
இந்தப் பதிவு கண்டிப்பாக நண்பர்
கருந்தேள் எழுதிய பதிவிற்கு எதிர் பதிவு கிடையாது. அவருடைய பதிவுகளை,அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே விரும்பி படித்து வருகிறேன். ஒவ்வொரு விசயத்தின் மீதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும்.இந்தப் பதிவில் கமலை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான காரணங்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.
கமல் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றச்சாட்டு அவர் ஆங்கிலப்படங்கள் சிலவற்றை காப்பி அடித்து தமிழில் பெயர் வாங்கிக் கொண்டார் என்பது. நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமல் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்துபவர்.அதற்கப்புறம்தான் அவருடைய மற்ற பரிமாணங்கள்.
கமலின் ஆரம்பக் காலத்துப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. அதற்கு முன் மகேந்திரன்,பாரதிராஜா,பாலசந்தர் என்று தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல சினிமாக்களையும் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா,தொடர்ந்து மசாலா படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல் நல்ல படங்கள் வந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பண்ண வேண்டிய மாற்றத்தை,வேறு வழியில்லாமல் நடிகரான கமல் பண்ண வேண்டியதாயிருந்தது.
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த கமலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை.அதனால்தான்,அவரே வித்தியாசமான படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த சாதாரண காமெடி படமாகிய 'எல்லாமே இன்ப மையம்' படத்தில் கமலின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை' யைத் தானே தயாரித்து நடித்தார்.கமலினுடைய ஆசையெல்லாம் வெளி நாட்டில் நல்ல கதைகளோடு வரும் படங்களைப் போன்று தமிழிலும் நல்ல படங்கள் வர வேண்டுமென்பதே.இதில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.கமல் ஏதோ வெளி நாட்டுப் படங்களை படங்களை மட்டுமே தமிழுக்கு கொண்டு வந்தார் என்றில்லை. மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்தப் படங்களையெல்லாம் முடிந்த அளவிற்கு நன்றாகவும் கொடுத்திருக்கிறார்.(குருதிப்புனல் பார்த்துவிட்டு அதன் ஒரிஜினல் டைரக்டர் சொன்னது; "ஒரிஜினலை விடவும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்" என்பதுதான்.இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது.(இதில் பொதுவாக காப்பி அடிப்பதைப் பற்றி இந்தியர்கள் யாருமே பெரிதாக கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை.நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்).
இன்னும் சொல்லவேண்டுமானால் இப்படி கமல் நடித்த பெரும்பாலான படங்கள் அவருடைய தயாரிப்பிலோ,இயக்கத்திலோ வந்தவை கிடையாது.கமல் என்னவோ அந்த மாதிரி படங்களில் மட்டுமே நடித்து பெயர் வாங்கியது போல் சிலர் சொல்வது ஒப்புக் கொள்ள முடியாது.கமல் தனக்குக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த படங்கள் எந்த மொழியிலிருந்தாலும் தயங்காமல் நடித்து வந்தார். அதனால்தான் புஷ்பக்,கோகிலா(கன்னடம்),சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து(தெலுங்கு),ஏக் துஜே கேலியே(இந்தி) என்று அவரால் எல்லா மொழிகளிலும் நல்ல படங்களைக் கொடுக்க முடிந்தது. மேலும்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நேரடிப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இந்திய நடிகர் கமல் ஒருவர் மட்டும்தான் என்பது மறக்க முடியாத உண்மை.
தமிழ் சினிமாவிற்கு கமல் செய்த மிக நல்ல விசயம் என்னவென்றால், வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததுதான். மற்ற மொழிகளிலெல்லாம் இப்போதிருக்கும் இளம் நடிகர்கள் கொஞ்சம் நன்றாக நடித்தால் கூட தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். இங்கே விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவதற்கு மிகக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது.அதற்குக் காரணம், கமல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கிற Standard தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அமிதாப்பின் நடிப்பை 'பா' படத்தில் எல்லா வட இந்தியப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதியிருந்தன. இதேபோல் வேறு ஒரு நடிகர் நடித்து,தமிழில் வந்திருந்தால் மக்கள் என்ன சொல்வார்கள்,கமல்தான் இதே மாதிரி ஏற்கெனவே பண்ணியிருக்கிறாரே என்று சாதாரணமாக நினைப்பார்கள்.(அதற்காக நான் அமிதாப்பின் உழைப்பைக் குறை கூறுகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம்). அதுதான் கமலின் வெற்றி. அதனால்தான் இங்கே உள்ள நடிகர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துப் பேர் வாங்குவதற்கான ஆரம்ப சுழி கமலிடமிருந்தே ஆரம்பமாகியது என்று கூறுகிறேன்(கமலுக்கு இதே போல் ஆதர்சனமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்).
