Wednesday, October 20, 2010

பிருந்தாவனம்-திரை விமர்சனம்(தெலுங்கு)

கார்த்திக்,கௌசல்யா நடிப்பில்,செல்வா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வந்த 'பூவேலி' படத்தை, அதிகமான மசாலா தூவி இயக்குனர் வம்சி தெலுங்கில் கொடுத்திருக்கும் படம்தான் 'பிருந்தாவனம்'.

சமந்தாவைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு,ஒரு சந்தர்ப்பத்தில் காஜலின் காதலனாக நடிக்க நேரிடுகிறது.ஆரம்பத்தில் ஜூனியர் என்.டி.ஆரை வெறுக்கும் காஜல் குடும்பத்தினர் படிப்படியாக ஜூனியர் என்.டி.ஆர் மேல் அன்பு பாராட்ட ஆரம்பிக்கின்றனர்.ஜூனியர் என்.டி.ஆருக்கு காஜல் மேல் காதல் வரும் நேரத்தில்,சமந்தாவும் காஜலின் குடும்பத்திற்குள் நுழைகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பிருந்தாவனம் படத்தின் கதை.

கார்த்திக் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நினைத்துப் பார்ப்பதற்கே கொடுமையாக இருந்தாலும்,சில காட்சிகளில் அவருடைய துள்ளலான நடிப்பும்,டான்ஸும் நன்றாக இருக்கின்றன.படத்தில் கஜோலின் வீடாகக் காட்டப்படும் செட்டிங்ஸும் அந்த கிராமமும் அவ்வளவு அழகாக இருக்கின்றன.இடைவேளைக்குப் பிறகு பிரமானந்தமும்,வேணுவும் அடிக்கும் காமெடிகள் அதகளம்.படத்தில் வரும் 'சில' சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அழகான பெண்ணின் இரு கன்னங்களில் எந்த கன்னத்தில் முத்தமிடுவது என்று நாம் தடுமாறுவது போல்,காஜலும்,சமந்தாவும் வரும் காட்சிகளில் யாரைப் பார்த்துக் கொண்டிருப்பது என்று தெரியவில்லை.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளிலெல்லாம் காமராமேனுக்கு லைட்டிங் வைத்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.சமந்தாவை விட காஜலுக்குத்தான் ஸ்கோப் அதிகம்.அவருடைய சோகமான முகமும் அவருடைய வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவுஅட்டகாசம்.தமனின் இசையும் பரவாயில்லை ரகம்.

அழகான காதல் கதையை அதிகமான மசாலா தூவி இந்த அளவிற்கு சிதைத்திருக்க வேண்டாம்.பூவேலியில் ஹீரா,கார்த்திக்கை ஆரம்பத்தில் காதலிக்காமல் இருப்பதால்,கார்த்திக்கிற்கு கௌசல்யா மேல் காதல் வருவது இயல்பாக இருந்தது. சமந்தாவும் ஜூனியர் என்.டி.ஆரும் ஏற்கெனவே காதலித்துக் கொண்டிருக்கையில்,ஜூனியர் என்.டி.ஆருக்கு காரணமேயில்லாமல் காஜல் மேலும் காதல் வருவது கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாது என்று அவர் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தது போல்தான் தெரிகிறது.

பிருந்தாவனம்-'கொஞ்சம்' ரணம்.

Saturday, October 2, 2010

எந்திரன் ஸ்பெஷல்(5) - ‍எந்திரன் திரை விமர்சனம்

இரும்பிலே செய்யப்பட்ட 'ரோபோ'விற்கு மனிதனுக்கு இருப்பது போன்று உணர்ச்சிகளைப் புகுத்துகையில்,மற்ற எல்லா உணர்ச்சிகளையும் எளிதில் சமாளித்துவிடும் ரோபோ,மனிதர்களைப் போலவே காதலை சமாளிக்க முடியாமல் எவ்வாறு தடம் பிறழ்கிறது என்பதுதான் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ரகுமான் இசையமைப்பில்,ஷங்கர் இயக்கி வெளிவந்திருக்கும் 'எந்திரன்' படத்தின் கதை.

விஞ்ஞானத்தின் மூலமாக நல்ல விசயங்களைப் பண்ண முடியும் என்பதைப் படத்தின் முதல் பாதியிலும்,கெட்ட விசயங்களையும் செய்ய முடியும் என்பதைப் படத்தின் இரண்டாம் பாதியிலும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.ரஜினி படங்களில் பொதுவாக வரும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகளை,இதில் ரோபாவாய் இருக்கும் ரஜினி பண்ணுவ‌தாகக் காட்டியிருப்பதில் ஷங்கரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.பொதுவாக ஷங்கரின் படங்களில் அவரின் கதாநாயகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருவது போல்,இதிலும் ரஜினி மூன்று வேடங்களில்(விஞ்ஞானி,நல்ல ரோபோ,கெட்ட ரோபோ) வந்து கலக்குகிறார்.ரஜினியின் உழைப்பைப் பார்க்கும்போது அவருக்கு 61 வயதாகிறது என்பதை நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.குறிப்பாக ரோபாவாக வரும் ரஜினியின் உடலசைவுகள் க‌லக்கல்.

