Showing posts with label க‌விதை. Show all posts
Showing posts with label க‌விதை. Show all posts

Thursday, January 27, 2011

கேள்வித் தீ

எல்லா சாத்தியங்களும்
சாத்தியமற்றுப்போன ஒரு நிலையில்
விடையில்லாக் கேள்விகள்
என்னைத் துரத்தத் தொடங்கின!

ஒவ்வொரு கேள்வியும்
என்னுயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய்
தின்னத் தலைப்பட்ட கணத்தில்
உன்னை யாசித்துக் கிடந்தேன்!

பதில்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த
அறையின் சாவியை
தூக்கி எறிந்துவிட்டு
புன்னகைக்கிறாய் நீ!

கேள்விகள் என்னை
தின்னத் தொடங்கு முன்பே
இறக்கத் தொடங்குகிறேன் நான்.

Tuesday, January 4, 2011

பிரிய‌சகி-7


எல்லா ந‌திக‌ளும்
ரோமை நோக்கி செல்வ‌து போல்
என் எல்லாப் பாதைகளும்
உன்னை நோக்கியே இருக்கின்ற‌ன‌!

உன‌க்குப் பைய‌ன் வேண்டுமா
இல்லை பெண் வேண்டுமா? என்றாய்
நீதான் வேண்டுமென்றதில்
குரோமோஸோம்க‌ளெல்லாம்
கும்மி அடிக்க‌த் தொட‌ங்கின‌!

க‌ன்ன‌த்தில்
கை வைக்காதே!
நினைப்ப‌து ந‌ட‌க்காதென்றாய்
உன் க‌ன்ன‌த்தில் கை வைத்தேன்
நினைக்காததெல்லாம் ந‌ட‌ந்த‌து!

முத்த‌ம் கேட்கையில்
ப‌ணிவாய் கேள்
அதிகார‌மாய் கேட்காதே என்கிறாய்
காம‌த்துப் பாலும்
ஒரு அதிகாரம்தானே என்கிறேன் நான்!

உன்னுடம்பின் மச்சங்களை
எத்தனை முறை
எண்ணிச் சொன்னாலும்
எண்ணிக்கையில் ஒன்று
குறைகிறது என்கிறாய்!

Tuesday, September 21, 2010

பிரிய‌சகி-6

பவ‌ர் க‌ட்டான‌
ஒரு அமாவாசை இருட்டில்
நீ சிரிக்க‌த் தொட‌ங்கினாய்
திசை மாறிய பறவைகளெல்லாம்
கூட்டை நோக்கிப் ப‌ற‌க்க‌த் தொட‌ங்கின‌.

நல்ல கவிதையின்
ஒவ்வொரு வரிகளும்
அழகாய் இருப்ப‌து போல்
அழகாய் இருக்கும் உன்னில்
ஒவ்வொன்றும் அழகு.

ஆயிர‌க்க‌ணக்கில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்
இருந்தாலும் என‌க்கான
விடிவெள்ளியாய்
நீ ம‌ட்டுமே தெரிகிறாய்.

அடிக்கிற‌ கைதான் அணைக்குமாம்
ஒரு அடி அடித்துவிட்டு
அணைத்துக் கொள்ளேன் என்றால்
த‌லையில் கொட்டி விட்டு
தேய்த்து விடுகிறாய்.

சந்திரகிரகணத்தை
நான் நேரில் பார்த்தது
நீ தாவணியை
சரி செய்யும் போதுதான்.

Tuesday, June 29, 2010

மழையின் வலி


மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!

Monday, May 31, 2010

பிரிய‌சகி-5


உன் தலைமுதல் பாதம் வரை
என்
தலையனைக்குள் அடங்குதடி!

மழை மண்வாசத்தை எழுப்புவது போல்
உன் வாசம்
என்னை எழுப்பி செல்கிறது!

உன்னுடம்பின்
ஒவ்வொரு பாகங்களையும்
தேடி செல்கையில்
எனக்கான Google search நீதான்!

நீ கை கொடுக்கும்போதெல்லாம்
உன் உள்ளங்கை ரேகைகள்
என் ஆயுள் ரேகையை
அதிகமாக்கி செல்கின்றன!

நிலவில் உட்கார்ந்திருக்கும் பாட்டியை
உத்துப் பார்த்து
உறுதி செய்து கொண்டேன்
உன் பாட்டிதானென்று!