கமல் காப்பி அடித்த படங்களை எல்லாம் ஒரு உதாரணத்திற்காக தமிழ் சினிமாவிலிருந்து நீக்கி விடுங்கள்.நமக்கு பல நல்ல படங்கள் கிடைத்திருக்காது;அது மட்டும்தான் உண்மை.விஜய் டிவி அவார்ட்ஸ்ஸில் பாலா பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நான் கடவுள் படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஸனே அன்பே சிவம்' தான் என்றார். ஒரு வேளை கமல் அன்பே சிவம் போல் ஒரு படம் எடுக்காமல் இருந்திருந்தால் 'நான் கடவுள்' போன்ற ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும்.இதில் சில வெளிநாட்டுப் படங்களை இன்ஸ்பிரேஸனாக வைத்துக்கொண்டு கமல் எடுத்த படங்களையெல்லாம் அப்பட்டமான காப்பி என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படிப்பார்த்தால் பருத்தி வீரனையே,விருமாண்டியின் காப்பி என்று சொல்லி விடலாம்-அது கொஞ்சம் கூட உண்மையில்லை என்றாலும் கூட(இரு படங்களும் மதுரை மண் சார்ந்தவை,ஹீரோ ஊதாரித்தனமாகத் திரிவது,காதல் வயப்பட்டவுடன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பது,காதலி கற்பழிக்கப்பட்டு இறப்பது).ஆனால் கமல் பருத்திவீரனுக்காக அமீரைப் பாராட்டித் தள்ளினார். கமல் படங்களைப் பார்த்து விட்டு, பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உத்வேகமாக படமெடுக்க ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.
கமல் வேறு மொழி படங்களைக் காப்பி அடித்து தமிழில் எடுத்த பெரும்பாலான படங்கள் அவருக்கு தோல்வியை மட்டுமே கொடுத்திருக்கின்றன.அவர் நினைத்திருந்தால் சகலகலா வல்லவன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து காசு ஈட்டியிருக்க முடியும். ஆனால் சினிமாவில் உள்ள காதலால்தான் வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டுமென்று நினைத்து,அவரால் அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற முடிந்திருக்கிறது.நன்றாக நினைத்துப் பாருங்கள், ஒரு நல்ல படத்தை தேர்வு செய்து,கஷ்டப்பட்டு அந்த படத்திற்காக உழைத்து, படமும் நன்றாக வந்திருந்து ஃபிளாப் ஆவது போல் கொடுமையான விசயம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு தடவை ஃபிளாப் ஆகிறதென்றால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து தோல்வியடைந்தாலும்,தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யன் போல் இருந்த நடிகர்கள் இந்திய சினிமாவில் மிக மிக குறைவு.
கமலை மற்றொரு விசயத்தில் எல்லோரும் குறை கூறும் விசயம் அவருடைய 'உலக நாயகன்' பட்டம். அப்படிப் பார்த்தால் தமிழில் பட்டம் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா நடிகர்களையும் குறை கூற வேண்டியதிருக்கும்.இதில் கமலை மட்டும் குறை கூறுவது ஏனோ?.கமலுக்கும், இந்தியாவில் உள்ள மற்ற நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,மற்றவர்கள் நடித்த எந்த வேடத்தை வேண்டுமானாலும் கமலால் ஓரளவிற்கு நடிக்க முடியும். ஆனால் கமல் நடித்த அனைத்து வேடங்களையும்,இந்தியாவில் வேறு ஏதாவது ஒரே நடிகர் நடிப்பது இயலாத விசயம். ஏனைன்றால் கமல் வெறுமனே ஒரு நல்ல நடிகன் மட்டுமல்ல,கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,தயாரிப்பு,நடனம்,பாடல் எழுவது,பாடுவது,சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பது என்று பல விசயங்களையும் பண்ணிக் கொண்டிருப்பவர். உலகத்திலேயே வேறு ஏதாவது நடிகர் இத்தனை திறமைகளோடு இருப்பதாகத் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்(டி.ராஜேந்தர் என்று கூறுபவர்கள் சொர்க்கத்திற்குப் போகக் கடவது).