Friday, February 22, 2013

ஆதி பகவன் - திரை விமர்சனம்


தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஜெயம் ரவி, மும்பை தாதா 'ஒருவரின்' வலையில் விழுந்து, அவருக்குப் பதில் ஜெயில் செல்ல நேர்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிப்பில் அமீர் இயக்கியிருக்கும் 'ஆதி பகவன்' படத்தின் கதை.

ஆந்திராவில் இன்கம்டாக்ஸ் ஆஃபிஸர் போல் 'Special' ஆக நடித்து, கிரானைட் அதிபர்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஜெயம் ரவி தாய்லாந்து செல்லும் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. அதன் பின், ஆக் ஷன் படமான ஆதிபகவன், மெதுவாக செல்லும் திரைக்கதையால் இடைவேளை வரை தடுமாறுகிறது. இடைவேளைக்கு சற்று முன் வரும் ட்விஸ்டும், அதன் பின் வரும் மற்றொரு ட்விஸ்டும் படத்தைக் 'கொஞ்சம்' காப்பாற்றுகின்றன. கொஞ்சம் தாய்லாந்து பெண் சாயலில் இருக்கும் 'சாக் ஷி' ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார்.

படத்தின் பெரிய பலவீனம், இப்படத்திற்கு ஜெயம் ரவியைத் தேர்வு செய்ததுதான்(இப்படத்திற்கு அஜித் சரியான தேர்வாக இருந்திருப்பார்). ஜெயம் ரவி ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருந்தாலும்,தாதா வேடமும் அவருக்குப் 'பெரிதாக' பொருந்தவில்லை. பகவான் வேடத்திலும் அவருடைய 'குரல்' ஒத்துழைத்த அளவிற்கு 'முகம்' ஒத்துழைக்கவில்லை. ஹீரோயினான நீது சந்திரா படம் முழுவதும் வருகிறார்; கிடைத்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். நீது சந்திராவிற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் அசத்தியிருக்கிறார்.அரசியல்வாதியைக் கொல்ல அவர் எழுந்திருக்கும் வரை காத்திருந்துவிட்டு அவர் எழுந்தவுடன் 'காலை வணக்கம்' என்று ஜெயம் ரவி சொல்வதில் அவருடைய 'வாய்ஸ் மாடுலேஷன்' ரசிக்க வைக்கிறது. நீது சந்திரா, 'ஆதி' ஜெயம் ரவியைக் குறைவான தலை முடியோடு படமாக வரைவதில் இயக்குனர் தெரிகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

பெரிய தாதா போல் பில்ட் அப் கொடுக்கப்படும் ஜெயம் ரவி சாதாரணமாகப் பாரிலும், ரோட்டிலும் தனியாக சுற்றிக் கொண்டிருப்பதும், அவரைக் கொல்ல அவருடைய எதிரி பாபு ஆண்டனி திணறிக் கொண்டிருப்பதும் படத்தில் தனியாகக் 'காமெடி' காட்சிகள் இல்லாததை நிவர்த்தி செய்கின்றன. பெரிய தாதாவாகக் காட்டப்படும் 'ஆதி' ஜெயம் ரவியை, மும்பை தாதாவான 'பகவான்' ஜெயம் ரவி சுலபமாக வலையில் விழ வைப்பதில், மும்பை தாதாதான் பெரிய ஆள் என்று நினைத்தால், திரும்பவும் பகவானை, ஆதி சுலபமாக வீழ்த்துவது நம்பும்படி இல்லை.

நீண்ட இடைவேளைக்குப் பின்(பருத்தி வீரன்) இப்படத்தை இயக்கியிருக்கும் அமீர், இதுபோன்ற ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆதி பகவன் - பாதி பகவன்

2 comments:

  1. //நீண்ட இடைவேளைக்குப் பின்(பருத்தி வீரன்) //யோகி அமீர் படம் தானே

    ReplyDelete
    Replies
    1. யோகி படத்தோட இயக்குனர் 'சுப்ரமணியம் சிவா'.

      Delete