Monday, June 21, 2010

ராவ‌ணன்- திரை விமர்சனம்


கமல் 'விருமாண்டியில்' முயற்சித்த உக்தியையே கொஞ்சம் மாற்றி,மலையூர் மம்பட்டியான் காலத்திய கதையை இராமயண முலாம் பூசி மணிரத்னம் கொடுத்திருக்கும் படம்தான் 'ராவணன்'.

தன்னுடைய‌ த‌ங்கையின் வாழ்க்கையை சீர‌ழித்த போலிஸ்கார‌ர்க‌ளைப் ப‌ழி வாங்குவ‌தற்காக, SP பிருத்விராஜின் ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயைக் காட்டுக்குள் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுகிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் காட்டுக்குள் சென்று எப்ப‌டி த‌ன்னுடைய‌ ம‌னைவியை மீட்கிறார் என்ப‌துதான் கதை.

ப‌ட‌த்தில் பாட‌ல்க‌ள்,ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு எந்த‌க் காட்சியுமே ம‌னதில் நிற்ப‌து போல் இல்லை. ஃப்ளாஸ்பேக் கூட‌ ந‌ம் ம‌ன‌தைத் தைப்ப‌த‌ற்கு முன்பே முடிந்து விடுகிற‌து.விக்ர‌மிற்கு ஐஸ்வ‌ர்யாராயின் மேல் காதல் வ‌ருவ‌தற்கு அழுத்த‌மான‌ காட்சிக‌ள் எதுவுமே இல்லாம‌ல் இருக்கிறது."சிவ‌ப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் கட‌வுளும் கிடையாது. க‌ருப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் க‌ய‌வ‌னும் கிடையாது" என்ப‌துதான் மணிரத்னம் சொல்ல வந்த விசயமாக இருந்தாலும் கூட,படத்தில் விக்ரம்,ஐஸ்,பிருத்விராஜ் போன்றவர்களின் பாத்திரப்படைப்பில் குழப்பமே மேலோங்கி இருக்கிறது.

ஐஸ்வ‌ர்யாவின் சுடிதாரைக் கூட‌ விர‌லால் தொடாம‌ல் விக்ர‌ம் த‌விர்ப்ப‌து,உங்க‌ளுக்கு க‌ல்யாணம் ஆகாம‌ இருந்திருந்தா எங்கூட‌ இருப்பீங்க‌ளா? என்று விக்ர‌ம் ஐஸிட‌ம் கேட்ப‌து என்று சில‌ இட‌ங்க‌ளில்தான் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராயின் மீதான த‌ன் காத‌லை வெளிப்படுத்துகிறார்.

"பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தாங்கிக்கிடலாம்;ஆனால் அழுதாத்தான் தாங்கிக்க முடியாது.என் புருஷன் ஒத்த கையில பைக் ஓட்டினா சர்க்கஸ்ல ஓட்டுற மாதிரி இருக்கும்" என்று படத்தின் மிக சில இடங்களில்தான் சுகாசினியின் வசனம் நன்றாக இருக்கிறது.படம் முடியும்போது வரும் 'நான் வருவேனே,மீண்டும் வருவேனே' என்று ரகுமான் பாடும் பாடல் நன்றாக இருக்கிறது.அபிஷேக் பச்சன் நடிப்பு போன்று செயற்கையாக இல்லாமல் விக்ரமின் நடிப்பு படத்தில் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

ஆர‌ம்ப‌த்தில் வில்லனாக‌த் தெரியும் விக்ர‌ம் க‌டைசியில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரியும் பிருத்விராஜ் க‌டைசியில் கெட்ட‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்பத்தில் போர‌டிக்கும் ப‌ட‌ம் க‌டைசியில்(ம‌ட்டும்) ந‌ன்றாக‌ இருக்கிறது.

ம‌ணிர‌த்ன‌ம் சார்,நீங்க‌ள் த‌மிழுக்காக‌ ம‌ட்டும் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌ இருக்கின்றன‌.இந்திக்காக‌ ம‌ட்டும் எடுத்த‌ தில்சே,குரு போன்ற ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌வே இருந்தன‌.இர‌ண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே(இத‌ற்கு முன்பு யுவா-ஆயுத‌ எழுத்து) ச‌ரியாக‌ வ‌ருவ‌தில்லை.இனிமேலாவ‌து ஏதாவது ஒரு மொழியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுங்களேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தின் த‌மிழ் ப‌திப்பில் விக்ர‌ம் ராவ‌ணனாக‌வும்,இந்தி ப‌திப்பில் ராம‌னாக‌வும் ந‌டித்துள்ளார்.ம்...நாம் ராம‌னாக‌ இருப்ப‌தும்,ராவ‌ணனாக‌ இருப்ப‌தும் ந‌ம்மை 'இய‌க்குப‌வர்' கையில்தான் இருக்கிற‌து போல்.

