Tuesday, December 28, 2010

இரவுகளில் உருகும் இசை



இன்று 'வாலன்டைன்ஸ் டே' என்பதால் கண்டிப்பாக அவன் ஆஃபிஸிற்கு வருவான் என்று தோன்றியது.நான் இந்த உலகத்தில் இவனை விட யாரையும் அதிகமாய் வெறுத்ததுமில்லை;அதே நேரத்தில் அதிகமாய் காதலித்ததுமில்லை..

இப்ப வரைக்கும் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் இவனை ஏன் எனக்குப் பிடித்து தொலைத்தது.என் மனதின் ஒவ்வொரு கிளையாய் பற்றி வேர் வரை என்னை ஆட்சி செய்கிறான். இப்பொதெல்லாம்,இவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதோ, இல்லை இவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் என்னையே கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கி விடுகிறேன். எத்தனையோ முறை என் காதலை இவனிடம் இலை மறை காயாய் வெளிப்படுத்தியதை இவன் உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லையா; இல்லை புரிந்து கொண்டும் நடிக்கிறானா என்பது எனக்கு இன்னமும் புரியாத விசயம்.

இமயமலையாய் என் கண்களில் பெருகும் காதல்,அவன் இதயக் கதவின் காலிங் பெல்லைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது.ஒரு பெண் வேண்டுமானால் பையன் மீதான தன் காதலை எளிதில் மறைத்து விடலாம்.ஆனால் பையனால் முடியவே முடியாது என்ற என் நினைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்க்கத் தொடங்கி விட்டான்.என்னைப் பார்க்கும் போதெல்லாம்,நேரில் பேசும் வார்த்தைகளுக்கு கூட அவுட்கோயிங் சார்ஜ் இருப்பது போன்று மிக மிக குறைவான வார்த்தைகளைக் கொண்டே பேசுவான்.ஆனாலும் என் மீதான அவன் காதல் அவனையுமறியாமல்,சில நேரங்களில் அவன் கண்களில் தெரிவதைப் பார்க்கும்போது,மனம் குதூகலிக்கும். சில நேரங்களில் என்னை நேரில் பார்த்து,என் கண்களைப் பார்த்து பேச அவன் தடுமாறுவதை பார்க்கும்போது,பரிதாபமாகவும் இருக்கும்.

இப்படியெல்லாம் ஒரு ஆண் முழுமையாய் நம்மை ஆக்கிரமிக்க முடியுமா என்று ஆச்சரியமாய் இருக்கிறது.காலையில் கண் விழிப்பதிலிருந்து,எப்போதாவது இரவு நேரங்களில் கண் அயரும் வரை கடவுள் போன்று நான் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவி நிற்கிறான்.வார இறுதி நாட்களிலெல்லாம்,அவன் ஞாபகம் தோன்ற ஆரம்பித்து என்னையுமறியாமல் ஆஃபிஸ் போய் உட்கார்ந்து கொள்கிறேன்.ஆஃபிஸில் அவனுடைய சீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பது,ஓரளவிற்கு ஆறுதலளித்துக் கொண்டிருக்கிறது.ஏதாவது ஒரு வார இறுதியிலாவது அவன் ஆஃபிஸ் வந்தானென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போதெல்லாம்,இறக்கைகளெல்லாம் முளைத்து தேவதையாக மாறுவது போன்று இருக்கும்.

இப்போதெல்லாம்,அவனாகத் தன் காதலை சொல்வான் என்ற என் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.ஒரு நாள் எதுவுமே பேசாமல்,நான் யாரோ என்பது போல் நடந்து கொள்கிறான்.மறு நாளோ,என் மீதான அவன் காதலைத் தன் கண்களில் கடலளவுக்கு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.அவன் கண்களில் என் ஒற்றைக் காதல் படகு மட்டும் இருப்பதை நினைத்து மனம் குதூகலிக்கத் தொடங்கும்.சில நாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில்,ஏதோ என்னிடம் சொல்ல வந்து அவன் தடுமாறி நிற்பதைப் பார்க்கும்போது,அவனை ஏன் கஷ்டப்படுத்துவானேன்,நாமே அவ‌னிட‌ம் காத‌லை சொல்லிவிட‌லாமா என்றும் தோன்றும்.

