Saturday, March 16, 2013

பரதேசி - திரை விமர்சனம்


பெரிதாக காசு ஏதுமில்லையென்றாலும் சொந்த ஊரில் சந்தோஷமாகவே இருக்கும் மக்கள், பஞ்சம் பிழைக்க வெளியூருக்கு சென்று, படும் அவலத்தை சொல்லும் படம்தான் பாலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'பரதேசி' படத்தின் கதை.

சாளூர் என்ற கிராமத்தில், சுதந்திரத்திற்கு முன் வாழும் கிராமத்து மக்களின் கொண்டாட்டமான வாழ்க்கையோடு படம் ஆரம்பிக்கிறது. ஊர் மக்களுக்கு 'தண்டோரா' போட்டு கல்யாணம், கருமாதி போன்றவற்றை சொல்பவராக அதர்வா. அதர்வாவும், வேதிகாவும் காதலிக்கிறார்கள்.  அதன்பின் உள்ளூரில் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால், வெளியூரில் வேலைக்கு சென்று படும் அவலத்தைக் கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கிறார்கள்.

பாலா தன்னுடைய முந்தைய படங்களில் இருந்த 'க்ளிஷே'வை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.(ஹீரோ, ஹீரோயினை 'லந்து' பண்ணிக்கொண்டே இருப்பது, படத்தின் க்ளைமாக்ஸில் மெயினான கேரக்டர் இறப்பது, சண்டைக்காட்சிகளில் மிக குரூரமாக அடிப்பது). அதேபோல் அவருடைய படங்களில் மிகக் கச்சிதமாக அமைந்த‌ திரைக்கதையும் இதுதான் என்று தோன்றுகிறது.  கல்யாணத்தன்று, ஊரில் ஒருவர்(விக்ரமாதித்யன்) இறந்துவிட,நெல்லுச் சோறு சாப்பிடுவதற்காக, ஊர் மக்கள் அனைவரும் அதை மறைப்பதிலேயே கிராமத்தின் வறுமையை அழகாகக் காட்டிவிடுகிறார்கள். அதனாலேயே கங்காணி ஆசை காட்டி, கிராம மக்களை எளிதாக அழைத்துச் செல்ல முடிகையில் நமக்கு எந்த கேள்வியும் எழுவதில்லை. 48 நாட்கள் நீளும் பயணத்தின் போது, ஒருவன் உயிருக்குப் போராடுவதும், அவனை அப்படியே விட்டுவிட்டு மக்கள் பயணத்தைத் தொடர்கையில், அவனின் விரல்கள் அவர்களை நோக்கி நீள்வது என்று படத்தின் பல காட்சிகள் படம் பார்ப்பவர்களை கலங்கடிக்கின்றன. அதர்வா, வேதிகா நினைவாக அவர் அனுப்பிய லெட்டரை எடுத்துப் பார்ப்பது க்ளாஸ். இத்தனை காலமும் தன்னுடைய மனைவியாவது குழந்தையுடன் ஊரில் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அதர்வா 'டீ எஸ்டேட்டில்' கஷ்டப்படுவதும், கடைசியில் அதர்வா வேதிகாவைப் பார்த்தவுடன் அழுவதும், அதர்வாவைப் பார்த்ததில் வேதிகா சந்தோஷப்படுவதும், பாலாவின் படங்களில் இதுதான் 'பெஸ்ட்' க்ளைமாக்ஸ் என்று தோன்றுகிறது.

எல்லா விதத்திலும் ஒரு டாக்குமென்டரி படம்போல் ஆகக் கூடிய விசயத்தை, மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் ஒரு திரைப்படமாக எடுத்திருப்பதே பாலாவின் வெற்றி என்று தோன்றுகிறது. அதேபோல்,படத்தின் ஆச்சரியப்படத்தக்க விசயம், இரண்டு மணி நேரப் படத்தில், பல விசயங்களை படத்தின் ஊடாகச் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்( தீண்டாமைப் பிரச்சனை, கல்யாணத்திற்கு முன் உறவு கொள்வது, பேஷன்ட் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், டாக்டர் அவரைக் காப்பாற்றாமல், கிறித்தவ மதத்தைப் பரப்புவதில் முனையாக இருப்பது,  அதர்வா விறகு வெட்டிப்போட்டு விட்டு, டீக்கடையில் காசு கிடைக்காமல் ஏமாற்றப்படுவது, காந்தி மேலான வெள்ளைக்காரர்களின் அபிப்ராயம்). பாலா படத்தில், படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

படத்தின் சில காட்சிகள் 'நான் கடவுளை' ஞாபகப்படுத்துவதும், படத்தில் அடுத்துவரும் காட்சிகள் எளிதாக ஊகிக்கக் கூடிய‌ அளவில் இருப்பதும் படத்தின் பலவீனம். ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை கொஞ்சம் பரவாயில்லை. செழியனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான 'மூடை'க் கொடுக்கிறது.

பொதுவாக பல பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அதிலிருந்து மூன்று மணி நேரமாவது விடுபடலாம் என்று சினிமாவுக்கு செல்வார்கள்.  திரைப்படங்களும் 'என்டெர்டைய்ன்' ஆக இருந்து, மக்களை 3 மணி நேரம் மட்டும் அவர்களுடைய பிரச்சனைகளை மறக்கச் செய்யும். பரதேசி போன்ற திரைப்படங்கள் பார்க்கையில், நமக்கு இருக்கும் பிரச்சனைகளெல்லாம் ஒன்றுமேயில்லை என்று படம் முடிந்தவுடன் தோன்ற செய்து, பிரச்சனைகளை மறக்கடிக்கும்.

பரதேசி - சக மனிதனை நேசி

2 comments:

  1. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் தல.
    எனக்கும் இன்னும் அந்த கிளைமாக்ஸ் மனதை விட்டு அகலவில்லை நண்பரே.

    எனது விமர்சனம் கீழே
    சமயம் இருந்தால் ஒரு முறை வந்து தங்கள் கருத்தை பதிவுசெய்யவும்.
    http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனமும் மிகவும் நன்றாக இருந்தது!

      Delete