Wednesday, July 11, 2012

ஈகா(நான் ஈ) - திரை விமர்சனம்


நானியைக் காதலிக்கும் சமந்தாவை சுதீப்பும் விரும்புகிறார். சமந்தாவிற்காக தன்னைக் கொல்லும் சுதீப்பை,'பேயாக' மாறி பழிவாங்காமல் 'ஈயாக' மாறி நானி பழிவாங்குவதுதான் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈகா' படத்தின் கதை.

கன்னடத்திலேயே பேசி அறிமுகமாகும் கன்னட ஹீரோ 'சுதீப்' ,வில்லன் ரோலில் அநாசயமாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களிலேயே இறந்து விடுவதால்,நானிக்குப் பெரிதாக வேலை இல்லை.ட்ரெயிலர்லேயே படத்தின் கதை தெரிந்துவிட்டாலும், படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.கிராபிக்ஸ் உறுத்தாமல் இருப்பதினாலேயே, ஈயின் சேட்டைகளை ரசிக்க முடிகிறது.

சமந்தா,நானிக்கு இடையேயான காதல் காட்சிகள் 'Short and Sweet'. இரவு நேரத்தில் தனக்குத் தனியாக வீட்டிற்குப் போக பயமாக இருக்கிறது என்று சொல்லி நானி சமந்தாவுடன் போவது காதல் விளையாட்டு. நானி சாவதற்கு முன் சமந்தாவிடம் இருந்து 'I love you' மெசேஜ் வருவது டைரக்டர் டச். அதனாலேயே, நானி 'ஈயாக' வந்து சுதீப்பை டார்ச்சர் செய்வதை ரசிக்க முடிகிறது.சமந்தாவை மைக்ரோ ஆர்டிஸ்டாகக் காட்டியிருப்பது கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

'ஈ'யை எக்சர்சைஸ் பண்ண வைப்பது, டான்ஸ் ஆட விடுவது போன்ற 'ஷங்கர்' டைப் விசயங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே 'ஈ' வந்து விடுவதால்,பின்பாதியில் சுதீப்பை இம்சிக்கும் 'ஈ' யின் சாகஸங்கள் நம்மையும் 'கொஞ்சம்' இம்சிக்கின்றன.மரகதமணியின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம்.அதுவும் 'ஈ' யின் அட்டகாசங்களுக்கு 'லாவா லாவா' என்று பின்னணியில் குரல் ஒலிப்பது அட்டகாசம். 'ஈ'க்கு ராஜமவுலியின் பின்னணி குரல் அழகாகப் பொருந்துகிறது.பொதுவாக படங்களில் ஹீரோ காலில் அடிபட்டு நடக்க முடியாமல் சண்டை போடுவது போல், இப்படத்திலும் கிளைமாக்ஸில் ஒரு இறக்கை பறி போன பின்னரும், 'ஈ' ஹீரோவப் பறந்து சென்று பழிவாங்குவது சுவாரசியம். முழுப் படத்தையுமே அப்பா பையனுக்கு சொல்லும் கதை என்று ஆரம்பித்த‌தில், படத்தில் உள்ள அத்தனை 'லாஜிக்' மீறல்களையும் இயக்குனர் அழகாகக் கடந்து விடுகிறார்.
பெரிய ஹீரோக்கள் துணையில்லாம‌ல்,தன்னையும் கிராஃபிக்ஸையும் நம்பி சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கும் ராஜமவுலிதான் படத்தின் நிஜமான ஹீரோ.

தமிழில் உள்ள பெரிய ஹீரோக்கள்,இயக்குனர்கள் படங்களெல்லாம் தமிழில் வெளியாகும் அதே தினத்திலேயே,தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல் தெலுங்கு இயக்குனர்களும்,ஹீரோக்களும் எவ்வளவோ முயற்சித்தும், தமிழ் சினிமா கோட்டை இதுவரை அவர்களுக்காக திறக்காமல்தான் இருந்துவந்தது. விஜயசாந்தி,ராஜசேகருக்கு அப்புறம் எந்த தெலுங்கு பட ஹீரோக்களுக்கும் தமிழில் மார்க்கெட் இருந்ததே இல்லை.இயக்குனர் கே.விஸ்வநாத்தின் படங்கள் டப் செய்யப்பட்டு(சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து) வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், அதன் பின்னணியில் கமல் போன்ற பெரிய தமிழ் ஹீரோதான் இருந்தார்.அம்மன்,அருந்ததி,மாவீரன்(மகதீரா)போன்ற சில படங்களும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே, தமிழுக்கு டப் செய்யப்பட்டன.சில தெலுங்கு ஹீரோக்களின் படங்கள் தமிழில் வெற்றி பெற்றிருந்தாலும்,அவர்களால் அந்த வெற்றியைத் தக்க வைத்து கொண்டிருக்க முடிந்ததில்லை.சமீபத்தில் கூட ராம்சரண் தேஜா நடித்த மாவீரன் வெற்றி பெற்றாலும் அதன் பின் வந்த 'ரச்சா' பெரிய ஃப்ளாப்.

தெலுங்கு ஹீரோக்களுக்கும்(சிரஞ்சீவி,நாகர்ஜுனா,மகேஷ் பாபு,அல்லு அர்ஜீன்,ராம்சரன் தேஜா),இயக்குனர்களுக்கும்(ராம்கோபால் வர்மா,பூரி ஜெகன்னாத்,ராஜமவுலி, ஸ்ரீனு வைத்லா)தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி மேல் தொடர்ந்து கண் இருந்தாலும், இங்குள்ள ஷங்கர்,மணிரத்னம்,ரஜினி,கமல்,சூர்யா,விக்ரமிற்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட் போல் அவர்களின் படங்களுக்கு ஒருபோதும் இங்கு மார்க்கெட் இருந்ததில்லை. தெலுங்கில் படம் வெளியாகும் அதே தினத்தில், அவர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவராமல் இருந்த சாதனையை, எந்த ஒரு பெரிய ஹீரோவின் உதவியுமில்லாமல் தனியொரு மனிதராகத் தகர்த்திருக்கிறார் 'ராஜமவுலி. மாவிரன்,நான் ஈ என்று தமிழிலும் தொடர்ந்து வெற்றியைக் குவிக்கும் ராஜமவுலி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள.