Monday, March 29, 2010

அங்காடித் தெரு- திரை விமர்சனம்


மிகப் பெரிய அங்காடிகளில் உள்ள 'அலங்கார பொம்மைகளை'ப் போன்று தங்களுடைய அனைத்து உணர்ச்சிகளையும் இழந்து விட்டு வேலை பார்க்கும் இன்றைய இளைய தலை முறையினருக்குள்,காதல் என்ற உணர்வு வருகையில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை,தி.நகர் சாலைகளை மூன்று மணி நேரம் நம் கண் முன் நடமாட விட்டு வசந்தபாலன் காட்டியிருக்கும் படம்தான் 'அங்காடித் தெரு'.

ப‌ட‌த்தில் வ‌ரும் அனைத்து க‌தாபாத்திர‌ங்க‌ளுமே த‌ங்க‌ளுடைய‌ இய‌ல்பான‌ ந‌டிப்பினால்,நாம் பார்த்துக் கொண்டிருப்ப‌து ப‌டம் என்ற உணர்வு எழாம‌ல் பார்த்துக் கொள்கிறார்கள்.படத்தின் வசனங்களும் மிகவும் இயல்பாக இருக்கின்றன்.அஞ்ச‌லி மீண்டும் ஒரு முறை த‌ன்னுடைய‌ அழகான‌ ந‌டிப்பினால் ந‌ம் ம‌னதைக் கொள்ளை கொள்கிறார்.அஞ்ச‌லியைப் பார்க்கும் போது,ந‌ம் ப‌ழைய‌ காத‌லிக‌ளில் யாரவது ஒருவ‌ரை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் அதே நேர‌த்தில்,புது காத‌லுக்கான‌ விதையையும் விதைத்துவிட்டு செல்கிறார்.ஹூரோ ம‌கேசும் இந்த‌ப் ப‌ட‌த்திற்குப் பொருத்த‌மான‌ தேர்வு.

ம‌ற்றவர்க‌ளுக்கு கீழே அடிமாடு போல் வேலை செய்வ‌தை விட,சொந்தமாக‌‌ தொழில் செய்யும் ம‌க்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியாகவும்/கவுரவத்தோடும் இருக்கிறார்கள் என்பதை கண் பார்வை இல்லாத பெரியவர்,கழிவறையை சுத்தம் செய்து காசு வசூலிப்பவர் போன்றவர்களின் மூலம் காட்டியிருப்ப‌து ந‌ன்றாக‌ உள்ளது.இன்னும் சொல்ல‌ப் போனால் இந்த‌ உலகத்தில் ப‌ணம் சம்பாதிப்ப‌த‌ற்கு எவ்வெளவுக்கெவ்வ‌ளவு கெட்ட‌ வ‌ழிக‌ள் உள்ளதோ,அதை விட‌ மிக‌ மிக‌ அதிக‌மான ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் ந‌ம் கண் முன்னே இருக்கின்ற‌ன என்று காட்சிப்படுத்தியிருப்பதும் மிகவும் அருமை.'உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் உற்சாக‌ம்' ம‌ற்றும் 'க‌தைக‌ளைப் பேசும் விழிய‌ருகே எதை நான் பேச‌ என்னுயிரே' பாட‌ல்க‌ள் இன்னும் ம‌ன‌துக்குள் ரீங்கார‌மிட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌.காத‌ல் ஏற்ப‌ட்ட‌வுட‌ன் பெண் 'உணர்வு' பூர்வ‌மாய் மாறுவ‌தையும்,அதே நேர‌த்தில் ஆண் அந்தப் பெண்ணிற்கும் சேர்த்து 'நாளை' யைப் ப‌ற்றி யோசிக்க ஆர‌ம்பிப்ப‌தையும் 'செல்வ‌ராணி-சௌந்தர‌பாண்டி' எபிசோடின் மூல‌ம் அழகாக‌ முன் வைத்திருக்கிறார்க‌ள்.