படத்தின் இரண்டாம் பாதியில் கெட்ட ரோபோ செய்யும் அட்டகாசகங்கள் சில இடங்களில்'ஆளவந்தானை' ஞாபகப்படுத்தினாலும்,இந்திய சினிமாவிலும் பணம் செலவழித்து ஹாலிவுட் தரத்தைக் கொண்டு வர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.அதேபோல் ரோபோ அட்டூழியம் செய்வதாக வரும் காட்சிகளில்,டைரக்டரின் கிரியேட்டிவிட்டிக்கும்,டெக்னிக்கல் டீமிற்கும் ஒரு சபாஷ்.கெட்ட ரோபாவாக வரும் ரஜினி,மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியனைக் ஞாபகப்படுத்தினாலும்,முப்பது வயதில் தான் பண்ணியதை,தன்னுடைய அறுபது வயதிலும் பண்ண முடியும் என்பதை ரஜினி நிரூபித்திருக்கிறார்.விஞ்ஞானியாக வரும் ரஜினியைப் பார்க்கும்போது மட்டும் பாவமாக இருக்கிறது.

ஷங்கரின் இயக்கம் பல இடங்களில் பளிச்.ஆயுத பூஜையில் மற்ற ஆயுதங்களோடு ரோபோ ரஜினியையும் உட்கார வைப்பது,நல்ல ரோபோ மனித உணர்ச்சி வந்தவுடன்,தன்னால் இறந்து போன பெண்ணின் சமாதியில் சென்று மலர் வைப்பது,ரோபோ ரஜினி பிரசவம் செய்யும் காட்சி என்று படம் முழுவதும் தன் ஆளுமையைக் காட்டியிருக்கிறார்."கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப் பொறி நீ","கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்கள் மெஷினையும்,நான் தனிமையையும் கட்டிக்கிட்டு அழனுமா?"அட்ரஸ் கேட்கும் நபரிடம் ரஜினி தன் ஐ.பி அட்ரஸ் சொல்வது,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு ரோபோ கொடுக்கும் பதில் என்று பல இடங்களில் படத்தின் வசனங்களில் மறைந்த 'சுஜாதா' பளிச்சிடுகிறார்.ரத்ன வேலுவின் கேமராவும்,சாபு சிரிலின்(ப‌ட‌த்தின் ஒரு காட்சியில் வ‌ருகிறார்) செட்டிங்ஸும் ந‌ன்றாக‌ இருக்கின்றன.

ரோபாவாக வரும் ரஜினி எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதை,ஐஸ்வர்யாராய் தன்னிடம்தான் சொல்கிறார் என்று தப்பாக நினைத்துவிட்டார் போல்.ரஜினியைத் தவிர படத்தில் வரும் வேறு நடிகர்கள் யாவரும் மனதில் நிற்கவில்லை.ரகுமானின் பின்னணி இசை பல இடங்களில் நன்றாகவும்,சில இடங்களில் ஓவர் டோஸாகவும் தெரிகிறது.கலாபவன் மணி வரும் காட்சிக்கு கத்திரி போட்டிருக்கலாம்.இரண்டாம் பாதியில் வரும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திருக்கலாம்.

'அவதார்' திரைப்படம் டெக்னாலஜியில் உலக சினிமாவின் உச்சம் என்று சொன்னால்,எந்திரனை இந்திய சினிமாவின் உச்சம் என்று தாராளமாக சொல்லலாம்.

எந்திர‌ன்-மன‌தை ம‌ய‌க்கும் ம‌ந்திர‌ன்.

Friday, October 1, 2010

எந்திரன் ஸ்பெஷல்(4)-ர‌ஜினிகாந்த்

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரய் கோலோச்சிக் கொண்டு இருக்கும் ரஜினி,தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராய் மாறி,இப்போது இந்தியிலும் பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாக நுழைகிறார்.

எனக்கு சின்ன வயதில் மிகவும் பிடித்த நடிகரென்றால் அது ரஜினிதான்(இப்போது கமல்).அப்போதெல்லாம் ரஜினி படங்கள் பார்த்தால் வீட்டிற்கு நடந்து கூட வரத் தோன்றாது.தியேட்டரிலிருந்து வீட்டிற்கு ஓடித்தான் வரத் தோன்றும்.ரஜினியின் ஆக் ஷன் படங்கள் பார்த்துவிட்டு எனக்குள் ரத்த ஓட்டம் அதிகமாகி,புதுவித உற்சாகமும் உத்வேகமும் கிடைக்கும்.சின்ன வயதில் பார்த்த படங்களில் நான் போட்ட சவால்,கழுகு,மாவீரன்,நல்லவனுக்கு நல்லவன்,படிக்காதவன் போன்ற படங்களெல்லாம் மிகவும் பிடித்திருந்தன.அதன்பின்னர் வந்த குரு சிஷ்யன்,தர்மதுரை,மன்னன்,தளபதி படங்கள் வரை ரஜினி படங்களைப் பார்ப்பது போன்ற மனதுக்கு நிறைவான ஒரு விசயம் அந்த காலகட்டத்தில் வேறு எதுவும் இல்லை.