ராவ‌ணன்‍‍-க‌தாக‌லாட்சேப‌ம்

Wednesday, June 9, 2010

Top 10 Songs-May

1) காட்டுச் சிறுக்கி-ராவணன்-‍‍இசை:A.R ரகுமான்

2) தொடாதே கண்ணால் நீ என்னை-எதிர்மறை-‍‍இசை:முருகன் மோகன்

3) Stole My Heart-சிங்கம்-‍‍இசை:தேவி ஸ்ரீ பிர‌சாத்

4) என் நெஞ்சில்-பாணா காத்தாடி-‍‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) ஒரு முறை இரு முறை-களவாணி-‍‍இசை:S.S.குமரன்

6) இதுவரை இதுவரை-பட்டாபட்டி 50/50-‍‍இசை:அருள் தேவ்

7) ஆருயிரே-மதராஸ் பட்டினம்-‍‍இசை:G.V.பிரகாஷ்குமார்

8) எப்போது உன் ஜன்னல்-விருந்தாளி-‍‍இசை:S.S.குமரன்

9) நீ இல்லை நான் இல்லை-பயம் அறியான்‍‍-‍‍இசை:PC சிவன்

10) விழியே விழியே-அறியான்-‍‍இசை:விக்ரம் வர்மன்

Monday, May 31, 2010

சிங்க‌ம்‍- திரை விமர்சனம்


சென்னையில் தாதா தொழில் செய்யும் பிரகாஷ்ராஜும்,தூத்துக்குடி பக்கம் ஒரு குக்கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் சூர்யாவும் எப்படி சந்திக்க நேருகிறது? அதன் பின் சூர்யா எப்படி சென்னை சென்று பிரகாஷ்ராஜின் சாம்ராஜ்யத்தை அழிக்கிறார் என்பதுதான் 'சிங்கம்' படத்தின் கதை.

பெரும்பாலான‌ போலீஷ் ப‌ட‌ங்க‌ளில் ஹீரோ எப்ப‌டி அறிமுக‌மாவாரோ அதேபோல் இந்த‌ப் ப‌ட‌த்திலும் சூர்யா அறிமுக‌மாகிறார்.சூர்யாவிற்கு அனுஷ்கா ச‌ரியான‌ பொருத்தமாக‌ இல்லாவிட்டாலும்,அனுஷ்கா வ‌ரும் காட்சிக‌ளிலெல்லாம் அவ‌ரை ம‌ட்டுமே பார்த்துக் கொண்டிருப்ப‌தால் அது ஒரு பொருட்டாக‌த் தெரிய‌வில்லை.காவ‌ல் துறையை மைய‌ப்ப‌டுத்தி வ‌ரும் ப‌ட‌ங்க‌ளில் வில்ல‌ன் ம‌ட்டும் ச‌ரியாக‌ அமைந்து விட்டாலே ப‌ட‌த்தின் பாதி வேலை முடிந்த‌ மாதிரிதான்.இந்த‌ப் ப‌ட‌த்திலும் பிர‌காஷ்ராஜ் மூல‌மாய் அது க‌ச்சித‌மாய் அமைந்திருக்கிற‌து.

இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளில் நாம் என்ன‌வெல்லாம் எதிர்பார்ப்போமோ அதில் எந்த‌ வித‌ மாற்ற‌முமில்லாம‌ல் அப்ப‌டியே கொடுத்திருக்கிறார் டைர‌க்ட‌ர் ஹ‌ரி.'வேலை இருக்கும்போது செத்த‌தை சாப்பிட்டா மூளை செத்துடும்' என்பது முதற்கொண்டு ப‌ட‌ம் முழுவ‌தும் ச‌ளைக்காம‌ல் வ‌ச‌ன‌ம் எழுதித் தள்ளியிருக்கிறார்க‌ள்.அதுவும் சூர்யா பேசிப் பேசியே AC நிழல்க‌ள் ர‌வியை ஸ்டேச‌னுக்கு உள்ளிருந்து ரோட்டிற்கு கொண்டு வ‌ருவ‌து கொஞ்ச‌ம் ஓவ‌ர்.அனுஷ்காவின் பிளாட்டின‌ ந‌கையை பார்த்து‌ ம‌னோர‌மா சொல்லும் நாலு ஏக்க‌ர் தென்னந்தோப்பை கழுத்தில போட்டிருக்கிறாய்..பத்திரம் என்ப‌‌து சுவார‌சிய‌ம்.ஒரு பையன்,பொண்ணு பின்னாடி சுத்தின‌ பிர‌ச்ச‌னையை சூர்யா காவ‌ல் நிலைய‌த்தில் வைத்து தீர்த்துக் கொண்டிருக்கும்போது,அனுஷ்கா சூர்யாவை சுற்றி வ‌ருவ‌து ந‌ன்றாக‌ இருக்கிற‌து.இந்த மாதிரி ப‌ட‌ங்க‌ளிலும் அவ்வப்போது ந‌டிப்ப‌துதான் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு நல்ல‌து என்ப‌தை புரிந்து கொண்டு சூர்யா அனாய‌ச‌மாக‌ ந‌டித்திருக்கிறார்.