இந்த வாரத்திலிருந்து,இன்னும் ஒரு வாரம்தான்,வால‌ன்டைன்ஸ் டேக்கு இருக்கிறது என்ப‌தை நினைக்கும் போது சிலிர்ப்பாக‌ இருக்கிறது.ஊரில் இருந்த மிக‌ப் பெரிய‌ பியூட்டி பார்ல‌ருக்கு சென்றேன்.என் உட‌ம்பில் ஒவ்வொரு துளியாய் பூச‌ப்பட்ட‌ கிரீம்க‌ளில் அவ‌ன் வ‌ழிந்து கொண்டிருந்தான். இன்னொரு முக்கியமான விச‌ய‌மாய் இந்த‌ வ‌ருட‌த்து வால‌ன்டைன்ஸ் டே வேறு ச‌னிக்கிழமை வருகிற‌து.ஆஃபிஸில் வேறு யாரும் எங்களை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண மாட்டார்க‌ள்;அவ‌னோடு முழு நாளையும் செல‌வ‌ழிக்க‌லாம் என்று நினைக்கும் போது பெண்ணாய் பிற‌ந்த‌த‌ன் பேரின்ப‌ம் கிடைக்கத் தொட‌ங்கிய‌து.

இந்த அதிகாளை வேளையில்,எந்த‌ உடை அணிவ‌து என்று ப‌ல‌ வ‌ண்ண உடைக‌ளை மூன்று ம‌ணி நேர‌மாய் அணிய‌ ஆர‌ம்ப‌த்திருந்ததில் காலை ஏழு ம‌ணி ஆகியிருந்தது. இன்று ஆஃபிஸில் என்னைப் பார்த்த‌வுட‌னே, அவ‌னுள் பெருக்கெடுத்து ஓடும் காத‌லை நினைத்து எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. இன்னும் இர‌ண்டு ம‌ணி நேர‌ங்க‌ள் காத்துக் கொள்ளடா க‌ண்ணா! இந்த‌ ராதை உன‌க்குத்தான் என்று க‌ண்ணாடியின் முன் நின்று அவ‌னுட‌னான‌ என் வாழ்க்கையை ந‌ட‌த்திக் கொண்டிருந்தேன்.

இன்று எட்டு ம‌ணிக்கே ஆஃபிஸிற்கு சென்று அவ‌ன் க‌ண்டிப்பாக வ‌ருவான்;காத‌ல‌ர் தினமான‌ இன்று த‌ன் காதலை சொல்வான் என்று காத்திக் கொண்டிருக்கிறேன்.அவ‌ன் என்ன‌ உடையில் இன்று வ‌ருவான்;எப்ப‌டி த‌ன் காத‌லை என்னிடம் சொல்வான் என்று கனவுலகத்தில் மூழ்கிக் கொண்டிருந்ததில்,நேர‌ம் வேறு ப‌த்து ம‌ணி ஆகியிருந்த‌து.

இந்தப் பாடலை வேறு எனக்கு ஏன் பிடித்துத் தொலைத்தது என்று புரியவில்லை. காலையிலிருந்து இந்தப்பாடலை மட்டுமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.













இரவுகளில் உரு(க்)கும் இசை போன்று அவன் நினைவுகளில் உருகிக் கொண்டிருக்கிறேன்.உண்மையிலேயே என்னை அவ‌ன் காத‌லிக்கிறானா;அப்ப‌டியெனில் இந்நேர‌ம் அவன் ஆஃபிஸ் வந்து தன் காதலை என்னிட‌ம் சொல்லியிருக்க‌ வேண்டுமே என்று என் இத‌ய‌ம் தாறுமாறாக‌ துடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ன் வ‌ருகைக்காக‌ ஒவ்வொரு நொடியும், ம‌று பிற‌வி எடுத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.த‌லையில் வைத்திருந்த‌ பூக்க‌ளெல்லாம், என்னைக் கேலி செய்ய வேறு ஆர‌ம்பித்த‌ன. எங்க‌ள் தூக்க‌த்தைப் ப‌றித்து, உயிரைக் கொன்ற‌த‌ன் ப‌ல‌னை உன‌க்கு கொடுக்காமல் விட‌மாட்டோம்;இல்லாவிடில் உன் கூந்த‌லிலிருந்து ஒவ்வொரு பூவாய் கீழே விழுந்து உயிர் மாய்த்துக் கொள்வோம் என்ப‌து போன்று, ஒவ்வொரு பூவாய் உதிர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. நேர‌ம் வேறு ஆறு மணியைக் க‌டந்து விட்டது.இனிமேலும் அவ‌ன் வ‌ருவான் என்ற‌ ந‌ம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.அவ‌னுட‌ன் நான் பேச‌ நினைத்த‌ வார்த்தைக‌ள் ஒவ்வொன்றும், என் தலையின் மேல் என்னைக் கேலி பேசி சுற்றிக் கொண்டிருந்த‌ன‌. என் க‌ண்ணீர் துளிக‌ள் ஒவ்வொன்றாய்,
இதய‌த்தில் ப‌ட‌ர்ந்து ஆறுத‌ளித்துக் கொண்டிருந்த‌ன.

