Saturday, September 19, 2009

உன்னை போல் ஒருவன்‍-விமர்சனம்




இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் விளையாடி தோற்றாலும் சரி,கொல்கத்தாவில் தோற்றாலும் சரி,எப்படி ஒட்டு மொத்த தேசமே அது குறித்து கவலைப்படுகிறதோ அது போல,நாட்டின் எந்த பகுதியில் தீவிரவாதத்தால் குண்டு வெடித்தாலும் ஒட்டு மொத்த தேசமே அதை எதிர்த்துப் போராட வேண்டும்.அதேபோல் தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை,தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் 'உன்னை போல் ஒருவன்' படத்தின் கதை.

இந்த மாதிரி ஒரு 'கதையுள்ள' படத்தை ரீமேக்கியதற்காகவே கமலையும்,இயக்குனரையும் பாராட்ட வேண்டும்.அதேபோல் ஒரிஜினல் படத்திற்கும்,இதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக் கொண்டதற்காகவும்.ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயர் 'ஒன் டே மேட்சில்' ஒரு 'Style'-‍ லும் டெஸ்ட் மேட்சில் மற்றொரு 'Style'-‍ லும் விளையாடுவது போல் கமல்,மோகன்லால் இருவருமே விளையாடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவிற்கு அப்புறம் படத்தில் தனிப்பட்டு பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம் படத்தின் வசனங்கள்.பல இடங்களில் நம்மை 'அட' போட வைக்கிறார் வசனகர்த்தா இரா.முருகன்.'இந்திய கிரிக்கெட் டீம் தோத்தால் யாரும் டீ.வி.சேனலை குறை சொல்ல மாட்டார்கள்';குஜராத்தில் போய் 'மோதி' ப் பார் என்பதில் தொடங்கி;எனக்கு 'இடது வலது' பேதமில்லை என்று கமல் நைஸாக கம்யூனிஸத்தை நுழைப்பது வரை படம் முழுவதும் வரும் வசனங்கள் அருமை.முதலமைச்சருனுடைய வீட்டு 'கேட்டி'ல் தெரியும் 'உதய சூரியன்' சின்னம் முதற் கொண்டு,படத்தில் வரும் எல்லா காட்சிகளையுமே ஒவ்வொன்றாக பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை நன்றாகவே இருந்தாலும் கடைசி காட்சிகளில் ஏற்படவேண்டிய 'ஜீவன்' குறைவதற்கு அவையே ஒரு காரணமோ என்று தோன்றுகிறது,இருந்தாலும்,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல 'த‌மிழ் படத்தை' பார்க்க வாய்ப்பளித்தற்கு கமலையும்,இயக்குனரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உன்னை போல் ஒருவன்‍‍- 'தலைவன் இருக்கிறான்'

4 comments:

  1. அருமையான படம்.திவிரவாதத்தின் மீதான சாமான்ய மனிதனின் உச்சகட்ட கோபத்தை இதைவிட கோபமாக வேறு எப்படி வெளிபடுத்துவது?.IIT மாணாவர் காதாபாத்திரம் அருமை.மோகன்லால் நடிப்பும்,அவரின் மலையாளம் கலந்த தமிழும் அழகு.சேதுவும்,ஆசிவ்வும் மனதில் நிற்கிறார்கள்.இவர்களுடன் கமல் என்ன செய்கிறார் ?

    சிவில் இன்ஜினிய‌ர் மாதிரி முழுமையாக‌ க‌ட்டிமுடிக்கப்ப‌டாத உயரமான கட்டிட‌த்தில் இருந்து சென்னையின் அழகை முறைத்துப் பார்கிறார்.ச‌லிப்பு ஏற்ப்பட்டால் மோக‌ன்லாலிட‌ம் அழைபேசியில் தொட‌ர்புகொள்கிறார்.

    இது ராஜ்க‌ம‌ல் த‌யாரிப்பில் க‌மல் ந‌டித்து வெளிவ‌ந்துள்ள பட‌ம் என்பது டைட்டில் கார்டில் மட்டுமே தெரிகிறது.

    என்னை போன்ற க‌மல் அபிமானிக‌ளுக்கு இந்த‌ பட‌ம் ஏமாற்ற‌த்தையே தருகிறது.நம்பிக்கையுட‌ன் காத்திருக்கிறேன் க‌ம‌லின் அடுத்த‌ ப‌டைப்பிற்காக‌ !.

    ReplyDelete
  2. அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
    நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

    - நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்

    ReplyDelete
  3. @Palani

    நன்றி பழனி!

    சில பேர் தெருவெல்லாம்/ஊரெல்லாம் சுற்றி வேலை பார்க்க வேண்டியதிருக்கும்.சில பேர் கணினியின் முன்பு உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பார்கள்.ஆனால்,இரண்டிற்குமே கடின உழைப்பு என்பது தேவைப்படும். இந்தப் படத்தில்,கமல் செய்திருப்பது இரண்டாவது வகை.

    ReplyDelete
  4. @Anonymous

    நன்றி அனானி!

    நமக்கு ஒருத்தரை பிடிக்கனும் என்றாலோ,இல்லை அவரைப் பாராட்ட வேண்டுமென்றாலோ அவர் சொல்கின்ற/நம்புகின்ற 'எல்லா' விஷயங்களுமே நமக்கும் பிடித்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை.அப்படி இல்லாமல் இருக்கிறதாலதான் திருமண பந்தங்கள் கூட தோல்வி அடைகின்றனவோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete