Thursday, September 30, 2010

எந்திரன் ஸ்பெஷல்(3)-‍ஷ‌ங்க‌ர்

ஷங்கர் இயக்கத்தில் அவரின் பத்தாவது படமாக‌ 'எந்திரன்' நாளை வெளிவருகிறது.ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பெரும் பொருட்செலவில் தன்னுடைய படங்களை எடுத்து வந்தாலும்,அவர் தமிழில் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றே வருவதால் அவரை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் '150' கோடிக்கும் மேற்பட்ட செலவில் வெளிவரும் 'எந்திரன்'.

ஷங்கருக்கு முன்னாடியே பிரமாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் தமிழில் இருந்தாலும்,அவரளவிற்கு தன்னுடைய படங்களில் டெக்னாலஜியைப் புகுத்திய இயக்குனர்கள் மிகவும் குறைவு.தன்னுடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' தொடங்கி அவர் பண்ணிக் கொண்டிருக்கும் டெக்னிக்கலான சில விசயங்கள்,பெரும் மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் இந்திப்படங்களில் கூட பொதுவாக வருவதில்லை.தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் டெக்னிக்கலாகப் புது புது விசயங்களை அறிமுகப்படுத்தும் ஷங்கர்,இப்போதும் வேறு எந்த இந்திய மொழிகளிலும் முயற்சிக்காத பல விசயங்களை தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாகக் கொண்டு வருகிறார்.

தென்னிந்தியாவில் உள்ள மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமை ஷங்கருக்கு உண்டு.அவர் தமிழ் தவிர்த்து வேறு எந்த தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை படங்கள் இயக்கியதில்லை.தெலுங்கில் படம் பண்ணச் சொல்லி எத்தனையோ தெலுங்குப்பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியும் ஏனோ இதுவரை மறுத்தே வந்திருக்கிறார்.ஆனாலும்,எந்த ஹீரோவைக் கொண்டு ஷங்கர் படங்கள் வெளிவந்தாலும் தமிழ்,ஆந்திரா,கேரளம்,கர்நாடம் என்று அனைத்து மாநிலங்களிலும் அவர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது.இதே போன்ற வரவேற்பு மணிரத்னம் படங்களுக்கும் இருக்கிறது என்றாலும் அவர் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் தலா ஒரு படமாவது இயக்கியுள்ளார்.அதேபோன்று சிவாஜி படத்திலிருந்தே ஷங்கரின் படங்களுக்கு இந்தியிலும் மார்க்கெட் உருவாகி வருவது ஒரு நல்ல விசயம்.இந்த மாதிரி வரவேற்பு இருந்தால் மட்டுமே ஒரு இயக்குனரால் மிகப் பெரும் பொருட் செலவில் தன்னுடைய படங்களை எடுக்க முடியும்.இந்த மாதிரி ஒரு நிலையை அடைவது எளிதான விசயமும் அல்ல.எல்லா மொழிகளிலும் தன்னுடைய படங்களுக்கான மார்க்கெட் வர வேண்டுமென்பதற்காகத்தான் ராம் கோபால் வர்மா, மோகன்லாலை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் கேரளாவிலும்,கன்னட நடிகர் சுதீப்பை தன்னுடைய இந்திப் படங்களில் ஹீரோவாகப் போடுவதன் மூலம் கர்நாடகாவிலும்,இப்போது தன்னுடைய படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதன் மூலமாக தமிழிலும் ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.கவுதம் வாசுதேவமேனன் கூட தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதற்காக இரண்டு தெலுங்கு படங்கள் வரை இயக்கிவிட்டார்.ஆனால் ஷங்கர் தான் எடுக்கும் தமிழ் படங்களின் மூலமாகவே,அப்ப‌டங்க‌ளின் பிர‌மாண்ட‌த்தினாலும்,ப‌ட‌த்தின் க‌தைக்க‌ரு அனைத்து‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் பொதுவாக‌ இருப்ப‌து போல் பார்த்துக்கொள்வதாலும்,அவ‌ருடைய‌ ப‌டங்க‌ள் ம‌ற்ற‌ மொழிக‌ளில் 'ட‌ப்' செய்ய‌ப்ப‌ட்டே ந‌ல்ல‌ இலாப‌த்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற‌ன.

ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்தின் ஹீரோக்க‌ள் பெரும்பாலும் இர‌ட்டை வேட‌ங்க‌ளிலோ அல்ல‌து குறைந்த‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு வித‌ கெட்ட‌ப்புக‌ளிலாவ‌துதான் அவ‌ர் இயக்கிய‌ ப‌ட‌ங்க‌ளில் வ‌ந்திருக்கிறார்க‌ள்(காத‌ல‌ன்,பாய்ஸ் த‌விர்த்து).த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் இந்தியாவில் சிறந்து விளங்கும் டெக்னீஷிய‌ன்க‌ளைத்தான் பய‌ன்ப‌டுத்தி வ‌ந்திருக்கிறார்.ர‌ஜினி ஒரு முறை ஷ‌ங்க‌ர் ப‌ற்றிக் குறிப்பிட்ட‌துதான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து."ஷங்க‌ர் ஒவ்வொரு துறைக‌ளிலும் சிற‌ந்த‌ ஆட்களாகத் த‌ன் ப‌க்க‌த்தில் வைத்துக் கொண்டிருப்ப‌தால்தான் அவரால் தொட‌ர்ந்து வெற்றி பெற‌ முடிகிற‌து".

ஷ‌ங்க‌ர் இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளிலேயே எனக்குப் பிடிக்காத‌ ப‌ட‌மென்றால் அது சிவாஜிதான்.சிவாஜிப் படத்தை படம் வந்த இரண்டாவது நாளே பார்த்தாலும் கூட,இடைவேளை வ‌ரை அந்த‌ப் ப‌ட‌த்தை பார்த்தது மிக‌க் கொடுமையாக‌ இருந்தது.ஏதோ இடைவேளைக்குப் பிறகு படம் 'கொஞ்ச‌ம்' பரவாயில்லாம‌ல் இருந்த‌தாலும்,ர‌ஜினி ந‌டித்திருந்ததாலுமே அந்த‌ப் ப‌ட‌ம் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன்.அதுவும் ர‌ஜினி போன்ற ஒரு ந‌டிக‌ரை வைத்து ஷங்க‌ர் அப்ப‌டி ஒரு 'மொக்கைப்' ப‌டம் கொடுத்த‌து கொஞ்ச‌ம் அதிர்ச்சிதான்.

