Wednesday, July 28, 2010

ஊசி இதழ் காதல்

தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த என்னை கவலையோடு பார்த்தார்கள் அம்மா. "ஆஸ்பத்திரிக்குப் போகலாமா?" என்று அம்மா கேட்டவுடன் உடனே சந்தோஷமாகத் தலையசைத்தேன்."வா! கணபதி டாக்டரிடம் செல்லலாம்,அவர் ஊசி போட்டால் உடனே சரியாகிவிடும்" என்று சொன்ன அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,நாம் புருஷோத்தமிடமே செல்லலாம். அவர் ஊசி போட்டால்தான் எனக்கு 'உடனே' சரியாகி விடுகிறது என்றவனை பரிதாபமாகப் பார்த்தார்கள் அம்மா.

எங்கள் ஊரில் டாக்டர் புருஷோத்தமைப் பார்த்தாலே அனைத்து குழந்தைகளும் பயந்து அழுவார்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க எங்கள் ஊரில் உள்ள எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் ஆயுதம் அவர் ஒருவர்தான்.அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ஊசி. மற்ற மருத்துவர்கள் எல்லாம் 5 சென்டிமீட்டரில் ஊசி வைத்திருந்தால் அவர் பயன்படுத்தும் ஊசி மட்டும் முழு அடி ஸ்கேல் அளவிற்கு இருக்கும். வெட்டினரி டாக்டர்களிடம் இருக்கும் இரக்கம் கூட ஊசி போடும்போது அவரிடம் கொஞ்ச‌ம் கூட‌ இருக்காது.அந்த ஊரிலே அவரிடம் ஊசி போட சந்தோஷமாக செல்லும் ஒரே ஆள் நான்தான்.

நான் அப்போது ஆறாவது 'பி பிரிவு படித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் ஆறாவது 'ஏ' பிரிவு படித்துக் கொண்டிருந்த பிரியாதான் என் வாழ்க்கையை அப்போது மிகவும் சுவாரசியப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தாலும், அவளை தினமும் பார்க்கும் பாக்கியம் மட்டுமே,பள்ளிக்கு செல்லும் என் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருந்தது. அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லையென்றாலும், என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் ஒரு புறம் உதட்டசைத்து சிரிக்கும் சிரிப்பு,எனக்காகவே அவள் பிரத்யோகமாகக் கண்டுபிடித்தது போலிருக்கும்.அவளுடைய அப்பாதான் டாக்டர் புருஷோத்தம்.

அவரின் கிளினிக் அவருடைய வீட்டின் ஒரு ப‌குதியிலேயே இருப்ப‌தால்,அவரின் ஆஸ்ப‌த்திரிக்கு எப்போது சென்றாலும் அவ‌ளையும்,எனக்கான அவ‌ளின் பிரத்யோக சிரிப்பையும் தரிசித்து விட‌லாம்.அவ‌ரின் கிளினிக்கிற்கு நானும் அம்மாவும் சென்ற‌போழுது அவ‌ள் நோட்டில் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.பள்ளிக்கூடத்தில் ஸ்கூல் யூனிபாஃர்மில் பார்ப்பதையும் விட அவள் வீட்டில் அணிந்திருந்த கலர் பாவாடை சட்டையில் வண்ணத்துப் பூச்சி போல் இருந்தாள்.காற்றில் இரு புறமும் அசையும் முடி வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை நினைவூட்டியது.என்னைப் பார்த்து விட்டு அவள் சிந்திய‌ எனக்கான பிர‌த்யோக சிரிப்பிலேயே காய்ச்ச‌ல் பாதியாய் குறைந்த‌து போலிருந்தது. ஒரு அடி ஸ்கேல் ஊசியை எடுத்துக் கொண்டே டாக்ட‌ர் அவருக்கே கூட புரியாத ஒரு ஜோக்கைக் கூறியவாறு எனக்கு ஊசி போட்டார்.ஊசியினால் ஏற்பட்ட வ‌லி என்னிட‌மிருந்து அம்மாவின் க‌ண்களுக்கு மாறியிருந்தது.

ப‌த்தாவ‌து வ‌ரை நாங்க‌ள் இருவ‌ரும் ஒன்றாக‌வே ப‌டித்து வ‌ந்திருந்தாலும் பிரியாவிட‌ம் ஏனோ பேச‌வே தோன்றிய‌தில்லை;பேசுவ‌தற்கான வாய்ப்பும் கிடைக்க‌வே இல்லை.அத‌ன் பிறகு வெளியூருக்குப் படிக்க செல்லும் சூழ்நிலை வந்த‌போது அவளை விட்டுப் பிரிவதுதான் அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.அம்மாதான் அது பற்றி ஏதும் அறியாமல் அடிக்கடி வந்து ஹாஸ்டலில் என்னைப் பார்ப்பதாக ஆறுதலளித்துக் கொண்டிருந்தாள்.அடிக்க‌டி ஹாஸ்ட‌லிலிருந்து ஊருக்கு ஓடி வ‌ரும் என்னைப் பார்த்து விட்டு, ஹாஸ்ட‌லில் ச‌மைக்கும் ச‌மைய‌ல்கார‌ர்களையும் திட்டிக் கொண்டிருந்தார்க‌ள்.

பிரியாவும்,நானும் வெவ்வேறு ஊர்க‌ளுக்குப் ப‌டிக்க‌ சென்றதால் இத்துட‌ன் அவளைப் பார்த்து ஏழு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌து.அவ‌ளைத் தாவ‌ணியில் தரிசிக்கும் பாக்கிய‌ம் கிடைக்காத‌தை நினைத்து மிக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து.ஆறு மாதங்க‌ளுக்குப் பிறகு ஊருக்குள் வ‌ந்த எனக்கு ப‌ய‌ணக் க‌ளைப்பினாலோ அல்ல‌து ஊரில் தொட‌ர்ந்து பெய்து கொண்டிருந்திருந்த ம‌ழையினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ காய்ச்ச‌லும் வ‌ந்திருந்தது.

ரொம்ப வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு டாக்ட‌ர் புருஷோத்த‌மைப் பார்ப்ப‌த‌ற்காக ச‌ந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.ஆடி மாதத்து சாரல் மழை வேறு குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் நீர் போன்று விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.நான் கிளம்பியதைப் பார்ப்பவர்கள் எவரும் எனக்கு காய்ச்சல் இருப்பதாகவே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.அவ‌ளுடைய அழகான இதழ்கள் வேறு எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.அவளுடைய இதழ்கள் அவ்வளவு மென்மையாக,மிருதுவாக சற்று முன் பெய்த மழைத் துளிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரோஜாப் பூவைப் போன்று எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்கும்.அவள் இதழ்களைப் பார்த்துவிட்டு ரோஜாப் பூவைப் பார்த்தால்,ரோஜாப் பூ ஒன்றும் அவ்வளவு அழகாகத் தெரியாது.அவளும் அவளின் இதழ்களும் இப்போது எப்ப‌டியிருக்கும் என்ற‌ நினைப்பே பேஷண்டைப் பார்த்த புருஷோத்தம் போன்று ச‌ந்தோஷம‌ளித்துக் கொண்டிருந்த‌து. இன்று பார்க்கையில் க‌ண்டிப்பாகப் பேசிவிட‌வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தேன்.

அவள் வீடு எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது.அவ‌ள் வீட்டு வாச‌லை அடைந்த‌துமே எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அன்று என்னுட‌ன் பேசினாள்.இப்போது நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டு விட்டு பின்னால் வ‌ந்து கொண்டிருந்த த‌ன் க‌ணவ‌னை அறிமுக‌ப்படுத்தினாள்.அதன் பின் காய்ச்சலினாலே என்னவோ அவர்கள் இருவரிடமும் என்னால் சரியாகப் பேச முடியவில்லை.அன்று டாக்ட‌ர் புருஷோத்தம் போட்ட ஊசி வாழ்க்கையில் முதல் முறையாக என‌க்கு வ‌லித்தது.சார‌ல் மழையும் வானத்திலிருந்து என் க‌ண்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் இட‌ம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த‌து.

