
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வேலைக்காக காத்திருக்கும் கார்த்தி,கஜல் அகர்வாலைக் காதலிக்கிறார்.காலேஜில் படித்துகொண்டே பெண்களைக் கடத்திக் கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு ரவுடி கும்பல் செய்த கொலைக்கு,கார்த்தியின் அப்பா சாட்சியாகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சாதாரண ஒரு கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையின் மூலம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.மனதில் உள்ளதை அப்படியே வெளிக்காட்டிக் கொள்ளும் கேரக்டர் கார்த்திக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது.கார்த்தி மற்றும் கஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.கார்த்தியின் சாயலை ஓரளவிற்கு கொண்டிருக்கும் ஜெய்ப்பிரகாஷ்,அப்பா வேடத்திற்கு நல்ல தேர்வு.படம் முழுவதும் ஆங்காங்கே வரும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள்.மானேஜரின் பைக்கை யாருக்கும் தெரியாமல் தூக்கிவிட்டு,கார்த்தி மறுபடியும் வேலையில் சேருவது சுவாரசியம். படம் ஆரம்பித்த இடத்திலேயே க்ளைமாக்ஸும் வருவது நன்றாக இருக்கிறது.வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்களும்,யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.(நல்ல மெலடியான 'ஒரு மாலை நேரம்' பாடலை படத்தில் வைத்திருந்திருக்கலாம்).
காலேஜ் மாணவர்கள் பெண்களைக் கடத்தும் காட்சிகள் 'வேட்டையாடு விளையாடு' படத்தையும் மற்ற சில காட்சிகள் ஷாம் நடித்த 'பாலா' படத்தையும் ஞாபகப்படுத்துகின்றன.மிகப் பெரிய தாதாவாக காட்டப்படுபவர் காலேஜ் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு சாகும் காட்சி நம்பும்படியாக இல்லை.இத்தனைக்கும் அந்த நேரத்தில் தாதாவின் கையில் செல்ஃபோன் வேறு இருக்கிறது.படத்தின் வில்லன்களாக லோக்கல் தாதா,கொலை மற்றும் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து தமிழ் சினிமா,கல்லூரி மாணவர்களிடம் வந்திருப்பது உறுத்தலாக இருக்கிறது.
ஆனாலும் கார்த்தி மாதிரி ஒரு நடிகரை வைத்துக்கொண்டு பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்,மிகவும் குறைந்த பட்ஜெட்டில்,அதிகமான சண்டைக் காட்சிகளோ,பாடல் காட்சிகளோ இல்லாமல் விறு விறுப்பான ஒரு படத்தைக் கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.
நான் மகான் அல்ல-கார்த்தி காட்டில் மழை.