க‌ம‌ல்,ஷாருக்கான் ந‌டிப்ப‌தாக‌ இருந்து இப்போது ர‌ஜினியை வைத்து ஷ‌ங்க‌ர் 'எந்திர‌ன்' ப‌டத்தை இய‌க்கியிருக்கிறார்.பொதுவாக ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மிகுந்த இடைவெளி விடுவார்.ஆனால் சிவாஜி முடித்த கையோடு எந்திரன் படத்தை உடனடியாக ஆரம்பித்தது ஆச்சரியம்தான்.ஷங்க‌ருக்கும் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ன‌வுப் ப‌ட‌மாக‌ இருப்ப‌தால் சிவாஜி ப‌ட‌த்தில் அவர் ப‌ண்ணிய‌ த‌வறையெல்லாம் நிவ‌ர்த்தி ப‌ண்ணி,இந்த‌ப் ப‌ட‌த்தை மிக‌வும் ந‌ல்ல‌ வித‌மாக‌க் கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.இந்தப் படத்தைத் தவற விட்டதை நினைத்து ஷாருக்கான் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்றும் தோன்றுகிறது.'எந்திர‌ன்' ப‌டமும் மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கும் என்றே தோன்றுகிற‌து(ப‌ட்சி வேற‌ அப்ப‌டித்தான் சொல்லுகிறது)

எந்திரன் ஸ்பெஷல்(2)-‍ஏ ஆர் ர‌குமான்

இந்தியாவின் இப்போதைய இசையுலக சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் தான். 1992 ஆம் ஆண்டு 'ரோஜா' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரகுமானுக்கு, அவருடைய முதல் படமே இந்தியிலும் 'டப்' செய்யப்பட்டு வெற்றி பெற்றதால்,ஒரே படத்தின் மூலமாகவே இந்தியா முழுமைக்கும் பிரபலமாகிவிட்டார்.

ரோஜாவில் ஆரம்பித்த ரகுமானின் பயணம் தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று இன்று,உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயணப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய கடுமையான உழைப்பும்,கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அதுவும் தமிழில் இளையராஜா போன்ற பெரிய ஆளுமைக்கு நடுவில் ரகுமான் அடைந்திருக்கும் உயரம் சாதரணமானது அல்ல.தென் இந்தியாவில் இருந்த மக்களை எல்லாம் இளையராஜா(என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்)தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தாரென்றால்,ரகுமான் வட இந்திய மக்களுக்கும் தமிழ் பாடல்களின் மீதான ஆர்வத்தை உண்டு பண்ணினார்.

ரகுமானுக்கு அவரின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அவருடன் பணிபுரிந்து வரும் மணிரத்னம்,பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர்,கதிர் போன்ற இயக்குனர்கள்,அவரின் பாடல்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தார்கள்.தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் வருகைக்குப் பிறகு ரகுமானின் ஆர்ப்பாட்ட இசைக்கு நன்றாக நடனம் ஆடுவதற்கு ஆட்களும் கிடைக்கத் தொடங்கி விட்டார்கள்.ர‌குமானின் வெற்றிக்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ருடைய‌ தொழில் நுட்ப‌ அறிவும்,ந‌ல்ல‌ குவாலிட்டியுட‌ன் த‌ன்னுடைய‌ பாட‌ல்க‌ளைக் கொடுக்க‌ ஆர‌ம்பித்ததும்தான்.அதுவும் அவ‌ருடைய‌ ப‌ட‌ப் பாடல்க‌ளை 'சோனி' நிறுவ‌ன‌ம் வாங்க‌த் தொட‌ங்கிய‌ பிறகு அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ள் கேச‌ட்க‌ளில் கேட்கும்போதும் கூடுதல் த‌ர‌த்துட‌ன் இருந்த‌ன‌.

ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் வ‌ரும்போது,அந்தப்படத்தின் நடிகர்,இயக்குனர் போன்றோரைப் பற்றியெல்லாம் கவலையே படாமல்,அவருடைய இசை ரசிகர்களெல்லாம்,அப்போதைய(இப்போதும்) கால‌க‌ட்ட‌த்தில் அவ‌ருக்காக‌ ம‌ட்டுமே கேச‌ட்டுக‌ள் வாங்கிக் கொண்டிருந்த‌ன‌ர்.அத‌னால்தான் பொதுவாக‌ ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ளை கேச‌ட்டுக‌ளில் ப‌திவு செய்வ‌தைத் த‌விர்த்து,ஒரிஜின‌ல் கேச‌ட்டையே விலைக்கு வாங்குவ‌தற்குக் கார‌ணம்,ப‌ட‌த்தின் எல்லாப் பாட‌ல்க‌ளுமே ந‌ன்றாக‌ இருந்த‌துதான்.
ர‌ங்கீலா பட‌த்திலிருந்து ரகுமான் இந்தியிலேயே அதிக‌மான‌ பட‌ங்க‌ள் ப‌ண்ண ஆர‌ம்பித்து விட்ட‌தால்,த‌மிழ் இசை ர‌சிக‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் இழப்புதான்.முன்பாவ‌து,விக்ர‌ம‌ன்,அர்ஜீன்,ஜோதி கிருஷ்ணா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு இசைய‌மைத்த‌ ர‌குமான்,இப்போது பெரிய‌ இய‌க்குன‌ர்க‌ள்,ந‌டிக‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.த‌மிழில் முத‌ல் ப‌ட‌ம் இயக்கும் இய‌க்குன‌ர்க‌ளுக்கு ர‌குமான் இன்று எட்டாக்க‌னிதான்.ர‌குமானுக்கு போன‌ வ‌ருட‌ம் அவ‌ரின் கேரிய‌ரின் உச்ச‌ம் என்று சொல்ல‌லாம்.இர‌ண்டு ஆஸ்கார் அவார்டுக‌ள் வாங்கிய‌து ம‌ட்டும‌ல்லாம‌ல்,சென்ற வ‌ருட‌ம் அவ‌ர் இந்தியில் இசைய‌மைத்த‌ க‌ஜினி,டெல்லி 6 போன்ற‌ ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளெல்லாம் அவ‌ரை உச்ச‌த்தில் நிறுத்தி‌ன‌.

ஷ‌ங்க‌ர்,ர‌ஜினி,ர‌குமான் காம்பினேஷ‌னில் வ‌ரும் இர‌ண்டாவ‌து ப‌ட‌ம் 'எந்திர‌ன்'.உண்மையைச் சொல்ல‌ வேண்டுமானால் சிவாஜி ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் அளவிற்கு கூட‌ எந்திர‌ன் பாட‌ல்க‌ள் இல்லைதான்-ஒருவேளை ப‌டம் பார்த்தபிற‌கு பாட‌ல்க‌ள் இன்னும் பிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாம்.இப்போதெல்லாம் ரகுமான் பாடல்கள் மீது சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு இருந்த‌துபோல் பெரிதாக‌ ஈர்ப்பு இல்லை.அத‌ற்கு கார‌ணம் அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ளின் த‌ர‌ம் குறைந்துவிட்ட‌தா இல்லை என்னுடைய‌ ர‌ச‌னை மாறி விட்டதாவென‌த் தெரிய‌வில்லை.