நான் பார்த்த ரஜினியின் படங்கள் 'கம்பம்' சக்திபாலா,'தேனி' கிருஷ்ணா,'மதுரை' குரு,'சென்னை' ஆல்பர்ட் முதற்கொண்டு எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் உற்சாகம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்ற‌து.ரஜினியின் ரசிகர்களுக்கு அவருடைய படங்களைப் பார்பதை விட சந்தோஷத்தைத் தரக் கூடிய வேறு விசயங்கள் மிகவும் குறைவுதான்.நான் இப்போது வரை ரஜினியிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே விசயம் அவரால் எப்படி மக்களின் மனதை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும்படி தன்னுடைய படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகின்றது என்பதுதான்.பாட்ஷாவிற்கு பிறகு படையப்பா தவிர்த்து வேறு எந்த ரஜினியின் படங்களும் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்,அவர் கடந்த 17 வருடங்களில் கொடுத்த ஃபிளாப் படங்கள் மிகவும் குறைவு.தன்னுடைய ரசிகர்களுக்கும்,பெரும்பாலான மக்களுக்கும் எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சரியாகத் தெரிந்துகொண்டு,அதுபோன்ற‌ படங்களில் நடிப்பது சாதரணமான விசயம் கிடையாது.பாபா படத்தைக் கூட ரஜினி தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,அந்தப் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற 'தாலி காத்த காளியம்மன்' போன்ற படங்களோ என்று தோன்றுகிறது.(சாமி படங்களுக்கு மார்க்கெட் வந்து விட்டது என்று நினைத்து பாபா போன்ற படத்தில் நடித்தாரோ என்னவோ).

அதேபோல் பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு,படத்தில் தனக்குப் பெரிய மெயின் ரோல் இல்லையென்றாலும்,மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து எடுத்த சந்திரமுகி,மறுபடியும் மக்களின் ரசனையை சரியாகப் புரிந்து கொண்டவர் ரஜினி என்பதைக் காட்டியது.எந்த மாதிரி படங்களில் இனிமேல் நடிப்பது என்று ரஜினி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த சரியான இயக்குனர்தான் ஷங்கர்.இன்றைய‌ கால‌க‌ட்டத்தில் ஷ‌ங்க‌ர் போன்று ம‌க்க‌ளுக்குப் பிடித்தாற்போல் ப‌ட‌ங்க‌ள் இய‌க்கும் இய‌க்குன‌ர்க‌ள் மிக‌வும் குறைவு.ர‌ஜினிக்கு,ஷ‌ங்க‌ர் போன்ற‌ ஒரு இய‌க்குன‌ர் தேவைப்ப‌ட்டார்.ஷ‌ங்க‌ருக்கும்,ர‌ஜினியைப் போன்ற‌ ஒரு பெரிய‌ ந‌டிக‌ர் தேவைப்ப‌ட்டார்.இந்த‌ இரு பெரும் ச‌க்திக‌ளும் சேர்ந்த‌தால்தான் கலாநிதிமாற‌னால் '150' கோடிக்கும் அதிக‌மான‌ ப‌ட்ஜெட்டில் ஒரு ப‌ட‌த்தைத் த‌யாரிக்க‌ முடிந்திருக்கின்ற‌து.

ர‌ஜினியிடம் அவ‌ரின் எளிமை,அட‌க்க‌ம்,ப‌ந்தா ப‌ண்ணாம‌ல் இருப்ப‌து,பிடித்திருந்தால் ம‌ற்ற‌வ‌ர்களை உட‌ன‌டியாக‌ப் பாராட்டுவ‌து,க‌ஷ்ட‌த்தில் இருக்கும் தயாரிப்பாளர்க‌ளுக்கு ப‌ட‌ம் ப‌ண்ணிக் கொடுப்ப‌து என்று ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் பிடித்திருந்தாலும் அவ‌ரிட‌ம் பிடிக்காத‌ ஒரே விச‌ய‌ம் த‌ன்னுடைய‌ ப‌ட‌ம் ந‌ன்றாக‌ ஓட‌ வேண்டுமென்ப‌த‌ற்காக, த‌ன் ப‌ட‌ம் வெளிவ‌ரும் நேர‌ங்க‌ளில் எல்லாம் தேவையில்லாம‌ல் பேசி மாட்டிக்கொள்வ‌து.முன்பு த‌ன்னுடைய‌ ப‌டங்க‌ளில் அர‌சிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளைப் பேசி தன்னுடைய படங்களின் மேல் எதிர்பார்ப்பை உண்டு ப‌ண்ணிக் கொண்டிருந்தார்.அப்புற‌ம் அவ‌ர் அர‌சிய‌லுக்கு வ‌ர‌வே மாட்டார் என்று தெரிந்து விட்ட‌ இன்றைய‌ நிலையிலும் கூட, ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பிற்காக‌ எந்திர‌ன் ஆடியோ கேசட் ரிலீஸ் ஃப‌ங்ச‌னில் ஷ‌ங்க‌ர்,க‌லாநிதிமாற‌ன்,ர‌குமான் போன்ற‌வ‌ர்களின் கூட்ட‌ணியில் வெளிவ‌ரும் எந்திர‌ன் ப‌ட‌த்தை மன‌தில் வைத்துக் கொண்டு "இந்த‌ மாதிரி ஒரு கூட்ட‌ணி கிடைத்தால் 234 தொகுதிக‌ளிலும் நிற்க‌லாம்' என்று பேசுவ‌தெல்லாம் ர‌ஜினியின் சுய‌ந‌ல‌த்தைத்தான் காட்டுகிற‌து.

