Thursday, January 31, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்


ஒரு இடத்தில் குண்டு வெடிக்கும்போது, பொதுவாக எல்லா மதத்தைத் சேர்ந்த அப்பாவிகளும் பலியாகின்றனர். அப்படி அமெரிக்காவில் வைக்கப்படும் குண்டை, முஸ்லீமான கமல், இந்துவான ஆண்ட்ரியா, கிறித்தவரான ஒரு வெள்ளைக்காரர் அனைவரும் சேர்ந்து எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் கமல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் கதை.

கதக் டான்ஸராக மனைவி பூஜாவோடு கமல் வாழ்ந்து வருகிறார். வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும் பூஜாவிற்கு, கமலிடம் ஏதாவது தப்பு இருந்தால், அவரை விவாகரத்து செய்வது எளிதாக இருக்கும் என்று, துப்பறியும் நிபுணர் உதவியோடு கமலைப் பின் தொடரச் செய்கிறார். அப்போது, கமலின் உண்மையான ரூபம் வெளிவருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை ஆஃப்கான் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் முழுத்திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆஃப்கான்,அமெரிக்கா பின்னணியில் வரும் காட்சிகள் ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கலாம். கமல் முகத்திற்கு எந்த வேடமானாலும் நன்றாகப்  பொருந்துகிறது. நீ முஸ்லிமா என்று கமலிடம் கேட்கும் போது, கமல் காட்டும் முகபாவனையும், கதக் டான்ஸராக அவருடைய உடல்மொழியும் அருமை. அதேபோல், கமலை ஃபோட்டோ எடுக்கும்போது, ஃபோட்டாவில் தன் முகம் சரியாக வரக்கூடாது என்று வேண்டுமென்றே அவர் அடிவாங்குவது டைரக்டர் டச். படத்தின் வசனங்களும் பல இடங்களில் பளிச்(உதா: கஷ்மீரிங்கிற பேரை இன்னும் ஏன் வைச்சுக்கிட்டிருக்கிற? அப்பா விவாகரத்துப் பண்ணிட்டுப் போயிட்டாரு, அம்மா மானத்துக்காக பேரை இன்னும் வைச்சுக்கிட்டுருக்காங்க).கமல் தன் ரூபத்தைக் காட்டும் காட்சி, அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.அதேபோல், இடைவேளைக்கு முன்பு வரும், அமெரிக்க, ஆஃப்கான் சண்டைக் காட்சிகளிலும் பிரம்ம்மாண்டம்.

ஆனாலும், படம் ஆரம்பத்திலும்,இடைவேளைக்குப் பின்பும், பல இடங்களில் மெதுவாக நகருகிறது. விருமாண்டி படத்தில் பசுபதி தன் கதையை அவருடைய கோணத்தில் சொல்லும்போது, நம்மிடம் பல கேள்விகள் இருக்கும். பின்பு, கமல் அவருடைய கதையை சொல்லும்போது, நம்முடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதேபோல் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தின் போதுதான், இப்படத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்குமோ என்னமோ! படத்தின் க்ளைமாக்ஸும் கொஞ்சம் ஏமாற்றமே!

முழுமையான ஹாலிவுட் படமாகவும் இல்லாமல், தமிழ் மசாலாப் படமாகவும் இல்லாமல் இருப்பதுதான் படத்தின் பலமாகவும், பலவீனமாகவும் உள்ளது. படம் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால், நல்லா இருந்திருக்கலாம்!

விஸ்வரூபம் - Viswaரூபம்.

2 comments: