Sunday, May 15, 2011

அழகர்சாமியின் குதிரை--திரை விமர்சனம்


திருவிழாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கும் 'சாமி' அழகரும், திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் 'ஆசாமி' அழகரும் தத்தம் குதிரைகளைத் தொலைத்து விடுகிறார்கள்.குதிரை கிடைத்து திருவிழாவும்,திருமணமும் நடந்ததா என்பதுதான் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் கதை.

பாஸ்கர் சக்தியின் 'அழகர்சாமியின் குதிரை' குறுநாவலை சிதைக்காமல் அப்படியே படம் எடுத்ததற்காக சுசீந்திரனுக்கு ஒரு சல்யூட்.கிராமத்து மக்களின் வாழ்க்கையை அப்படியே படமாக்கிவிட வேண்டும் என்று முனைந்ததில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாடகம்போல் ஆகிவிட்டிருப்பதுதான் சோகம்.அப்புகுட்டியின் வருகைக்குப் பிறகு படம் வேகமெடுத்தாலும்,க்ளைமாக்ஸில் கோட்டைவிட்டு விட்டார்கள்.

அப்புகுட்டிக்கும்,சரண்யா மோகனுக்குமான காதல் அழகான கவிதை.அப்புக்குட்டிக்கும் குதிரைக்குமான உறவும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.இளையராஜாவின் பின்னணி இசையும்,'பூவைக் கேளு' பாடலும் காதுகளில் இன்னும் ரீங்காரம். அதுபோலவே தேனி ஈஸ்வரின் கேமராவும் கண்களுக்கு குளிர்ச்சி.ஊர் திருவிழாவிற்கு வரி கொடுக்க யோசிக்கும் மக்கள்,வெளியூர் கோடாங்கிக்குப் பணத்தை அள்ளிக் கொடுப்பது நிதர்சனம்.

மெதுவாக நகரும் திரைக்கதையில் பாஸ்கர் சக்தியின் வசனம் பெரிய ஆறுதல்.'வாசல் தெளிக்கிற மாதிரி பெய்யுது மழை','கோடாங்கிக்கு கிறுக்கா பிடிச்சிருக்கா;இல்லை சாமி பிடிச்சிருக்கு;ரெண்டும் ஒண்ணுதான்','காட்டேரி பூஜை கட்டு,இல்லை இன்னொரு பொண்டாட்டி கட்டு,ஆனால் என் தாலியை அக்காதே' என்று கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வறுமையில் உழலும் கிராமத்து மக்கள் திருவிழாக் காலங்களில் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போல் படமும் சில இடங்களில் மட்டும் சுவாரசியமாக இருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை-மரக் குதிரை