த‌மிழ் சினிமாவில் ம‌ட்டும‌ல்ல‌ தென் இந்திய சினிமாவிலேயே த‌விர்க்க‌ முடியாத‌ ச‌க்தியாக‌ விளங்கும் ர‌ஜினி,த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கான‌ மார்க்கெட்டை உல‌க‌ அளவில் ப‌ர‌ப்பிய‌தில் முக்கிய‌மான‌வ‌ர்.இன்று ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ள் இந்தியாவில் உள்ள‌ அத்த‌னை முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளிலும் த‌மிழிலேயே ரிலிஸாகிக் கொண்டிருக்கின்ற‌ன‌.இந்தியாவில் உள்ள வேறு எந்த‌ ந‌டிக‌ர்க‌ளையும் விட‌ ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ளுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு மிக‌வும் அதிக‌ம்.இனிமேல் எந்திர‌ன் போன்ற ஒரு ப‌ட‌த்தில் தற்போது 61 வ‌ய‌தாகும் ர‌ஜினி நடிப்ப‌து இயலாத‌ காரிய‌ம் என்றே தோன்றுகிற‌து.அதேபோல் ர‌ஜினியும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இந்த‌ வாய்ப்பை முழுமையாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.ரோபோ போல் வ‌ரும் ர‌ஜினியையும்,வில்ல‌னாக‌ வ‌ரும் ர‌ஜினியையும் பார்க்கையில்,ர‌ஜினி த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்லாது அனைத்து த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ஒரு பெரிய‌ விருந்தை எந்திர‌னில் குடுப்பார் என்ற‌ ந‌ம்பிக்கையில், எந்திர‌ன் திரைப்ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

Thursday, September 30, 2010

எந்திரன் ஸ்பெஷல்(3)-‍ஷ‌ங்க‌ர்

ஷங்கர் இயக்கத்தில் அவரின் பத்தாவது படமாக‌ 'எந்திரன்' நாளை வெளிவருகிறது.ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பெரும் பொருட்செலவில் தன்னுடைய படங்களை எடுத்து வந்தாலும்,அவர் தமிழில் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றே வருவதால் அவரை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் '150' கோடிக்கும் மேற்பட்ட செலவில் வெளிவரும் 'எந்திரன்'.

ஷங்கருக்கு முன்னாடியே பிரமாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் தமிழில் இருந்தாலும்,அவரளவிற்கு தன்னுடைய படங்களில் டெக்னாலஜியைப் புகுத்திய இயக்குனர்கள் மிகவும் குறைவு.தன்னுடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' தொடங்கி அவர் பண்ணிக் கொண்டிருக்கும் டெக்னிக்கலான சில விசயங்கள்,பெரும் மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் இந்திப்படங்களில் கூட பொதுவாக வருவதில்லை.தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் டெக்னிக்கலாகப் புது புது விசயங்களை அறிமுகப்படுத்தும் ஷங்கர்,இப்போதும் வேறு எந்த இந்திய மொழிகளிலும் முயற்சிக்காத பல விசயங்களை தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாகக் கொண்டு வருகிறார்.
‌
தென்னிந்தியாவில் உள்ள மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமை ஷங்கருக்கு உண்டு.அவர் தமிழ் தவிர்த்து வேறு எந்த தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை படங்கள் இயக்கியதில்லை.தெலுங்கில் படம் பண்ணச் சொல்லி எத்தனையோ தெலுங்குப்பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியும் ஏனோ இதுவரை மறுத்தே வந்திருக்கிறார்.ஆனாலும்,எந்த ஹீரோவைக் கொண்டு ஷங்கர் படங்கள் வெளிவந்தாலும் தமிழ்,ஆந்திரா,கேரளம்,கர்நாடம் என்று அனைத்து மாநிலங்களிலும் அவர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது.இதே போன்ற வரவேற்பு மணிரத்னம் படங்களுக்கும் இருக்கிறது என்றாலும் அவர் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் தலா ஒரு படமாவது இயக்கியுள்ளார்.அதேபோன்று சிவாஜி படத்திலிருந்தே ஷங்கரின் படங்களுக்கு இந்தியிலும் மார்க்கெட் உருவாகி வருவது ஒரு நல்ல விசயம்.இந்த மாதிரி வரவேற்பு இருந்தால் மட்டுமே ஒரு இயக்குனரால் மிகப் பெரும் பொருட் செலவில் தன்னுடைய படங்களை எடுக்க முடியும்.இந்த மாதிரி ஒரு நிலையை அடைவது எளிதான விசயமும் அல்ல.எல்லா மொழிகளிலும் தன்னுடைய படங்களுக்கான மார்க்கெட் வர வேண்டுமென்பதற்காகத்தான் ராம் கோபால் வர்மா, மோகன்லாலை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் கேரளாவிலும்,கன்னட நடிகர் சுதீப்பை தன்னுடைய இந்திப் படங்களில் ஹீரோவாகப் போடுவதன் மூலம் கர்நாடகாவிலும்,இப்போது தன்னுடைய படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதன் மூலமாக தமிழிலும் ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.கவுதம் வாசுதேவமேனன் கூட தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதற்காக இரண்டு தெலுங்கு படங்கள் வரை இயக்கிவிட்டார்.ஆனால் ஷங்கர் தான் எடுக்கும் தமிழ் படங்களின் மூலமாகவே,அப்ப‌டங்க‌ளின் பிர‌மாண்ட‌த்தினாலும்,ப‌ட‌த்தின் க‌தைக்க‌ரு அனைத்து‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் பொதுவாக‌ இருப்ப‌து போல் பார்த்துக்கொள்வதாலும்,அவ‌ருடைய‌ ப‌டங்க‌ள் ம‌ற்ற‌ மொழிக‌ளில் 'ட‌ப்' செய்ய‌ப்ப‌ட்டே ந‌ல்ல‌ இலாப‌த்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற‌ன.

ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்தின் ஹீரோக்க‌ள் பெரும்பாலும் இர‌ட்டை வேட‌ங்க‌ளிலோ அல்ல‌து குறைந்த‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு வித‌ கெட்ட‌ப்புக‌ளிலாவ‌துதான் அவ‌ர் இயக்கிய‌ ப‌ட‌ங்க‌ளில் வ‌ந்திருக்கிறார்க‌ள்(காத‌ல‌ன்,பாய்ஸ் த‌விர்த்து).த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் இந்தியாவில் சிறந்து விளங்கும் டெக்னீஷிய‌ன்க‌ளைத்தான் பய‌ன்ப‌டுத்தி வ‌ந்திருக்கிறார்.ர‌ஜினி ஒரு முறை ஷ‌ங்க‌ர் ப‌ற்றிக் குறிப்பிட்ட‌துதான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து."ஷங்க‌ர் ஒவ்வொரு துறைக‌ளிலும் சிற‌ந்த‌ ஆட்களாகத் த‌ன் ப‌க்க‌த்தில் வைத்துக் கொண்டிருப்ப‌தால்தான் அவரால் தொட‌ர்ந்து வெற்றி பெற‌ முடிகிற‌து".

ஷ‌ங்க‌ர் இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளிலேயே எனக்குப் பிடிக்காத‌ ப‌ட‌மென்றால் அது சிவாஜிதான்.சிவாஜிப் படத்தை படம் வந்த இரண்டாவது நாளே பார்த்தாலும் கூட,இடைவேளை வ‌ரை அந்த‌ப் ப‌ட‌த்தை பார்த்தது மிக‌க் கொடுமையாக‌ இருந்தது.ஏதோ இடைவேளைக்குப் பிறகு படம் 'கொஞ்ச‌ம்' பரவாயில்லாம‌ல் இருந்த‌தாலும்,ர‌ஜினி ந‌டித்திருந்ததாலுமே அந்த‌ப் ப‌ட‌ம் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன்.அதுவும் ர‌ஜினி போன்ற ஒரு ந‌டிக‌ரை வைத்து ஷங்க‌ர் அப்ப‌டி ஒரு 'மொக்கைப்' ப‌டம் கொடுத்த‌து கொஞ்ச‌ம் அதிர்ச்சிதான்.

க‌ம‌ல்,ஷாருக்கான் ந‌டிப்ப‌தாக‌ இருந்து இப்போது ர‌ஜினியை வைத்து ஷ‌ங்க‌ர் 'எந்திர‌ன்' ப‌டத்தை இய‌க்கியிருக்கிறார்.பொதுவாக ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மிகுந்த இடைவெளி விடுவார்.ஆனால் சிவாஜி முடித்த கையோடு எந்திரன் படத்தை உடனடியாக ஆரம்பித்தது ஆச்சரியம்தான்.ஷங்க‌ருக்கும் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ன‌வுப் ப‌ட‌மாக‌ இருப்ப‌தால் சிவாஜி ப‌ட‌த்தில் அவர் ப‌ண்ணிய‌ த‌வறையெல்லாம் நிவ‌ர்த்தி ப‌ண்ணி,இந்த‌ப் ப‌ட‌த்தை மிக‌வும் ந‌ல்ல‌ வித‌மாக‌க் கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.இந்தப் படத்தைத் தவற விட்டதை நினைத்து ஷாருக்கான் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்றும் தோன்றுகிறது.'எந்திர‌ன்' ப‌டமும் மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கும் என்றே தோன்றுகிற‌து(ப‌ட்சி வேற‌ அப்ப‌டித்தான் சொல்லுகிறது)

எந்திரன் ஸ்பெஷல்(2)-‍ஏ ஆர் ர‌குமான்

இந்தியாவின் இப்போதைய இசையுலக சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் தான். 1992 ஆம் ஆண்டு 'ரோஜா' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரகுமானுக்கு, அவருடைய முதல் படமே இந்தியிலும் 'டப்' செய்யப்பட்டு வெற்றி பெற்றதால்,ஒரே படத்தின் மூலமாகவே இந்தியா முழுமைக்கும் பிரபலமாகிவிட்டார்.

ரோஜாவில் ஆரம்பித்த ரகுமானின் பயணம் தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று இன்று,உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயணப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய கடுமையான உழைப்பும்,கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அதுவும் தமிழில் இளையராஜா போன்ற பெரிய ஆளுமைக்கு நடுவில் ரகுமான் அடைந்திருக்கும் உயரம் சாதரணமானது அல்ல.தென் இந்தியாவில் இருந்த மக்களை எல்லாம் இளையராஜா(என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்)தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தாரென்றால்,ரகுமான் வட இந்திய மக்களுக்கும் தமிழ் பாடல்களின் மீதான ஆர்வத்தை உண்டு பண்ணினார்.

ரகுமானுக்கு அவரின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அவருடன் பணிபுரிந்து வரும் மணிரத்னம்,பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர்,கதிர் போன்ற இயக்குனர்கள்,அவரின் பாடல்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தார்கள்.தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் வருகைக்குப் பிறகு ரகுமானின் ஆர்ப்பாட்ட இசைக்கு நன்றாக நடனம் ஆடுவதற்கு ஆட்களும் கிடைக்கத் தொடங்கி விட்டார்கள்.ர‌குமானின் வெற்றிக்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ருடைய‌ தொழில் நுட்ப‌ அறிவும்,ந‌ல்ல‌ குவாலிட்டியுட‌ன் த‌ன்னுடைய‌ பாட‌ல்க‌ளைக் கொடுக்க‌ ஆர‌ம்பித்ததும்தான்.அதுவும் அவ‌ருடைய‌ ப‌ட‌ப் பாடல்க‌ளை 'சோனி' நிறுவ‌ன‌ம் வாங்க‌த் தொட‌ங்கிய‌ பிறகு அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ள் கேச‌ட்க‌ளில் கேட்கும்போதும் கூடுதல் த‌ர‌த்துட‌ன் இருந்த‌ன‌.

ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் வ‌ரும்போது,அந்தப்படத்தின் நடிகர்,இயக்குனர் போன்றோரைப் பற்றியெல்லாம் கவலையே படாமல்,அவருடைய இசை ரசிகர்களெல்லாம்,அப்போதைய(இப்போதும்) கால‌க‌ட்ட‌த்தில் அவ‌ருக்காக‌ ம‌ட்டுமே கேச‌ட்டுக‌ள் வாங்கிக் கொண்டிருந்த‌ன‌ர்.அத‌னால்தான் பொதுவாக‌ ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ளை கேச‌ட்டுக‌ளில் ப‌திவு செய்வ‌தைத் த‌விர்த்து,ஒரிஜின‌ல் கேச‌ட்டையே விலைக்கு வாங்குவ‌தற்குக் கார‌ணம்,ப‌ட‌த்தின் எல்லாப் பாட‌ல்க‌ளுமே ந‌ன்றாக‌ இருந்த‌துதான்.
ர‌ங்கீலா பட‌த்திலிருந்து ரகுமான் இந்தியிலேயே அதிக‌மான‌ பட‌ங்க‌ள் ப‌ண்ண ஆர‌ம்பித்து விட்ட‌தால்,த‌மிழ் இசை ர‌சிக‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் இழப்புதான்.முன்பாவ‌து,விக்ர‌ம‌ன்,அர்ஜீன்,ஜோதி கிருஷ்ணா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு இசைய‌மைத்த‌ ர‌குமான்,இப்போது பெரிய‌ இய‌க்குன‌ர்க‌ள்,ந‌டிக‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.த‌மிழில் முத‌ல் ப‌ட‌ம் இயக்கும் இய‌க்குன‌ர்க‌ளுக்கு ர‌குமான் இன்று எட்டாக்க‌னிதான்.ர‌குமானுக்கு போன‌ வ‌ருட‌ம் அவ‌ரின் கேரிய‌ரின் உச்ச‌ம் என்று சொல்ல‌லாம்.இர‌ண்டு ஆஸ்கார் அவார்டுக‌ள் வாங்கிய‌து ம‌ட்டும‌ல்லாம‌ல்,சென்ற வ‌ருட‌ம் அவ‌ர் இந்தியில் இசைய‌மைத்த‌ க‌ஜினி,டெல்லி 6 போன்ற‌ ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளெல்லாம் அவ‌ரை உச்ச‌த்தில் நிறுத்தி‌ன‌.

ஷ‌ங்க‌ர்,ர‌ஜினி,ர‌குமான் காம்பினேஷ‌னில் வ‌ரும் இர‌ண்டாவ‌து ப‌ட‌ம் 'எந்திர‌ன்'.உண்மையைச் சொல்ல‌ வேண்டுமானால் சிவாஜி ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் அளவிற்கு கூட‌ எந்திர‌ன் பாட‌ல்க‌ள் இல்லைதான்-ஒருவேளை ப‌டம் பார்த்தபிற‌கு பாட‌ல்க‌ள் இன்னும் பிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாம்.இப்போதெல்லாம் ரகுமான் பாடல்கள் மீது சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு இருந்த‌துபோல் பெரிதாக‌ ஈர்ப்பு இல்லை.அத‌ற்கு கார‌ணம் அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ளின் த‌ர‌ம் குறைந்துவிட்ட‌தா இல்லை என்னுடைய‌ ர‌ச‌னை மாறி விட்டதாவென‌த் தெரிய‌வில்லை.

இன்றும் ர‌குமானின் பாட‌ல்க‌ள்,பெரும்பாலான இரவு நேர‌த் தூக்க‌த்திற்கு உத்திர‌வாத‌ம் அளித்துக் கொண்டிருக்கின்ற‌ன.பொதுவாக‌ ர‌குமானின் பெரும்பாலான‌ பாட‌ல்க‌ள் எனக்குப் பிடிக்குமென்றாலும்,எனக்கு மிக‌வும் பிடித்த‌ ர‌குமானின் ப‌த்து பாட‌ல்க‌ளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1) ச‌ந்தோஷக் க‌ண்ணீரே-உயிரே
2) கண்ணாளனே-ப‌ம்பாய்
3) மார்கழிப் பூவே-மேமாத‌ம்
4) புது வெள்ளை ம‌ழை-ரோஜா
5) அஞ்ச‌லி அஞ்ச‌லி-டூய‌ட்
6) க‌ரிச‌ல் த‌ரிசில்-தாஜ்ம‌ஹால்
7) க‌ண்ணும் க‌ண்ணும்-திருடா திருடா
8) காடு பொட்ட‌க் காடு-க‌ருத்த‌ம்மா
9) சிநேகித‌னே-அலைபாயுதே
10) உதயா உதயா-உதயா

Wednesday, September 29, 2010

எந்திரன் ஸ்பெஷல்(1)-சன் பிக்சர்ஸ்


இந்தியாவிலேயே முதன் முறையாக‌ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்படும் 'எந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் என்னும் பெயரை தன்னுடைய சன் பிக்சர்ஸின் மூலமாக‌, சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இப்போது பெறுகிறார்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ஷங்கரின் இயக்கத்தில்,ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில்,இந்தியாவின் மிகப் பெரிய டெக்னீஷியன்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட எந்திரன் திரைப்படம் இந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகின்றது.

கலைஞர் குடும்பத்தினருடன் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக,கலாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸை ஆரம்பித்தார். இதுவரை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்தே படங்களை விலைக்கு வாங்கி, சன் பிக்சர்ஸ் தன்னுடைய பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றது. காதலில் விழுந்தேன் படத்தில் ஆரம்பித்து தெனாவெட்டு,தீ,படிக்காதவன்,மாசிலாமணி என்று மொக்கைப் படங்களை மட்டுமே இப்போது வரை வெளியிட்டும் வந்து உள்ளது.தங்களிடம் உள்ள சேட்டிலைட் டிவிக்களின் உதவி கொண்டு எவ்வளவு மோசமான படத்தையும் வெற்றி பெறச் செய்து விடலாம் என்ற நினைப்பை, சன் பிக்சர்ஸிடம் இருந்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் பொய்யாக்கியிருக்கின்றன.அதேபோல் சன்டிவி மேல் இருக்கும் நம்பிக்கையும் 'தில்லாலங்கடி' போன்ற படங்களை 'இப்போது வரை' நம்பர் 1(?) இடத்தில் வைத்திருப்பதால் அதன் மேல் உள்ள நம்பிக்கையும் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றது.நாளையே இவர்கள் ஒரு நல்ல படம் எடுத்து,அந்தப் படத்திற்கு நம்பர் 1 இடம் கொடுத்தால் கூட மக்களுக்கு அந்தப்படம் மேல் நம்பிக்கை வருமாவென்று தெரியவில்லை.

சினிமாவில் உள்ள மற்ற எந்த தயாரிப்பாளருக்கும் இல்லாத வசதியாக சன் பிக்சர்ஸிற்கு,சன் குரூப் டிவி சேனல்கள்,தினகரன் பத்திரிக்கை,குங்குமம் வார இதழ் என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர்களுடைய பல ஊடகங்கள் துணை நிற்கின்றன.இவ்வளவு தூரம் பணம்,ஊடகங்கள் என்று வசதிகள் பல இருந்தாலும் சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்திருக்கும் படங்கள் எதுவும் நம்பிக்கை அளிப்பது போல் இல்லை என்பதுதான் உண்மை. மொசர் பியர் நிறுவனத்தினடிமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது குறைந்த பட்சம் ஷங்கரின் 'S' பிக்சரிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் போல், ஒரு படம் கூட சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்த‌தில்லை.கலைஞர் குடும்பத்திலிருந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாநிதி அழகிரி,உதயநிதி ஸ்டாலின் கூட நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் பெரும்பாலான நல்ல படங்கள் மக்களிடம் சரியாக விளம்பரப்படுத்தப்படாததினாலேயே ஃபிளாப் ஆகியிருக்கின்றன. ஒருவேளை சன் பிக்சர்ஸ் மட்டும் நல்ல படங்களை எடுக்க ஆரம்பித்தால்,அவர்களால் அவர்களுடைய ஊடகங்களின் துணைகொண்டு மக்களிடம் அத்தகைய நல்ல படங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு நல்ல மாற்றத்தை தமிழ் சினிமாவிற்குள்ளும் கொண்டு வர முடியும். இனிமேலாவது இவர்கள் நல்ல படங்களைக் கொடுப்பார்களா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

இந்தியாவிலேயே பெரிய‌ சினிமா இன்ட‌ஸ்ட்ரி என்றால் இந்தி,அத‌ற்க‌ப்புற‌ம் தெலுங்கு,மூன்றாவ‌த‌க‌த்தான் த‌மிழ். இருந்தாலும், இந்தியாவிலேயே அதிக‌மான‌ பொருட் செல‌வில் எந்திர‌னைத் தமிழில் த‌யாரிப்ப‌த‌ற்கான கார‌ண‌ம் ர‌ஜினிக்கு இருக்கும் மார்க்கெட்தான்‌.தென்னிந்தியாவிலேயே அதிகமான‌ பொருட்செல‌வில் த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளைக் கொண்டு ம‌ட்டுமே இப்போதைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் ப‌ட‌ம் எடுக்க‌ முடியும்.ர‌ஜினியும்,க‌ம‌லும் த‌மிழ் சினிமாவின் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌. இவ‌ர்களுக்கு தென்னிந்தியா முழுமைக்கும் ந‌ல்ல‌ மார்க்கெட் உள்ள‌து. ஆர‌ம்ப‌ கால‌க் க‌ட்ட‌ங்க‌ளில் அனைத்து மொழிக‌ளிலும் ப‌ட‌ங்க‌ள் ப‌ண்ணிய‌தால் க‌ம‌லுக்கும், க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாகவே ர‌ஜினியின் ட‌ப்பிங் ப‌ட‌ங்க‌ள் ஆந்திராவில் ச‌க்கைப் போடு போடுவ‌தால் ரஜினிக்கும்,இவ‌ர்க‌ளை ந‌ம்பிப் பெரிதாக‌ முதலீடு போட்டால் தயாரிப்பாளர்களுக்கு கொழுத்த இலாபம்.ரஜினி படம் வெளிவருகையில்,ஆந்திராவின் முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படங்களைத் தள்ளிப் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.ஆந்திராவின் சூப்ப‌ர் ஸ்டார்களாக‌ இருக்கும் சிர‌ஞ்சிவிக்கோ, நாக‌ர்ஜீனாவிற்கோ,மகேஷ் பாபு போன்றவர்களுக்கோ த‌மிழில் பெரிதாக‌ மார்க்கெட் இருப்ப‌தில்லை. அவ‌ர்களின் ப‌ட‌ங்க‌ள் சென்னையின் சில‌ தியேட்ட‌ர்க‌ள் ம‌ற்றும் ஒசூரில் வெளியாவ‌தோடு ச‌ரி. ஆனால் ரஜினி,கமலின் படங்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றும் மிகப் பெரிய‌ ஓப்பனிங்கைக் கொண்டிருக்கின்றன.இவர்களைப் பின்பற்றித்தான் விக்ர‌மும்,சூர்யாவும் தெலுங்கிலும் கால் ப‌தித்து,இன்று இந்தியிலும் த‌ங்க‌ளுடைய‌ வேர்க‌ளைப் ப‌ர‌வவிட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உண்மையில் சொல்ல‌ வேண்டுமானால் விஜய்,அஜித்தை விட‌ விக்ர‌ம்,சூர்யாவிற்குத்தான் மொத்தமாக மார்க்கெட் வேல்யூ அதிக‌ம். அதனால்தான் என்ன‌வோ இப்போது அஜித் ம‌ங்காத்தா தெலுங்கு பதிப்பிலும்,விஜ‌ய் 3 இடிய‌ட்ஸ் தெலுங்கு ப‌திப்பிலும் ந‌டிக்க‌ முய‌ற்சித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.

