இந்தியாவின் இப்போதைய இசையுலக சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் தான். 1992 ஆம் ஆண்டு 'ரோஜா' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரகுமானுக்கு, அவருடைய முதல் படமே இந்தியிலும் 'டப்' செய்யப்பட்டு வெற்றி பெற்றதால்,ஒரே படத்தின் மூலமாகவே இந்தியா முழுமைக்கும் பிரபலமாகிவிட்டார்.
ரோஜாவில் ஆரம்பித்த ரகுமானின் பயணம் தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று இன்று,உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயணப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய கடுமையான உழைப்பும்,கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அதுவும் தமிழில் இளையராஜா போன்ற பெரிய ஆளுமைக்கு நடுவில் ரகுமான் அடைந்திருக்கும் உயரம் சாதரணமானது அல்ல.தென் இந்தியாவில் இருந்த மக்களை எல்லாம் இளையராஜா(என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்)தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தாரென்றால்,ரகுமான் வட இந்திய மக்களுக்கும் தமிழ் பாடல்களின் மீதான ஆர்வத்தை உண்டு பண்ணினார்.
ரகுமானுக்கு அவரின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அவருடன் பணிபுரிந்து வரும் மணிரத்னம்,பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர்,கதிர் போன்ற இயக்குனர்கள்,அவரின் பாடல்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தார்கள்.தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் வருகைக்குப் பிறகு ரகுமானின் ஆர்ப்பாட்ட இசைக்கு நன்றாக நடனம் ஆடுவதற்கு ஆட்களும் கிடைக்கத் தொடங்கி விட்டார்கள்.ரகுமானின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அவருடைய தொழில் நுட்ப அறிவும்,நல்ல குவாலிட்டியுடன் தன்னுடைய பாடல்களைக் கொடுக்க ஆரம்பித்ததும்தான்.அதுவும் அவருடைய படப் பாடல்களை 'சோனி' நிறுவனம் வாங்கத் தொடங்கிய பிறகு அவருடைய பாடல்கள் கேசட்களில் கேட்கும்போதும் கூடுதல் தரத்துடன் இருந்தன.
ரகுமான் படப் பாடல்கள் வரும்போது,அந்தப்படத்தின் நடிகர்,இயக்குனர் போன்றோரைப் பற்றியெல்லாம் கவலையே படாமல்,அவருடைய இசை ரசிகர்களெல்லாம்,அப்போதைய(இப்போதும்) காலகட்டத்தில் அவருக்காக மட்டுமே கேசட்டுகள் வாங்கிக் கொண்டிருந்தனர்.அதனால்தான் பொதுவாக ரகுமான் படப் பாடல்களை கேசட்டுகளில் பதிவு செய்வதைத் தவிர்த்து,ஒரிஜினல் கேசட்டையே விலைக்கு வாங்குவதற்குக் காரணம்,படத்தின் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருந்ததுதான்.
ரங்கீலா படத்திலிருந்து ரகுமான் இந்தியிலேயே அதிகமான படங்கள் பண்ண ஆரம்பித்து விட்டதால்,தமிழ் இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் இழப்புதான்.முன்பாவது,விக்ரமன்,அர்ஜீன்,ஜோதி கிருஷ்ணா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்த ரகுமான்,இப்போது பெரிய இயக்குனர்கள்,நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.தமிழில் முதல் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு ரகுமான் இன்று எட்டாக்கனிதான்.ரகுமானுக்கு போன வருடம் அவரின் கேரியரின் உச்சம் என்று சொல்லலாம்.இரண்டு ஆஸ்கார் அவார்டுகள் வாங்கியது மட்டுமல்லாமல்,சென்ற வருடம் அவர் இந்தியில் இசையமைத்த கஜினி,டெல்லி 6 போன்ற படத்தின் பாடல்களெல்லாம் அவரை உச்சத்தில் நிறுத்தின.
ஷங்கர்,ரஜினி,ரகுமான் காம்பினேஷனில் வரும் இரண்டாவது படம் 'எந்திரன்'.உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிவாஜி படப் பாடல்கள் அளவிற்கு கூட எந்திரன் பாடல்கள் இல்லைதான்-ஒருவேளை படம் பார்த்தபிறகு பாடல்கள் இன்னும் பிடிக்க ஆரம்பிக்கலாம்.இப்போதெல்லாம் ரகுமான் பாடல்கள் மீது சில வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல் பெரிதாக ஈர்ப்பு இல்லை.அதற்கு காரணம் அவருடைய பாடல்களின் தரம் குறைந்துவிட்டதா இல்லை என்னுடைய ரசனை மாறி விட்டதாவெனத் தெரியவில்லை.
இன்றும் ரகுமானின் பாடல்கள்,பெரும்பாலான இரவு நேரத் தூக்கத்திற்கு உத்திரவாதம் அளித்துக் கொண்டிருக்கின்றன.பொதுவாக ரகுமானின் பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்குமென்றாலும்,எனக்கு மிகவும் பிடித்த ரகுமானின் பத்து பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
1) சந்தோஷக் கண்ணீரே-உயிரே
2) கண்ணாளனே-பம்பாய்
3) மார்கழிப் பூவே-மேமாதம்
4) புது வெள்ளை மழை-ரோஜா
5) அஞ்சலி அஞ்சலி-டூயட்
6) கரிசல் தரிசில்-தாஜ்மஹால்
7) கண்ணும் கண்ணும்-திருடா திருடா
8) காடு பொட்டக் காடு-கருத்தம்மா
9) சிநேகிதனே-அலைபாயுதே
10) உதயா உதயா-உதயா
No comments:
Post a Comment