Saturday, October 2, 2010

எந்திரன் ஸ்பெஷல்(5) - ‍எந்திரன் திரை விமர்சனம்

இரும்பிலே செய்யப்பட்ட 'ரோபோ'விற்கு மனிதனுக்கு இருப்பது போன்று உணர்ச்சிகளைப் புகுத்துகையில்,மற்ற எல்லா உணர்ச்சிகளையும் எளிதில் சமாளித்துவிடும் ரோபோ,மனிதர்களைப் போலவே காதலை சமாளிக்க முடியாமல் எவ்வாறு தடம் பிறழ்கிறது என்பதுதான் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ரகுமான் இசையமைப்பில்,ஷங்கர் இயக்கி வெளிவந்திருக்கும் 'எந்திரன்' படத்தின் கதை.

விஞ்ஞானத்தின் மூலமாக நல்ல விசயங்களைப் பண்ண முடியும் என்பதைப் படத்தின் முதல் பாதியிலும்,கெட்ட விசயங்களையும் செய்ய முடியும் என்பதைப் படத்தின் இரண்டாம் பாதியிலும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.ரஜினி படங்களில் பொதுவாக வரும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகளை,இதில் ரோபாவாய் இருக்கும் ரஜினி பண்ணுவ‌தாகக் காட்டியிருப்பதில் ஷங்கரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.பொதுவாக ஷங்கரின் படங்களில் அவரின் கதாநாயகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருவது போல்,இதிலும் ரஜினி மூன்று வேடங்களில்(விஞ்ஞானி,நல்ல ரோபோ,கெட்ட ரோபோ) வந்து கலக்குகிறார்.ரஜினியின் உழைப்பைப் பார்க்கும்போது அவருக்கு 61 வயதாகிறது என்பதை நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.குறிப்பாக ரோபாவாக வரும் ரஜினியின் உடலசைவுகள் க‌லக்கல்.

படத்தின் இரண்டாம் பாதியில் கெட்ட ரோபோ செய்யும் அட்டகாசகங்கள் சில இடங்களில்'ஆளவந்தானை' ஞாபகப்படுத்தினாலும்,இந்திய சினிமாவிலும் பணம் செலவழித்து ஹாலிவுட் தரத்தைக் கொண்டு வர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.அதேபோல் ரோபோ அட்டூழியம் செய்வதாக வரும் காட்சிகளில்,டைரக்டரின் கிரியேட்டிவிட்டிக்கும்,டெக்னிக்கல் டீமிற்கும் ஒரு சபாஷ்.கெட்ட ரோபாவாக வரும் ரஜினி,மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியனைக் ஞாபகப்படுத்தினாலும்,முப்பது வயதில் தான் பண்ணியதை,தன்னுடைய அறுபது வயதிலும் பண்ண முடியும் என்பதை ரஜினி நிரூபித்திருக்கிறார்.விஞ்ஞானியாக வரும் ரஜினியைப் பார்க்கும்போது மட்டும் பாவமாக இருக்கிறது.

ஷங்கரின் இயக்கம் பல இடங்களில் பளிச்.ஆயுத பூஜையில் மற்ற ஆயுதங்களோடு ரோபோ ரஜினியையும் உட்கார வைப்பது,நல்ல ரோபோ மனித உணர்ச்சி வந்தவுடன்,தன்னால் இறந்து போன பெண்ணின் சமாதியில் சென்று மலர் வைப்பது,ரோபோ ரஜினி பிரசவம் செய்யும் காட்சி என்று படம் முழுவதும் தன் ஆளுமையைக் காட்டியிருக்கிறார்."கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப் பொறி நீ","கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்கள் மெஷினையும்,நான் தனிமையையும் கட்டிக்கிட்டு அழனுமா?"அட்ரஸ் கேட்கும் நபரிடம் ரஜினி தன் ஐ.பி அட்ரஸ் சொல்வது,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு ரோபோ கொடுக்கும் பதில் என்று பல இடங்களில் படத்தின் வசனங்களில் மறைந்த 'சுஜாதா' பளிச்சிடுகிறார்.ரத்ன வேலுவின் கேமராவும்,சாபு சிரிலின்(ப‌ட‌த்தின் ஒரு காட்சியில் வ‌ருகிறார்) செட்டிங்ஸும் ந‌ன்றாக‌ இருக்கின்றன.

ரோபாவாக வரும் ரஜினி எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதை,ஐஸ்வர்யாராய் தன்னிடம்தான் சொல்கிறார் என்று தப்பாக நினைத்துவிட்டார் போல்.ரஜினியைத் தவிர படத்தில் வரும் வேறு நடிகர்கள் யாவரும் மனதில் நிற்கவில்லை.ரகுமானின் பின்னணி இசை பல இடங்களில் நன்றாகவும்,சில இடங்களில் ஓவர் டோஸாகவும் தெரிகிறது.கலாபவன் மணி வரும் காட்சிக்கு கத்திரி போட்டிருக்கலாம்.இரண்டாம் பாதியில் வரும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திருக்கலாம்.

'அவதார்' திரைப்படம் டெக்னாலஜியில் உலக சினிமாவின் உச்சம் என்று சொன்னால்,எந்திரனை இந்திய சினிமாவின் உச்சம் என்று தாராளமாக சொல்லலாம்.

எந்திர‌ன்-மன‌தை ம‌ய‌க்கும் ம‌ந்திர‌ன்.

9 comments:

  1. அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  2. பார்க்க தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
  3. @ Cool Boy கிருத்திகன்!

    நன்றிங்க!

    ReplyDelete
  4. @ கமலேஷ்!

    நன்றி கமலேஷ்.

    ReplyDelete
  5. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  6. @ sweatha!

    தகவலுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  7. விமர்சனம் நல்லாயிருக்கு..

    http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html

    ReplyDelete
  8. நைஸ் விமர்சனம்!

    ReplyDelete