Friday, January 28, 2011

ஆடுகளம்-திரை விமர்சனம்


சேவல்களுக்கிடையே வன்முறை,குரூரம் போன்றவற்றை உருவாக்குவதில் தேர்ந்தவனான ஒருவன்,அதே பகை,வன்முறை போன்றவற்றை மனிதர்களுடையே உருவாக்கும்போது என்ன நேர்கிறது என்பதுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ஆடுகளம்' படத்தின் கதை.

சேவல் வளர்ப்பின் நுணுக்கங்களை 'பேட்டைக்காரன்' தன்னுடைய சிஷ்யர்களான கிஷோர்,தனுஷிற்கு சொல்லிக்கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தனுஷ் பேட்டைக்காரனை விடவும் அதில் நிபுணத்துவம் பெற நேர்கையில் என்ன நடக்கிறது என்பதை மதுரை மண்ணின் உக்கிரத்துடனுடம்,நாட்டுக் கோழியின் சுவையுடனும் படமாக்கியிருக்கிறார்கள்.

தனுஷிற்கும்,தபஸிற்கும்(பேர் பொருத்தமே நன்றாக இருக்கிறது) நடுவில் வரும் காதல் நன்றாக இருந்தாலும்,தபஸிக்கு தனுஷ் மேல் உடனே காதல் வருவது செயற்கையாக உள்ளது. தபஸியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் தனுஷாக மாற ஆரம்பித்து விடுகிறோம்.

தனுஷ் சில இடங்களில் மதுரை பாஷையில் கொஞ்சம் திணறினாலும், நடிப்பில் வெளுத்திக் கட்டியிருக்கிறார். அதுவும் சில காட்சிகளில் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் நடித்திருப்பது,அவர் எவ்வளவு தூரம் அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.தபஸி அவரைக் காதலிக்கவில்லை என்று சொல்லும்போது,அவர் தபஸியுடன் கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையையும்,முதல் குழந்தைக்கு நாம் மொட்டை போடும்போது நீ சேலையில் இருக்கிறாய் என்று சொல்வதும் அருமை. படத்தில் நடித்திருக்கும் அனைவருமே மிகவும் நன்றாக நடித்திருக்கின்றனர்.இடைவேளையின் போது வரும் சேவல் சண்டையும், கிளைமாக்ஸில் தனுஷும்,கிஷோரும் சேவல்கள் போன்று உக்கிரமாக சண்டையிடுவதும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை சில இடங்களில் 'ஓவர்' டோஸாக தெரிந்தாலும் பல இடங்களில் மிகவும் நன்றாக வந்திருப்பதும் உண்மை;யாத்தே யாத்தே பாடல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலமே,அந்தந்த கேரக்டர்கள் பேசும் வசனங்கள்.தனுஷின் அம்மா இறந்தவுடன் அவர் சொல்லும் "இவ்வளவு சின்ன வீட்டிலேயே எங்கம்மா ஞாபகம் எனக்கு இவ்வளவு இருக்கையில்,காரை வீட்டில் எங்கப்பாவுடன் அம்மா வாழ்ந்த வாழ்க்கை அவருக்கு எவ்வளவு தூரம் ஞாபகத்தில் இருந்திருக்கும்" என்பதும், "உன்கூட வருகின்ற பெண்தான் நாம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் போகின்றோமென்பதை முடிவு பண்ணுபவள்" , குறிப்பாக தனுஷ் கிளைமாக்ஸில் பேட்டைக்காரனிடம் சொல்லும் 'நீங்க சாகுடான்னு நானே செத்திருப்பேன்' என்பது கச்சிதம். அதேபோல் பேட்டைக்காரன் தன்னுடைய மனைவியை பிரிந்திருக்கையில் அவர்,தனுஷை தபஸியுடன் பார்க்கையில் பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஜெயபாலனின் உணர்ச்சிகள் அழகு.

ஆடுகளம்-சொல்லி ஆடியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment