
மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோஷம்,கோபம்,வலி,கவலை மாதிரி காதலும் ஒரு முறை ஒரே ஒருவரிடம் மட்டும் வரும் என்று கிடையாது என்ற அழகான கருத்தை சொல்லும் படம்தான் ஈரம்.
கல்யாணத்திற்கு முன்பு ஒருவனிடம் ஏற்பட்ட காதலால், கல்யாணத்திற்கு பின்பு சந்தேகப்படும் கணவனால் ஒரு பெண் படும் வேதனையை, பேயின் துணை கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் இறந்து விட, அதை துப்பறிய வருகிறார் A.C.P ஆதி.அதன் பின் தொடர்ந்து அதே குடியிருப்பில் வசிக்கும் மேலும் சிலரும் இறந்து விட, அவையெல்லாம் தற்செயலான மரணங்களா? இல்லை கொல்லப்பட்டார்களா? என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை முதல் பாதியில் நம்மை நிமிர வைத்தும், இரண்டாம் பாதியில் நெளிய வைத்தும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஆதி,சிந்து மேனனுக்கு இடையில் காலேஜில் நடக்கும் காதல் காட்சிகள் அனைத்தும் பின்னணியில் வரும் மழை போல குளுமை.அவர்களை P.G படிப்பதுபோல் காட்டியிருந்திருக்கலாம்.காதலுக்கும்,நட்புக்கும் இடையில் இருக்கும் நூலிலை வித்தியாசத்தை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.படத்தில் வரும் வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருக்கிறது."மச்சான் அவளை உனக்குத் தெரியும்னு சொல்லவேயில்லை;பொய்யெல்லாம் அப்பப்பதான் சொல்லணும்".படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் அருமை.
ஃப்ளாஷ்பேக் முடிந்தவுடனே,கொலையாளி யார் என்பது தெரிந்துவிடுவதால்,படத்தையும் சீக்கிரம் முடித்திருந்திருக்கலாம். பெண் புத்தி பின் புத்தி என்பது தெரியும்,அதற்காக பெண் பேயின் புத்தியுமா? படத்தின் கிளைமாக்ஸில் நந்தா மூலம்,பேய் செய்வதை முன்னாடியே செய்திருக்கலாம்.
ஈரம்-முதல் பாதி மட்டும்.
No comments:
Post a Comment