Tuesday, April 20, 2010

நாலும் அறிந்த‌வ‌ள்!


1) என்னிடம்
யார் என்ன வாங்கி சென்றாலும்
என் குறிப்பு புத்தகத்தில்
எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்
நீ வந்து
குறிப்பு புத்தகத்தை வாங்கி சென்றாய்!

2) நான் எதையாவது
மறந்து விட்டுச் செல்லும் போதெல்லாம்
நீதான் தவறாமல் வந்து
ஞாபகப்படுத்தி விட்டு செல்வாய்
உன்னை மறக்க நினைக்கும்
இக்கணம் உட்பட!

3) மெழுகுவர்த்தியாய்
என்னுள் இறங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை எரித்துக் கொண்டிருக்கிறாய்
இப்போதும் உன்
கண்ணீருக்காய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான்!

4) உன்னை மறக்க நினைத்து
ஒவ்வொரு முறை
என்னை எரித்துக் கொள்ளும்போதும்
சாம்பலிலிருந்து
உன் ஞாபகங்கள்
ஃபீனிக்ஸ் பறவையாய் கிளர்ந்தெழுகின்றன!

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?


காய்ந்த சருகாய்
உதிர்ந்து கிடக்கின்றன
உன் ஞாபகங்கள்.
மிச்சமிருக்கும் இலைகளுக்கு
என்னையும் அறியாமல்
உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன
என் நிழல்கள்.
பொலிவிழந்து பட்டுப் போய்
உனக்காக காத்துக் கிடக்கும்
என் மரத்திற்கு
சிதையூட்டும் முன்
. . . .
விண்ணைத் தாண்டி வருவாயா?

Thursday, February 11, 2010

பிரிய‌ச‌கி-4

உன்னைப் பார்க்க
வரும் போதெல்லாம்
என் இதயம்
ஆம்புலன்ஸ் சைரனாகிறது!

எல்லாக் குழந்தைக‌ளும்
அழகாய் இருப்ப‌துபோல்-உன்
எல்லா பாக‌ங்க‌ளும் அழகு!

தொட்டு விடும் தூரத்தில்
இருக்கிறேன் நான்
மொட்டு பூவாகிடும் கணத்தில்
பார்க்கிறாய் நீ!

ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக் காண்கிறேன்
உன் சிரிப்பினில்
இறைவனாய் ஆகின்றேன்!

தாவணியில்
தாவும் அணிலாகிறாய்
சுடிதாரில்
சுடர் விடும் ஒளியாகிறாய்
புடவையிலோ
புறாக் கூண்டாகிறாய்!

Tuesday, January 12, 2010

நிராகரிப்பு



தனிமை என்னை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கிய
வெம்மையான ஒரு பகல் வேளையில்
எறும்பு ஒன்று என்னுள்
ஊர்ந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் பிரியங்களையும்,வலிகளையும்
எறும்பின் மேல் ஏற்றிவிட்ட கணத்தில்
பாரம் தாங்காமல் கீழே விழ ஆரம்பித்தது
என் பிரியங்களை
என்னிடமே விட்டு விட்டு...

[உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது]

Thursday, January 7, 2010

பிரிய‌ச‌கி-3


நீரும் நெருப்பும்-அது
M.G.R படம்
நீயும் நானும்
காதலின் பிறப்பிடம்!

நீ பார்த்து செல்லும்
ஒவ்வொரு முறையும்
என் இதயம் Restart ஆகிறது!

உன் முகத்தில் விழும்
ஒற்றை முடி கற்றை
என் விரல்களுக்கு ஊஞ்சலாகிறது!

உன் பெயரை மட்டுமே
உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்
இரவு நேரத்துப் பூனை போன்று!

தேவதைகளும் வந்து
அழகுக் குறிப்புகள்
வாங்கிச் செல்லும் அழகி நீ!

என் பிறந்த நாளுக்கு
என்ன பரிசு வேண்டுமென்று கேட்டுவிட்டு
பரிசைச் சொன்னவுடன்-அப்போதைக்கு
கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு செல்கிறாய்!