இன்றும் ர‌குமானின் பாட‌ல்க‌ள்,பெரும்பாலான இரவு நேர‌த் தூக்க‌த்திற்கு உத்திர‌வாத‌ம் அளித்துக் கொண்டிருக்கின்ற‌ன.பொதுவாக‌ ர‌குமானின் பெரும்பாலான‌ பாட‌ல்க‌ள் எனக்குப் பிடிக்குமென்றாலும்,எனக்கு மிக‌வும் பிடித்த‌ ர‌குமானின் ப‌த்து பாட‌ல்க‌ளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1) ச‌ந்தோஷக் க‌ண்ணீரே-உயிரே
2) கண்ணாளனே-ப‌ம்பாய்
3) மார்கழிப் பூவே-மேமாத‌ம்
4) புது வெள்ளை ம‌ழை-ரோஜா
5) அஞ்ச‌லி அஞ்ச‌லி-டூய‌ட்
6) க‌ரிச‌ல் த‌ரிசில்-தாஜ்ம‌ஹால்
7) க‌ண்ணும் க‌ண்ணும்-திருடா திருடா
8) காடு பொட்ட‌க் காடு-க‌ருத்த‌ம்மா
9) சிநேகித‌னே-அலைபாயுதே
10) உதயா உதயா-உதயா

Wednesday, September 29, 2010

எந்திரன் ஸ்பெஷல்(1)-சன் பிக்சர்ஸ்


இந்தியாவிலேயே முதன் முறையாக‌ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்படும் 'எந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் என்னும் பெயரை தன்னுடைய சன் பிக்சர்ஸின் மூலமாக‌, சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இப்போது பெறுகிறார்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ஷங்கரின் இயக்கத்தில்,ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில்,இந்தியாவின் மிகப் பெரிய டெக்னீஷியன்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட எந்திரன் திரைப்படம் இந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகின்றது.

கலைஞர் குடும்பத்தினருடன் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக,கலாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸை ஆரம்பித்தார். இதுவரை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்தே படங்களை விலைக்கு வாங்கி, சன் பிக்சர்ஸ் தன்னுடைய பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றது. காதலில் விழுந்தேன் படத்தில் ஆரம்பித்து தெனாவெட்டு,தீ,படிக்காதவன்,மாசிலாமணி என்று மொக்கைப் படங்களை மட்டுமே இப்போது வரை வெளியிட்டும் வந்து உள்ளது.தங்களிடம் உள்ள சேட்டிலைட் டிவிக்களின் உதவி கொண்டு எவ்வளவு மோசமான படத்தையும் வெற்றி பெறச் செய்து விடலாம் என்ற நினைப்பை, சன் பிக்சர்ஸிடம் இருந்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் பொய்யாக்கியிருக்கின்றன.அதேபோல் சன்டிவி மேல் இருக்கும் நம்பிக்கையும் 'தில்லாலங்கடி' போன்ற படங்களை 'இப்போது வரை' நம்பர் 1(?) இடத்தில் வைத்திருப்பதால் அதன் மேல் உள்ள நம்பிக்கையும் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றது.நாளையே இவர்கள் ஒரு நல்ல படம் எடுத்து,அந்தப் படத்திற்கு நம்பர் 1 இடம் கொடுத்தால் கூட மக்களுக்கு அந்தப்படம் மேல் நம்பிக்கை வருமாவென்று தெரியவில்லை.

சினிமாவில் உள்ள மற்ற எந்த தயாரிப்பாளருக்கும் இல்லாத வசதியாக சன் பிக்சர்ஸிற்கு,சன் குரூப் டிவி சேனல்கள்,தினகரன் பத்திரிக்கை,குங்குமம் வார இதழ் என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர்களுடைய பல ஊடகங்கள் துணை நிற்கின்றன.இவ்வளவு தூரம் பணம்,ஊடகங்கள் என்று வசதிகள் பல இருந்தாலும் சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்திருக்கும் படங்கள் எதுவும் நம்பிக்கை அளிப்பது போல் இல்லை என்பதுதான் உண்மை. மொசர் பியர் நிறுவனத்தினடிமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது குறைந்த பட்சம் ஷங்கரின் 'S' பிக்சரிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் போல், ஒரு படம் கூட சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்த‌தில்லை.கலைஞர் குடும்பத்திலிருந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாநிதி அழகிரி,உதயநிதி ஸ்டாலின் கூட நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் பெரும்பாலான நல்ல படங்கள் மக்களிடம் சரியாக விளம்பரப்படுத்தப்படாததினாலேயே ஃபிளாப் ஆகியிருக்கின்றன. ஒருவேளை சன் பிக்சர்ஸ் மட்டும் நல்ல படங்களை எடுக்க ஆரம்பித்தால்,அவர்களால் அவர்களுடைய ஊடகங்களின் துணைகொண்டு மக்களிடம் அத்தகைய நல்ல படங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு நல்ல மாற்றத்தை தமிழ் சினிமாவிற்குள்ளும் கொண்டு வர முடியும். இனிமேலாவது இவர்கள் நல்ல படங்களைக் கொடுப்பார்களா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

இந்தியாவிலேயே பெரிய‌ சினிமா இன்ட‌ஸ்ட்ரி என்றால் இந்தி,அத‌ற்க‌ப்புற‌ம் தெலுங்கு,மூன்றாவ‌த‌க‌த்தான் த‌மிழ். இருந்தாலும், இந்தியாவிலேயே அதிக‌மான‌ பொருட் செல‌வில் எந்திர‌னைத் தமிழில் த‌யாரிப்ப‌த‌ற்கான கார‌ண‌ம் ர‌ஜினிக்கு இருக்கும் மார்க்கெட்தான்‌.தென்னிந்தியாவிலேயே அதிகமான‌ பொருட்செல‌வில் த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளைக் கொண்டு ம‌ட்டுமே இப்போதைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் ப‌ட‌ம் எடுக்க‌ முடியும்.ர‌ஜினியும்,க‌ம‌லும் த‌மிழ் சினிமாவின் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌. இவ‌ர்களுக்கு தென்னிந்தியா முழுமைக்கும் ந‌ல்ல‌ மார்க்கெட் உள்ள‌து. ஆர‌ம்ப‌ கால‌க் க‌ட்ட‌ங்க‌ளில் அனைத்து மொழிக‌ளிலும் ப‌ட‌ங்க‌ள் ப‌ண்ணிய‌தால் க‌ம‌லுக்கும், க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாகவே ர‌ஜினியின் ட‌ப்பிங் ப‌ட‌ங்க‌ள் ஆந்திராவில் ச‌க்கைப் போடு போடுவ‌தால் ரஜினிக்கும்,இவ‌ர்க‌ளை ந‌ம்பிப் பெரிதாக‌ முதலீடு போட்டால் தயாரிப்பாளர்களுக்கு கொழுத்த இலாபம்.ரஜினி படம் வெளிவருகையில்,ஆந்திராவின் முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படங்களைத் தள்ளிப் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.ஆந்திராவின் சூப்ப‌ர் ஸ்டார்களாக‌ இருக்கும் சிர‌ஞ்சிவிக்கோ, நாக‌ர்ஜீனாவிற்கோ,மகேஷ் பாபு போன்றவர்களுக்கோ த‌மிழில் பெரிதாக‌ மார்க்கெட் இருப்ப‌தில்லை. அவ‌ர்களின் ப‌ட‌ங்க‌ள் சென்னையின் சில‌ தியேட்ட‌ர்க‌ள் ம‌ற்றும் ஒசூரில் வெளியாவ‌தோடு ச‌ரி. ஆனால் ரஜினி,கமலின் படங்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றும் மிகப் பெரிய‌ ஓப்பனிங்கைக் கொண்டிருக்கின்றன.இவர்களைப் பின்பற்றித்தான் விக்ர‌மும்,சூர்யாவும் தெலுங்கிலும் கால் ப‌தித்து,இன்று இந்தியிலும் த‌ங்க‌ளுடைய‌ வேர்க‌ளைப் ப‌ர‌வவிட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உண்மையில் சொல்ல‌ வேண்டுமானால் விஜய்,அஜித்தை விட‌ விக்ர‌ம்,சூர்யாவிற்குத்தான் மொத்தமாக மார்க்கெட் வேல்யூ அதிக‌ம். அதனால்தான் என்ன‌வோ இப்போது அஜித் ம‌ங்காத்தா தெலுங்கு பதிப்பிலும்,விஜ‌ய் 3 இடிய‌ட்ஸ் தெலுங்கு ப‌திப்பிலும் ந‌டிக்க‌ முய‌ற்சித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.