மிக‌ப் பெரிய‌ அங்காடிக‌ளில் வேலை பார்க்கும் இளைஞர்க‌ள் ப‌டும் துய‌ர‌ங்க‌ளை மிக‌வும் விரிவாக‌க் காட்டிவிட்டு,அதே விச‌ய‌ங்களைப் பாட்டிலும் காட்டுவ‌து சோர்வை ஏற்ப‌டுத்துகிறது.அதே போல் அவ‌ர்களின் சிரமங்களை சொல்லும் சில‌ காட்சிக‌ள் 'கொஞ்சம்' மிகைப்படுத்த‌ப்ப‌ட்ட‌து போல் இருப்பதாகத் தோன்றுவது ப‌ட‌த்தின் மிக‌ப் பெரிய‌ ப‌ல‌வீன‌ம்.அது ப‌ட‌த்தின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையைக் குலைப்ப‌தாக‌ உள்ளது.ப‌ட‌த்தில் இட‌ம் பெறும் சில காட்சிக‌ள் ந‌ம்முள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்ப‌டுத்தாமல் வெறுமனே ந‌க‌ர்வ‌து ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்தினாலா அல்ல‌து ப‌ட‌த்தின் பின்ன‌ணி இசையினாலா என்று புரிய‌வில்லை.

எது எப்ப‌டியாகினும் நாம் பார்க்க‌ ம‌றந்த‌ உலக‌த்தை ந‌ம் க‌ண் முன் ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ற்ற‌ இய‌க்குன‌ர்க‌ளுக்கும் காட்டியதில் வ‌ச‌ந்த‌ பால‌ன் பார‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ராகிறார்.

அங்காடித் தெரு‍-'வெயில்' போல சுள்ளென்று நம் முக‌த்தில் அடிக்காவிட்டாலும்,ந‌ம் 'நிழல்'க‌ளை நமக்கு காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறது.

Monday, March 22, 2010

முன் தினம் பார்த்தேனே‍‍-திரை விம‌ர்ச‌ன‌ம்

நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரியான பெண்,இந்த உலகத்தில் 'ஒருவர்' மட்டுமே கிடையாது.ஒரே மாதிரி உருவ அமைப்பிலேயே ஏழு பேர் இருக்கும் போது,நம் மனதுக்கு/எண்ணத்துக்கு ஏற்ற மாதிரி அதிகமான பெண்கள் இவ்வுலகத்தில் இருப்பார்கள்.ஒருவர் நம்மை விட்டு விலகிச் சென்றாலும்,மற்றொருவர் நாம் நினைத்தபடியே நமக்கு கிடைப்பார் என்பதை சொல்லும் படம்தான் 'முன் தினம் பார்த்தேனே'.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு காதலிப்பதைத் தவிர வேறு 'வேலை' எதுவும் இல்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே,கதாநாயகனை Software Company-ல் Project Manager ஆக காட்டியிருக்கும் டைரக்டரின் சமயோசிதத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.அவர் Software Company போல் காட்டியிருக்கும் இடத்தையும்,ஆட்களின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது,மதுரைப் பக்கத்தில் வாழும் கதாநாயகன் சென்னை பாஷை பேசுவது போல் உள்ளது.

படத்தை ஒரளவிற்கு பார்க்க வைப்பது தமனின் இசையும்,சாய் பிரசாந்த்தின் காமெடியும் மட்டும்தான்.சாய் பிரசாந்த்திற்கு நிச்சயம் செய்த பெண் லெட்டர் எழுதி வைத்து விட்டு,வீட்டை விட்டு ஓடியவுடன்,ஹுரோ சஞ்சய்,லெட்டர் மட்டும் எழுதி வைச்சிருந்திருக்கலாமே என்று சாய் பிரசாந்த்திடம் கேட்பது கலக்கல்.நான் காய்ஞ்சு போயிருந்தாலும் என்னோட Taste அவ்வளவு Worst கிடையாது என்று ஹுரோ சஞ்சயின் நண்பனாக வருபவர் ஆஃபிஸ் தோழியிடம் கலாய்ப்பது,சாய் பிரசாந்த்தை அவர் தங்கை கலாய்ப்பது,டான்ஸ் கிளாஸ் காட்சிகள்,பிரியா உனக்கான ஒருத்தனோ/ஒருத்தியோ கண்டிப்பாகக் கிடைச்சிடுவாங்க‌ என்று படத்தின் பல இடங்களில் சின்ன சின்ன நகைச்சுவைக் காட்சிகளால் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.பொண்ணுங்க எல்லாம் நம்முடைய‌‌‌‌ கழுத்தை நம்மளவே அறுக்க வச்சு,அது நம்ம உடம்புக்கு நல்லதுன்னு நம்மளவே நம்பவும் வைச்சுடுவாங்க என்று படத்தின் வசனகர்த்தாவும் கிடைக்கும் இடங்களில் புகுந்து விளையாடுகிறார்‍‍.ஏற்கெனவே காதலில் தோல்வியுற்ற கதாநாயகன்,தான் விரும்பும் பெண்ணிற்கும் பழைய காதல் ஒன்று உள்ளது என்று தெரிய வந்தவுடன்,அவளை விட்டு விலகி வருவதும் பின்பு அவளையே நினைத்து உருகுவதும் யதார்த்தம்.

