
சென்னையில் தாதா தொழில் செய்யும் பிரகாஷ்ராஜும்,தூத்துக்குடி பக்கம் ஒரு குக்கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் சூர்யாவும் எப்படி சந்திக்க நேருகிறது? அதன் பின் சூர்யா எப்படி சென்னை சென்று பிரகாஷ்ராஜின் சாம்ராஜ்யத்தை அழிக்கிறார் என்பதுதான் 'சிங்கம்' படத்தின் கதை.
பெரும்பாலான போலீஷ் படங்களில் ஹீரோ எப்படி அறிமுகமாவாரோ அதேபோல் இந்தப் படத்திலும் சூர்யா அறிமுகமாகிறார்.சூர்யாவிற்கு அனுஷ்கா சரியான பொருத்தமாக இல்லாவிட்டாலும்,அனுஷ்கா வரும் காட்சிகளிலெல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.காவல் துறையை மையப்படுத்தி வரும் படங்களில் வில்லன் மட்டும் சரியாக அமைந்து விட்டாலே படத்தின் பாதி வேலை முடிந்த மாதிரிதான்.இந்தப் படத்திலும் பிரகாஷ்ராஜ் மூலமாய் அது கச்சிதமாய் அமைந்திருக்கிறது.
இந்த மாதிரி படங்களில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதில் எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஹரி.'வேலை இருக்கும்போது செத்ததை சாப்பிட்டா மூளை செத்துடும்' என்பது முதற்கொண்டு படம் முழுவதும் சளைக்காமல் வசனம் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.அதுவும் சூர்யா பேசிப் பேசியே AC நிழல்கள் ரவியை ஸ்டேசனுக்கு உள்ளிருந்து ரோட்டிற்கு கொண்டு வருவது கொஞ்சம் ஓவர்.அனுஷ்காவின் பிளாட்டின நகையை பார்த்து மனோரமா சொல்லும் நாலு ஏக்கர் தென்னந்தோப்பை கழுத்தில போட்டிருக்கிறாய்..பத்திரம் என்பது சுவாரசியம்.ஒரு பையன்,பொண்ணு பின்னாடி சுத்தின பிரச்சனையை சூர்யா காவல் நிலையத்தில் வைத்து தீர்த்துக் கொண்டிருக்கும்போது,அனுஷ்கா சூர்யாவை சுற்றி வருவது நன்றாக இருக்கிறது.இந்த மாதிரி படங்களிலும் அவ்வப்போது நடிப்பதுதான் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்து கொண்டு சூர்யா அனாயசமாக நடித்திருக்கிறார்.
படத்தோட பின்னணி இசைக்கு இசையமைப்பளர் தேவி ஸ்ரீ பிரசாத் அலுங்காமல் அவரே 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்திற்கு போட்ட இசையையே இதற்கும் பயன்படுத்தியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளிலேல்லாம் ஸ்டன்ட் நடிகர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
சிங்கம் படம் நன்றாகயிருப்பதாக தெரிவதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'சமீபத்தில்' வந்த மற்ற தமிழ் படங்கள்தான்.
சிங்கம்-சூர்யா