Wednesday, July 28, 2010

ஊசி இதழ் காதல்

தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த என்னை கவலையோடு பார்த்தார்கள் அம்மா. "ஆஸ்பத்திரிக்குப் போகலாமா?" என்று அம்மா கேட்டவுடன் உடனே சந்தோஷமாகத் தலையசைத்தேன்."வா! கணபதி டாக்டரிடம் செல்லலாம்,அவர் ஊசி போட்டால் உடனே சரியாகிவிடும்" என்று சொன்ன அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,நாம் புருஷோத்தமிடமே செல்லலாம். அவர் ஊசி போட்டால்தான் எனக்கு 'உடனே' சரியாகி விடுகிறது என்றவனை பரிதாபமாகப் பார்த்தார்கள் அம்மா.

எங்கள் ஊரில் டாக்டர் புருஷோத்தமைப் பார்த்தாலே அனைத்து குழந்தைகளும் பயந்து அழுவார்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க எங்கள் ஊரில் உள்ள எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் ஆயுதம் அவர் ஒருவர்தான்.அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ஊசி. மற்ற மருத்துவர்கள் எல்லாம் 5 சென்டிமீட்டரில் ஊசி வைத்திருந்தால் அவர் பயன்படுத்தும் ஊசி மட்டும் முழு அடி ஸ்கேல் அளவிற்கு இருக்கும். வெட்டினரி டாக்டர்களிடம் இருக்கும் இரக்கம் கூட ஊசி போடும்போது அவரிடம் கொஞ்ச‌ம் கூட‌ இருக்காது.அந்த ஊரிலே அவரிடம் ஊசி போட சந்தோஷமாக செல்லும் ஒரே ஆள் நான்தான்.

நான் அப்போது ஆறாவது 'பி பிரிவு படித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் ஆறாவது 'ஏ' பிரிவு படித்துக் கொண்டிருந்த பிரியாதான் என் வாழ்க்கையை அப்போது மிகவும் சுவாரசியப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தாலும், அவளை தினமும் பார்க்கும் பாக்கியம் மட்டுமே,பள்ளிக்கு செல்லும் என் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருந்தது. அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லையென்றாலும், என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் ஒரு புறம் உதட்டசைத்து சிரிக்கும் சிரிப்பு,எனக்காகவே அவள் பிரத்யோகமாகக் கண்டுபிடித்தது போலிருக்கும்.அவளுடைய அப்பாதான் டாக்டர் புருஷோத்தம்.

அவரின் கிளினிக் அவருடைய வீட்டின் ஒரு ப‌குதியிலேயே இருப்ப‌தால்,அவரின் ஆஸ்ப‌த்திரிக்கு எப்போது சென்றாலும் அவ‌ளையும்,எனக்கான அவ‌ளின் பிரத்யோக சிரிப்பையும் தரிசித்து விட‌லாம்.அவ‌ரின் கிளினிக்கிற்கு நானும் அம்மாவும் சென்ற‌போழுது அவ‌ள் நோட்டில் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.பள்ளிக்கூடத்தில் ஸ்கூல் யூனிபாஃர்மில் பார்ப்பதையும் விட அவள் வீட்டில் அணிந்திருந்த கலர் பாவாடை சட்டையில் வண்ணத்துப் பூச்சி போல் இருந்தாள்.காற்றில் இரு புறமும் அசையும் முடி வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை நினைவூட்டியது.என்னைப் பார்த்து விட்டு அவள் சிந்திய‌ எனக்கான பிர‌த்யோக சிரிப்பிலேயே காய்ச்ச‌ல் பாதியாய் குறைந்த‌து போலிருந்தது. ஒரு அடி ஸ்கேல் ஊசியை எடுத்துக் கொண்டே டாக்ட‌ர் அவருக்கே கூட புரியாத ஒரு ஜோக்கைக் கூறியவாறு எனக்கு ஊசி போட்டார்.ஊசியினால் ஏற்பட்ட வ‌லி என்னிட‌மிருந்து அம்மாவின் க‌ண்களுக்கு மாறியிருந்தது.

ப‌த்தாவ‌து வ‌ரை நாங்க‌ள் இருவ‌ரும் ஒன்றாக‌வே ப‌டித்து வ‌ந்திருந்தாலும் பிரியாவிட‌ம் ஏனோ பேச‌வே தோன்றிய‌தில்லை;பேசுவ‌தற்கான வாய்ப்பும் கிடைக்க‌வே இல்லை.அத‌ன் பிறகு வெளியூருக்குப் படிக்க செல்லும் சூழ்நிலை வந்த‌போது அவளை விட்டுப் பிரிவதுதான் அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.அம்மாதான் அது பற்றி ஏதும் அறியாமல் அடிக்கடி வந்து ஹாஸ்டலில் என்னைப் பார்ப்பதாக ஆறுதலளித்துக் கொண்டிருந்தாள்.அடிக்க‌டி ஹாஸ்ட‌லிலிருந்து ஊருக்கு ஓடி வ‌ரும் என்னைப் பார்த்து விட்டு, ஹாஸ்ட‌லில் ச‌மைக்கும் ச‌மைய‌ல்கார‌ர்களையும் திட்டிக் கொண்டிருந்தார்க‌ள்.

பிரியாவும்,நானும் வெவ்வேறு ஊர்க‌ளுக்குப் ப‌டிக்க‌ சென்றதால் இத்துட‌ன் அவளைப் பார்த்து ஏழு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌து.அவ‌ளைத் தாவ‌ணியில் தரிசிக்கும் பாக்கிய‌ம் கிடைக்காத‌தை நினைத்து மிக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து.ஆறு மாதங்க‌ளுக்குப் பிறகு ஊருக்குள் வ‌ந்த எனக்கு ப‌ய‌ணக் க‌ளைப்பினாலோ அல்ல‌து ஊரில் தொட‌ர்ந்து பெய்து கொண்டிருந்திருந்த ம‌ழையினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ காய்ச்ச‌லும் வ‌ந்திருந்தது.

ரொம்ப வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு டாக்ட‌ர் புருஷோத்த‌மைப் பார்ப்ப‌த‌ற்காக ச‌ந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.ஆடி மாதத்து சாரல் மழை வேறு குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் நீர் போன்று விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.நான் கிளம்பியதைப் பார்ப்பவர்கள் எவரும் எனக்கு காய்ச்சல் இருப்பதாகவே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.அவ‌ளுடைய அழகான இதழ்கள் வேறு எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.அவளுடைய இதழ்கள் அவ்வளவு மென்மையாக,மிருதுவாக சற்று முன் பெய்த மழைத் துளிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரோஜாப் பூவைப் போன்று எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்கும்.அவள் இதழ்களைப் பார்த்துவிட்டு ரோஜாப் பூவைப் பார்த்தால்,ரோஜாப் பூ ஒன்றும் அவ்வளவு அழகாகத் தெரியாது.அவளும் அவளின் இதழ்களும் இப்போது எப்ப‌டியிருக்கும் என்ற‌ நினைப்பே பேஷண்டைப் பார்த்த புருஷோத்தம் போன்று ச‌ந்தோஷம‌ளித்துக் கொண்டிருந்த‌து. இன்று பார்க்கையில் க‌ண்டிப்பாகப் பேசிவிட‌வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தேன்.

அவள் வீடு எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது.அவ‌ள் வீட்டு வாச‌லை அடைந்த‌துமே எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அன்று என்னுட‌ன் பேசினாள்.இப்போது நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டு விட்டு பின்னால் வ‌ந்து கொண்டிருந்த த‌ன் க‌ணவ‌னை அறிமுக‌ப்படுத்தினாள்.அதன் பின் காய்ச்சலினாலே என்னவோ அவர்கள் இருவரிடமும் என்னால் சரியாகப் பேச முடியவில்லை.அன்று டாக்ட‌ர் புருஷோத்தம் போட்ட ஊசி வாழ்க்கையில் முதல் முறையாக என‌க்கு வ‌லித்தது.சார‌ல் மழையும் வானத்திலிருந்து என் க‌ண்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் இட‌ம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த‌து.