இந்த‌ ச‌னிக்கிழமை வேளையில்,ஆஃபிஸில் இப்படி த‌னியாய் அம‌ர்ந்து, அட‌க்க‌ முடியாத‌ க‌ண்ணீருட‌ன் அம‌ர்ந்து கொண்டிருப்பதை நினைத்து,எனக்கு என்னாலேயே ஆறுத‌ல் சொல்ல‌ முடிய‌வில்லை.ஓங்கி அழ வேண்டுமென்ப‌து போல் இருந்த‌து.கர்சீஃபில் வந்து விழுந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளெல்லாம் நிரம்பி வழிந்து ஷாலை நனைத்துக் கொண்டிருந்தன.கைகளெல்லாம் நடுங்கி,இதயம் பட படவென்று துடிக்கத் தொடங்கியது.எங்கே என் இதயம்,மார்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விழுந்து,அவனுக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என்றும் தோன்றியது.வீட்டிற்கு சென்றாலாவ‌து நிம்ம‌தியாக‌ அழுது விட்டு வ‌ர‌லாம் என்று ஆஃஸை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிற‌து,அவன் பெயரையே அனுதினமும் உச்சரித்துக் கொண்டிருந்ததில்,இந்தக் கதையின் ஒவ்வொரு பாராவின் முதல் எழுத்தையெல்லாம், அவ‌ன் பெயரின் முதல் எழுத்தை வைத்தே எழுதியிருந்தது.இதயத்திலிருந்து அவனைப் பிடுங்கி எறிய முடியாத ஆத்திரத்தில்,'இ' எழுத்தை 'key board' லிருந்து பலம் கொண்ட மட்டும் பிடுங்கி வெளியே எறிந்தேன்.ப்போது ஏனோ மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாய் ருக்கிறது.

Friday, December 24, 2010

மன் மதன் அம்பு-திரை விமர்சனம்

தன் காதலியான த்ரிஷாவை சந்தேகப்படும் மாதவன்,அவரை உளவு பார்ப்பதற்காக எக்ஸ் மிலிட்டரி ஆஃபிஸர் கமலை அனுப்புகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கமலின் கதை,திரைக்கதை,வசனத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மன்மதன் அம்பு படத்தின் கதை.
தன்னை சந்தேகப்படும் மாதவனை விட்டுப் பிரிந்து,மன நிம்மதிக்காக த்ரிஷா ஐரோப்பா கண்டத்திற்கு பயணம் செல்வதில் படம் ஆரம்பிக்கிறது.தன் நண்பனின் கேன்ஸர் ட்ரீட்மெட்டிற்கான பணம் மாதவனிடமிருந்து கிடைப்பதற்காக,கமல் ஒரு பொய் சொல்கிறார்.கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதைக் காமெடி,சென்டிமென்ட் முலாம் பூசி கொடுத்திருக்கிறார்கள் கமலும்,ரவிக்குமாரும்.

பையனின் கட்டை விரல் ஆடுவதை வைத்து சங்கீதா,தன் பையன் தூங்கிகிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது.பின்னால் நடந்து வருபவர்க்கு என்னைக் கடந்து போய் கொள்ளுங்கள் என்று கேண்ட் சிக்னல் காட்டுவது.பசங்களுக்கு பெண்களைப் பற்றி 33% அளவிற்காவது தெரியாமல் இருக்குமா என்று கமல் த்ரிஷாவிடம் கேட்பது,ஒரு உயிரும் காதலும் ஊசலாடுகிறது என்று மலையாளத் தயாரிப்பாளர் தன் படத்திற்கான டைட்டிலைப் பிடிப்பது,இன்னைக்கு மாதவன் தன்னிடம் ஸ்வீட்டாகப் பேசினார் என்று த்ரிஷா சொல்வதற்கு, தண்ணியோ என்று சங்கீதா கேட்பது,துப்பறிய ஐடியா கொடுத்தது உங்க அம்மாவா என்று மாதவனின் அப்பா அவரிடம் கவலையாய் கேட்பது,'லைன்ல பிராப்ளம் இருக்கு, கேட்கலை என்று சங்கீதா மாதவனிடம் ஃபோன் பண்னியவுடன் சொல்வது' என்று படத்தின் ப‌ல காட்சிகளில் நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்கள்.அதேபோல் மலையாளத் தயாரிப்பாளர் சங்கீதாவின் பையனைப் பார்த்து 'நீ மலையாளியோ' என்று கேட்பதும், தப்பு கதா என்று கமல் தெலுங்கில் மாதவனிடம் சொல்வதற்கு மாதவன் கமலிடம், தப்பாத்தான் போயிட்டிருக்கு கதை என்பதும் கமல் டச்.

இன்டெர்வல் திருப்பம்,நீலவானம் பாடலை ரிவர்ஸிங் முறையில் படமாக்கியிருப்பது(அதுவும் வெள்ளை சுவரில் தெரியும் பெயின்டிங் கலக்கல்),கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால் கவிதையை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பது என்று பல இடங்களில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார்கள்.."சில நினைவுகளை மறைச்சு வைச்சுடலாம்,ஆனால் மறக்க முடியாது","நான் முட்டாள் இல்லை,இல்லைனா அந்த மாதிரி பேசாதீங்க","வீரத்தோட மறுபக்கம் மன்னிக்கிறது,வீரத்தோட உச்சகட்டம் அஹிம்சை","அவனை நோக்கி வந்துக்கிட்டு இருக்காங்க என்று மாதவனிடம் கமல் சொல்வது" என்று வசனகர்த்தா கமல் பல இடங்களில் பளிச்சிடுகிறார்.
படத்தின் பெரிய பலம் படத்தில் நடித்திருக்கும் கமல்,மாதவன்,த்ரிஷா,சங்கீதா,ரமேஷ் அரவிந்த் உள்பட அனைவரின் நடிப்பு. த்ரிஷாவின் குரலும்,டாட்டுவும் நன்றாக இருக்கின்றன.ரமேஷ் அரவிந்தின் சென்டிமென்ட் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும்,படத்தின் பின்னனி இசை நன்றாக இருக்கின்றது. அதுவும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வானில் பறவைகள் பறக்கையில் நீல வானம் பாடலின் இசையை உபயோகித்திருப்பது புத்திசாலித்தனம்.மனுஷ் நந்தனின் கேமரா ஐரோப்பா கண்டத்தை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

முதல் பாதி மெதுவாக செல்வது சில நேரங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.,படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.அதேபோல் கமலின் படங்களில் பொதுவாக வரும் ஆள்மாறட்டக் காமெடியும் உண்டு.கடைசியில் மாதவன் சங்கீதாவிடம் காதல் கொள்வதில் எந்த லாஜிக்கும் இல்லை.

படத்தின் அடிநாதமே த்ரிஷா ஆண்கள் பெண்களை எவ்வாறு தப்பாக நினைகிறார்கள் என்று சொல்லும் கவிதையும்,பெண்களுக்கு எந்த மாதிரி ஆண் தேவை என்று கமல் அவரிடம் சொல்லும் கவிதையும்தான்.
மன்மதன் அம்பு-வச்ச குறி தப்பவில்லை(ஓரளவிற்கு).

Monday, December 20, 2010

பூ-மாலை


என்னைப் பார்க்க வரும்
எல்லோரும் கைகளில்
பூக்களையே கொண்டு வருகிறார்கள்!

என் முன்னே
சாவகாசமாக அமர்ந்து
என்னுடன் பேசிக்கொண்டே
பூ தொடுக்க ஆரம்பிக்கிறார்கள்!

அழகிய பூக்களெல்லாம்
மாலையாகத் தொடங்கு முன்பே
இறக்கத் தொடங்கி விடுகிறேன் நான்!

Saturday, December 18, 2010

ஈசன்-திரை விமர்சனம்

தன்னுடைய அக்காவின் வாழ்வை சீரழித்தவர்களை, தம்பி 'சிவனாக' மாறி பழிவாங்கும் 'புதுமையான' கதைதான் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈசன்' படத்தின் கதை.

