
திருமண வாழ்க்கையை சந்தோஷமாகத் துவக்கும் நாயகனுக்கு,'180' நாட்கள்தான் அவனால் உயிர் வாழமுடியும் எனத் தெரிய வருகிறது.இந்நிலையில் அவனின் வாழ்வில் புதிதாக ஒரு பெண் வேறு நுழைகிறாள்.அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் '180' படத்தின் கதை.
மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் இளைஞன் வேடத்திற்கு சித்தார்த் கச்சிதமாகப் பொருந்துகிறார்.படத்தின் ஆரம்பத்தில் 'தீர்க்காயுசா' இருப்பா என்று வாழ்த்தும் சாமியாரைப் பார்க்கும் பார்வையிலும்,சிறுவன் மூலமாகத் தன் வாழ்க்கையை உணரும் தருணத்திலும்,தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி பின்பாதியில் வருந்தும் இடங்களிலும் சித்தார்த்தின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.இரு பெரு கண்களை(யும்) உடைய நித்யா மேனனை விட,பிரியா ஆனந்திற்குத்தான் 'ஸ்கோப்' அதிகம்.அவரும் அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
சித்தார்த்திற்கு அவர் மனைவி அருகில் இருக்கும்போது மட்டும்,கயிற்றுடன் ஒருவர் அவர் கண்களுக்கு மட்டும் தெரிவது நன்றாக இருக்கிறது.அதேபோல்,மனிதனின் உண்மையான சந்தோஷம் குழந்தைகளோடு இருக்கையில்தான் கிடைக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் இயக்குனர் 'ஜெயேந்திரா' வெற்றி பெற்றிருக்கிறார்.இரண்டாம் பாதியில் படம் மெதுவாகச் செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.இடைவேளைக்குப் பின் கதை எதை நோக்கி நகருகிறது என்பதையும் ஊகிக்க முடிகிறது.
படத்தின் மெயின் ஹீரோ 'பாலசுப்ரமணியத்தின்' காமெராதான்.அவர் காமெரா கண்கள் வழியாகத் தெரியும் காட்சிகள் அனைத்தும் அத்தனை துல்லியம்(சித்தார்த்தின் தலையில் இருக்கும் ஒரே ஒரு வெள்ளை முடி கூட துல்லியமாகத் தெரிகிறது).ஷரத்தின் இசையில் 'நியாயம் தானா' மற்றும் 'சிறு சிறு கனவுகள்' மனதை வருடுகின்றன.
180-முதல் பாதி இளமைத் துள்ளல்;இரண்டாம் பாதி உணர்ச்சிக் குவியல்