Tuesday, November 30, 2010

மைனா-திரை விமர்சனம்


ஒரு மலை கிராமத்தில் வசிக்கும் சுருளிக்கும்,மைனாவிற்கும் இடையேயான சிறு வயது நட்பு,அவர்கள் வளர்ந்த பிறகு காதலாக மாறுகிறது.அவர்களுடைய அந்த அந்நியோன்யமான காதல் கடைசியில் என்னவாகிறது என்பதுதான் பிரபு சாலமன் இயக்கத்தில் 'மைனா' படத்தின் கதை.

சுருளி,மைனா இவர்கள் இருவருக்குமிடையேயான காதல் அவ்வளவு அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.சுருளிக்கு மைனா மேல் இருககும் காதல் பெரிதா அல்லது மைனாவிற்கு சுருளி மேல் இருக்கும் காதல் பெரிதா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.மைனாவாக நடித்திருக்கும் அமலாபாலின் கண்களைப் போன்று பவர்ஃபுல்லான கண்களை உடைய எந்த நடிகையையும் சமீபத்தில் பார்த்தாக ஞாபகத்தில் இல்லை(கடைசியாக 'இவன்' படத்தில் சௌந்தர்யாவின் கண்கள்).அவருடைய அந்த அழகான பெரிய விழிகனுள்ளே,சுருளியுடன் சேர்ந்து நாமும் உள்ளே விழுந்து விடுகிறோம்.சுருளி,மைனாவாக நடித்திருக்கும் விதார்த்தும்,அமலாபாலும் பொருத்தமான தேர்வுகள்.

மைனா பரிட்சைக்குப் படிக்கையில்,சுருள் சைக்கிள் டைனமோ மூலம் வெளிச்சம் கொண்டு வருவதும்,மின் மினிப் பூச்சிகளைப் பாட்டிலில் அடைத்து வெளிச்சம் உருவாக்குவதும் கவிதையான காட்சிகள்.வெள்ளந்தியாக இருக்கும் சுருளியால் காப்பற்றப்படும் போலிஸ்காரர்கள் அவருக்கு நன்றி சொல்லும் இடம் நெகிழ்ச்சி.தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும்,கைதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போலிஸ்காரர்களின் சிரமங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தம்பி ராமையாவின் காமெடி படத்தின் இறுக்கத்தைக் குறைப்பதில் பெரிதும் உறுதுணை யாய் இருக்கிறது.சுருளியும்,தம்பி ராமையாவும் எச்சில் படாமல் பீடி புகைப்பதும்,சுருளியும் மைனாவும் போலிஸ்காரராக இருக்கும் தம்பி ராமையாவிற்கு கணக்கு நன்றாக வருகிறது,அவரையே நாம் ஆரம்பிக்கப்போகும் கடைக்கு கணக்குப் பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம் என்று கலாய்ப்பதும் புன்னகை புரிய வைக்கும் இடங்கள்.காமெடிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் உடனடியாக வில்லத்தனத்தை தன் முகத்தில் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் தம்பி ராமையா.தேனியிலிருந்து மூணாறு செல்லும் அழகான,ஆபத்தான பாதையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது காமெரா.இமானின் பாடல்களும்,பின்னணி இசையும் நன்றாக இருக்கின்றன.

படத்தின் இடைவேளைக்குப் பிறகு,மலை கிராமத்திலிருந்து தேனிக்கு வரும் காட்சிகள் கொஞ்சம் இழுவை.சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் "ஒரு மனிதன் மரணத்தின் விளிம்பு வரை செல்கையில்,அவனுக்குள்ளிருக்கும் கோபம்,வெறி,வன்முறை போன்ற கெட்ட குணங்களெல்லாம் மறைவது போல்,அவனுக்கு நெருக்கமான ஒருவரின் மரணத்தில் இந்த கெட்ட குணங்களெல்லாம் வெளிப்பட்டு விடுகின்றன" என்பதை உணர்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரபு சாலமன்.

மைனா-படத்தின் தலைப்பே போலவே படமும்.

2 comments:

  1. உங்கள் தளத்தை இப்பொழுது தான் பார்க்கிறேன்....மிக நன்றாக உள்ளது....
    மைனா நான் இன்னும் பார்க்கவில்லை..பார்க்கணும்...
    நீங்க நந்தலாலா பார்க்கலையா???
    கமல் குறித்து எழுதிய புனைவு மிக மிக அருமை !!!

    ReplyDelete
  2. @ சீனு!

    வருகைக்கு நன்றிங்க! இப்போதைக்கு நந்தலாலா பார்க்க வாய்ப்பு இருக்கிறமாதிரி தெரியவில்லை.அடுத்து சிக்கு புக்கு மற்றும் ரத்த சரித்திரம்தான்.

    ReplyDelete