Tuesday, December 7, 2010

ரத்த சரித்திரம்-திரை விமர்சனம்


இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியல் உள்ளே நுழையும்போது அவர்களின் வாழ்வு எப்படி சின்னா பின்னமாகிறது என்பதுதான் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா,விவேக் ஓபராய் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை.

கோட்டா சீனிவாச ராவின் சூழ்ச்சியால் தன் அப்பாவை இழக்க நேரிடும் விவேக் ஓபராய், ரவுடியாகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் மாற நேரிடுகிறது.அவரால் தன் குடும்பத்தை இழக்க நேரிடும் சூர்யா,விவேக் ஓபராயை எப்படி பழிவாங்குகிறார் என்பதை ராம்கோபால் வர்மா,ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கிறார்.

குறைந்தபட்சம் இரண்டு கொலைகளாவது பண்ணியிருக்கும் ரவுடிகளுக்குக் கூட,படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகம் இருப்பது போல் தோன்றும்.முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சூர்யா நன்றாகவே நடித்திருந்ந்தாலும்,ஒரு வேளை விக்ரம் நடித்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.பிரியாமணியை விட,ராதிகா ஆப்டேவிற்குத்தான்(பொண்ணு அவ்வளவு அழகு!) நடிப்பில் ஸ்கோர் பண்ணுவதற்கு வாய்ப்பு அதிகம்.

படத்தின் பெரிய பலமே சூர்யா,விவேக் ஓபராயின் நடிப்பும்,படத்தில் வரும் வசனங்களும்தான். கோட்டா சீனிவாச ராவ் இறந்தவுடன் அவர் வீட்டு நாய் குரைப்பது, சூர்யாவிற்கு பின்னால் பிரியாமணி நிற்பது போலவும், ஆனால் அவர் முன்னாடி பார்த்து பேசுவதும்,கடைசியில் சூர்யாவின் பின்னால் தெரியும் பிரியாமணியின் பிம்பம் கண்ணாடியிலிருந்து தெரிவது போன்ற காட்சி அமைப்பு ஆகட்டும், விவேக் ஓபராய் சூர்யாவிடம் என்னைக் கொல்றதுக்கு கனவு கண்டுட்டே இரு என்பதும் அதற்கு சூர்யா அவரிடம் 'முடிஞ்சா நீ தூங்கு' என்பதும் ராம் கோபால் வர்மா டச். அதே போல் படத்தில் சூர்யா பேசும் வசனங்களெல்லாம் அருமை. "நான் சாகப் பயப்படலை;ஆனால் அவன் சாகுறதுக்கு முன்னாடி செத்துடுவனோன்னு பயமா இருக்கு", "யாருக்காகவெல்லாம் அவனைப் பழிவாங்கக் கூடாதுன்னு நினைச்சனோ அவங்க எல்லோரையும் கொன்னுட்டான்", "பாடிகார்டோட வேலை உயிரோட இருக்கிறவனுக்குப் பாதுகாப்பு கொடுப்பது,செத்தவனுக்காக உயிரைக் கொடுப்பதில்லை" என்று வசனகர்த்தாவின் பேனா நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும்,அதே நேரத்தில் மெதுவாகவும் நகர்த்திச் செல்லும் ராம்கோபால் வர்மாவின் யுக்தி,இந்தப் படத்திற்குப் பெரிதும் உதவவில்லை என்றே தோன்றுகிறது.ஆரம்பத்தில் விறு விறுப்பாக செல்லும் படம்,அதன் பின் நம் பொறுமையைச் சோதிக்கிறது.கடைசியில் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த டப்பிங் படத்தைப் பார்க்கும் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது.

ரத்த சரித்திரம்-வெறும் ரத்தம் மட்டும்தான்

No comments:

Post a Comment