Monday, July 12, 2010

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-திரை விமர்சனம்


இதற்கு முன் இரு படங்களை(கிரீடம்,பொய் சொல்லப் போறோம்) 'ரீமேக்' கிவிட்டு முதன் முறையாக தன்னுடைய சொந்தக் கதையில் இயக்குனர் விஜய் விஸ்வரூபமெடுத்திருக்கும் படம் 'மதராசபட்டின‌ம்'.

கதை என்னவே ஏழைப் பையன்,பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் பழைய கதையாக இருந்தாலும்,படம் நடக்கும் காலமும்,படத்தை சுவாரசியமாக எடுத்திருக்கும் விதமும் நம்மை 'ஆஹா' என சொல்ல வைக்கின்றன.பொக்கிஷம் படத்தில் சேரன் விட்ட கோட்டையை விஜய் இந்தப் படத்தில் கட்டியிருக்கிறார்.

சலவைத் தொழில் செய்யும் ஆர்யாவிற்கும்,மதராஸ் கவர்னர் பெண் ஏமி ஜாக்சனுக்கும் ஏற்படும் காதல் இயல்பாக இருக்கின்றது.ஏமிக்காக‌ அ,ஆ போன்றே ஆர்யா ஏ,பி,சி,டி க‌த்துக் கொள்வ‌தும், ஏமியிட‌ம் சிர‌ம‌ப்ப‌ட்டு இவ‌ர் ஆங்கில‌த்தில் பேச‌ப் போக,அவர் இவ‌ரிட‌ம் கொஞ்சும் த‌மிழில் பேசுவ‌தும் சுவார‌சிய‌ம்.ஏமி ஆர்யாவிற்கு ஒரு ப‌ரிசு அளிப்ப‌தும்,என்னிட‌ம் கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து என்று ஆர்யா சொல்லுகையில் ஏமி அவ‌ரிட‌ம் 'தாலி'யைப் ப‌ரிசாக‌க் கேட்ப‌தும்,ரொம்ப‌ நாட்க‌ளுக்கு அப்புறம் தாலி சென்டிமென்ட் கூட‌ ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கிறது.துணி காயப் போடும் இடத்தை சுட்டிக் காட்டி முன்னாடியெல்லாம் இங்கே துணி காயும்;இப்ப எங்க வயிறு காயுது என்கையில் வசனகர்த்தா பளிச்சிடுகிறார்.ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், முதல் பாதி முழுவ‌தும் இழையோடும் ந‌கைச்சுவை ந‌ம்மைக் க‌ட்டிப்போட்டு விடுகின்ற‌து.

த‌மிழ் ந‌டிகைக‌ளின் லிப் மூவ்மென்ட்டே பாட‌ல்க‌ளில் ஒழுங்காக‌ இல்லாமல் இருக்கும் இக்கால கட்டத்தில்,ஆருயிரே பாட‌லில் ஏமியின் லிப் மூவ்மென்ட் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துகிற‌து.இந்தியாவிற்கு விடுத‌லை கிடைக்க‌ இருக்கும் க‌டைசி நாளில், காத‌ல் ஜோடிக‌ளும் சுத‌ந்திர‌ப் ப‌றவைகளாக‌ ப‌றக்க,தப்பி ஓடும் காட்சிக‌ள் நெகிழ்வாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.க‌டைசிக் காட்சியில் ஆர்யாவின் கை ப‌ல‌மாகப் ப‌ட‌கைப் பிடித்திருப்ப‌தும்,ஏமி அவ‌ரின் கையை விடுவிப்ப‌த‌ற்காக ப‌ல‌ம் கொண்ட‌ ம‌ட்டும் அவ‌ர் கையைக் காய‌ப்ப‌டுத்துவ‌தும் உருக்க‌ம்.

ந‌ல்ல‌ ப‌ட‌த்தில் எல்லாமே ந‌ன்றாக‌ அமைந்து விடுவ‌து போல்,இப்ப‌ட‌த்திலும் கேம‌ரா,இசை,ந‌டிக‌ர்க‌ள் தேர்வு ம‌ற்றும் ப‌ட‌த்தில் ப‌ணிபுரிந்த‌ அனைவ‌ரின் உழைப்பும் நம்மை பிர‌மிக்க‌ வைக்கிறது.

