சினிமா மற்றொரு தளத்திற்கு சென்றதோ,அதேபோல் இந்தப் படமும் கூட மாற்றத்தைக் கொண்டு வரலாம்.இனி வரும் படங்களில் எந்த ஹீரோவும் 'பஞ்ச்' டயலாக் பேசினாலோ அல்லது 'Opening Song'-ல் 'ப‌ந்தா' காட்டினாலோ,ம‌க்க‌ள் ம‌ன‌தில் இந்த‌ப் ப‌ட‌ம் ஞாப‌க‌த்திற்கு வ‌ந்து சிரிப்பைக் கூட‌ உண்டு ப‌ண்ணலாம்.

ஏறக்குறைய‌ எல்லா நடிக‌ர்க‌ளும் '2011'‍ல் முத‌ல‌மைச்சர் ப‌த‌விக்கு க‌ன‌வு கொண்டிருக்கும் இந்த‌ வேளையில்,இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்த‌த‌ற்காக‌ த‌யாரிப்பாளரை,அவ‌ருடைய‌ தாத்தா,அப்பா,சித்த‌ப்பா ம‌ற்றும் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ப் பாராட்டியிருப்பார்க‌ள்.

த‌மிழ்ப்ப‌ட‌ம்‍-I.S.I முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌ 'அக்மார்க்' த‌மிழ்ப்ப‌ட‌ம்

கோவா-திரை விமர்சனம்


கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் மூன்று இளைஞர்கள்,ஊர் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு,ஒரு 'உயர்ந்த' இலட்சியத்துடன் கோவா செல்கிறார்கள்.தங்களுடைய இலட்சியத்தை அவர்களால் அடைய முடிகிறதா என்பதுதான் கோவா படத்தின் கதை.

இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு தன்னுடைய முந்தையப் படங்களைப் போலவே பழைய படங்களை நன்றாகவே கிண்டலடித்திருக்கிறார்.ஜெய்,பிரேம்ஜி அமரன்,வைபவ் காதலோடு 'இன்னொரு' காதலும் ஒரே ட்ராக்கில் போவது நன்றாகவே இருக்கிறது.ஜெய்-பியா,பிரேம்ஜி அமரன்-வெள்ளைக்காரப் பொண்ணு காதலோடு ஒப்பிடும்போது,வைபவ்-சினேகா காதல் படத்துடன் ஒட்டவே இல்லை.வெள்ளைக்காரப் பொண்ணை ரொம்ப நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார்கள்.சம்பத்தை தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே,இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு 'அழகாகப்' பயன்படுத்தியிருக்கிறார்.சிம்புவையும் மிக அழகாக கதைக்குள் பொருந்திப் போகச் செய்திருப்பது வெங்கட் பிரபு 'டச்'.

6 Packs coming soon,தமிழ் நாட்டையே உங்களுக்கு கொடுக்கிறேன்னு சொல்லி-தமிழ்நாடு மேப்பைக் கொடுப்பது என்று பல சின்ன சின்ன விசயங்கள் நன்றாகவே இருந்தாலும்,முழுப் படமாகப் பார்க்கும் போது பல காட்சிகள் மனதில் ஒட்டாமலேயே இருக்கின்றன.எமோஷனாலான சில காட்சிகளையும் காமெடியாக மாற்றும் பொழுது சிரிக்கவும் முடிவதில்லை.அதிகமான பாடல்களும் படத்தின் வேகத்திற்கு தடையாகவே இருக்கின்றன.

கோவா‍‍-'பாண்டிச்சேரி'.