Sunday, February 10, 2013

கடல் - திரை விமர்சனம்




கிறித்துவ ஆசிரியப் பள்ளியின் ஆசிரியர்களாக இருக்கும் அரவிந்த்சாமி மிகவும் ஒழுக்கமானவர். அர்ஜீன் அவருக்கு நேர் எதிரானவர். அர்ஜீன் செய்த  தவறைச் சுட்டிக்காட்டி,  அவரை பள்ளியிலிருந்து அரவிந்த்சாமி வெளியேறச் செய்கிறார். அதற்கு அர்ஜீன் அவரை பழிவாங்க முயற்சிப்பதுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடல்' படத்தின் கதை.

இப்படத்தின் கதை, திரைக்கதை(மணிரத்னத்துடன் இணைந்து), வசனத்தை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவருடைய சமீபத்திய சாதாரண நாவல்களான அனல்காற்று, இரவு, உலோகம் போன்றவற்றில் தன்னுடைய வார்த்தை ஜாலத்தின் மூலம் இலக்கியமாக காட்ட முயற்சித்திருப்பார். அதேபோல் காலம்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும்(அண்ணன் தம்பியில் அண்ணன் நல்லவன்; தம்பி கெட்டவன், இரண்டு நண்பர்களில் ஒருவன் நல்லவன்;மற்றொருவன் கெட்டவன்) அரதப் பழசான கதையை தேவன், சாத்தான் என்று முலாம் பூசி பெரும் 'அறத்துடன்' வித்தியாசமான கதை போன்று கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் சிறு வயது எபிசோடும், மீனவ மக்களின் பின்னணியைச் சொல்லும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் அற்புதம். கடலை அதன் அத்தனை பிரம்மாண்டத்தோடு அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அனாதை போன்று இருக்கும் கவுதம் சிறு வயதில் பொறுக்கிபோல் சுற்றிக் கொண்டிருப்பதும், அரவிந்த் சாமியின் வருகைக்குப் பிறகு நல்ல இளைஞனாக வாழ்ந்து கொண்டிருப்பது, துளசி மேல் ஏற்படும் காதல் என்று படத்தின் முதல் பாதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் வசனங்களும் பல இடங்களில் பலே(ஏன் பார்க்க வந்திருக்கீங்க;பார்க்காம இருக்க முடியலை, என்ன தொழில் செய்றவங்கன்னு தெரியாது; கெட்ட தொழில் செஞ்சா நானும் செய்வேன்)இரண்டாம் பாதியின் இறுதியில்தான்  'கொஞ்சம்'சொதப்பியிருக்கிறார்கள்'. க்ளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம்; க்ளாமாக்ஸ் ஃபைட்டிற்கு ரஹ்மானின் இசையும் பொருந்தவே இல்லை. அதுவும் அர்ஜீன் தோற்ற பிறகு கவுதம், துளசியிடம் சென்று பேசிக் கொண்டிருக்கும் கடைசி 10 நிமிடக் காட்சிகளைத் தாரளமாக‌ வெட்டியிருக்கலாம்

கவுதம் கார்த்திக் முதல் படம் போலவே இல்லாமல் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். துளசியின் 'முகம்' கூட '15' வயது பெண் போல் இல்லை. துளசியின் நடிப்பைப் பார்த்த பின் மணிரத்னம் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து, அவருக்குக் 'கொஞ்சம்' மனநிலை சரியில்லாதவர் போல் மாற்றிவிட்டாரோ என்று தோன்றுகிறது. அர்ஜீன், அரவிந்த்சாமியின் நடிப்பு கனகச்சிதம். 'கண்ணோடு காண்பெதெல்லாம்' படத்திற்குப் பின் அர்ஜீன் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னத்னம் படங்களில் குறைவாகப் பேசுவார்கள். நமக்கு கொஞ்சம் புரியாது. இந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களும் அதிகமாகவே பேசுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் புரியவில்லை. கவுதம் போன்றே அர்ஜீனின் பழைய வாழ்க்கைதான் அவர் சாத்தானாக மாறக் காரணம் என்று தெரிகிறது. அதனால்தான் கவுதமைப் பார்த்தவுடன், அர்ஜீன் அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். ஒரு முறை அர்ஜீனால் அவமானப்பட்டு, சிறைக்கு சென்று வந்ததற்கே அரவிந்த்சாமி கடைசியில் அர்ஜீனைக் கொல்ல முயற்சிக்கிறார். அப்படி இருக்கையில் அரவிந்த்சாமியைத் தேவன் போன்று காட்டுவதும் ,அர்ஜீனைச் சாத்தான் போன்று சித்தரிப்பதும் பொருந்தாதது போன்று இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை வேறு ஏதாவது இயக்குனர்கள் இயக்கியிருந்தால், படம் மிகவும் 'மொக்கை'யாக இருந்திருக்கும். உண்மையிலேயே மணிரத்னம் இயக்கியிருப்பதால்தான் படம் ஓரளவிற்கு பார்க்கும்படி இருப்பதாகத் தோன்றுகிறது. மணிரத்னம் செய்த ஒரே தவறு இந்தக் 'கதை'யைத் தேர்வு செய்ததுதான். நல்ல இலக்கியங்களால் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் இலக்கியவாதிகளால் அல்ல‌.

கடல் - முதல் பாதி தேவன்; இரண்டாம் பாதி சாத்தான்.

No comments:

Post a Comment