ஷங்கர் இயக்கத்தில் அவரின் பத்தாவது படமாக 'எந்திரன்' நாளை வெளிவருகிறது.ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பெரும் பொருட்செலவில் தன்னுடைய படங்களை எடுத்து வந்தாலும்,அவர் தமிழில் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றே வருவதால் அவரை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் '150' கோடிக்கும் மேற்பட்ட செலவில் வெளிவரும் 'எந்திரன்'.
ஷங்கருக்கு முன்னாடியே பிரமாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் தமிழில் இருந்தாலும்,அவரளவிற்கு தன்னுடைய படங்களில் டெக்னாலஜியைப் புகுத்திய இயக்குனர்கள் மிகவும் குறைவு.தன்னுடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' தொடங்கி அவர் பண்ணிக் கொண்டிருக்கும் டெக்னிக்கலான சில விசயங்கள்,பெரும் மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் இந்திப்படங்களில் கூட பொதுவாக வருவதில்லை.தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் டெக்னிக்கலாகப் புது புது விசயங்களை அறிமுகப்படுத்தும் ஷங்கர்,இப்போதும் வேறு எந்த இந்திய மொழிகளிலும் முயற்சிக்காத பல விசயங்களை தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாகக் கொண்டு வருகிறார்.
தென்னிந்தியாவில் உள்ள மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமை ஷங்கருக்கு உண்டு.அவர் தமிழ் தவிர்த்து வேறு எந்த தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை படங்கள் இயக்கியதில்லை.தெலுங்கில் படம் பண்ணச் சொல்லி எத்தனையோ தெலுங்குப்பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியும் ஏனோ இதுவரை மறுத்தே வந்திருக்கிறார்.ஆனாலும்,எந்த ஹீரோவைக் கொண்டு ஷங்கர் படங்கள் வெளிவந்தாலும் தமிழ்,ஆந்திரா,கேரளம்,கர்நாடம் என்று அனைத்து மாநிலங்களிலும் அவர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது.இதே போன்ற வரவேற்பு மணிரத்னம் படங்களுக்கும் இருக்கிறது என்றாலும் அவர் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் தலா ஒரு படமாவது இயக்கியுள்ளார்.அதேபோன்று சிவாஜி படத்திலிருந்தே ஷங்கரின் படங்களுக்கு இந்தியிலும் மார்க்கெட் உருவாகி வருவது ஒரு நல்ல விசயம்.இந்த மாதிரி வரவேற்பு இருந்தால் மட்டுமே ஒரு இயக்குனரால் மிகப் பெரும் பொருட் செலவில் தன்னுடைய படங்களை எடுக்க முடியும்.இந்த மாதிரி ஒரு நிலையை அடைவது எளிதான விசயமும் அல்ல.எல்லா மொழிகளிலும் தன்னுடைய படங்களுக்கான மார்க்கெட் வர வேண்டுமென்பதற்காகத்தான் ராம் கோபால் வர்மா, மோகன்லாலை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் கேரளாவிலும்,கன்னட நடிகர் சுதீப்பை தன்னுடைய இந்திப் படங்களில் ஹீரோவாகப் போடுவதன் மூலம் கர்நாடகாவிலும்,இப்போது தன்னுடைய படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதன் மூலமாக தமிழிலும் ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.கவுதம் வாசுதேவமேனன் கூட தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதற்காக இரண்டு தெலுங்கு படங்கள் வரை இயக்கிவிட்டார்.ஆனால் ஷங்கர் தான் எடுக்கும் தமிழ் படங்களின் மூலமாகவே,அப்படங்களின் பிரமாண்டத்தினாலும்,படத்தின் கதைக்கரு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பொதுவாக இருப்பது போல் பார்த்துக்கொள்வதாலும்,அவருடைய படங்கள் மற்ற மொழிகளில் 'டப்' செய்யப்பட்டே நல்ல இலாபத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஷங்கர் படத்தின் ஹீரோக்கள் பெரும்பாலும் இரட்டை வேடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் இரண்டு வித கெட்டப்புகளிலாவதுதான் அவர் இயக்கிய படங்களில் வந்திருக்கிறார்கள்(காதலன்,பாய்ஸ் தவிர்த்து).தன்னுடைய படங்களில் இந்தியாவில் சிறந்து விளங்கும் டெக்னீஷியன்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்.ரஜினி ஒரு முறை ஷங்கர் பற்றிக் குறிப்பிட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது."ஷங்கர் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்த ஆட்களாகத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது".
ஷங்கர் இயக்கிய படங்களிலேயே எனக்குப் பிடிக்காத படமென்றால் அது சிவாஜிதான்.சிவாஜிப் படத்தை படம் வந்த இரண்டாவது நாளே பார்த்தாலும் கூட,இடைவேளை வரை அந்தப் படத்தை பார்த்தது மிகக் கொடுமையாக இருந்தது.ஏதோ இடைவேளைக்குப் பிறகு படம் 'கொஞ்சம்' பரவாயில்லாமல் இருந்ததாலும்,ரஜினி நடித்திருந்ததாலுமே அந்தப் படம் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன்.அதுவும் ரஜினி போன்ற ஒரு நடிகரை வைத்து ஷங்கர் அப்படி ஒரு 'மொக்கைப்' படம் கொடுத்தது கொஞ்சம் அதிர்ச்சிதான்.
கமல்,ஷாருக்கான் நடிப்பதாக இருந்து இப்போது ரஜினியை வைத்து ஷங்கர் 'எந்திரன்' படத்தை இயக்கியிருக்கிறார்.பொதுவாக ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மிகுந்த இடைவெளி விடுவார்.ஆனால் சிவாஜி முடித்த கையோடு எந்திரன் படத்தை உடனடியாக ஆரம்பித்தது ஆச்சரியம்தான்.ஷங்கருக்கும் இந்தப்படம் கனவுப் படமாக இருப்பதால் சிவாஜி படத்தில் அவர் பண்ணிய தவறையெல்லாம் நிவர்த்தி பண்ணி,இந்தப் படத்தை மிகவும் நல்ல விதமாகக் கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.இந்தப் படத்தைத் தவற விட்டதை நினைத்து ஷாருக்கான் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்றும் தோன்றுகிறது.'எந்திரன்' படமும் மிகவும் நன்றாக வந்திருக்கும் என்றே தோன்றுகிறது(பட்சி வேற அப்படித்தான் சொல்லுகிறது)
அருமை..
ReplyDeleteஎந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html
@ தமிழினி!
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க!
@ Cool Boy கிருத்திகன்!
ReplyDeleteபடம் நன்றாக இருக்கின்றது என்று வரும் செய்திகள் மனதுக்கு நிறைவாக இருக்கின்றன.தகவலுக்கு நன்றிங்க!