Wednesday, December 2, 2009

கிழ‌க்கே போகும் ர‌யில்


ஒரே நேர் கோட்டிலிருந்த‌
தண்டவாளங்களை
பின் தொடர்ந்து சென்ற
மயக்கும் மாலை பொழுதில்
சற்று முன் பெய்த
மழையின் ஈரத்தோடு
பூ ஒன்று
தண்டவாளத்தின் மேல்
தலை வைத்து படுத்திருந்தது
அதன் ஈரத்தை
நெஞ்சில் ஏந்திய தருணத்தில்
எதிரே வந்து கொண்டிருந்த ரெயிலில்
நீ பயணித்துக் கொண்டிருந்தாய்.

Thursday, November 26, 2009

NH-4


நீண்ட தூர சாலையோர பயணமொன்றின்
NH-4 சாலையில்
ஒரு Lane-ல் நானும்
மறு Lane-ல் நீயும்
பயணித்துக் கொண்டிருந்தோம்
உனக்கான வாழ்வை என் கண்களிலும்
எனக்கான கனவுகளை உன் சிரிப்பினிலும்
செதுக்கிக் கொண்டிருந்தோம்.
இருவரும் இணைய நேரிடும் புள்ளியொன்றில்
திடீரென்று
யு-டர்ன் எடுத்து எனை கடந்து
கனவுகளை காற்றில் வீசிச் சென்றாய்
எதிரே தெரியும்
பள்ளத்தாக்கில் தெரிகிறது
எனக்கான வாழ்வு.

Tuesday, August 25, 2009

பிரிய‌ச‌கி-2


நான் தி.மு.க‌
நீ அ.தி.மு.க‌
உன் பெயருடன்
என் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்!

நீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்
என்னோடு சேர்ந்து
மல்லிகைப் பூவும் கிறங்குகிறது!

நீ ஊதிக் கொடுத்த பலூனால்
நான் மிதக்கிறேன் வானில்!

என் ஐம்புலன்க‌ளும்
ஒருங்கே வேலை செய்வ‌து
என்னுட‌ன் நீ இருக்கையில்தான்!

நீ நெற்றியில்
க‌ட‌னாகக் கொடுத்த‌ முத்த‌ம்
வட்டி போட்டு
இதழ் வ‌ரை வ‌ந்து நிற்கிறது இப்போது!

Sunday, August 9, 2009

தொலைந்(த்)த கனவு...



பெருமழை பெய்து ஓய்ந்திருந்த‌
ஒரு பின்னிரவில்
ஆழ் மனப்பரப்பில் இருந்த‌
என் கனவுகள்
ஒவ்வொன்றாய் சேக‌ரித்து
புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒவ்வொரு க‌ன‌விலும் நீ
என்னுட‌ன் இருந்த‌ க‌ணங்க‌ள்
இதய‌ வெற்றிட‌த்தை
நிர‌ப்ப‌த் தொட‌ங்கிய‌ வேளையில்
க‌ழிவிர‌க்க‌ம் அதிக‌மாகி
என் க‌விதைக்கான‌
த‌லைப்பை எழுதத் தொட‌ங்கினேன்...

Sunday, August 2, 2009

தற்கொலைக்கான ஆயுதத்தை தீர்மானித்தல்


வாழ்க்கை சூன்யமாகிவிட்ட
ஒரு தருணத்தில்
தற்கொலைக்கான காரணங்கள் ஒவ்வொன்றாய்
பிரதியெடுக்கத் தொடங்கினேன்
கடைசி சிகரெட் ஒன்றை
புகைக்கலாம் என்று
நிலா காதலிக்கு
புகைகளால்
தூது அனுப்பிக் கொண்டிருந்த கணத்தில்
எதிர் வீட்டுப் பெண்
முற்றத்தில் அமர்ந்து
'டீ' குடிக்க ஆரம்பித்தாள்
இது அவளின்
கடைசி 'டீ' யாக இருக்குமோ என்று
அவளை பார்த்து சிரிக்கத் தொடங்கினேன்
சிகரெட் விரல்களை சுடத் தொடங்கியிருந்தது

Sunday, July 26, 2009

தொலைத்த‌தை தேடுத‌ல் (அ) கிடைத்த‌தை தொலைத்த‌ல்...



யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருந்தேன்...

நீயாக‌ வ‌ந்து
தொலைந்த‌தை தேடிக் கொடுத்துவிட்டு
தொலைந்து போனாய்

யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...