எந்திர‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ள் வெற்றி பெறுவ‌து த‌மிழ் சினிமாவிற்குத்தான் மிக‌வும் ந‌ல்ல‌து.இத‌ற்க‌ப்புற‌ம் கம‌லின் க‌ன‌வு ப‌ட‌ங்க‌ளான‌ ம‌ர்ம‌ யோகி,ம‌ருத‌ நாய‌க‌ம் போன்ற ப‌ட‌ங்க‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிகம் உள்ளது.நாளைக்கே ச‌ன் பிக்ச‌ர்ஸ் இதே போன்ற பெரிய‌ ப‌ட்ஜெட் ப‌ட‌ங்க‌ளை விக்ர‌ம்,சூர்யாவைக் கொண்டும் எடுக்க ஆரம்பிக்க‌லாம்.த‌மிழ் சினிமா எப்ப‌டி தெலுங்கு ப‌ட‌வுல‌கில் இப்போது ப‌ல‌மாக‌ கால‌டி ப‌தித்து நிற்கின்றதோ, அதேபோல் இந்திப் ப‌ட‌வுல‌கிலும் இதுபோன்ற‌ ப‌டங்களின் மூல‌மாக மட்டுமே காலூன்ற‌ முடியும். ரோஜா,பம்பாய் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் த‌மிழின் நேர‌டிப் ப‌டங்க‌ள் எதுவும் இந்தியில் பெரிதாக‌ வெற்றி பெற்ற‌தில்லை. எந்திர‌ன் த‌மிழில் ம‌ட்டும‌ல்லாது,இந்தியிலும் பெரிதாக‌ வெற்றி பெற‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் த‌மிழ் சினிமா,தென் இந்தியா ம‌ட்டும‌ல்லாது வ‌ட‌ இந்தியாவிலும் காலூன்ற‌ வேண்டுமென்ப‌துதான் எல்லோருடைய‌ ஆசையாக இருக்க முடியும். அத‌ற்கான‌ அடித்த‌ளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும், ச‌ன் பிக்ச‌ர்ஸ் இப்போதைய கால கட்டத்தில் பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள்.

ச‌ன் பிக்ச‌ர்ஸ் த‌மிழில் க‌தை அம்ச‌முள்ள ப‌ட‌ங்க‌ளையும்,நல்ல ம‌சாலாப் ப‌ட‌ங்க‌ளையும் இதற்க‌ப்புற‌மாவ‌து கொடுக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் அவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக‌ள்.

Tuesday, September 21, 2010

பிரிய‌சகி-6

பவ‌ர் க‌ட்டான‌
ஒரு அமாவாசை இருட்டில்
நீ சிரிக்க‌த் தொட‌ங்கினாய்
திசை மாறிய பறவைகளெல்லாம்
கூட்டை நோக்கிப் ப‌ற‌க்க‌த் தொட‌ங்கின‌.

நல்ல கவிதையின்
ஒவ்வொரு வரிகளும்
அழகாய் இருப்ப‌து போல்
அழகாய் இருக்கும் உன்னில்
ஒவ்வொன்றும் அழகு.

ஆயிர‌க்க‌ணக்கில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்
இருந்தாலும் என‌க்கான
விடிவெள்ளியாய்
நீ ம‌ட்டுமே தெரிகிறாய்.

அடிக்கிற‌ கைதான் அணைக்குமாம்
ஒரு அடி அடித்துவிட்டு
அணைத்துக் கொள்ளேன் என்றால்
த‌லையில் கொட்டி விட்டு
தேய்த்து விடுகிறாய்.

சந்திரகிரகணத்தை
நான் நேரில் பார்த்தது
நீ தாவணியை
சரி செய்யும் போதுதான்.

Saturday, September 11, 2010

கொமரம் புலி-திரை விமர்சனம்(தெலுங்கு)


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில்,ஏ.ஆர் ரகுமான் இசையில்,பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்திருக்கும் தெலுங்கு படம் 'கொமரம் புலி'.

இந்தப் படத்தில் கதை முதற்கொண்டு எதுவுமே கிடையாதுங்க. இருந்தாலும்,கதை என்னன்னு தெரிஞ்சுகிட்டே ஆகனும்னு நினைக்கிறவங்க மட்டும் கீழே இருக்கிறதைப் படிங்க.

பவன் கல்யாண் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.மக்கள் பிரச்சனையை தீர்க்கனும்கிறதுக்காக,ஒரு ரூபாய் காயின் பூத்திலிருந்து மக்கள் தன்னை நேரடியாக‌ தொடர்பு கொள்வது போல் ஏற்பாடு செய்கிறார்.அதற்கப்புறம் அவர்களின் பிரச்னையைத் தீர்த்துவிட்டு,படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புது பிரச்சனையைக் கொடுத்து,தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்.

படம் ஆரம்பத்தவுடனே 1985-ம் ஆண்டு என்று காட்டுகிறார்கள்.அப்போது வரும் காட்சிகளெல்லாம் அந்த ஆண்டில் வெளி வந்த படக் காட்சிகளை விடக் கொடுமையாக இருக்கின்றன.தன் மகனை போலிஸாக்கிப் பார்க்க நினைக்கும் சரண்யா லெஃப்ட்,ரைட் சொல்வதும் அதற்கு ஏற்றாற் போல்,வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை காலை ஆட்டுவதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.பவன் கல்யாணுக்கு படம் நன்றாக வரும் என்று பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கும் போல,உடம்பையெல்லாம் குறைத்து,ஓவர் ஆக்டிங்கோடு நடித்திருக்கிறார்.ஹீரோயினைப் பார்த்து நாம் பரிதாபப்படுவதா இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து அவர் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

படத்தின் ஹீரோ அடிக்கடி பத்து,பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து வசனம் பேச ஆரம்பித்து விடுகிறார்.அவர் மூச்சு விடாமல் பேசி முடித்தவுடன்,நமக்கு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது போல் இருக்கிறது.அதுவும் வில்லன் மனோஜ் பாஜ்பாய் பொய் சொல்கிறார் என்பதை "நடந்ததை உண்மையிலேயே,யோசித்து சொல்றவங்க மேலே பார்த்து பேசுவாங்க;பொய் சொல்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்து பேசுவார்கள்" என்கிறார் பாருங்கள்.சே! எஸ்.ஜே.சூர்யா மேலே பார்த்துட்டே கதை சொன்னதைப் பார்த்து,பவன் ஏமாந்துட்டார் போல.