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-MADARASAPATINAM

Saturday, July 10, 2010

ஆனந்தபுரத்து வீடு-திரை விமர்சனம்


தன்னுடைய மகன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடைய விபத்தில் இறந்துபோன பெற்றோர் எப்படி ஆவியாக மாறி அவனுக்கு உதவுகிறார்கள் என்பதுதான் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் கதை.

நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய பரம்பரை வீடு இருக்கும் ஆனந்தபுரத்திற்கு வரும் ஆரம்பக் காட்சிகளும்,அந்த சூழலும் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.அதன் பின்னர் நம் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து படம் முடியும்போது முற்றிலும் இல்லாமல் போய் விடுகின்றது.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் வாய் பேச‌ முடியாமல் வரும்‌ குட்டிக் குழந்தையும் அத‌ன் ந‌டிப்பும் கொள்ளை அழகு.அதுவும் பேய் செய்யும் வித்தைக‌ளுக்கெல்லாம் அந்தக் குழந்தை ப‌ழி ஏற்க‌ நேர்வ‌தும்,அத‌ன் முக‌ பாவ‌ங்க‌ளும் அருமை.இரண்டாம் பாதியில் படு பயங்கரமான த்ரில்லிங் காட்சிகள் வருமென்று எதிர்பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.வீட்டை வாங்க‌ வ‌ருப‌வ‌ரிட‌ம் பேய் செய்யும் மாயாஜால‌க் காட்சிகளாகட்டும்;நந்தாவின் ந‌ண்ப‌னுடைய காத‌லியும் ஆன‌ந்த‌புர‌த்து வீட்டிற்கு வ‌ந்த‌வுட‌ன், வில்லன் சொல்லும் 'நாலும்,ஒண்ணும் அஞ்சு;யாரும் வீட்டை விட்டுப் போக‌க்கூடாது' என்ப‌தும் 'ப‌தினெட்டு ரூபாய்க்கு இந்த மேஜிக் ஒர்த்' என்ப‌தும்‌ பேசாம‌ல் இந்தப் பட‌த்தை முழு காமெடி பட‌மாக‌வே எடுத்திருக்க‌லாமென்று தோன்றுகிற‌து.

சின்னத் திரையில் மர்ம சீரியல்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் 'நாகா', பெரிய திரையிலும் இரண்டே கால் மணி நேரத்திற்கு ஒரு சீரியலை விளம்பர இடைவேளை மட்டும் இல்லாமல் எடுத்திருக்கின்றார்.இப்ப‌ வருகின்ற‌ த‌மிழ் பட‌ங்களெல்லாம் ந‌ன்றாக இருக்குமா என்று ப‌ய‌த்துட‌ன் பார்க்க‌ வேண்டியதாயிருக்கிற‌து.ஆனால்,இந்த‌ப் ப‌ட‌த்தை ஒரு பயமுமில்லாம‌ல் பார்க்கலாம் என்ப‌துதான் ப‌ட‌த்தின் ப‌ல‌வீன‌ம்.இருந்தாலும்,இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்துவிட்டு ப‌ட‌த்தின் த‌யாரிப்பாளரான‌ இய‌க்குன‌ர் 'ஷங்க‌ருக்கு' க‌ண்டிப்பாக 'கிலி' ஏற்ப‌ட்டிருக்கும்.

ஆன‌ந்த‌புர‌த்து வீடு-பாழடைந்த‌ வீடு.

Wednesday, July 7, 2010

Top 10 Songs-June

1) பனியே பனியே-அய்யனார்-‍இசை:தமன்

2) உசுரே போகுதே-ராவணன்-‍இசை:A.R ரகுமான்

3) முதல் முதலாய்-ஆர்வம்-இசை:ரோணி ராஃபேல்

4) அன்புள்ள சந்தியா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) மருதாணி பூவுமேலே-‍வம்சம்-இசை:தாஜ் நூர்

6) பைத்தியம் பிடிக்குது-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) சித்திர வானம்-ஆனந்தப்புரத்து வீடு-இசை:ரமேஷ் கிருஷ்ணா

8) சொல்பேச்சு-தில்லாலங்கடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

9) அடங்காத வேகம்-பட்டாபட்டி 50/50-இசை:அருள் தேவ்

10) ஆசை அரக்கி-விருந்தாளி-‍இசை:S.S.குமரன்

Tuesday, June 29, 2010

மழையின் வலி


மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!

Wednesday, June 23, 2010

வேதம்-திரை விமர்சனம்(தெலுங்கு)


1)மிலிட்டரி ஆஃபிஸராக்கிப் பார்க்க நினைக்கும் தன் அம்மாவின் ஆசைக்கு எதிராக மியூசிக் பேண்ட் வைத்து பெரிய ஆளாகி விடலாம் என்று நினைத்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார் மனோஜ்.

2)ஏழையான அல்லு அர்ஜுன்,தான் பெரிய பணக்காரன் என்று பொய் சொல்லி ஒரு பணக்கார பெண்ணைக் காதலிக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பெரிய பார்ட்டி கொடுப்பதற்காக 40,000 ரூபாய் பணத்திற்காக யாரிடமிருந்தாவது நகையை திருடுவதற்காக ஹைதரபாத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.

3)வறுமையில் வாடும் சரண்யா கந்து வட்டிக் கொடுமையால்,பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த தன் பையனைப் பண முதலைகளிடம் கொத்து அடிமை போல் இழக்க நேரிடுகிறது. தன்னுடைய கிட்னியை விற்றுப் பையனை மீட்டு விடலாம் என்று கிராமத்திலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார்.

4)சார்ஜாவிற்கு மறுநாள் பயணப்பட இருக்கும் நிலையில்,போலிஸால்
முஸ்லிம் தீவிரவாதி என்று தப்பான முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் இருக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.

5)உள்ளூர் விபச்சார தொழிலில் பெரும் பணத்தை அந்த விடுதி முதலாளியே அபகரித்து விடுவதால்,தனியாக சென்று தொழில் செய்ய ஹைதரபாத்திற்கு செல்கிறார் அனுஷ்கா.

இவ்வாறு ஐந்து கிளைக் கதைகளும் ஒவ்வொரு புள்ளியில் பயணப்பட்டு, கடைசியில் அரசாங்க ஆஸ்பத்திரியில் சந்திக்க நேரிடுகிறது.அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'வேதம்' படத்தின் கதை.

