Monday, December 10, 2012

கமல் விஸ்வரூபம் படத்தை DTH-ல் வெளியிடுவது சரியா?


கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை நேரடியாகப் படம் வெளியாகும் தினத்திற்கு முதல் நாள் இரவே 'DTH' ல் ஒளிபரப்புவதைப் பற்றிதான் பெரும்பாலான இடங்களில் இப்போது பேச்சு. தியேட்டர்காரர்களெல்லாம் இதை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்புவதால், திருட்டு விசிடியும் உடனடியாக வெளிவந்துவிடும் என்றொரு குற்றச்சாட்டு.இப்படத்தை நேரடியாக DTH'ல்  காட்டுவதன் மூலம்,படத்தின் தயாரிப்பாளரான‌ கமலுக்கு என்னென்ன நன்மை என்பதைப் பார்ப்போம்

1. தியேட்டர் டிக்கெட் அதிகம் என்று நினைப்பவர்கள்,  ஒரு வாரம் கழித்து திருட்டு விசிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள், இப்போது காசு கொடுத்து DTH-ல் பார்க்கலாம். இந்தக் காசு படத்தின் தயாரிப்பாளருக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பு
2. தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. புதிதாக ரிலீசானப் படங்களைப் பார்க்க, 50 கி.மீட்டர்கள் இதற்காகவே பயணம் செய்ய வேண்டியவர்கள், பெரும்பாலான நேரங்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை. ஒரு வாரத்திற்குள்ளாகவே திருட்டு விசிடி கிடைத்து விடுவதால், அவர்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பதுற்குப் பதில், எப்படியாயினும் திருட்டு விசிடியில்தான் பார்ப்பார்கள். அவர்களில் சில பேர் DTH-ல் பார்ப்பதன் மூலம்,அந்தக் காசு தயாரிப்பாளருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு.எத்தனையோ சிறு முதலீட்டுப் படங்கள், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. சிறு முதலீட்டுப் படங்களுக்கெல்லாம்  இனிவரும் காலங்களில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.
3. கமலின் தீவிர ரசிகர்களில் சிலர்,  DTH-ல் பார்த்து, அதன் பின் தியேட்டர்களுக்கும் சென்று பார்க்கலாம்
4. தமிழ் படங்கள், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுள்ள எல்லா ஊர்களிலும் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. காஷ்மீரிலோ, ஒடிஷாவிலோ இல்லை வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களெல்லாம், தியேட்டருக்கு சென்று தமிழ் படங்கள் பார்க்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும். அவர்களுக்கெல்லாம் இப்போதைய ஒரே வழி,திருட்டு விசிடிதான். இப்போது, DTH-ல் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தக் கூடும்.
5. தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் நிலையில்லாதவர்கள், பயணம் செய்ய இயலாதவர்கள், வயதானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடும்.

இதேபோல் இன்னும் பலரும், DTH-ல் படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் மூலமாக வேறு யாருக்கோ செல்லும் பணம், இப்போது தயாரிப்பாளருக்கே நேரிடையாகக் கிடைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

படத்தை DTH-ல் நேரடியாக ரிலிஸ் செய்வதால், தியேட்டர்காரர்கள் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்று அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு:

1. படம் வெளிவருவ‌தன் முன்பே, DTH-ல் ஒளிபரப்புவதால், படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துவிடும்.படம் நன்றாக இல்லாத பட்சத்தில், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிடும்.

தமிழ்படங்கள் உலக அளவில் ரிலிஸ் செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போதும், தமிழ்நாட்டில் முதல்காட்சி ஒளிபரப்புவதற்கு முன்னரே, வெளிநாடுகளில் படம்பார்க்கும் ரசிகர்கள் மூலம், படத்தின் ரிசல்ட் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. DTH-ல் ஒளிபரப்புவதன் மூலம் புதிதாக ஒன்றும் படத்தின் ரிசல்ட் தெரியப்போவதில்லை.  இதைவிட, சில படங்கள், பொதுவாக மற்ற தியேட்டர்களில் திரையிடுவதன் முன்னரே,  Premier show என்ற பெயரில் முதல் நாள் இரவோ அல்லது அதிகாலைக் காட்சி அதிக விலை வைத்தோ திரையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் மற்ற திரையரங்க அதிபர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த‌தது ஏனோ?

2. DTH-ல் படம்பார்த்துவிடுவதால், தியேட்டருக்கு வந்து பார்க்கும் மக்கள் குறைந்து விடுவார்கள்.

DTH-ல் படம் பார்க்கப் போகும் மக்கள் மிக மிக குறைவான சதவீதம் பேர். மேலும்,பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவார்கள். இப்போதெல்லாம் மக்கள் 3D படத்தை, அதற்கான வசதி இல்லாத சாதரண தியேட்டர்களில் பார்க்க விரும்புவதில்லை;3D வசதி இருக்கும் தியேட்டருக்கு சென்றே பார்க்க விருப்பப்படுகிறார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை, தியேட்டருக்கு சென்று பார்க்கத்தான் விரும்புவார்கள். தியேட்டரில் ஏற்கெனவே ஒளிபரப்பான படத்தைத்தான் இப்போது டி.வி யில் போடுகிறார்கள். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், மக்களெல்லாம் மறுபடியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்கள் குறைவாக வந்தால், அது படத்தின் தயாரிப்பாளரையும்தான் பாதிக்கும். அதனால், கமலும் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதைத்தான் விரும்புவார்.