Monday, July 12, 2010

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-திரை விமர்சனம்


இதற்கு முன் இரு படங்களை(கிரீடம்,பொய் சொல்லப் போறோம்) 'ரீமேக்' கிவிட்டு முதன் முறையாக தன்னுடைய சொந்தக் கதையில் இயக்குனர் விஜய் விஸ்வரூபமெடுத்திருக்கும் படம் 'மதராசபட்டின‌ம்'.

கதை என்னவே ஏழைப் பையன்,பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் பழைய கதையாக இருந்தாலும்,படம் நடக்கும் காலமும்,படத்தை சுவாரசியமாக எடுத்திருக்கும் விதமும் நம்மை 'ஆஹா' என சொல்ல வைக்கின்றன.பொக்கிஷம் படத்தில் சேரன் விட்ட கோட்டையை விஜய் இந்தப் படத்தில் கட்டியிருக்கிறார்.

சலவைத் தொழில் செய்யும் ஆர்யாவிற்கும்,மதராஸ் கவர்னர் பெண் ஏமி ஜாக்சனுக்கும் ஏற்படும் காதல் இயல்பாக இருக்கின்றது.ஏமிக்காக‌ அ,ஆ போன்றே ஆர்யா ஏ,பி,சி,டி க‌த்துக் கொள்வ‌தும், ஏமியிட‌ம் சிர‌ம‌ப்ப‌ட்டு இவ‌ர் ஆங்கில‌த்தில் பேச‌ப் போக,அவர் இவ‌ரிட‌ம் கொஞ்சும் த‌மிழில் பேசுவ‌தும் சுவார‌சிய‌ம்.ஏமி ஆர்யாவிற்கு ஒரு ப‌ரிசு அளிப்ப‌தும்,என்னிட‌ம் கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து என்று ஆர்யா சொல்லுகையில் ஏமி அவ‌ரிட‌ம் 'தாலி'யைப் ப‌ரிசாக‌க் கேட்ப‌தும்,ரொம்ப‌ நாட்க‌ளுக்கு அப்புறம் தாலி சென்டிமென்ட் கூட‌ ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கிறது.துணி காயப் போடும் இடத்தை சுட்டிக் காட்டி முன்னாடியெல்லாம் இங்கே துணி காயும்;இப்ப எங்க வயிறு காயுது என்கையில் வசனகர்த்தா பளிச்சிடுகிறார்.ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், முதல் பாதி முழுவ‌தும் இழையோடும் ந‌கைச்சுவை ந‌ம்மைக் க‌ட்டிப்போட்டு விடுகின்ற‌து.

த‌மிழ் ந‌டிகைக‌ளின் லிப் மூவ்மென்ட்டே பாட‌ல்க‌ளில் ஒழுங்காக‌ இல்லாமல் இருக்கும் இக்கால கட்டத்தில்,ஆருயிரே பாட‌லில் ஏமியின் லிப் மூவ்மென்ட் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துகிற‌து.இந்தியாவிற்கு விடுத‌லை கிடைக்க‌ இருக்கும் க‌டைசி நாளில், காத‌ல் ஜோடிக‌ளும் சுத‌ந்திர‌ப் ப‌றவைகளாக‌ ப‌றக்க,தப்பி ஓடும் காட்சிக‌ள் நெகிழ்வாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.க‌டைசிக் காட்சியில் ஆர்யாவின் கை ப‌ல‌மாகப் ப‌ட‌கைப் பிடித்திருப்ப‌தும்,ஏமி அவ‌ரின் கையை விடுவிப்ப‌த‌ற்காக ப‌ல‌ம் கொண்ட‌ ம‌ட்டும் அவ‌ர் கையைக் காய‌ப்ப‌டுத்துவ‌தும் உருக்க‌ம்.

ந‌ல்ல‌ ப‌ட‌த்தில் எல்லாமே ந‌ன்றாக‌ அமைந்து விடுவ‌து போல்,இப்ப‌ட‌த்திலும் கேம‌ரா,இசை,ந‌டிக‌ர்க‌ள் தேர்வு ம‌ற்றும் ப‌ட‌த்தில் ப‌ணிபுரிந்த‌ அனைவ‌ரின் உழைப்பும் நம்மை பிர‌மிக்க‌ வைக்கிறது.