ப‌ட‌த்தோட‌ பின்னணி இசைக்கு இசைய‌மைப்ப‌ளர் தேவி ஸ்ரீ பிர‌சாத் அலுங்காம‌ல் அவ‌ரே 'ச‌ந்தோஷ் சுப்ர‌ம‌ணிய‌ம்' ப‌ட‌த்திற்கு போட்ட இசையையே இத‌ற்கும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கிறார்.ச‌ண்டைக் காட்சிக‌ளிலேல்லாம் ஸ்ட‌ன்ட் ந‌டிக‌ர்க‌ளின் உழைப்பு பிர‌மிக்க‌ வைக்கிற‌து.

சிங்க‌ம் ப‌டம் ந‌ன்றாகயிருப்ப‌தாக‌ தெரிவ‌தற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'ச‌மீப‌த்தில்' வ‌ந்த‌ ம‌ற்ற தமிழ் ப‌ட‌ங்க‌ள்தான்.

சிங்க‌ம்‍-சூர்யா

பிரிய‌சகி-5


உன் தலைமுதல் பாதம் வரை
என்
தலையனைக்குள் அடங்குதடி!

மழை மண்வாசத்தை எழுப்புவது போல்
உன் வாசம்
என்னை எழுப்பி செல்கிறது!

உன்னுடம்பின்
ஒவ்வொரு பாகங்களையும்
தேடி செல்கையில்
எனக்கான Google search நீதான்!

நீ கை கொடுக்கும்போதெல்லாம்
உன் உள்ளங்கை ரேகைகள்
என் ஆயுள் ரேகையை
அதிகமாக்கி செல்கின்றன!

நிலவில் உட்கார்ந்திருக்கும் பாட்டியை
உத்துப் பார்த்து
உறுதி செய்து கொண்டேன்
உன் பாட்டிதானென்று!

Tuesday, April 20, 2010

நாலும் அறிந்த‌வ‌ள்!


1) என்னிடம்
யார் என்ன வாங்கி சென்றாலும்
என் குறிப்பு புத்தகத்தில்
எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்
நீ வந்து
குறிப்பு புத்தகத்தை வாங்கி சென்றாய்!

2) நான் எதையாவது
மறந்து விட்டுச் செல்லும் போதெல்லாம்
நீதான் தவறாமல் வந்து
ஞாபகப்படுத்தி விட்டு செல்வாய்
உன்னை மறக்க நினைக்கும்
இக்கணம் உட்பட!

3) மெழுகுவர்த்தியாய்
என்னுள் இறங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை எரித்துக் கொண்டிருக்கிறாய்
இப்போதும் உன்
கண்ணீருக்காய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான்!

4) உன்னை மறக்க நினைத்து
ஒவ்வொரு முறை
என்னை எரித்துக் கொள்ளும்போதும்
சாம்பலிலிருந்து
உன் ஞாபகங்கள்
ஃபீனிக்ஸ் பறவையாய் கிளர்ந்தெழுகின்றன!

Monday, March 29, 2010

அங்காடித் தெரு- திரை விமர்சனம்


மிகப் பெரிய அங்காடிகளில் உள்ள 'அலங்கார பொம்மைகளை'ப் போன்று தங்களுடைய அனைத்து உணர்ச்சிகளையும் இழந்து விட்டு வேலை பார்க்கும் இன்றைய இளைய தலை முறையினருக்குள்,காதல் என்ற உணர்வு வருகையில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை,தி.நகர் சாலைகளை மூன்று மணி நேரம் நம் கண் முன் நடமாட விட்டு வசந்தபாலன் காட்டியிருக்கும் படம்தான் 'அங்காடித் தெரு'.