எந்திர‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ள் வெற்றி பெறுவ‌து த‌மிழ் சினிமாவிற்குத்தான் மிக‌வும் ந‌ல்ல‌து.இத‌ற்க‌ப்புற‌ம் கம‌லின் க‌ன‌வு ப‌ட‌ங்க‌ளான‌ ம‌ர்ம‌ யோகி,ம‌ருத‌ நாய‌க‌ம் போன்ற ப‌ட‌ங்க‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிகம் உள்ளது.நாளைக்கே ச‌ன் பிக்ச‌ர்ஸ் இதே போன்ற பெரிய‌ ப‌ட்ஜெட் ப‌ட‌ங்க‌ளை விக்ர‌ம்,சூர்யாவைக் கொண்டும் எடுக்க ஆரம்பிக்க‌லாம்.த‌மிழ் சினிமா எப்ப‌டி தெலுங்கு ப‌ட‌வுல‌கில் இப்போது ப‌ல‌மாக‌ கால‌டி ப‌தித்து நிற்கின்றதோ, அதேபோல் இந்திப் ப‌ட‌வுல‌கிலும் இதுபோன்ற‌ ப‌டங்களின் மூல‌மாக மட்டுமே காலூன்ற‌ முடியும். ரோஜா,பம்பாய் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் த‌மிழின் நேர‌டிப் ப‌டங்க‌ள் எதுவும் இந்தியில் பெரிதாக‌ வெற்றி பெற்ற‌தில்லை. எந்திர‌ன் த‌மிழில் ம‌ட்டும‌ல்லாது,இந்தியிலும் பெரிதாக‌ வெற்றி பெற‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் த‌மிழ் சினிமா,தென் இந்தியா ம‌ட்டும‌ல்லாது வ‌ட‌ இந்தியாவிலும் காலூன்ற‌ வேண்டுமென்ப‌துதான் எல்லோருடைய‌ ஆசையாக இருக்க முடியும். அத‌ற்கான‌ அடித்த‌ளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும், ச‌ன் பிக்ச‌ர்ஸ் இப்போதைய கால கட்டத்தில் பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள்.

ச‌ன் பிக்ச‌ர்ஸ் த‌மிழில் க‌தை அம்ச‌முள்ள ப‌ட‌ங்க‌ளையும்,நல்ல ம‌சாலாப் ப‌ட‌ங்க‌ளையும் இதற்க‌ப்புற‌மாவ‌து கொடுக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் அவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக‌ள்.

Tuesday, September 21, 2010

பிரிய‌சகி-6

பவ‌ர் க‌ட்டான‌
ஒரு அமாவாசை இருட்டில்
நீ சிரிக்க‌த் தொட‌ங்கினாய்
திசை மாறிய பறவைகளெல்லாம்
கூட்டை நோக்கிப் ப‌ற‌க்க‌த் தொட‌ங்கின‌.

நல்ல கவிதையின்
ஒவ்வொரு வரிகளும்
அழகாய் இருப்ப‌து போல்
அழகாய் இருக்கும் உன்னில்
ஒவ்வொன்றும் அழகு.

ஆயிர‌க்க‌ணக்கில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்
இருந்தாலும் என‌க்கான
விடிவெள்ளியாய்
நீ ம‌ட்டுமே தெரிகிறாய்.

அடிக்கிற‌ கைதான் அணைக்குமாம்
ஒரு அடி அடித்துவிட்டு
அணைத்துக் கொள்ளேன் என்றால்
த‌லையில் கொட்டி விட்டு
தேய்த்து விடுகிறாய்.

சந்திரகிரகணத்தை
நான் நேரில் பார்த்தது
நீ தாவணியை
சரி செய்யும் போதுதான்.