இந்த‌ மாதிரி ஒரு சிக்க‌லான‌ திரைக்க‌தையை வைத்துக் கொண்டு ப‌ட‌த்தை ந‌க‌ர்த்தியிருக்கும் இய‌க்குன‌ருக்கும்,மாஸ் ஹீரோ இமேஜை தூக்கி எறிந்து விட்டு இது போல் ஒரு க‌தையில் ந‌டித்திருக்கும் அல்லு அர்ஜீனும் பார‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வர்க‌ளாகிறார்க‌ள்.சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 'தாஜ் ஹோட்ட‌லில்' ந‌டந்த‌ தீவிர‌வாத‌ தாக்குதலைப் பட‌த்தின் க‌ளனாக‌க் கொண்டு வ‌ந்திருப்ப‌தில் டைர‌க்ட‌ரின் புத்திசாலித்த‌னம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கிளைக்க‌தையும் ஒவ்வொரு வித‌மான‌ பின்ன‌ணியைக் கொண்டிருப்ப‌து ந‌ன்றாக‌ இருக்கிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருக்கிறது.அனுஷ்கா பேசும் "ம‌த்த வேலையில் அனுப‌வ‌ம் அதிகமாக‌ இருந்தாத்தான் காசு அதிக‌மாக‌க் கிடைக்கும்.ந‌ம்ம‌ வேலையில அனுப‌வ‌ம் குறைய‌ குறைய‌த்தான் காசு அதிக‌மாக‌ கிடைக்கும்.அனுப‌வ‌மே இல்லைனா இன்னும் அதிக‌மாக‌ காசு கொடுப்பாங்க‌" என்ப‌தாக‌ட்டும்;மனோஜ் சொல்லும் "ஆங்கிலத்தில் 'வாட்டர்',தெலுங்கில் 'நீலு',இந்தியில் 'பானி' என்பது மாதிரி ஒருத்தருக்கு 'அல்லா',மற்றொருவருக்கு 'இயேசு',இன்னொருவருக்கு 'ராமன்'.எந்த கடவுளைக் கும்பிட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்" என்பதில் வசனம் பளிச்சிடுகிறது.‌தன்னிட‌ம் லஞ்ச‌ம் கேட்கும் போலிஸ் அதிகாரியிட‌ம் அனுஷ்கா சொல்லும் "என்னிடம் ப‌டிப்பு,உத்தியோக‌ம் இல்லாததினால் நான் விபச்சார‌த் தொழில் பண்றேன்,உங்க‌ளுக்குத்தான் ப‌டிப்பு,ந‌ல்ல‌ உத்தியோக‌ம் இருக்குதே,அப்புறமும் ஏன் லஞ்ச‌ம் வாங்குறீங்க‌" என்ப‌து சாட்டைய‌டி.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் அத்த‌னை பேரும் அவ‌ர்க‌ளுடைய‌ பாத்திர‌த்தை உணர்ந்து ந‌டித்திருக்கிறார்க‌ள். தீவிர‌வாத தாக்குத‌லுக்கு உள்ளாகி உயிர் ம‌டியும் தறுவாயில் அல்லு அர்ஜூன் ம‌னோஜிட‌ம் அவ‌ர் பெய‌ரைக் கேட்ப‌து ட‌ச்சிங். அதே போல் தான் மிலிட்ட‌ரி ஆஃபிஸராக்க‌ நினைத்த‌ த‌ன் பைய‌ன் ச‌ட‌ல‌த்தைப் பார்த்த‌ அவ‌ன் தாய் உருகுவ‌தாக‌ட்டும்;தன்னால் முஸ்லீம் தீவிர‌வாதியாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னோஜ் பாஜ்பாயால் உயிர் பிழைத்த‌ போலிஸ் அவ‌ருக்கு ந‌ன்றி சொல்லும் காட்சிக‌ளும் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட‌த்தின் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ காட்சிக‌ள் மிக மெதுவாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருப்பதைத் தவிர்த்திருக்க‌லாம்.அதே போல் ச‌ர‌ண்யா,மனோஜ் பாஜ்பாய் ச‌ம்பத்த‌ப‌ட்ட‌ காட்சிக‌ளும் அதிகமான சென்டிமட்டுடன் நாட‌க‌த்த‌ன‌மாய் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.
பத்து வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கேரளா கஃபே(மலையாளம்) போன்று இல்லாவிடினும்,க‌டைசி அரை ம‌ணி நேர‌ காட்சிக‌ளிலும்,இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்துவ‌திலும் இய‌க்குன‌ர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

வேத‌ம்-ஆந்திர‌ ர‌ங் தே ப‌ச‌ந்தி

Monday, June 21, 2010

ராவ‌ணன்- திரை விமர்சனம்


கமல் 'விருமாண்டியில்' முயற்சித்த உக்தியையே கொஞ்சம் மாற்றி,மலையூர் மம்பட்டியான் காலத்திய கதையை இராமயண முலாம் பூசி மணிரத்னம் கொடுத்திருக்கும் படம்தான் 'ராவணன்'.

தன்னுடைய‌ த‌ங்கையின் வாழ்க்கையை சீர‌ழித்த போலிஸ்கார‌ர்க‌ளைப் ப‌ழி வாங்குவ‌தற்காக, SP பிருத்விராஜின் ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயைக் காட்டுக்குள் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுகிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் காட்டுக்குள் சென்று எப்ப‌டி த‌ன்னுடைய‌ ம‌னைவியை மீட்கிறார் என்ப‌துதான் கதை.