ப‌ட‌த்தில் வ‌ரும் அனைத்து க‌தாபாத்திர‌ங்க‌ளுமே த‌ங்க‌ளுடைய‌ இய‌ல்பான‌ ந‌டிப்பினால்,நாம் பார்த்துக் கொண்டிருப்ப‌து ப‌டம் என்ற உணர்வு எழாம‌ல் பார்த்துக் கொள்கிறார்கள்.படத்தின் வசனங்களும் மிகவும் இயல்பாக இருக்கின்றன்.அஞ்ச‌லி மீண்டும் ஒரு முறை த‌ன்னுடைய‌ அழகான‌ ந‌டிப்பினால் ந‌ம் ம‌னதைக் கொள்ளை கொள்கிறார்.அஞ்ச‌லியைப் பார்க்கும் போது,ந‌ம் ப‌ழைய‌ காத‌லிக‌ளில் யாரவது ஒருவ‌ரை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் அதே நேர‌த்தில்,புது காத‌லுக்கான‌ விதையையும் விதைத்துவிட்டு செல்கிறார்.ஹூரோ ம‌கேசும் இந்த‌ப் ப‌ட‌த்திற்குப் பொருத்த‌மான‌ தேர்வு.

ம‌ற்றவர்க‌ளுக்கு கீழே அடிமாடு போல் வேலை செய்வ‌தை விட,சொந்தமாக‌‌ தொழில் செய்யும் ம‌க்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியாகவும்/கவுரவத்தோடும் இருக்கிறார்கள் என்பதை கண் பார்வை இல்லாத பெரியவர்,கழிவறையை சுத்தம் செய்து காசு வசூலிப்பவர் போன்றவர்களின் மூலம் காட்டியிருப்ப‌து ந‌ன்றாக‌ உள்ளது.இன்னும் சொல்ல‌ப் போனால் இந்த‌ உலகத்தில் ப‌ணம் சம்பாதிப்ப‌த‌ற்கு எவ்வெளவுக்கெவ்வ‌ளவு கெட்ட‌ வ‌ழிக‌ள் உள்ளதோ,அதை விட‌ மிக‌ மிக‌ அதிக‌மான ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் ந‌ம் கண் முன்னே இருக்கின்ற‌ன என்று காட்சிப்படுத்தியிருப்பதும் மிகவும் அருமை.'உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் உற்சாக‌ம்' ம‌ற்றும் 'க‌தைக‌ளைப் பேசும் விழிய‌ருகே எதை நான் பேச‌ என்னுயிரே' பாட‌ல்க‌ள் இன்னும் ம‌ன‌துக்குள் ரீங்கார‌மிட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌.காத‌ல் ஏற்ப‌ட்ட‌வுட‌ன் பெண் 'உணர்வு' பூர்வ‌மாய் மாறுவ‌தையும்,அதே நேர‌த்தில் ஆண் அந்தப் பெண்ணிற்கும் சேர்த்து 'நாளை' யைப் ப‌ற்றி யோசிக்க ஆர‌ம்பிப்ப‌தையும் 'செல்வ‌ராணி-சௌந்தர‌பாண்டி' எபிசோடின் மூல‌ம் அழகாக‌ முன் வைத்திருக்கிறார்க‌ள்.

மிக‌ப் பெரிய‌ அங்காடிக‌ளில் வேலை பார்க்கும் இளைஞர்க‌ள் ப‌டும் துய‌ர‌ங்க‌ளை மிக‌வும் விரிவாக‌க் காட்டிவிட்டு,அதே விச‌ய‌ங்களைப் பாட்டிலும் காட்டுவ‌து சோர்வை ஏற்ப‌டுத்துகிறது.அதே போல் அவ‌ர்களின் சிரமங்களை சொல்லும் சில‌ காட்சிக‌ள் 'கொஞ்சம்' மிகைப்படுத்த‌ப்ப‌ட்ட‌து போல் இருப்பதாகத் தோன்றுவது ப‌ட‌த்தின் மிக‌ப் பெரிய‌ ப‌ல‌வீன‌ம்.அது ப‌ட‌த்தின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையைக் குலைப்ப‌தாக‌ உள்ளது.ப‌ட‌த்தில் இட‌ம் பெறும் சில காட்சிக‌ள் ந‌ம்முள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்ப‌டுத்தாமல் வெறுமனே ந‌க‌ர்வ‌து ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்தினாலா அல்ல‌து ப‌ட‌த்தின் பின்ன‌ணி இசையினாலா என்று புரிய‌வில்லை.

எது எப்ப‌டியாகினும் நாம் பார்க்க‌ ம‌றந்த‌ உலக‌த்தை ந‌ம் க‌ண் முன் ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ற்ற‌ இய‌க்குன‌ர்க‌ளுக்கும் காட்டியதில் வ‌ச‌ந்த‌ பால‌ன் பார‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ராகிறார்.