ஏற்கெனவே கடுப்போடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு,மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும்,வசன உச்சரிப்பும்,அதிரடியாக எதிரணி ரன்கள் குவித்துக் கொண்டிருக்கையில்,இஷாந்த் சர்மாவிடம் பாலைக் கொடுத்து பவுலிங் போட சொல்வது போல் உள்ளது.ஷ்ரேயா ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் வருகிறார்.

படத்தில் உள்ள ஒரே உருப்படியான விசயம் ரகுமானின் இரண்டு பாடல்களான தோட்சே மற்றும் மாராலன்ட்டே(ஸ்லம்டாக் மில்லியனரில் வந்த Gangstar blues பாடலையே கொஞ்சம் மாற்றி 'தோட்சே' என்று போட்டிருந்தாலும்,ஸ்ரேயே கோஷலின் அழகிய குரலில்,ஸ்ரேயாவின் அழகிய.....இந்தப் பாடல் நம்மைக் கிறங்கடிப்பது உண்மை).

எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார்.நல்ல வேளைக்கு இந்தப் படத்தை இவர் தமிழில் இயக்கவில்லை.படம்தான் நன்றாக வரவில்லையே,படத்தையாவது இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரத்தில் முடித்துத் தொலைத்தால் என்ன?.அட தேவுடா,மூன்று மணி நேர அளவிற்கு நம்மைக் கொடுமைப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

கொமரம் புலி-நிஜப் புலிகிட்ட மாட்டியிருந்தால் கூட,இந்த அளவிற்கு கஷ்டம் இருந்திருக்காது!

Friday, September 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்-திரை விமர்சனம்


சிவா மனசுல சக்தி பட இயக்குனர் 'ராஜேஷ்' இயக்கத்தில் ஆர்யா,சந்தானம்,நயன் தாரா நடிப்பில் வந்திருக்கும் படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்.

இப்பவும் கூட போரடிக்கிறபோதெல்லாம் நான் பார்க்கிற படம் சிவா மனசுல சக்தி(முதல் பாதி மட்டும்). அதனால் இந்த படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து போனேனோ,அதை முழுவதுமாய் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர்.

வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தன் அரியர் படிப்பை படித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவின் வாழ்வில் நயன் தாரா வருகிறார். அதன் பின் ஆர்யா எவ்வாறு திருந்தி,முன்னேறி,நயன் தாராவைக் கைப்பிடிக்கிறார் என்பதைக் காமெடியைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

பிட்டு கிட்டு அடித்தாவது பாஸாகிவிடு என்று சொல்லும் அம்மா,பிட்டு எடுத்துட்டு போனா மட்டும் பத்தாது;பாஸாகியும் காட்டிடனும் என்று சொல்லும் அண்ணன்,தனக்கு இருக்கும் ஒரே நண்பனுக்காக‌ எதையும்(?) செய்யத் தயாராகவிருக்கும் சந்தானம்,வேலை வெட்டியே இல்லாத காதலன் மேல் நம்பிக்கையோடு காத்திருக்கும் நயன் தாரா, யாரைப் பற்றியும்,எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியிலேயே வாழும் ஆர்யா என்று இவர்களை மட்டும் சுற்றி செல்லும் கதையில்,ஒவ்வொரு சீனையும் காமெடியாக மட்டுமே காட்டுவது என்று கங்கனம் கட்டி எடுத்திருப்பார்கள் போல்,படம் முழுவதும் தொடர்ந்து காமெடி சரவெடி.

ஆர்யா முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.இன்னும் கொஞ்சம் நன்றாகவே பண்ணியிருக்கலாம் என்று தோன்றினாலும்,தன்னால் முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்.சந்தானம் ஷகிலாவை கூப்பிட்டு வருவதைப் பார்த்து அவங்களை 'இங்க' ஏண்டா கூப்பிட்டுட்டு வந்த என்பதும்,அண்ணாமலை படத்தைப் பார்த்து விட்டு கனவுலகிலிருந்து திரும்பியவுடன்,எங்கே என் டிரைவர் நல்லதம்பி(சந்தானம்) என்பதும்,"உன் 'எக்ஸ்பீரியன்ஸைப்' பத்தி எனக்குத் தெரியாதா?" என்று சந்தானம் காலை அடிக்கடி வாருவது என்று நன்றாகவே பண்ணியிருக்கிறார்.வீட்டை விட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆர்யா வெளியேறும் காட்சியிலும்,அவர் கூலிங் கிளாஸை எடுத்துப் போட்டு செல்கையில் நம் அடி வயிறு குலுங்க ஆரம்பிக்கிறது.

ஆர்யாவிற்கு இணையான வேடம் சந்தானத்திற்கு.ஆர்யாவும்,இவரும் அடிக்கடி சேர்ந்து சொல்லும் 'நண்பேன்டா' என்பதாகட்டும்,பிஸினெஸ் சரியாகப் போகாத போதெல்லாம்,குடும்பத்தோடு தெருவில் நிற்பது போல் நினைத்துப் பார்ப்பதாகட்டும்,திட்டுற மூடு இல்லாமலேயே உங்களை எவ்வளவு திட்டியிருக்கிறான் பாருங்கள் என்று நயன் தாரா அப்பா சித்ரா லட்சுமணனிடம் ஆர்யாவைப் பற்றி போட்டுக் கொடுப்பது,அட்வான்ஸ் கேட்கும் இன்ஸ்டிடியூட் வாத்தியாரிடம் "பல்லு விளக்குறதுக்கு முன்னாடியே பாயாசம் வேணுமா?" என்று கிடைத்த வாய்ப்பை சந்தானம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நயன் தாரா சிரிக்கும் போது(மட்டும்) அழகாக இருக்கிறார்.படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.நயனுக்கு இப்போதெல்லாம் நடனம் வேறு நன்றாகவே வருகிறது(ம்..ம்).

ஜீவா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார். சரக்கு அடிக்கையில் ஊறுகாய் தீர்ந்தவுடன்,தொட்டுக்கொள்வதற்கு சித்ரா லட்சுமணனைப் பக்கத்தில் உட்கார சொல்வது என்று அவரும் தான் வரும் காட்சிகளில் கலகலப்பாக்கிவிட்டு செல்கிறார்.யுவனின் இசையில் 'பாஸு பாஸு' மற்றும் 'யார் இந்த பெண்தான்' பாடலும்,பின்னணி இசையும் நன்றாக இருக்கின்றன.ப‌ட‌த்தில் வ‌ரும் ஒரே ஒரே ச‌ண்டைக்காட்சியையும் காமெடியாக‌ மாற்றியிருப்ப‌தில் இய‌க்குனரின் சாம‌ர்த்திய‌ம் தெரிகிற‌து.இய‌க்குன‌ர் இளைய‌ராஜா ர‌சிகராக இருப்பார் போலும்.ப‌ட‌ம் முழுவ‌தும் ஆங்காங்கே இளைய‌ராஜா பாட‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன.

படம் 2:40 நிமிடங்கள் ஓடுவதால்,ப‌டத்தில் சுவாரசியமில்லாமல் வ‌ரும் சில‌ காட்சிக‌ளை இய‌க்குன‌ர் நீக்கியிருந்திருக்கலாம்.அதேபோல் ட‌புள் மீனிங் வ‌ச‌ன‌ங்க‌ளையும் நீக்கியிருந்தால்,ப‌ட‌ம் இன்னும் ந‌ன்றாக‌வே இருந்திருக்கும்.

