Wednesday, June 29, 2011

180-திரை விமர்சனம்திருமண வாழ்க்கையை சந்தோஷமாகத் துவக்கும் நாயகனுக்கு,'180' நாட்கள்தான் அவனால் உயிர் வாழமுடியும் எனத் தெரிய வருகிறது.இந்நிலையில் அவனின் வாழ்வில் புதிதாக ஒரு பெண் வேறு நுழைகிறாள்.அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் '180' படத்தின் கதை.

மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் இளைஞன் வேடத்திற்கு சித்தார்த் கச்சிதமாகப் பொருந்துகிறார்.படத்தின் ஆரம்பத்தில் 'தீர்க்காயுசா' இருப்பா என்று வாழ்த்தும் சாமியாரைப் பார்க்கும் பார்வையிலும்,சிறுவன் மூலமாகத் தன் வாழ்க்கையை உணரும் தருணத்திலும்,தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி பின்பாதியில் வருந்தும் இடங்களிலும் சித்தார்த்தின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.இரு பெரு கண்களை(யும்) உடைய நித்யா மேனனை விட,பிரியா ஆனந்திற்குத்தான் 'ஸ்கோப்' அதிகம்.அவரும் அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

சித்தார்த்திற்கு அவர் மனைவி அருகில் இருக்கும்போது மட்டும்,கயிற்றுடன் ஒருவர் அவர் கண்களுக்கு மட்டும் தெரிவது நன்றாக இருக்கிறது.அதேபோல்,மனிதனின் உண்மையான சந்தோஷம் குழந்தைகளோடு இருக்கையில்தான் கிடைக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் இயக்குனர் 'ஜெயேந்திரா' வெற்றி பெற்றிருக்கிறார்.இரண்டாம் பாதியில் படம் மெதுவாகச் செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.இடைவேளைக்குப் பின் கதை எதை நோக்கி நகருகிறது என்பதையும் ஊகிக்க முடிகிறது.

படத்தின் மெயின் ஹீரோ 'பாலசுப்ரமணியத்தின்' காமெராதான்.அவர் காமெரா கண்கள் வழியாகத் தெரியும் காட்சிகள் அனைத்தும் அத்தனை துல்லியம்(சித்தார்த்தின் தலையில் இருக்கும் ஒரே ஒரு வெள்ளை முடி கூட துல்லியமாகத் தெரிகிறது).ஷரத்தின் இசையில் 'நியாயம் தானா' மற்றும் 'சிறு சிறு கனவுகள்' மனதை வருடுகின்றன‌.

180-முதல் பாதி இளமைத் துள்ளல்;இரண்டாம் பாதி உணர்ச்சிக் குவியல்

Thursday, June 16, 2011

ஆரண்யகாண்டம்-திரை விமர்சனம்ஒரு கேங்க் லீடரின்(ஜாக்கி ஷெராஃப்) கீழே வேலை பார்க்கும் அடியாள் சம்பத்திற்கு ஜாக்கி ஷெராஃப் போல் லீடராக ஆசை. அதே நேரத்தில் ஜாக்கி ஷெராஃபிடம் மாட்டிக் கொள்ளும் பெண்ணிற்கு அவருடைய பணத்தின் மேல் ஆசை.தாங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்காக ஒரு ஆணும்,பெண்ணும் எவ்வாறு புத்திசாலித்தனத்துடன் வெவ்வேறு விதமாகக் காய்களை நகர்த்துகின்றனர் என்பதுதான் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'ஆரண்யகாண்டம்' படத்தின் கதை.

படத்தில் கிளைக்கதைகளாக வரும் ரவிகிருஷ்ணா,வாழ்ந்து கெட்ட ஜமிந்தார் மற்றும் அவருடைய சிறு பையன்,எதிர் குரூப் லீடர் கஜேந்திரன் என்று படத்தின் அனைத்து பாத்திரங்களுமே படத்தின் திரைக்கதைக்கு உதவியாக இருக்கின்றன. தமிழில் கேங்க்ஸ்டர்ஸின் வாழ்க்கையைப் பிரதானமாகக் கொண்டு,பாடல்களே இல்லாமல் வெளிவந்திருக்கும் முதல் படம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னுடைய லீடரான ஜாக்கி ஷெராஃப்பே தன்னைக் கொல்வதற்காகத் தன் மனைவியைக் கடத்தி சென்று விட்ட பிறகு, எதிர் குரூப் ஆட்கள் தன்னைக் கொல்ல வருகையில்,ஓடிக் கொண்டே சம்பத்,ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து கொண்டே அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டியது எது எனத் திட்டமிடும் இடம் அசத்தல்.படத்தின் முன் பாதியில் வரும் சில காட்சிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால்,மொத்தப் படமுமே மிக நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்களையும்,படங்களின் வசனங்களையும்(டிவியில்) காட்சிக்கு ஏற்றவாறு தேர்வு செய்திருப்பது நன்றாக இருக்கிறது.உதாரணத்திற்கு ரவி கிருஷ்ணா ஹீரோயின் யாஸ்மின் பொன்னப்பாவுடன் படுக்கையில் இருக்கையில் டி.வி யில் '16 வயதினிலே' சப்பாணி கமல் பேசிக் கொண்டிருப்பது என்று பார்த்து பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள்.அதேபோல் வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் போதைப் பொருட்களை பறிகொடுக்கையில்,அவரின் பையன் கையில் இருந்து ஐஸ் கீழே விழுவ‌து டைர‌க்ட‌ர் ட‌ச்.

யுவ‌ன்ச‌ங்க‌ர் ராஜாவின் பின்ன‌ணி இசை,வினோத்தின் ஒளிப்ப‌திவு ம‌ற்றும் ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்க‌ள்('புத்த‌ருக்கு போதிம‌ர‌ம் மாதிரி,கேங்ஸ்ட‌ர்சுக்கு சேசிங்','ப‌ய‌ம் போக‌லை;ஆனால் தைரிய‌ம் வ‌ந்திடுச்சு','கப்பு பார்த்தா மப்பு இல்லை') ந‌டிக‌ர்க‌ளின் தேர்வு என்று அனைத்துமே மிக‌ சிற‌ப்பாக‌ வ‌ந்திருக்கிற‌து.

ஆர‌ண்யகாண்ட‌ம்-'ஆ'ச்ச‌ர்ய‌ காண்ட‌ம்.