தன்னோட அடுத்த‌ படத்துக்காக T.ராஜேந்தர் தேர்வு செய்து வைத்திருந்த ஹீரொயின்ஸை எல்லாம்,படத்தின் டைரக்டர் மகிழ் திருமேனி இந்தப் படத்துக்காகக் கடத்தி கொண்டு வந்துவிட்டார் போல.அத‌னாலேயே,இந்தப் படம் பார்க்கும் போது,ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பதைப் போன்று உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதைத் தானே கொன்று விடுகிறான் என்று படத்தில் டைரக்டர் சொல்கிறார்-அவரும் கூட இந்தப் படத்தை ரொம்பவும் நேசித்துவிட்டார் போல்.

முன் தினம் பார்த்தேனே‍‍-படமும் ஏற்கெனவே பார்த்த மாதிரியே இருக்கிறது!

Top 10 Songs-March

1. ஹோசானா-விண்ணைத் தாண்டி வருவாயா-‍‍இசை:A.R ரகுமான்

2. கொரே கொரே-மாஸ்கோவின் காவேரி-‍‍இசை:தமன்

3. கடவுளே கடவுளே-கச்சேரி ஆரம்பம்‍‍-இசை:இமான்

4. கனவென கனவென-முன் தினம் பார்த்தேனே‍‍-இசை:தமன்

5. துளி துளியாய்-பையா-‍‍இசை:யுவன் சங்கர் ராஜா

6. கங்கை நதி-காவலர் குடியிருப்பு-‍‍இசை:ஜேம்ஸ் வசந்தன்

7. இன்று நான் தனியாளானேன்-தம்பிக்கு இந்த ஊரு-‍‍இசை:தரன்

8. வானத்து நிலவு-அழகான பொண்ணுதான்‍‍-இசை: சுந்தர் சி பாபு

9. கதறக் கதறக் காதலிப்பேன்-குரு சிஷ்யன்‍‍-இசை: தினா

10. மெதுவாய் மெதுவாய்-மாத்தி யோசி-‍‍இசை:குரு கல்யாண்

Monday, March 1, 2010

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா‍-திரை விம‌ர்ச‌ன‌ம்


கவுதம் மேனன் இயக்கத்தில்,ரகுமான் இசையமைப்பில்,சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

மெக்கானிக்கல் இஞ்சியனரிங் முடித்த சிம்புவிற்கு, சினிமா டைரக்டராவதுதான் கனவு.தன்னுடைய வீட்டிற்கு மேல் வீட்டில் குடியிருக்கும், தன்னை விட ஒரு வயது மூத்த,Software Engineer ஆக வேலை பார்க்கும் த்ரிஷாவைக் காதலிக்கிறார்.சிம்புவின் காதலைத் த்ரிஷா ஏற்றுக் கொண்டு,சிம்புவிற்காகத் தன் வீட்டைத் தாண்டி வருகிறாரா என்பதுதான் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் கதை.

தமிழில் முழுமையான ஒரு நல்ல காதல் படம் வந்து பல நாட்களாகி விட்டதால்,படத்தின் முதல் பாதி முழுவதும் இளமைக் கொண்டாட்டமாகச் செல்கிறது.சிம்புவும் சரி,த்ரிஷாவும் சரி,இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு அழகாக இருந்ததுமில்லை;நடித்ததுமில்லை.AR ரகுமானின் குரல்,சிம்புவிற்குப் பொருந்துவது போல்,இந்த அளவு அழகாக யாருக்கும் பொருந்தியதாகத் தெரிய‌வில்லை.உலகத்தில் எத்தனையோ பொண்ணு இருந்தாலும்,அவள் மேல் ஏன் காதல் ஏற்பட்டது என்று சிம்பு,சிம்புவின் நண்பராக வரும் கேமராமென்,த்ரிஷா போன்றோர் காட்சிக்கு ஏற்ற‌ மாதிரி கேட்டுக்கொள்வது நன்றாக இருக்கிறது.அதேபோல்,இதற்கு முன் யாரும் உன்னைக் காதலித்ததில்லையா என்று சிம்பு த்ரிஷாவிடம் கேட்கும் போது,அதற்கு அவர் 'உன் கண் வழியா அவங்க யாரும் என்னைப் பார்க்கலை போல்' என்று சொல்வது அருமை.

அளவுக்கு மீறினால் அமிர்த‌மும் ந‌ஞ்சு என்பது போல்,ப‌ட‌த்தில் ர‌குமானின் இசை,காமிரா,ந‌டிப்பு என்று எவ்வளவோ விச‌ய‌ங்க‌ள் ந‌ன்றாக‌ இருந்தாலும், ப‌ட‌த்தின் முத‌ல் காட்சியிலிருந்து க‌டைசிக் காட்சி வ‌ரைக் காத‌ல்,காத‌ல் என்று காத‌லையே காட்டிக் கொண்டிருப்ப‌து அசுவாரசிய‌மாக‌ இருக்கிற‌து.ஹீரோயின்,ஹீரோவைப் பிரிந்து செல்வ‌தற்கான கார‌ணம் க‌டைசி வ‌ரை ஹீரோவிற்கு வேண்டுமென்றால் தெரியாம‌ல் இருக்கலாம்.அத‌ற்காக‌ப் பட‌ம் பார்க்கும் பார்வையாளர்க‌ளுக்கு கூட‌வா தெரியாம‌ல் இருப்ப‌‌து.அப்படியே,த்ரிஷா த‌ன்னுடைய‌ குடும்ப‌த்திற்காக‌த்தான் 'திடீரென்று' அந்த‌ மாதிரி முடிவு எடுக்கிறார் என்ப‌து,க‌வுத‌ம் மேனன் காலேஜில் ப‌டித்துக் கொண்டிருந்த‌ கால‌த்திற்கு வேண்டுமென்றால் ச‌ரியாக இருக்க‌லாம்.

எந்த‌க் குத்துப்பாட்டும் இல்லாம‌ல்,ட‌புள் மீனிங் இல்லாம‌ல்,ஒரு முழுமையான‌ காத‌ல் ப‌ட‌த்தைக் குடுக்க 'நினைத்த‌த‌ற்காக' க‌வுதம் மேனனைப் பாராட்ட‌லாம்.நாமெல்லாம் த‌க‌வ‌லைப் ப‌ரிமாற்றிக் கொள்வ‌தற்கு Email,SMS போன்றவற்றைப் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்,க‌வுதம் மேனன்,த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிறார்.இந்த‌ப் ப‌ட‌த்தை வெள்ளிக்கிழமையே பார்த்து விட்டேன்.அன்றே,பட‌த்தின் விம‌ர்ச‌ன‌த்தையும் போட்டுவிட‌லாம் என்று நினைத்தபோது,இந்தப் ப‌ட‌த்தில் டைர‌க்ட‌ர்,உண்மையான விம‌ர்ச‌ன‌மெல்லாம் இப்போது திங்க‌ள் கிழமைதான் வெளிவ‌ருகிறது என்று கூறிய‌தால்,இன்று விம‌ர்ச‌ன‌த்தைப் போட‌வேண்டிய‌தாயிற்று.

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா-காதலைப் போலவே படமும்,ஆரம்பத்தில் Interesting;கடைசியில் Torture.