Friday, October 1, 2010

எந்திரன் ஸ்பெஷல்(4)-ர‌ஜினிகாந்த்

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரய் கோலோச்சிக் கொண்டு இருக்கும் ரஜினி,தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராய் மாறி,இப்போது இந்தியிலும் பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாக நுழைகிறார்.

எனக்கு சின்ன வயதில் மிகவும் பிடித்த நடிகரென்றால் அது ரஜினிதான்(இப்போது கமல்).அப்போதெல்லாம் ரஜினி படங்கள் பார்த்தால் வீட்டிற்கு நடந்து கூட வரத் தோன்றாது.தியேட்டரிலிருந்து வீட்டிற்கு ஓடித்தான் வரத் தோன்றும்.ரஜினியின் ஆக் ஷன் படங்கள் பார்த்துவிட்டு எனக்குள் ரத்த ஓட்டம் அதிகமாகி,புதுவித உற்சாகமும் உத்வேகமும் கிடைக்கும்.சின்ன வயதில் பார்த்த படங்களில் நான் போட்ட சவால்,கழுகு,மாவீரன்,நல்லவனுக்கு நல்லவன்,படிக்காதவன் போன்ற படங்களெல்லாம் மிகவும் பிடித்திருந்தன.அதன்பின்னர் வந்த குரு சிஷ்யன்,தர்மதுரை,மன்னன்,தளபதி படங்கள் வரை ரஜினி படங்களைப் பார்ப்பது போன்ற மனதுக்கு நிறைவான ஒரு விசயம் அந்த காலகட்டத்தில் வேறு எதுவும் இல்லை.

நான் பார்த்த ரஜினியின் படங்கள் 'கம்பம்' சக்திபாலா,'தேனி' கிருஷ்ணா,'மதுரை' குரு,'சென்னை' ஆல்பர்ட் முதற்கொண்டு எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் உற்சாகம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்ற‌து.ரஜினியின் ரசிகர்களுக்கு அவருடைய படங்களைப் பார்பதை விட சந்தோஷத்தைத் தரக் கூடிய வேறு விசயங்கள் மிகவும் குறைவுதான்.நான் இப்போது வரை ரஜினியிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே விசயம் அவரால் எப்படி மக்களின் மனதை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும்படி தன்னுடைய படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகின்றது என்பதுதான்.பாட்ஷாவிற்கு பிறகு படையப்பா தவிர்த்து வேறு எந்த ரஜினியின் படங்களும் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்,அவர் கடந்த 17 வருடங்களில் கொடுத்த ஃபிளாப் படங்கள் மிகவும் குறைவு.தன்னுடைய ரசிகர்களுக்கும்,பெரும்பாலான மக்களுக்கும் எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சரியாகத் தெரிந்துகொண்டு,அதுபோன்ற‌ படங்களில் நடிப்பது சாதரணமான விசயம் கிடையாது.பாபா படத்தைக் கூட ரஜினி தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,அந்தப் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற 'தாலி காத்த காளியம்மன்' போன்ற படங்களோ என்று தோன்றுகிறது.(சாமி படங்களுக்கு மார்க்கெட் வந்து விட்டது என்று நினைத்து பாபா போன்ற படத்தில் நடித்தாரோ என்னவோ).

அதேபோல் பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு,படத்தில் தனக்குப் பெரிய மெயின் ரோல் இல்லையென்றாலும்,மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து எடுத்த சந்திரமுகி,மறுபடியும் மக்களின் ரசனையை சரியாகப் புரிந்து கொண்டவர் ரஜினி என்பதைக் காட்டியது.எந்த மாதிரி படங்களில் இனிமேல் நடிப்பது என்று ரஜினி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த சரியான இயக்குனர்தான் ஷங்கர்.இன்றைய‌ கால‌க‌ட்டத்தில் ஷ‌ங்க‌ர் போன்று ம‌க்க‌ளுக்குப் பிடித்தாற்போல் ப‌ட‌ங்க‌ள் இய‌க்கும் இய‌க்குன‌ர்க‌ள் மிக‌வும் குறைவு.ர‌ஜினிக்கு,ஷ‌ங்க‌ர் போன்ற‌ ஒரு இய‌க்குன‌ர் தேவைப்ப‌ட்டார்.ஷ‌ங்க‌ருக்கும்,ர‌ஜினியைப் போன்ற‌ ஒரு பெரிய‌ ந‌டிக‌ர் தேவைப்ப‌ட்டார்.இந்த‌ இரு பெரும் ச‌க்திக‌ளும் சேர்ந்த‌தால்தான் கலாநிதிமாற‌னால் '150' கோடிக்கும் அதிக‌மான‌ ப‌ட்ஜெட்டில் ஒரு ப‌ட‌த்தைத் த‌யாரிக்க‌ முடிந்திருக்கின்ற‌து.

ர‌ஜினியிடம் அவ‌ரின் எளிமை,அட‌க்க‌ம்,ப‌ந்தா ப‌ண்ணாம‌ல் இருப்ப‌து,பிடித்திருந்தால் ம‌ற்ற‌வ‌ர்களை உட‌ன‌டியாக‌ப் பாராட்டுவ‌து,க‌ஷ்ட‌த்தில் இருக்கும் தயாரிப்பாளர்க‌ளுக்கு ப‌ட‌ம் ப‌ண்ணிக் கொடுப்ப‌து என்று ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் பிடித்திருந்தாலும் அவ‌ரிட‌ம் பிடிக்காத‌ ஒரே விச‌ய‌ம் த‌ன்னுடைய‌ ப‌ட‌ம் ந‌ன்றாக‌ ஓட‌ வேண்டுமென்ப‌த‌ற்காக, த‌ன் ப‌ட‌ம் வெளிவ‌ரும் நேர‌ங்க‌ளில் எல்லாம் தேவையில்லாம‌ல் பேசி மாட்டிக்கொள்வ‌து.முன்பு த‌ன்னுடைய‌ ப‌டங்க‌ளில் அர‌சிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளைப் பேசி தன்னுடைய படங்களின் மேல் எதிர்பார்ப்பை உண்டு ப‌ண்ணிக் கொண்டிருந்தார்.அப்புற‌ம் அவ‌ர் அர‌சிய‌லுக்கு வ‌ர‌வே மாட்டார் என்று தெரிந்து விட்ட‌ இன்றைய‌ நிலையிலும் கூட, ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பிற்காக‌ எந்திர‌ன் ஆடியோ கேசட் ரிலீஸ் ஃப‌ங்ச‌னில் ஷ‌ங்க‌ர்,க‌லாநிதிமாற‌ன்,ர‌குமான் போன்ற‌வ‌ர்களின் கூட்ட‌ணியில் வெளிவ‌ரும் எந்திர‌ன் ப‌ட‌த்தை மன‌தில் வைத்துக் கொண்டு "இந்த‌ மாதிரி ஒரு கூட்ட‌ணி கிடைத்தால் 234 தொகுதிக‌ளிலும் நிற்க‌லாம்' என்று பேசுவ‌தெல்லாம் ர‌ஜினியின் சுய‌ந‌ல‌த்தைத்தான் காட்டுகிற‌து.

த‌மிழ் சினிமாவில் ம‌ட்டும‌ல்ல‌ தென் இந்திய சினிமாவிலேயே த‌விர்க்க‌ முடியாத‌ ச‌க்தியாக‌ விளங்கும் ர‌ஜினி,த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கான‌ மார்க்கெட்டை உல‌க‌ அளவில் ப‌ர‌ப்பிய‌தில் முக்கிய‌மான‌வ‌ர்.இன்று ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ள் இந்தியாவில் உள்ள‌ அத்த‌னை முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளிலும் த‌மிழிலேயே ரிலிஸாகிக் கொண்டிருக்கின்ற‌ன‌.இந்தியாவில் உள்ள வேறு எந்த‌ ந‌டிக‌ர்க‌ளையும் விட‌ ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ளுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு மிக‌வும் அதிக‌ம்.இனிமேல் எந்திர‌ன் போன்ற ஒரு ப‌ட‌த்தில் தற்போது 61 வ‌ய‌தாகும் ர‌ஜினி நடிப்ப‌து இயலாத‌ காரிய‌ம் என்றே தோன்றுகிற‌து.அதேபோல் ர‌ஜினியும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இந்த‌ வாய்ப்பை முழுமையாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.ரோபோ போல் வ‌ரும் ர‌ஜினியையும்,வில்ல‌னாக‌ வ‌ரும் ர‌ஜினியையும் பார்க்கையில்,ர‌ஜினி த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்லாது அனைத்து த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ஒரு பெரிய‌ விருந்தை எந்திர‌னில் குடுப்பார் என்ற‌ ந‌ம்பிக்கையில், எந்திர‌ன் திரைப்ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

2 comments:

  1. ஏலம் விடப்பட்ட எந்திரன் டிக்கெட்

    http://tamil-cinema-pages.blogspot.com/2010/09/blog-post_2677.html

    ReplyDelete
  2. @ Rosee!

    தகவலுக்கு நன்றிங்க!

    ReplyDelete