Tuesday, December 28, 2010

இரவுகளில் உருகும் இசை



இன்று 'வாலன்டைன்ஸ் டே' என்பதால் கண்டிப்பாக அவன் ஆஃபிஸிற்கு வருவான் என்று தோன்றியது.நான் இந்த உலகத்தில் இவனை விட யாரையும் அதிகமாய் வெறுத்ததுமில்லை;அதே நேரத்தில் அதிகமாய் காதலித்ததுமில்லை..

இப்ப வரைக்கும் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் இவனை ஏன் எனக்குப் பிடித்து தொலைத்தது.என் மனதின் ஒவ்வொரு கிளையாய் பற்றி வேர் வரை என்னை ஆட்சி செய்கிறான். இப்பொதெல்லாம்,இவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதோ, இல்லை இவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் என்னையே கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கி விடுகிறேன். எத்தனையோ முறை என் காதலை இவனிடம் இலை மறை காயாய் வெளிப்படுத்தியதை இவன் உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லையா; இல்லை புரிந்து கொண்டும் நடிக்கிறானா என்பது எனக்கு இன்னமும் புரியாத விசயம்.

இமயமலையாய் என் கண்களில் பெருகும் காதல்,அவன் இதயக் கதவின் காலிங் பெல்லைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது.ஒரு பெண் வேண்டுமானால் பையன் மீதான தன் காதலை எளிதில் மறைத்து விடலாம்.ஆனால் பையனால் முடியவே முடியாது என்ற என் நினைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்க்கத் தொடங்கி விட்டான்.என்னைப் பார்க்கும் போதெல்லாம்,நேரில் பேசும் வார்த்தைகளுக்கு கூட அவுட்கோயிங் சார்ஜ் இருப்பது போன்று மிக மிக குறைவான வார்த்தைகளைக் கொண்டே பேசுவான்.ஆனாலும் என் மீதான அவன் காதல் அவனையுமறியாமல்,சில நேரங்களில் அவன் கண்களில் தெரிவதைப் பார்க்கும்போது,மனம் குதூகலிக்கும். சில நேரங்களில் என்னை நேரில் பார்த்து,என் கண்களைப் பார்த்து பேச அவன் தடுமாறுவதை பார்க்கும்போது,பரிதாபமாகவும் இருக்கும்.

இப்படியெல்லாம் ஒரு ஆண் முழுமையாய் நம்மை ஆக்கிரமிக்க முடியுமா என்று ஆச்சரியமாய் இருக்கிறது.காலையில் கண் விழிப்பதிலிருந்து,எப்போதாவது இரவு நேரங்களில் கண் அயரும் வரை கடவுள் போன்று நான் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவி நிற்கிறான்.வார இறுதி நாட்களிலெல்லாம்,அவன் ஞாபகம் தோன்ற ஆரம்பித்து என்னையுமறியாமல் ஆஃபிஸ் போய் உட்கார்ந்து கொள்கிறேன்.ஆஃபிஸில் அவனுடைய சீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பது,ஓரளவிற்கு ஆறுதலளித்துக் கொண்டிருக்கிறது.ஏதாவது ஒரு வார இறுதியிலாவது அவன் ஆஃபிஸ் வந்தானென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போதெல்லாம்,இறக்கைகளெல்லாம் முளைத்து தேவதையாக மாறுவது போன்று இருக்கும்.

இப்போதெல்லாம்,அவனாகத் தன் காதலை சொல்வான் என்ற என் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.ஒரு நாள் எதுவுமே பேசாமல்,நான் யாரோ என்பது போல் நடந்து கொள்கிறான்.மறு நாளோ,என் மீதான அவன் காதலைத் தன் கண்களில் கடலளவுக்கு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.அவன் கண்களில் என் ஒற்றைக் காதல் படகு மட்டும் இருப்பதை நினைத்து மனம் குதூகலிக்கத் தொடங்கும்.சில நாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில்,ஏதோ என்னிடம் சொல்ல வந்து அவன் தடுமாறி நிற்பதைப் பார்க்கும்போது,அவனை ஏன் கஷ்டப்படுத்துவானேன்,நாமே அவ‌னிட‌ம் காத‌லை சொல்லிவிட‌லாமா என்றும் தோன்றும்.

இந்த வாரத்திலிருந்து,இன்னும் ஒரு வாரம்தான்,வால‌ன்டைன்ஸ் டேக்கு இருக்கிறது என்ப‌தை நினைக்கும் போது சிலிர்ப்பாக‌ இருக்கிறது.ஊரில் இருந்த மிக‌ப் பெரிய‌ பியூட்டி பார்ல‌ருக்கு சென்றேன்.என் உட‌ம்பில் ஒவ்வொரு துளியாய் பூச‌ப்பட்ட‌ கிரீம்க‌ளில் அவ‌ன் வ‌ழிந்து கொண்டிருந்தான். இன்னொரு முக்கியமான விச‌ய‌மாய் இந்த‌ வ‌ருட‌த்து வால‌ன்டைன்ஸ் டே வேறு ச‌னிக்கிழமை வருகிற‌து.ஆஃபிஸில் வேறு யாரும் எங்களை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண மாட்டார்க‌ள்;அவ‌னோடு முழு நாளையும் செல‌வ‌ழிக்க‌லாம் என்று நினைக்கும் போது பெண்ணாய் பிற‌ந்த‌த‌ன் பேரின்ப‌ம் கிடைக்கத் தொட‌ங்கிய‌து.

