Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்

அமெரிக்கக் கதாபாத்திரமான 'பேட்மேனை'யும் சீனக் கலையான 'குங்ஃபூ' வையும் கிண்டி மிஷ்கின் கொடுத்திருக்கும் நூடுல்ஸ்தான் ஜீவா,நரேன் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'முகமூடி' படத்தின் கதை.

குங்ஃபூ கற்றுக்கொண்டு வேலை வெட்டி எதுவுமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவாவிற்கு, சென்னை நகரத்தில் நடக்கும் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் போலிஸ் ஆஃபிஸரான நாசர் பெண் பூஜாவைப் பார்த்தவுடன் காதல். காதலுக்காக தன் முகத்தை மறைக்க ஆரம்பிக்கும் ஜீவா,அதன் பின் முகத்தை மறைத்துக் கொண்டே எப்படி கொள்ளைக் கூட்டத்தை பிடிக்கிறார் என்று பேட்மேனை அழகாகத் தமிழ்படுத்தியிருக்கிறார் மிஷ்கின்.

தன்னுடைய‌ மாஸ்டரை அவமானப்படுத்தியவனை அடிக்க‌ முகத்தை மறைக்கும் ஜீவா, அதன் பின் காதலியை சந்திப்பதற்காக முகத்தை மறைக்கத் தொடங்குவதும், அதன் பின் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிப்பதற்காக முகத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு படிப்படியாக பேட்மேனாவதை, தன் இயல்பான திரைக் கதையால் அழகாகக் காட்சிப்படுத்தியிருகிறார் இயக்குனர்.அமெரிக்காவில் இருப்பதுபோல் உயரமான கட்டிடங்கள் இல்லாவிட்டாலும்,சென்னையின் இரவில் நட‌க்கும் சேஸிங் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. முகமூடி வேடத்திற்கு ஜீவா கச்சிதமாகப் பொருந்துகிறார்.படத்தில் இரண்டே பாடல்கள்தான். பார் பாடலில் வரும் பலதரப்பட்ட மனிதர்களும்(மஞ்சள் தேவதை மிஸ்ஸிங்), வாயை மூடி சும்மா இருடா பாடலில் வரும் லொக்கேஷன்களும் ; உலகமே சோத்துக்காகத்தான் வாழுது, சில பேர்தான் அதையும் தாண்டி வாழ்றாங்க போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. 'கே' யின் பாடல்களும்,பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலம்

பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் அப்படியே 'சித்திரம் பேசுதடி' பாவனா போல்தான் இருக்கிறது. ஜீவாவிற்கு பூஜாவின் மேல் வரும் காதலிலும் பெரிதாக உயிர்ப்பில்லை.பேட்மேன்,ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் ,அயர்ன் மேன் என்று நரேன்'அசால்ட்டாக' நடந்து வருவ‌தும், அவருடைய பாடி லாங்வேஜும் கொஞ்சம் செயற்கையாக இருக்கின்றன. அதேபோல் நரேன் கொள்ளையடிப்பதிலாகட்டும்,போஃலிஸ் அவரைப் பின் தொடர்வதிலாகட்டும் கொஞ்சம் கூட புத்திசாலித்தனமான காட்சிகள் இல்லை.

குங்ஃபூ தெரிந்த நரேன் அதை தப்பான வழியில் உபயோகிப்பதும், அதையே ஜீவா நல்ல விசயத்திற்காகப் பயன்படுத்துவதும் தான் படத்தின் அடிநாதக் கருத்தாக இருக்கிறது.

முகமூடி - பேட்மேன் பார்த்தவர்களுக்கு முகமூடி பிடிக்கலாம்; பார்க்காதவர்களுக்குப் பிடிக்கும்

3 comments:

  1. நல்ல விமர்சனம் அன்பரே

    ReplyDelete
  2. நன்றி பிரேம்குமார்!

    ReplyDelete
  3. படம் ஒருமுறை பார்க்கலாம்

    ReplyDelete