முழு நீள காமெடிப் ப‌ட‌ம் எடுக்கும் இய‌க்குன‌ர்க‌ளின் எண்ணிக்கை குறைந்து வ‌ரும் இந்நேர‌த்தில்,இய‌க்குன‌ர் ராஜேஷ் ந‌ம்பிக்கை ஊட்டுகிறார்.

பாஸ் என்கிற‌ பாஸ்க‌ர‌ன்-த‌மாஸ்.

Wednesday, September 8, 2010

Top 10 Songs-August

1) இரும்பிலே ஒரு இதயம்-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) யார் இந்த பெண்தான்‍-‍பாஸ் என்கிற பாஸ்கரன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) தட தட என்று-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) அடி சாரலே-‍சிக்கு புக்கு‌-இசை:கலோனியல் கசின்ஸ் & பிரவீன் மணி

5) ஆத்தாடி ஆத்தாடி-அய்யனார்-‍இசை:தமன்

6) இறகைப் போலே-‍நான் மகான் அல்ல‌-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) ஏதேதோ ஏதே ஏதோ-‍ஊலலா-இசை:சேகர் சந்திரா & வி.குமார்

8) பார்வை உந்தன்‍‍-நில் கவனி செல்லாதே-‍இசை:செல்வகணேஷ்

9) ஒரு வானவில்லின்‍-காதல் சொல்ல வந்தேன்-இசை:யுவன் சங்கர் ராஜா

10) இரவினில் உந்தன்-‍‍நீயே என் காதலி-‍இசை:பிரேம் குமார்

Tuesday, September 7, 2010

க‌மல்ஹாச‌ன்-ஒரு அற்புத‌க் க‌லைஞன்


இந்தப் பதிவு கண்டிப்பாக நண்பர் கருந்தேள் எழுதிய பதிவிற்கு எதிர் பதிவு கிடையாது. அவருடைய பதிவுகளை,அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே விரும்பி படித்து வருகிறேன். ஒவ்வொரு விசயத்தின் மீதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும்.இந்தப் பதிவில் கமலை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான‌ காரணங்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

கமல் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றச்சாட்டு அவர் ஆங்கிலப்படங்கள் சிலவற்றை காப்பி அடித்து தமிழில் பெயர் வாங்கிக் கொண்டார் என்பது. நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமல் ஆரம்ப‌த்திலிருந்து இப்போது வரை தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்துபவர்.அதற்கப்புறம்தான் அவருடைய மற்ற பரிமாணங்கள்.
கமலின் ஆரம்பக் காலத்துப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. அதற்கு முன் மகேந்திரன்,பாரதிராஜா,பாலசந்தர் என்று தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல சினிமாக்களையும் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா,தொடர்ந்து மசாலா படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல் நல்ல படங்கள் வந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பண்ண வேண்டிய மாற்றத்தை,வேறு வழியில்லாமல் நடிகரான கமல் பண்ண வேண்டியதாயிருந்தது.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த கமலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை.அதனால்தான்,அவரே வித்தியாசமான படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.இருப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்த‌ சாதா‌ர‌ண காமெடி ப‌ட‌மாகிய‌ 'எல்லாமே இன்ப‌ மைய‌ம்' ப‌ட‌த்தில் க‌ம‌லின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள‌லாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை' யைத் தானே தயாரித்து நடித்தார்.கமலினுடைய ஆசையெல்லாம் வெளி நாட்டில் நல்ல கதைகளோடு வரும் படங்களைப் போன்று தமிழிலும் நல்ல படங்கள் வர வேண்டுமென்பதே.இதில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.கமல் ஏதோ வெளி நாட்டுப் படங்களை படங்களை மட்டுமே தமிழுக்கு கொண்டு வந்தார் என்றில்லை. மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்தப் படங்களையெல்லாம் முடிந்த அளவிற்கு நன்றாகவும் கொடுத்திருக்கிறார்.(குருதிப்புனல் பார்த்துவிட்டு அதன் ஒரிஜினல் டைரக்டர் சொன்னது; "ஒரிஜினலை விடவும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்" என்பதுதான்.இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது.(இதில் பொதுவாக காப்பி அடிப்பதைப் பற்றி இந்தியர்கள் யாருமே பெரிதாக கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை.நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்).

இன்னும் சொல்லவேண்டுமானால் இப்படி கமல் நடித்த பெரும்பாலான படங்கள் அவருடைய தயாரிப்பிலோ,இயக்கத்திலோ வ‌ந்த‌வை கிடையாது.க‌ம‌ல் என்ன‌வோ அந்த‌ மாதிரி ப‌ட‌ங்களில் ம‌ட்டுமே ந‌டித்து பெய‌ர் வாங்கிய‌து போல் சில‌ர் சொல்வ‌து ஒப்புக் கொள்ள முடியாது.க‌ம‌ல் த‌ன‌க்குக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த ப‌ட‌ங்கள் எந்த‌ மொழியிலிருந்தாலும் த‌ய‌ங்காம‌ல் ந‌டித்து வ‌ந்தார். அத‌னால்தான் புஷ்பக்,கோகிலா(க‌ன்னட‌ம்),ச‌ல‌ங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து(தெலுங்கு),ஏக் துஜே கேலியே(இந்தி) என்று அவ‌ரால் எல்லா மொழிக‌ளிலும் நல்ல ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க முடிந்த‌து. மேலும்,த‌மிழ்,தெலுங்கு,க‌ன்ன‌ட‌ம்,ம‌லையாளம்,இந்தி என்று அனைத்து மொழிக‌ளிலும் நேர‌டிப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இந்திய ந‌டிக‌ர் கமல் ஒருவர்‌‌ ம‌ட்டும்தான் என்பது மறக்க முடியாத உண்மை.

தமிழ் சினிமாவிற்கு கமல் செய்த மிக நல்ல விசயம் என்னவென்றால், வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததுதான். மற்ற மொழிகளிலெல்லாம் இப்போதிருக்கும் இளம் நடிகர்கள் கொஞ்சம் நன்றாக நடித்தால் கூட தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். இங்கே விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவதற்கு மிகக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது.அதற்குக் காரணம், கமல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கிற Standard தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அமிதாப்பின் நடிப்பை 'பா' படத்தில் எல்லா வட இந்தியப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதியிருந்தன. இதேபோல் வேறு ஒரு நடிகர் நடித்து,தமிழில் வந்திருந்தால் மக்கள் என்ன சொல்வார்கள்,கமல்தான் இதே மாதிரி ஏற்கெனவே பண்ணியிருக்கிறாரே என்று சாதாரணமாக நினைப்பார்கள்.(அதற்காக நான் அமிதாப்பின் உழைப்பைக் குறை கூறுகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம்). அதுதான் கமலின் வெற்றி. அதனால்தான் இங்கே உள்ள நடிகர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துப் பேர் வாங்குவதற்கான ஆரம்ப சுழி கமலிடமிருந்தே ஆரம்பமாகியது என்று கூறுகிறேன்(கமலுக்கு இதே போல் ஆதர்சனமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்).

கமல் காப்பி அடித்த படங்களை எல்லாம் ஒரு உதாரணத்திற்காக தமிழ் சினிமாவிலிருந்து நீக்கி விடுங்கள்.நமக்கு பல நல்ல படங்கள் கிடைத்திருக்காது;அது மட்டும்தான் உண்மை.விஜய் டிவி அவார்ட்ஸ்ஸில் பாலா பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நான் கடவுள் படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஸனே அன்பே சிவம்' தான் என்றார். ஒரு வேளை கமல் அன்பே சிவம் போல் ஒரு படம் எடுக்காமல் இருந்திருந்தால் 'நான் கடவுள்' போன்ற ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும்.இதில் சில வெளிநாட்டுப் படங்களை இன்ஸ்பிரேஸனாக வைத்துக்கொண்டு கமல் எடுத்த படங்களையெல்லாம் அப்பட்டமான காப்பி என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படிப்பார்த்தால் பருத்தி வீரனையே,விருமாண்டியின் காப்பி என்று சொல்லி விடலாம்-அது கொஞ்சம் கூட உண்மையில்லை என்றாலும் கூட‌(இரு படங்களும் மதுரை மண் சார்ந்தவை,ஹீரோ ஊதாரித்தனமாகத் திரிவது,காதல் வயப்பட்டவுடன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பது,காதலி கற்பழிக்கப்பட்டு இறப்பது).ஆனால் கமல் பருத்திவீரனுக்காக அமீரைப் பாராட்டித் தள்ளினார். கமல் படங்களைப் பார்த்து விட்டு, பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உத்வேகமாக படமெடுக்க ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

க‌ம‌ல் வேறு மொழி ப‌ட‌ங்களைக் காப்பி அடித்து த‌மிழில் எடுத்த‌ பெரும்பாலான ப‌ட‌ங்க‌ள் அவ‌ருக்கு தோல்வியை ம‌ட்டுமே கொடுத்திருக்கின்ற‌‌ன‌‌.அவ‌ர் நினைத்திருந்தால் ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் தொட‌ர்ந்து ந‌டித்து காசு ஈட்டியிருக்க முடியும். ஆனால் சினிமாவில் உள்ள காத‌லால்தான் வித்தியாச‌மான ப‌ட‌ங்களைத் தொட‌ர்ந்து கொடுக்க வேண்டுமென்று நினைத்து,அவரால் அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற முடிந்திருக்கிறது.ந‌ன்றாக‌ நினைத்துப் பாருங்கள், ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை தேர்வு செய்து,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு அந்த‌ ப‌ட‌த்திற்காக‌ உழைத்து, ப‌ட‌மும் ந‌ன்றாக‌ வந்திருந்து ஃபிளாப் ஆவ‌து போல் கொடுமையான‌ விச‌ய‌ம் வேறு எதுவும் இருக்க‌ முடியாது. ஒரு த‌ட‌வை ஃபிளாப் ஆகிற‌தென்றால் பர‌வாயில்லை. ஆனால் தொட‌ர்ந்து தோல்வியடைந்தாலும்,தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிர‌மாதித்ய‌ன் போல் இருந்த ந‌டிக‌ர்க‌ள் இந்திய‌ சினிமாவில் மிக மிக‌ குறைவு.

க‌மலை ம‌ற்றொரு விச‌ய‌த்தில் எல்லோரும் குறை கூறும் விச‌ய‌ம் அவ‌ருடைய‌ 'உல‌க‌ நாய‌க‌ன்' ப‌ட்ட‌ம். அப்ப‌டிப் பார்த்தால் த‌மிழில் ப‌ட்ட‌ம் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா ந‌டிக‌ர்களையும் குறை கூற‌ வேண்டிய‌திருக்கும்.இதில் கமலை மட்டும் குறை கூறுவது ஏனோ?.க‌ம‌லுக்கும், இந்தியாவில் உள்ள‌ ம‌ற்ற‌ ந‌டிக‌ர்க‌ளுக்கும் உள்ள வித்தியாச‌ம் என்ன‌வென்றால்,மற்றவ‌‌ர்க‌ள் ந‌டித்த‌ எந்த‌ வேட‌த்தை வேண்டுமானாலும் க‌ம‌லால் ஓர‌ளவிற்கு ந‌டிக்க‌ முடியும். ஆனால் கம‌ல் ந‌டித்த‌ அனைத்து வேட‌ங்களையும்,இந்தியாவில் வேறு ஏதாவ‌து ஒரே ந‌டிக‌ர் ந‌டிப்ப‌து இயலாத‌ விச‌ய‌ம். ஏனைன்றால் க‌ம‌ல் வெறும‌னே ஒரு ந‌ல்ல‌ ந‌டிக‌ன் ம‌ட்டும‌ல்ல‌,க‌தை,திரைக்க‌தை,வச‌ன‌ம்,இயக்க‌ம்,த‌யாரிப்பு,ந‌ட‌ன‌ம்,பாட‌ல் எழுவ‌து,பாடுவ‌து,ச‌ண்டை காட்சிக‌ளில் ரிஸ்க் எடுத்து ந‌டிப்பது என்று பல விசயங்களையும் பண்ணிக் கொண்டிருப்பவர். உல‌க‌த்திலேயே வேறு ஏதாவ‌து ந‌டிக‌ர் இத்த‌னை திறமைக‌ளோடு இருப்ப‌தாக‌த் தெரிந்தால் பின்னூட்ட‌மிடுங்க‌ள்(டி.ராஜேந்த‌ர் என்று கூறுபவ‌‌ர்க‌ள் சொர்க்க‌த்திற்குப் போக‌க் க‌ட‌வ‌து).வேறு மொழிகளில் இந்த நடிக‌ரின் காமெடி படங்கள் நன்றாக இருக்கும்(அந்த நடிகருக்கு நடனம் வராமல் இருக்கும் என்பது வேறு விசயம்);மற்றொரு நடிக‌ரின் ஆக் ஷன் படங்கள் நன்றாக இருக்கும்; இந்த நடிகரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று வேண்டுமானாலும் கூற முடியும்.ஆனால் ஒரே நடிகர் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வேடங்களிலும் தொடர்ந்து பரிணமிப்பதுதான் கமலின் தனித்துவம்.கமல் நடித்த சிறந்த படங்களான "விருமாண்டி,அன்பே சிவம்,ஹேராம்,மகாநதி,தேவர் மகன்,மைக்கேல் மதன காமராஜன்,அபூர்வ சகோதரர்கள்,பேசும் படம்,நாயகன்,மூன்றாம் பிறை,மரோ சரித்ரா,சலங்கை ஒலி,16 வயதினிலே...என்று பல படங்கள் இருக்கையில் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் காப்பி அடித்து பெரும் புகழையும் இடத்தையும் அடைந்து விட்டார் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படி என்ன பெரிய இடத்தை நாம் அவருக்கு கொடுத்துவிட்டோம்;அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதற்கு.50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை மூச்சாகக் கொண்டு பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும்,தமிழ்நாட்டில் கமலுக்கு இப்போதும் இரண்டாவது இடம்தான்.(கமல் 50 ஆண்டு விழாவில் ரஜினியே ஆச்சரியப்பட்டு சொன்னது,"வட இந்திய நடிகர்களெல்லாம் இப்போது வரை ஆச்சரியப்படும் விசயம்,கமல் இருக்கையில் நான் எப்படி நம்பர் 1 என்பதுதான்"-அப்படி பொது மேடையில் ரஜினி சொன்னது,அவரின் பெருந்தன்மை என்பது வேறு விசயம்)