இந்த அதிகாளை வேளையில்,எந்த‌ உடை அணிவ‌து என்று ப‌ல‌ வ‌ண்ண உடைக‌ளை மூன்று ம‌ணி நேர‌மாய் அணிய‌ ஆர‌ம்ப‌த்திருந்ததில் காலை ஏழு ம‌ணி ஆகியிருந்தது. இன்று ஆஃபிஸில் என்னைப் பார்த்த‌வுட‌னே, அவ‌னுள் பெருக்கெடுத்து ஓடும் காத‌லை நினைத்து எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. இன்னும் இர‌ண்டு ம‌ணி நேர‌ங்க‌ள் காத்துக் கொள்ளடா க‌ண்ணா! இந்த‌ ராதை உன‌க்குத்தான் என்று க‌ண்ணாடியின் முன் நின்று அவ‌னுட‌னான‌ என் வாழ்க்கையை ந‌ட‌த்திக் கொண்டிருந்தேன்.

இன்று எட்டு ம‌ணிக்கே ஆஃபிஸிற்கு சென்று அவ‌ன் க‌ண்டிப்பாக வ‌ருவான்;காத‌ல‌ர் தினமான‌ இன்று த‌ன் காதலை சொல்வான் என்று காத்திக் கொண்டிருக்கிறேன்.அவ‌ன் என்ன‌ உடையில் இன்று வ‌ருவான்;எப்ப‌டி த‌ன் காத‌லை என்னிடம் சொல்வான் என்று கனவுலகத்தில் மூழ்கிக் கொண்டிருந்ததில்,நேர‌ம் வேறு ப‌த்து ம‌ணி ஆகியிருந்த‌து.

இந்தப் பாடலை வேறு எனக்கு ஏன் பிடித்துத் தொலைத்தது என்று புரியவில்லை. காலையிலிருந்து இந்தப்பாடலை மட்டுமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.













இரவுகளில் உரு(க்)கும் இசை போன்று அவன் நினைவுகளில் உருகிக் கொண்டிருக்கிறேன்.உண்மையிலேயே என்னை அவ‌ன் காத‌லிக்கிறானா;அப்ப‌டியெனில் இந்நேர‌ம் அவன் ஆஃபிஸ் வந்து தன் காதலை என்னிட‌ம் சொல்லியிருக்க‌ வேண்டுமே என்று என் இத‌ய‌ம் தாறுமாறாக‌ துடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ன் வ‌ருகைக்காக‌ ஒவ்வொரு நொடியும், ம‌று பிற‌வி எடுத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.த‌லையில் வைத்திருந்த‌ பூக்க‌ளெல்லாம், என்னைக் கேலி செய்ய வேறு ஆர‌ம்பித்த‌ன. எங்க‌ள் தூக்க‌த்தைப் ப‌றித்து, உயிரைக் கொன்ற‌த‌ன் ப‌ல‌னை உன‌க்கு கொடுக்காமல் விட‌மாட்டோம்;இல்லாவிடில் உன் கூந்த‌லிலிருந்து ஒவ்வொரு பூவாய் கீழே விழுந்து உயிர் மாய்த்துக் கொள்வோம் என்ப‌து போன்று, ஒவ்வொரு பூவாய் உதிர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. நேர‌ம் வேறு ஆறு மணியைக் க‌டந்து விட்டது.இனிமேலும் அவ‌ன் வ‌ருவான் என்ற‌ ந‌ம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.அவ‌னுட‌ன் நான் பேச‌ நினைத்த‌ வார்த்தைக‌ள் ஒவ்வொன்றும், என் தலையின் மேல் என்னைக் கேலி பேசி சுற்றிக் கொண்டிருந்த‌ன‌. என் க‌ண்ணீர் துளிக‌ள் ஒவ்வொன்றாய்,
இதய‌த்தில் ப‌ட‌ர்ந்து ஆறுத‌ளித்துக் கொண்டிருந்த‌ன.

இந்த‌ ச‌னிக்கிழமை வேளையில்,ஆஃபிஸில் இப்படி த‌னியாய் அம‌ர்ந்து, அட‌க்க‌ முடியாத‌ க‌ண்ணீருட‌ன் அம‌ர்ந்து கொண்டிருப்பதை நினைத்து,எனக்கு என்னாலேயே ஆறுத‌ல் சொல்ல‌ முடிய‌வில்லை.ஓங்கி அழ வேண்டுமென்ப‌து போல் இருந்த‌து.கர்சீஃபில் வந்து விழுந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளெல்லாம் நிரம்பி வழிந்து ஷாலை நனைத்துக் கொண்டிருந்தன.கைகளெல்லாம் நடுங்கி,இதயம் பட படவென்று துடிக்கத் தொடங்கியது.எங்கே என் இதயம்,மார்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விழுந்து,அவனுக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என்றும் தோன்றியது.வீட்டிற்கு சென்றாலாவ‌து நிம்ம‌தியாக‌ அழுது விட்டு வ‌ர‌லாம் என்று ஆஃஸை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிற‌து,அவன் பெயரையே அனுதினமும் உச்சரித்துக் கொண்டிருந்ததில்,இந்தக் கதையின் ஒவ்வொரு பாராவின் முதல் எழுத்தையெல்லாம், அவ‌ன் பெயரின் முதல் எழுத்தை வைத்தே எழுதியிருந்தது.இதயத்திலிருந்து அவனைப் பிடுங்கி எறிய முடியாத ஆத்திரத்தில்,'இ' எழுத்தை 'key board' லிருந்து பலம் கொண்ட மட்டும் பிடுங்கி வெளியே எறிந்தேன்.ப்போது ஏனோ மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாய் ருக்கிறது.

2 comments:

  1. ஒவ்வொரு வரியிலும் இல்லை.. ஒவ்வொரு வார்த்தையிலும் வழிகிறது காதல்.. அமர்க்களம்..

    ReplyDelete
  2. @ கவிதை காதலன்!

    நன்றி கவிதை காதலன்!

    ReplyDelete