முதல் பாகம் முழுவதும் அரசியல்வாதியான அழகப்பனின் அட்டூழியங்களும்,அவரின் பையன் வைபவ் அவருடைய நண்பர்களுடன் அடிக்கும் கொட்டங்களும்,அவருக்கும் பிஸினெஸ் மேக்னட்(விஜய் மல்லையா(?)) ஒருவரின் பெண்ணிற்கும் நடக்கும் காதலை நாடகப் பாணியிலும், இரண்டாவது பாதியில் போலிஸான சமுத்திரக்கனி எவ்வாறு 'தொலைந்து போன' வைபவ்வைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதையும், அபினயாவின் கிராமத்து வாழ்க்கையையும் கொஞ்சம் விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து தோற்றிருக்கிறார் சசிக்குமார்.

படத்தின் பெரிய பலவீனமே படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு மெயின் கேரக்டர்களின் வாழ்க்கையையும், மிகவும் விலாவரியாகச் சொல்லியிருப்பது.வைபவ் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்கிறார் என்பதற்கே மூன்று பாடல்கள்(இதுதான் இயக்குனர் அனுராக் காஷ்யப் 'தேவ்‍டியில், சசிக்குமாரைப் பாதித்த விதமா)என்றால் என்ன சொல்வது?.இதற்கு நடுவில் அரசியல்வாதிக்கும்,பிஸினஸ்மேனிற்கும் நடுவில் நடக்கும் ஈகோ வேறு.பின்பாதியில் அபினயாவின் கிராமத்துக் காட்சிகளும்,அவருடைய அப்பாவான மலையாள இயக்குனர் பிளெஸ்ஸிக்கு வரும் சாமி அருள் என்று அதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதினால், இந்தப் பதிவும் படம் போன்றே, படிப்பவர்களை சோர்வடையச் செய்யும்.அதிலும் படம் முடிந்தது என்று நினைக்கையில் வரும் வன்முறைக் காட்சிகள் 'வெந்த புண்ணில் வேல்'

படத்தின் ஒரே ஆறுதல் 'கண்ணில் அன்பை சொல்வாளே' பாடலும்,அப்பாடல் படமாக்கப்பட்ட விதமும்தான்.அபினயாவின் தம்பியாக நடித்திருக்கும் பையனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.1980 களில் நடப்பது போன்ற கதையானாலும் 'சுப்ரமணியபுரம்' மாடர்னாக எடுக்கப்பட்டிருந்தது. மாடர்ன் உலகத்தைப் பற்றிப் பேச முயற்சிக்கும் 'ஈசன்' ,1980 களில் வெளிவந்த படம் போன்று இருக்கிறது.

இந்தப் படம் பார்க்க வருவதற்கு முன்பு 'சுப்ரமணியபுரம்' படத்தை மறந்துட்டு தியேட்டருக்குள் வாங்க என்று தன்னுடைய பேட்டியில் சசிகுமார் சொல்லியிருந்தார். ஆனால் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு உடனே மறந்துவிடுவது நமக்கு நல்லது.

ஈசன்‍- ஈ.ஈ.ஈ

Wednesday, December 15, 2010

விரலைப் பிரிந்த நகம்



ஏகாந்த இரவு
சுகமான தென்றல் காற்று
மார்கழி மாதப் பனி
புதிதாய் வாங்கிய புத்தக மணம்
இளையராஜாவின் இனிமையான இசை
மனதைத் தூண்டும் பெண்களின் பேச்சு
நண்பர்களின் உற்சாக அரவணைப்பு
மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரம்
உற்றார்களின் உண்மையான அன்பு
இவை எல்லாவற்றையும்
ஒரே நொடியில் ம‌றக்கச் செய்து விடுகிறது
நீ எனைப் பிரிந்த தருணம்

Tuesday, December 14, 2010

Top 10 Songs-December

1) அய்யய்யோ-‍‍ஆடுகளம்-‍‍இசை:G.V.பிரகாஷ்குமார்

2) நெஞ்சில் நெஞ்சில்-‍‍எங்கேயும் காதல்-‍‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

3) யாரது யாரது-‍‍காவலன்-‍‍இசை:வித்யாசாகர்

4) என் நெஞ்சு-‍‍உத்தமபுத்திரன்-‍இசை:விஜய் ஆண்ட‌னி

5) மேகம் வந்து போகும்-‍‍ மந்திரப்புன்னகை-‍‍இசை:வித்யாசாகர்

6) திக்கி திக்கி‍‍‍-‍‍நகரம்-‍‍இசை:தரன்

7) நீல வானம்-‍‍மன்மதன் அம்பு-‍‍இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