ப‌ட‌த்தில் பாட‌ல்க‌ள்,ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு எந்த‌க் காட்சியுமே ம‌னதில் நிற்ப‌து போல் இல்லை. ஃப்ளாஸ்பேக் கூட‌ ந‌ம் ம‌ன‌தைத் தைப்ப‌த‌ற்கு முன்பே முடிந்து விடுகிற‌து.விக்ர‌மிற்கு ஐஸ்வ‌ர்யாராயின் மேல் காதல் வ‌ருவ‌தற்கு அழுத்த‌மான‌ காட்சிக‌ள் எதுவுமே இல்லாம‌ல் இருக்கிறது."சிவ‌ப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் கட‌வுளும் கிடையாது. க‌ருப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் க‌ய‌வ‌னும் கிடையாது" என்ப‌துதான் மணிரத்னம் சொல்ல வந்த விசயமாக இருந்தாலும் கூட,படத்தில் விக்ரம்,ஐஸ்,பிருத்விராஜ் போன்றவர்களின் பாத்திரப்படைப்பில் குழப்பமே மேலோங்கி இருக்கிறது.

ஐஸ்வ‌ர்யாவின் சுடிதாரைக் கூட‌ விர‌லால் தொடாம‌ல் விக்ர‌ம் த‌விர்ப்ப‌து,உங்க‌ளுக்கு க‌ல்யாணம் ஆகாம‌ இருந்திருந்தா எங்கூட‌ இருப்பீங்க‌ளா? என்று விக்ர‌ம் ஐஸிட‌ம் கேட்ப‌து என்று சில‌ இட‌ங்க‌ளில்தான் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராயின் மீதான த‌ன் காத‌லை வெளிப்படுத்துகிறார்.

"பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தாங்கிக்கிடலாம்;ஆனால் அழுதாத்தான் தாங்கிக்க முடியாது.என் புருஷன் ஒத்த கையில பைக் ஓட்டினா சர்க்கஸ்ல ஓட்டுற மாதிரி இருக்கும்" என்று படத்தின் மிக சில இடங்களில்தான் சுகாசினியின் வசனம் நன்றாக இருக்கிறது.படம் முடியும்போது வரும் 'நான் வருவேனே,மீண்டும் வருவேனே' என்று ரகுமான் பாடும் பாடல் நன்றாக இருக்கிறது.அபிஷேக் பச்சன் நடிப்பு போன்று செயற்கையாக இல்லாமல் விக்ரமின் நடிப்பு படத்தில் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

ஆர‌ம்ப‌த்தில் வில்லனாக‌த் தெரியும் விக்ர‌ம் க‌டைசியில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரியும் பிருத்விராஜ் க‌டைசியில் கெட்ட‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்பத்தில் போர‌டிக்கும் ப‌ட‌ம் க‌டைசியில்(ம‌ட்டும்) ந‌ன்றாக‌ இருக்கிறது.

ம‌ணிர‌த்ன‌ம் சார்,நீங்க‌ள் த‌மிழுக்காக‌ ம‌ட்டும் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌ இருக்கின்றன‌.இந்திக்காக‌ ம‌ட்டும் எடுத்த‌ தில்சே,குரு போன்ற ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌வே இருந்தன‌.இர‌ண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே(இத‌ற்கு முன்பு யுவா-ஆயுத‌ எழுத்து) ச‌ரியாக‌ வ‌ருவ‌தில்லை.இனிமேலாவ‌து ஏதாவது ஒரு மொழியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுங்களேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தின் த‌மிழ் ப‌திப்பில் விக்ர‌ம் ராவ‌ணனாக‌வும்,இந்தி ப‌திப்பில் ராம‌னாக‌வும் ந‌டித்துள்ளார்.ம்...நாம் ராம‌னாக‌ இருப்ப‌தும்,ராவ‌ணனாக‌ இருப்ப‌தும் ந‌ம்மை 'இய‌க்குப‌வர்' கையில்தான் இருக்கிற‌து போல்.

ராவ‌ணன்‍‍-க‌தாக‌லாட்சேப‌ம்