அங்காடித் தெரு‍-'வெயில்' போல சுள்ளென்று நம் முக‌த்தில் அடிக்காவிட்டாலும்,ந‌ம் 'நிழல்'க‌ளை நமக்கு காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறது.

Monday, March 22, 2010

முன் தினம் பார்த்தேனே‍‍-திரை விம‌ர்ச‌ன‌ம்

நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரியான பெண்,இந்த உலகத்தில் 'ஒருவர்' மட்டுமே கிடையாது.ஒரே மாதிரி உருவ அமைப்பிலேயே ஏழு பேர் இருக்கும் போது,நம் மனதுக்கு/எண்ணத்துக்கு ஏற்ற மாதிரி அதிகமான பெண்கள் இவ்வுலகத்தில் இருப்பார்கள்.ஒருவர் நம்மை விட்டு விலகிச் சென்றாலும்,மற்றொருவர் நாம் நினைத்தபடியே நமக்கு கிடைப்பார் என்பதை சொல்லும் படம்தான் 'முன் தினம் பார்த்தேனே'.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு காதலிப்பதைத் தவிர வேறு 'வேலை' எதுவும் இல்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே,கதாநாயகனை Software Company-ல் Project Manager ஆக காட்டியிருக்கும் டைரக்டரின் சமயோசிதத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.அவர் Software Company போல் காட்டியிருக்கும் இடத்தையும்,ஆட்களின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது,மதுரைப் பக்கத்தில் வாழும் கதாநாயகன் சென்னை பாஷை பேசுவது போல் உள்ளது.

படத்தை ஒரளவிற்கு பார்க்க வைப்பது தமனின் இசையும்,சாய் பிரசாந்த்தின் காமெடியும் மட்டும்தான்.சாய் பிரசாந்த்திற்கு நிச்சயம் செய்த பெண் லெட்டர் எழுதி வைத்து விட்டு,வீட்டை விட்டு ஓடியவுடன்,ஹுரோ சஞ்சய்,லெட்டர் மட்டும் எழுதி வைச்சிருந்திருக்கலாமே என்று சாய் பிரசாந்த்திடம் கேட்பது கலக்கல்.நான் காய்ஞ்சு போயிருந்தாலும் என்னோட Taste அவ்வளவு Worst கிடையாது என்று ஹுரோ சஞ்சயின் நண்பனாக வருபவர் ஆஃபிஸ் தோழியிடம் கலாய்ப்பது,சாய் பிரசாந்த்தை அவர் தங்கை கலாய்ப்பது,டான்ஸ் கிளாஸ் காட்சிகள்,பிரியா உனக்கான ஒருத்தனோ/ஒருத்தியோ கண்டிப்பாகக் கிடைச்சிடுவாங்க‌ என்று படத்தின் பல இடங்களில் சின்ன சின்ன நகைச்சுவைக் காட்சிகளால் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.பொண்ணுங்க எல்லாம் நம்முடைய‌‌‌‌ கழுத்தை நம்மளவே அறுக்க வச்சு,அது நம்ம உடம்புக்கு நல்லதுன்னு நம்மளவே நம்பவும் வைச்சுடுவாங்க என்று படத்தின் வசனகர்த்தாவும் கிடைக்கும் இடங்களில் புகுந்து விளையாடுகிறார்‍‍.ஏற்கெனவே காதலில் தோல்வியுற்ற கதாநாயகன்,தான் விரும்பும் பெண்ணிற்கும் பழைய காதல் ஒன்று உள்ளது என்று தெரிய வந்தவுடன்,அவளை விட்டு விலகி வருவதும் பின்பு அவளையே நினைத்து உருகுவதும் யதார்த்தம்.

தன்னோட அடுத்த‌ படத்துக்காக T.ராஜேந்தர் தேர்வு செய்து வைத்திருந்த ஹீரொயின்ஸை எல்லாம்,படத்தின் டைரக்டர் மகிழ் திருமேனி இந்தப் படத்துக்காகக் கடத்தி கொண்டு வந்துவிட்டார் போல.அத‌னாலேயே,இந்தப் படம் பார்க்கும் போது,ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பதைப் போன்று உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதைத் தானே கொன்று விடுகிறான் என்று படத்தில் டைரக்டர் சொல்கிறார்-அவரும் கூட இந்தப் படத்தை ரொம்பவும் நேசித்துவிட்டார் போல்.

முன் தினம் பார்த்தேனே‍‍-படமும் ஏற்கெனவே பார்த்த மாதிரியே இருக்கிறது!