வேறு மொழிகளில் இந்த நடிகரின் காமெடி படங்கள் நன்றாக இருக்கும்(அந்த நடிகருக்கு நடனம் வராமல் இருக்கும் என்பது வேறு விசயம்);மற்றொரு நடிகரின் ஆக் ஷன் படங்கள் நன்றாக இருக்கும்; இந்த நடிகரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று வேண்டுமானாலும் கூற முடியும்.ஆனால் ஒரே நடிகர் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வேடங்களிலும் தொடர்ந்து பரிணமிப்பதுதான் கமலின் தனித்துவம்.கமல் நடித்த சிறந்த படங்களான "விருமாண்டி,அன்பே சிவம்,ஹேராம்,மகாநதி,தேவர் மகன்,மைக்கேல் மதன காமராஜன்,அபூர்வ சகோதரர்கள்,பேசும் படம்,நாயகன்,மூன்றாம் பிறை,மரோ சரித்ரா,சலங்கை ஒலி,16 வயதினிலே...என்று பல படங்கள் இருக்கையில் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் காப்பி அடித்து பெரும் புகழையும் இடத்தையும் அடைந்து விட்டார் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படி என்ன பெரிய இடத்தை நாம் அவருக்கு கொடுத்துவிட்டோம்;அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதற்கு.50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை மூச்சாகக் கொண்டு பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும்,தமிழ்நாட்டில் கமலுக்கு இப்போதும் இரண்டாவது இடம்தான்.(கமல் 50 ஆண்டு விழாவில் ரஜினியே ஆச்சரியப்பட்டு சொன்னது,"வட இந்திய நடிகர்களெல்லாம் இப்போது வரை ஆச்சரியப்படும் விசயம்,கமல் இருக்கையில் நான் எப்படி நம்பர் 1 என்பதுதான்"-அப்படி பொது மேடையில் ரஜினி சொன்னது,அவரின் பெருந்தன்மை என்பது வேறு விசயம்)
கமல் புது இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்போதிருக்கும் மற்ற முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமான இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறார்.ஷங்கர்,கவுதம் மேனன் போன்றோருக்கு கமலின் படங்கள் அவர்களுடைய மூன்றாவது படம்தான்.சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்புக் கொடுத்ததில் இருந்து சரண்,சுந்தர்.c,உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் என்று பல இன்றைய இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கின்றார். மிஷ்கினோடு கூட படம் செய்வதுதாக இருந்தது வேறு விசயம்.கமலுடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் அவர்களின் இயக்கத்தில் சிறந்த படமாக இன்றும் சொல்லப்படுவது கமலுடன் அவர்கள் சேர்ந்து பண்ணிய படங்கள்தான்.
கமலின் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இரு முறை மணமுடித்து விவாகரத்து ஆனது.ஒரு கணவன்,மனைவி இருவரும் மனமுவந்து சட்டத்திற்கு உட்பட்டு விவாகரத்து செய்வதில் என்ன பெரிய தப்பு இருக்க முடியும்,அதையும் விட இது அவர்களின் தனிப்பட்ட விசயமும் கூட.மற்றொன்று அவருடைய திருமண வாழ்க்கையைத்தான் எல்லோரும் பெரிய குறையாக சொல்கிறார்களே தவிர, அவரிடம் உள்ள பல நல்ல விசயங்களான அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லி இப்பொது வரை தன் பேச்சைக் காப்பாத்துவது,தன்னுடைய ரசிகர் மன்றங்களையெல்லாம் முதல் ஆளாக நற்பணி மன்றங்களாக மாற்றியது,சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே முதலீடு பண்ணுவது,தன்னுடைய உடலையே தானமாகக் கொடுத்தது,காட்சிக்கு தேவைப்படாதவரை தண்ணி,சிகரெட் அடிப்பது போன்று தன்னுடைய படங்களில் நடிக்காமல் இருப்பது,முடிந்த வரை தூய தமிழிலேயே பேசுவது போன்றவற்றைப் பற்றி வாயே திறப்பதில்லை.
கடைசியாக,குறைகள் இல்லாத மனிதன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவரிடம் உள்ள சில குறைகளை மட்டும் மிகைப்படுத்தி,அவர் இத்தனை ஆண்டுகளாக பண்ணிய சாதனைகளை மூடி மறைக்க நினைப்பது,ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் கொடுக்க நினைக்கும் மரியாதையாக இருக்க முடியாது.