
1)மிலிட்டரி ஆஃபிஸராக்கிப் பார்க்க நினைக்கும் தன் அம்மாவின் ஆசைக்கு எதிராக மியூசிக் பேண்ட் வைத்து பெரிய ஆளாகி விடலாம் என்று நினைத்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார் மனோஜ்.
2)ஏழையான அல்லு அர்ஜுன்,தான் பெரிய பணக்காரன் என்று பொய் சொல்லி ஒரு பணக்கார பெண்ணைக் காதலிக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பெரிய பார்ட்டி கொடுப்பதற்காக 40,000 ரூபாய் பணத்திற்காக யாரிடமிருந்தாவது நகையை திருடுவதற்காக ஹைதரபாத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.
3)வறுமையில் வாடும் சரண்யா கந்து வட்டிக் கொடுமையால்,பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த தன் பையனைப் பண முதலைகளிடம் கொத்து அடிமை போல் இழக்க நேரிடுகிறது. தன்னுடைய கிட்னியை விற்றுப் பையனை மீட்டு விடலாம் என்று கிராமத்திலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார்.
4)சார்ஜாவிற்கு மறுநாள் பயணப்பட இருக்கும் நிலையில்,போலிஸால்
முஸ்லிம் தீவிரவாதி என்று தப்பான முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் இருக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.
5)உள்ளூர் விபச்சார தொழிலில் பெரும் பணத்தை அந்த விடுதி முதலாளியே அபகரித்து விடுவதால்,தனியாக சென்று தொழில் செய்ய ஹைதரபாத்திற்கு செல்கிறார் அனுஷ்கா.
இவ்வாறு ஐந்து கிளைக் கதைகளும் ஒவ்வொரு புள்ளியில் பயணப்பட்டு, கடைசியில் அரசாங்க ஆஸ்பத்திரியில் சந்திக்க நேரிடுகிறது.அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'வேதம்' படத்தின் கதை.
இந்த மாதிரி ஒரு சிக்கலான திரைக்கதையை வைத்துக் கொண்டு படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனருக்கும்,மாஸ் ஹீரோ இமேஜை தூக்கி எறிந்து விட்டு இது போல் ஒரு கதையில் நடித்திருக்கும் அல்லு அர்ஜீனும் பாரட்டப்பட வேண்டியவர்களாகிறார்கள்.சில வருடங்களுக்கு முன் 'தாஜ் ஹோட்டலில்' நடந்த தீவிரவாத தாக்குதலைப் படத்தின் களனாகக் கொண்டு வந்திருப்பதில் டைரக்டரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
ஒவ்வொரு கிளைக்கதையும் ஒவ்வொரு விதமான பின்னணியைக் கொண்டிருப்பது நன்றாக இருக்கிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருக்கிறது.அனுஷ்கா பேசும் "மத்த வேலையில் அனுபவம் அதிகமாக இருந்தாத்தான் காசு அதிகமாகக் கிடைக்கும்.நம்ம வேலையில அனுபவம் குறைய குறையத்தான் காசு அதிகமாக கிடைக்கும்.அனுபவமே இல்லைனா இன்னும் அதிகமாக காசு கொடுப்பாங்க" என்பதாகட்டும்;மனோஜ் சொல்லும் "ஆங்கிலத்தில் 'வாட்டர்',தெலுங்கில் 'நீலு',இந்தியில் 'பானி' என்பது மாதிரி ஒருத்தருக்கு 'அல்லா',மற்றொருவருக்கு 'இயேசு',இன்னொருவருக்கு 'ராமன்'.எந்த கடவுளைக் கும்பிட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்" என்பதில் வசனம் பளிச்சிடுகிறது.தன்னிடம் லஞ்சம் கேட்கும் போலிஸ் அதிகாரியிடம் அனுஷ்கா சொல்லும் "என்னிடம் படிப்பு,உத்தியோகம் இல்லாததினால் நான் விபச்சாரத் தொழில் பண்றேன்,உங்களுக்குத்தான் படிப்பு,நல்ல உத்தியோகம் இருக்குதே,அப்புறமும் ஏன் லஞ்சம் வாங்குறீங்க" என்பது சாட்டையடி.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அவர்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் மடியும் தறுவாயில் அல்லு அர்ஜூன் மனோஜிடம் அவர் பெயரைக் கேட்பது டச்சிங். அதே போல் தான் மிலிட்டரி ஆஃபிஸராக்க நினைத்த தன் பையன் சடலத்தைப் பார்த்த அவன் தாய் உருகுவதாகட்டும்;தன்னால் முஸ்லீம் தீவிரவாதியாக்கப்பட்ட மனோஜ் பாஜ்பாயால் உயிர் பிழைத்த போலிஸ் அவருக்கு நன்றி சொல்லும் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் கடைசி அரை மணி நேரம் தவிர்த்து மற்ற காட்சிகள் மிக மெதுவாகப் படமாக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.அதே போல் சரண்யா,மனோஜ் பாஜ்பாய் சம்பத்தபட்ட காட்சிகளும் அதிகமான சென்டிமட்டுடன் நாடகத்தனமாய் படமாக்கப்பட்டிருக்கின்றன.
பத்து வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கேரளா கஃபே(மலையாளம்) போன்று இல்லாவிடினும்,கடைசி அரை மணி நேர காட்சிகளிலும்,இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்துவதிலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கின்றார்.
வேதம்-ஆந்திர ரங் தே பசந்தி