8) சின்ன சின்ன காட்டுலே-‍‍தென்மேற்கு பருவக்காற்றே-‍‍இசை: NR.ரகுநாதன்

9) பூவே பூவே‍‍ -‍‍சிங்கம்புலி-‍‍இசை:மணிசர்மா

10) கண்ணில் அன்பை-‍‍ஈசன்-‍‍இசை:ஜேம்ஸ் வசந்தன்

Tuesday, December 7, 2010

ரத்த சரித்திரம்-திரை விமர்சனம்


இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியல் உள்ளே நுழையும்போது அவர்களின் வாழ்வு எப்படி சின்னா பின்னமாகிறது என்பதுதான் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா,விவேக் ஓபராய் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை.

கோட்டா சீனிவாச ராவின் சூழ்ச்சியால் தன் அப்பாவை இழக்க நேரிடும் விவேக் ஓபராய், ரவுடியாகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் மாற நேரிடுகிறது.அவரால் தன் குடும்பத்தை இழக்க நேரிடும் சூர்யா,விவேக் ஓபராயை எப்படி பழிவாங்குகிறார் என்பதை ராம்கோபால் வர்மா,ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கிறார்.

குறைந்தபட்சம் இரண்டு கொலைகளாவது பண்ணியிருக்கும் ரவுடிகளுக்குக் கூட,படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகம் இருப்பது போல் தோன்றும்.முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சூர்யா நன்றாகவே நடித்திருந்ந்தாலும்,ஒரு வேளை விக்ரம் நடித்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.பிரியாமணியை விட,ராதிகா ஆப்டேவிற்குத்தான்(பொண்ணு அவ்வளவு அழகு!) நடிப்பில் ஸ்கோர் பண்ணுவதற்கு வாய்ப்பு அதிகம்.

படத்தின் பெரிய பலமே சூர்யா,விவேக் ஓபராயின் நடிப்பும்,படத்தில் வரும் வசனங்களும்தான். கோட்டா சீனிவாச ராவ் இறந்தவுடன் அவர் வீட்டு நாய் குரைப்பது, சூர்யாவிற்கு பின்னால் பிரியாமணி நிற்பது போலவும், ஆனால் அவர் முன்னாடி பார்த்து பேசுவதும்,கடைசியில் சூர்யாவின் பின்னால் தெரியும் பிரியாமணியின் பிம்பம் கண்ணாடியிலிருந்து தெரிவது போன்ற காட்சி அமைப்பு ஆகட்டும், விவேக் ஓபராய் சூர்யாவிடம் என்னைக் கொல்றதுக்கு கனவு கண்டுட்டே இரு என்பதும் அதற்கு சூர்யா அவரிடம் 'முடிஞ்சா நீ தூங்கு' என்பதும் ராம் கோபால் வர்மா டச். அதே போல் படத்தில் சூர்யா பேசும் வசனங்களெல்லாம் அருமை. "நான் சாகப் பயப்படலை;ஆனால் அவன் சாகுறதுக்கு முன்னாடி செத்துடுவனோன்னு பயமா இருக்கு", "யாருக்காகவெல்லாம் அவனைப் பழிவாங்கக் கூடாதுன்னு நினைச்சனோ அவங்க எல்லோரையும் கொன்னுட்டான்", "பாடிகார்டோட வேலை உயிரோட இருக்கிறவனுக்குப் பாதுகாப்பு கொடுப்பது,செத்தவனுக்காக உயிரைக் கொடுப்பதில்லை" என்று வசனகர்த்தாவின் பேனா நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும்,அதே நேரத்தில் மெதுவாகவும் நகர்த்திச் செல்லும் ராம்கோபால் வர்மாவின் யுக்தி,இந்தப் படத்திற்குப் பெரிதும் உதவவில்லை என்றே தோன்றுகிறது.ஆரம்பத்தில் விறு விறுப்பாக செல்லும் படம்,அதன் பின் நம் பொறுமையைச் சோதிக்கிறது.கடைசியில் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த டப்பிங் படத்தைப் பார்க்கும் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது.

ரத்த சரித்திரம்-வெறும் ரத்தம் மட்டும்தான்