3. DTH-ல் ஒளிபரப்புவதன் மூலம், திருட்டு விசிடி வெளிவந்துவிடும்.

திடீரென்று தியேட்டர் அதிபர்களெல்லாம், திருட்டு விசிடியைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக‌ இருக்கிறது, பெரும்பாலான படங்களின் திருட்டு விசிடி, தியேட்டர் அதிபர்களின் ஆதரவு இல்லாமல் வெளிவரும் வாய்ப்பு குறைவு. இப்போது விஸ்வரூபம் படத்திற்கெதிராக இவர்கள் காட்டும் ஒற்றுமையை, திருட்டு விசிடியை எதிர்த்தும் முன்பே இவர்கள் காட்டியிருக்கலாம். இவர்கள் மட்டும், திருட்டு விசிடியை ஒழிக்கும் வரை, தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று ஒரு வாரம் தியேட்டர்களை மூடியிருந்தால், திருட்டு விசிடி பிரச்சனை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். திருட்டு விசிடி வெளிவருவதை விட, அது தெருவுக்கு தெரு எல்லா இடங்களிலும் கிடைப்பதுதான் பிரச்சனை. குறைந்தபட்சம், அப்படி அனைத்து இடங்களிலும் கிடைக்காமலாவது இருந்திருக்கும். அப்போதெல்லாம், இது தயாரிப்பாளர்களின் பிரச்சனை என்று இருந்துவிட்டு, இப்போது, அதைப்பற்றி கூக்குரலிடுவது அநியாயம்.

4. மக்கள் எல்லோரும் நாளை, தியேட்டரை விட DTH-ல் படம் பார்க்க முன்னுரிமை குடுப்பார்கள்.

அப்படி நடந்தால், அதற்கு காரணமும் தியேட்டர்களாகத்தான் இருக்கும். பெரும்பாலான தியேட்ர்களில், அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலையை விட அதிக விலையில் டிக்கெட் விற்பது. எவ்வளவோ புது புது டெக்னாலஜி வந்த போதும், தியேட்டரை 10 வருடங்களுக்கும் மேலாக மராமத்து பண்ணாமல் இருப்பது, கேன்டினில் அதிக விலை வைத்து பொருட்களை விற்பது, பார்க்கிங்கில் கொள்ளை போன்றவைகளால்தான் மக்கள் நாளை தியேட்டர்களுக்கே வராமல் போகலாம். இப்போதும் சத்யம் போன்ற தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் மட்டமான படத்திற்கும் கூட்டம் இருப்பது, தியேட்டர் நன்றாக இருப்பதால்தான். பொதுவாக திருட்டு விசிடிகளில் தரம் அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்குக் காரணம் டெக்னாலஜி மட்டுமல்ல. பெரும்பாலான தியேட்டர்களிலேயே திரையில் படம் அப்படித்தான் இருக்கும். அதிலிருந்து எடுக்கும் திருட்டு விசிடியில் மட்டும் தரம் வேறு எப்படி இருக்கும்?

எப்படி பார்த்தாலும், தியேட்டர் அதிபர்கள் சொல்வதெல்லாம் அநியாயமாகத்தான் இருக்கிறது. படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு, தன்னுடைய படத்தை எந்த வழிகளிலெல்லாம் வெளியிட்டு பணம் சம்பாதிக்க முடியுமென்று பார்த்து, அவ்வழிகளில் பணம் ஈட்டுவதற்கான உரிமை உள்ளது, புத்தகங்களெல்லாம் இன்றைய காலகட்டத்தில் இ-புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்காக, புத்தகக் கடை வைத்திருப்பவர்களெல்லாம், இ-புத்தகமாக வெளிவந்தால் எப்படி எங்களிடம் இருக்கும் புத்தகங்கள் விற்கும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் புத்தகம் கொடுக்கும் அனுபவத்தை இ-புத்தகம் கொடுக்க முடியாது. இ-புத்தகம் என்பது புத்தகம் கிடைக்க வழியில்லாதவர்களுக்குதான். தியேட்டர் அதிபர்கள் எழுப்பும் பிரச்சனையால் கிடைத்திருக்கும் ஒரே இலாபம் விஸ்வரூபம் படதிற்கு, கமல் பெரிதாக செலவு பண்ணாமலேயே கிடைத்திருக்கும் விளம்பரம்தான், அதேபோல், விஸ்வரூபம் படம் நன்றாக வந்திருப்பதனாலேயே, கமல் DTH-ல் படத்தை முதலிலேயே வெளிவிடலாம் என்று முடிவு பண்ணியிருப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இதேபோல் நன்றாக இருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையிலேயே பார்க்கத் தகுந்தவை. அதனால், DTH-ல் படம் பார்ப்பவர்களும், மறுபடியும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்றே தோன்றுகிறது. DTH-ல் படம் வெளிவரும் முன்னரே ஒளிபரப்புவது போன்று, பணம் கட்டி 'Youtube'  போன்ற தளங்களிலும் கமல் இப்படத்தைத் திரையிட செய்ய‌லாம் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment