Wednesday, July 28, 2010

ஊசி இதழ் காதல்

தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த என்னை கவலையோடு பார்த்தார்கள் அம்மா. "ஆஸ்பத்திரிக்குப் போகலாமா?" என்று அம்மா கேட்டவுடன் உடனே சந்தோஷமாகத் தலையசைத்தேன்."வா! கணபதி டாக்டரிடம் செல்லலாம்,அவர் ஊசி போட்டால் உடனே சரியாகிவிடும்" என்று சொன்ன அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,நாம் புருஷோத்தமிடமே செல்லலாம். அவர் ஊசி போட்டால்தான் எனக்கு 'உடனே' சரியாகி விடுகிறது என்றவனை பரிதாபமாகப் பார்த்தார்கள் அம்மா.

எங்கள் ஊரில் டாக்டர் புருஷோத்தமைப் பார்த்தாலே அனைத்து குழந்தைகளும் பயந்து அழுவார்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க எங்கள் ஊரில் உள்ள எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் ஆயுதம் அவர் ஒருவர்தான்.அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ஊசி. மற்ற மருத்துவர்கள் எல்லாம் 5 சென்டிமீட்டரில் ஊசி வைத்திருந்தால் அவர் பயன்படுத்தும் ஊசி மட்டும் முழு அடி ஸ்கேல் அளவிற்கு இருக்கும். வெட்டினரி டாக்டர்களிடம் இருக்கும் இரக்கம் கூட ஊசி போடும்போது அவரிடம் கொஞ்ச‌ம் கூட‌ இருக்காது.அந்த ஊரிலே அவரிடம் ஊசி போட சந்தோஷமாக செல்லும் ஒரே ஆள் நான்தான்.

நான் அப்போது ஆறாவது 'பி பிரிவு படித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் ஆறாவது 'ஏ' பிரிவு படித்துக் கொண்டிருந்த பிரியாதான் என் வாழ்க்கையை அப்போது மிகவும் சுவாரசியப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தாலும், அவளை தினமும் பார்க்கும் பாக்கியம் மட்டுமே,பள்ளிக்கு செல்லும் என் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருந்தது. அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லையென்றாலும், என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் ஒரு புறம் உதட்டசைத்து சிரிக்கும் சிரிப்பு,எனக்காகவே அவள் பிரத்யோகமாகக் கண்டுபிடித்தது போலிருக்கும்.அவளுடைய அப்பாதான் டாக்டர் புருஷோத்தம்.

அவரின் கிளினிக் அவருடைய வீட்டின் ஒரு ப‌குதியிலேயே இருப்ப‌தால்,அவரின் ஆஸ்ப‌த்திரிக்கு எப்போது சென்றாலும் அவ‌ளையும்,எனக்கான அவ‌ளின் பிரத்யோக சிரிப்பையும் தரிசித்து விட‌லாம்.அவ‌ரின் கிளினிக்கிற்கு நானும் அம்மாவும் சென்ற‌போழுது அவ‌ள் நோட்டில் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.பள்ளிக்கூடத்தில் ஸ்கூல் யூனிபாஃர்மில் பார்ப்பதையும் விட அவள் வீட்டில் அணிந்திருந்த கலர் பாவாடை சட்டையில் வண்ணத்துப் பூச்சி போல் இருந்தாள்.காற்றில் இரு புறமும் அசையும் முடி வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை நினைவூட்டியது.என்னைப் பார்த்து விட்டு அவள் சிந்திய‌ எனக்கான பிர‌த்யோக சிரிப்பிலேயே காய்ச்ச‌ல் பாதியாய் குறைந்த‌து போலிருந்தது. ஒரு அடி ஸ்கேல் ஊசியை எடுத்துக் கொண்டே டாக்ட‌ர் அவருக்கே கூட புரியாத ஒரு ஜோக்கைக் கூறியவாறு எனக்கு ஊசி போட்டார்.ஊசியினால் ஏற்பட்ட வ‌லி என்னிட‌மிருந்து அம்மாவின் க‌ண்களுக்கு மாறியிருந்தது.

ப‌த்தாவ‌து வ‌ரை நாங்க‌ள் இருவ‌ரும் ஒன்றாக‌வே ப‌டித்து வ‌ந்திருந்தாலும் பிரியாவிட‌ம் ஏனோ பேச‌வே தோன்றிய‌தில்லை;பேசுவ‌தற்கான வாய்ப்பும் கிடைக்க‌வே இல்லை.அத‌ன் பிறகு வெளியூருக்குப் படிக்க செல்லும் சூழ்நிலை வந்த‌போது அவளை விட்டுப் பிரிவதுதான் அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.அம்மாதான் அது பற்றி ஏதும் அறியாமல் அடிக்கடி வந்து ஹாஸ்டலில் என்னைப் பார்ப்பதாக ஆறுதலளித்துக் கொண்டிருந்தாள்.அடிக்க‌டி ஹாஸ்ட‌லிலிருந்து ஊருக்கு ஓடி வ‌ரும் என்னைப் பார்த்து விட்டு, ஹாஸ்ட‌லில் ச‌மைக்கும் ச‌மைய‌ல்கார‌ர்களையும் திட்டிக் கொண்டிருந்தார்க‌ள்.

பிரியாவும்,நானும் வெவ்வேறு ஊர்க‌ளுக்குப் ப‌டிக்க‌ சென்றதால் இத்துட‌ன் அவளைப் பார்த்து ஏழு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌து.அவ‌ளைத் தாவ‌ணியில் தரிசிக்கும் பாக்கிய‌ம் கிடைக்காத‌தை நினைத்து மிக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து.ஆறு மாதங்க‌ளுக்குப் பிறகு ஊருக்குள் வ‌ந்த எனக்கு ப‌ய‌ணக் க‌ளைப்பினாலோ அல்ல‌து ஊரில் தொட‌ர்ந்து பெய்து கொண்டிருந்திருந்த ம‌ழையினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ காய்ச்ச‌லும் வ‌ந்திருந்தது.

ரொம்ப வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு டாக்ட‌ர் புருஷோத்த‌மைப் பார்ப்ப‌த‌ற்காக ச‌ந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.ஆடி மாதத்து சாரல் மழை வேறு குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் நீர் போன்று விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.நான் கிளம்பியதைப் பார்ப்பவர்கள் எவரும் எனக்கு காய்ச்சல் இருப்பதாகவே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.அவ‌ளுடைய அழகான இதழ்கள் வேறு எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.அவளுடைய இதழ்கள் அவ்வளவு மென்மையாக,மிருதுவாக சற்று முன் பெய்த மழைத் துளிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரோஜாப் பூவைப் போன்று எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்கும்.அவள் இதழ்களைப் பார்த்துவிட்டு ரோஜாப் பூவைப் பார்த்தால்,ரோஜாப் பூ ஒன்றும் அவ்வளவு அழகாகத் தெரியாது.அவளும் அவளின் இதழ்களும் இப்போது எப்ப‌டியிருக்கும் என்ற‌ நினைப்பே பேஷண்டைப் பார்த்த புருஷோத்தம் போன்று ச‌ந்தோஷம‌ளித்துக் கொண்டிருந்த‌து. இன்று பார்க்கையில் க‌ண்டிப்பாகப் பேசிவிட‌வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தேன்.

அவள் வீடு எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது.அவ‌ள் வீட்டு வாச‌லை அடைந்த‌துமே எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அன்று என்னுட‌ன் பேசினாள்.இப்போது நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டு விட்டு பின்னால் வ‌ந்து கொண்டிருந்த த‌ன் க‌ணவ‌னை அறிமுக‌ப்படுத்தினாள்.அதன் பின் காய்ச்சலினாலே என்னவோ அவர்கள் இருவரிடமும் என்னால் சரியாகப் பேச முடியவில்லை.அன்று டாக்ட‌ர் புருஷோத்தம் போட்ட ஊசி வாழ்க்கையில் முதல் முறையாக என‌க்கு வ‌லித்தது.சார‌ல் மழையும் வானத்திலிருந்து என் க‌ண்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் இட‌ம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த‌து.

11 comments:

  1. சில வார்த்தை பிரயோகங்கள் புருவம் உயர்த்தி புன்னகைக்க வைத்தது. சிறப்பு.

    அது சரி சார், எப்படி நீங்களும் நானும் ஒரே மாதிரி TEMPLATE வைத்திருக்கிறோம். நான் மாற்றம் செய்யும் போது நீங்களும் அதே போல மாற்றீ இருக்கீறீர்கள்.
    என்ன ஒரு CO-INCIDENT. நமக்குள் எதோ இருக்கிறது.

    மனோ

    ReplyDelete
  2. முடிவு மட்டும் சற்றே யூகிக்க முடிந்தது.ஆனால் வர்ணனைகள் நன்றாக இருந்தது. ஒரே மூச்சில் படிக்க வைத்த கதையோட்டம் அருமை.

    ReplyDelete
  3. இந்த பொண்ணுங்களே இப்படித் தான் பாஸ் ...

    ReplyDelete
  4. பால்ய நினைவுகள் எப்போதுமே சுகமானது.
    அதன் நினைவுகளே நம்மை வாழ்க்கையில் நகர்த்தி செல்கிறது.
    கதை ஆரம்பித்த விதமும் அதை முடித்த விதமும் கலக்கல்.
    பதிவின் தலைப்பே எனக்கு புதிய அனுபவத்தை ஏற்ப்படுத்தியது.
    காத்திருக்கிறேன் இது போன்ற இன்னும் பல பதிவுகளுக்காக !.

    ReplyDelete
  5. @ MANO!

    கருத்துக்கு நன்றி மனோ. Blog Template மாற்றியது ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்த விசயம் :-)

    ReplyDelete
  6. @ பின்னோக்கி!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  7. @ நியோ!

    ஆமாம்...முழுவதுமாய் உடன்படுகிறேன் நியோ :-)

    ReplyDelete
  8. @ கா.பழனியப்பன் !

    பால்ய நினைவுகள் மட்டும்தான் சுகமானதோன்னு தோன்றுகிறது :‍-)

    ReplyDelete
  9. வார்த்தை பிரவாகம் நல்லாயிருக்குங்க...

    கதை நல்லாயிருக்கு. நீரோடை மாதிரி நிக்காக நகருது நினைவுகள்...

    ReplyDelete
  10. @ ஜீவன்பென்னி!

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete