Monday, March 29, 2010
அங்காடித் தெரு- திரை விமர்சனம்
மிகப் பெரிய அங்காடிகளில் உள்ள 'அலங்கார பொம்மைகளை'ப் போன்று தங்களுடைய அனைத்து உணர்ச்சிகளையும் இழந்து விட்டு வேலை பார்க்கும் இன்றைய இளைய தலை முறையினருக்குள்,காதல் என்ற உணர்வு வருகையில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை,தி.நகர் சாலைகளை மூன்று மணி நேரம் நம் கண் முன் நடமாட விட்டு வசந்தபாலன் காட்டியிருக்கும் படம்தான் 'அங்காடித் தெரு'.
படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே தங்களுடைய இயல்பான நடிப்பினால்,நாம் பார்த்துக் கொண்டிருப்பது படம் என்ற உணர்வு எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.படத்தின் வசனங்களும் மிகவும் இயல்பாக இருக்கின்றன்.அஞ்சலி மீண்டும் ஒரு முறை தன்னுடைய அழகான நடிப்பினால் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார்.அஞ்சலியைப் பார்க்கும் போது,நம் பழைய காதலிகளில் யாரவது ஒருவரை ஞாபகப்படுத்தும் அதே நேரத்தில்,புது காதலுக்கான விதையையும் விதைத்துவிட்டு செல்கிறார்.ஹூரோ மகேசும் இந்தப் படத்திற்குப் பொருத்தமான தேர்வு.
மற்றவர்களுக்கு கீழே அடிமாடு போல் வேலை செய்வதை விட,சொந்தமாக தொழில் செய்யும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும்/கவுரவத்தோடும் இருக்கிறார்கள் என்பதை கண் பார்வை இல்லாத பெரியவர்,கழிவறையை சுத்தம் செய்து காசு வசூலிப்பவர் போன்றவர்களின் மூலம் காட்டியிருப்பது நன்றாக உள்ளது.இன்னும் சொல்லப் போனால் இந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எவ்வெளவுக்கெவ்வளவு கெட்ட வழிகள் உள்ளதோ,அதை விட மிக மிக அதிகமான நல்ல வழிகள் நம் கண் முன்னே இருக்கின்றன என்று காட்சிப்படுத்தியிருப்பதும் மிகவும் அருமை.'உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் உற்சாகம்' மற்றும் 'கதைகளைப் பேசும் விழியருகே எதை நான் பேச என்னுயிரே' பாடல்கள் இன்னும் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.காதல் ஏற்பட்டவுடன் பெண் 'உணர்வு' பூர்வமாய் மாறுவதையும்,அதே நேரத்தில் ஆண் அந்தப் பெண்ணிற்கும் சேர்த்து 'நாளை' யைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பதையும் 'செல்வராணி-சௌந்தரபாண்டி' எபிசோடின் மூலம் அழகாக முன் வைத்திருக்கிறார்கள்.
மிகப் பெரிய அங்காடிகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள் படும் துயரங்களை மிகவும் விரிவாகக் காட்டிவிட்டு,அதே விசயங்களைப் பாட்டிலும் காட்டுவது சோர்வை ஏற்படுத்துகிறது.அதே போல் அவர்களின் சிரமங்களை சொல்லும் சில காட்சிகள் 'கொஞ்சம்' மிகைப்படுத்தப்பட்டது போல் இருப்பதாகத் தோன்றுவது படத்தின் மிகப் பெரிய பலவீனம்.அது படத்தின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது.படத்தில் இடம் பெறும் சில காட்சிகள் நம்முள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் வெறுமனே நகர்வது படமாக்கப்பட்ட விதத்தினாலா அல்லது படத்தின் பின்னணி இசையினாலா என்று புரியவில்லை.
எது எப்படியாகினும் நாம் பார்க்க மறந்த உலகத்தை நம் கண் முன் மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களுக்கும் காட்டியதில் வசந்த பாலன் பாரட்டப்பட வேண்டியவராகிறார்.
அங்காடித் தெரு-'வெயில்' போல சுள்ளென்று நம் முகத்தில் அடிக்காவிட்டாலும்,நம் 'நிழல்'களை நமக்கு காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல அலசல்....
ReplyDeleteஉங்களுக்கு தோன்றிய அதே கேள்விகள்
எனக்கும் தோன்றியது....
mohan has observed the film very nicely and presented his views without any exaggeration and nicely.appreciatable work by vasanthabalan.if these things shown in the film is true i am ready to join my hands against the atrocities by those millionares.by prabhu from arani
ReplyDelete@ ஜெட்லி!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஜெட்லி!
@ Prabhu!
ReplyDeleteThanks for your comment Prabhu!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in