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-MADARASAPATINAM

Saturday, July 10, 2010

ஆனந்தபுரத்து வீடு-திரை விமர்சனம்


தன்னுடைய மகன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடைய விபத்தில் இறந்துபோன பெற்றோர் எப்படி ஆவியாக மாறி அவனுக்கு உதவுகிறார்கள் என்பதுதான் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் கதை.

நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய பரம்பரை வீடு இருக்கும் ஆனந்தபுரத்திற்கு வரும் ஆரம்பக் காட்சிகளும்,அந்த சூழலும் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.அதன் பின்னர் நம் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து படம் முடியும்போது முற்றிலும் இல்லாமல் போய் விடுகின்றது.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் வாய் பேச‌ முடியாமல் வரும்‌ குட்டிக் குழந்தையும் அத‌ன் ந‌டிப்பும் கொள்ளை அழகு.அதுவும் பேய் செய்யும் வித்தைக‌ளுக்கெல்லாம் அந்தக் குழந்தை ப‌ழி ஏற்க‌ நேர்வ‌தும்,அத‌ன் முக‌ பாவ‌ங்க‌ளும் அருமை.இரண்டாம் பாதியில் படு பயங்கரமான த்ரில்லிங் காட்சிகள் வருமென்று எதிர்பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.வீட்டை வாங்க‌ வ‌ருப‌வ‌ரிட‌ம் பேய் செய்யும் மாயாஜால‌க் காட்சிகளாகட்டும்;நந்தாவின் ந‌ண்ப‌னுடைய காத‌லியும் ஆன‌ந்த‌புர‌த்து வீட்டிற்கு வ‌ந்த‌வுட‌ன், வில்லன் சொல்லும் 'நாலும்,ஒண்ணும் அஞ்சு;யாரும் வீட்டை விட்டுப் போக‌க்கூடாது' என்ப‌தும் 'ப‌தினெட்டு ரூபாய்க்கு இந்த மேஜிக் ஒர்த்' என்ப‌தும்‌ பேசாம‌ல் இந்தப் பட‌த்தை முழு காமெடி பட‌மாக‌வே எடுத்திருக்க‌லாமென்று தோன்றுகிற‌து.

சின்னத் திரையில் மர்ம சீரியல்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் 'நாகா', பெரிய திரையிலும் இரண்டே கால் மணி நேரத்திற்கு ஒரு சீரியலை விளம்பர இடைவேளை மட்டும் இல்லாமல் எடுத்திருக்கின்றார்.இப்ப‌ வருகின்ற‌ த‌மிழ் பட‌ங்களெல்லாம் ந‌ன்றாக இருக்குமா என்று ப‌ய‌த்துட‌ன் பார்க்க‌ வேண்டியதாயிருக்கிற‌து.ஆனால்,இந்த‌ப் ப‌ட‌த்தை ஒரு பயமுமில்லாம‌ல் பார்க்கலாம் என்ப‌துதான் ப‌ட‌த்தின் ப‌ல‌வீன‌ம்.இருந்தாலும்,இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்துவிட்டு ப‌ட‌த்தின் த‌யாரிப்பாளரான‌ இய‌க்குன‌ர் 'ஷங்க‌ருக்கு' க‌ண்டிப்பாக 'கிலி' ஏற்ப‌ட்டிருக்கும்.

ஆன‌ந்த‌புர‌த்து வீடு-பாழடைந்த‌ வீடு.

Wednesday, July 7, 2010

Top 10 Songs-June

1) பனியே பனியே-அய்யனார்-‍இசை:தமன்

2) உசுரே போகுதே-ராவணன்-‍இசை:A.R ரகுமான்

3) முதல் முதலாய்-ஆர்வம்-இசை:ரோணி ராஃபேல்

4) அன்புள்ள சந்தியா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) மருதாணி பூவுமேலே-‍வம்சம்-இசை:தாஜ் நூர்

6) பைத்தியம் பிடிக்குது-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) சித்திர வானம்-ஆனந்தப்புரத்து வீடு-இசை:ரமேஷ் கிருஷ்ணா

8) சொல்பேச்சு-தில்லாலங்கடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

9) அடங்காத வேகம்-பட்டாபட்டி 50/50-இசை:அருள் தேவ்

10) ஆசை அரக்கி-விருந்தாளி-‍இசை:S.S.குமரன்