கமல் புது இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்போதிருக்கும் மற்ற முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமான இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறார்.ஷங்கர்,கவுதம் மேனன் போன்றோருக்கு கமலின் படங்கள் அவர்களுடைய மூன்றாவது படம்தான்.சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்புக் கொடுத்ததில் இருந்து சரண்,சுந்தர்.c,உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் என்று பல இன்றைய இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கின்றார். மிஷ்கினோடு கூட படம் செய்வதுதாக இருந்தது வேறு விசயம்.கமலுடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் அவர்களின் இயக்கத்தில் சிறந்த படமாக இன்றும் சொல்லப்படுவது கமலுடன் அவர்கள் சேர்ந்து பண்ணிய படங்கள்தான்.

க‌ம‌லின் மீது வைக்க‌ப்ப‌டும் மற்றொரு குற்ற‌ச்சாட்டு அவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் இரு முறை ம‌ணமுடித்து விவாகரத்து ஆனது.ஒரு க‌ணவன்,ம‌னைவி இருவ‌ரும் ம‌ன‌முவ‌ந்து ச‌ட்ட‌த்திற்கு உட்ப‌ட்டு விவாக‌ர‌த்து செய்வ‌தில் என்ன‌ பெரிய‌ த‌ப்பு இருக்க முடியும்,அதையும் விட இது அவர்களின் தனிப்பட்ட விசயமும் கூட.ம‌ற்றொன்று அவ‌ருடைய திருமண வாழ்க்கையைத்தான் எல்லோரும் பெரிய‌ குறையாக‌ சொல்கிறார்க‌ளே தவிர, அவரிட‌ம் உள்ள பல ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளான‌ அர‌சிய‌லுக்கு வ‌ர‌மாட்டேன் என்று சொல்லி இப்பொது வ‌ரை த‌ன் பேச்சைக் காப்பாத்துவ‌து,த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளையெல்லாம் முதல் ஆளாக‌ ந‌ற்பணி ம‌ன்ற‌ங்க‌ளாக‌ மாற்றிய‌து,சினிமாவில் ச‌ம்பாதித்த‌ காசை சினிமாவிலேயே முத‌லீடு பண்ணுவ‌து,த‌ன்னுடைய‌ உட‌லையே தான‌மாக‌க் கொடுத்த‌து,காட்சிக்கு தேவைப்ப‌டாத‌வ‌ரை த‌ண்ணி,சிகரெட் அடிப்ப‌து போன்று த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் நடிக்காமல் இருப்பது,முடிந்த வரை தூய தமிழிலேயே பேசுவது போன்றவற்றைப் பற்றி வாயே திறப்பதில்லை.

க‌டைசியாக‌,குறைக‌ள் இல்லாத ம‌னித‌ன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவ‌ரிட‌ம் உள்ள‌ சில‌ குறைக‌ளை ம‌ட்டும் மிகைப்ப‌டுத்தி,அவ‌ர் இத்த‌னை ஆண்டுகளாக‌ ப‌ண்ணிய‌ சாத‌னைக‌ளை மூடி‌ ம‌றைக்க‌ நினைப்ப‌து,ஒரு உண்மையான‌ க‌லைஞனுக்கு நாம் கொடுக்க‌ நினைக்கும் ம‌ரியாதையாக‌ இருக்க‌ முடியாது.

Sunday, September 5, 2010

பலே பாண்டியா-திரை விமர்சனம்

தன்னுடைய கடைசி ஆசையே உடனடியாக சாவதுதான் என்பதாக வைத்திருக்கும் ஹீரோவின் வாழ்வில், ஒரு தாதாவும்,பெண்ணும் குறிக்கிடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'பலே பாண்டியா' படத்தின் கதை.

பிறந்ததிலிருந்து தான் நினைத்தது எதுவுமே நடக்காமல்,வாழ்க்கையில் விரக்தி அடையும் பாத்திரத்திற்கு விஷ்ணு பொருத்தமாக இருக்கிறார்.ப‌ட‌த்தில் விஷ்ணுவின் காஸ்ட்யூம்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கின்றன.குறைந்த பட்ஜெட் படமென்பதால் சென்னையின் பெரிய தாதாவைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் போல்.விஷ்ணுவின் 'பேட் லக்கை' காட்டுவதற்காக வரும் காட்சிகளான 'அவருடைய ஜாதகத்தை எழுதின ஜோஸியக்காரர் சாவது;அவர் வருகையில் குறுக்கே வரும் பூனை பஸ்ஸில் அடிபட்டு சாவது' போன்ற ஆரம்பக்கட்ட காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன.தாதா RKP ஆக வருபவர் நல்ல தேர்வு.பிணம் போனாத்தான் அழணும்;பணம் போனா அழக்கூடாது என்று சொல்லி விஷ்ணுவிற்கு படத்தில் கார்டியன் போல் இருக்கிறார். ஜான் விஜய் வாயைத் திறந்தாலே, நம் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஷ்ணு காதல் வயப்பட்டவுடன் அவர் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதும்,காதலித்த பெண் அவருடைய நண்பரை தேர்வு செய்தவுடன் பட்டாம் பூச்சிகள் இடம் மாறுவதும் நன்றாக இருக்கிறது.படத்தின் ஒரு பாடலுக்கு அதைப் பாடிய அனைத்து பாடகர்களும் நடித்திருக்கிறார்கள்(விஜய் யேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார்).ஹீரோவிற்கு வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கையில்,அவருடைய சாவு தேதி நெருங்கி வருவது பரபரப்பைக் கூட்டினாலும்,அதன் பின் வரும் காட்சிகள்,படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத் தொடங்குகின்றன.

முதல்பாதியில் கொஞ்சம் சுவாரசியமாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்கிறது.குறிப்பாக விவேக் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் மயான அமைதி.ஹீரோ தன்னைக் கொலை செய்யச் சொல்லி தாதாவிடம் கேட்பது(சிந்தனை செய்),அவர் ஸ்கூட்டரில் செல்லும் போது,நடப்பவர்கள் முதற் கொண்டு அவரை முந்திச் செல்வது(ஓரம் போ) என்று சில படத்தின் காட்சிகளை இயக்குனர் அப்படியே உருவியிருக்கிறார்.

சின்ன சின்ன ஐடியாக்கள் ஒரு விளம்பர படத்திற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாமே தவிர, ஒரு முழு படத்தையும் காப்பாற்ற‌ உதவாது என்பது விளம்பரபட இயக்குனராக இருந்து,தன் முதல் படத்தை இயக்கியிருக்கும் சித்தார்த் சந்திரசேகருக்கு இப்போது தெரிந்திருக்கும்.

பலே பாண்டியா-முதல் பாதி 'ஹையோ' பாண்டியா;இரண்டாம் பாதி 'ஐயோ' பாண்டியா.