Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்



பாண்டிய இனத்தினுடைய குலத் தெய்வ சிலையை,சோழ இனம் பறித்துக் கொள்கிறது.இதற்காக இவர்களுக்குள் மூளும் போரில்-சோழ நாடு எல்லாவற்றையும் இழந்து-எஞ்சிய சில மக்களுடன்-கண் காணாத இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.தங்களுடைய நாட்டிற்கு என்றாவது ஒரு நாள் திரும்பிச் செல்வோம் என்ற நம்பிக்கைதான்,சோழ இன மக்களை அவ்வளவு சிரமமான வாழ்விற்கு இடையிலேயும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.எங்கோ கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இனத்தைத் தேடிக் கண்டிபிடித்து,சிலையை மட்டும் கவர்ந்து வர எண்ணாமல்,பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னும்,அதே பழைய வன்மத்துடன்,அந்த இன மக்களை-திட்டமிட்ட சதி,நம்பிக்கைத் துரோகம் போன்றவற்றின் துணை கொண்டு,போர் தர்மங்களையும் காற்றில் பறக்க விட்டு,கூண்டோடு அழித்தொழிக்க முயலும் மற்றொரு இனத்தின் கதைதான்,செல்வராகவன் 'Fantasy' யோடு கொடுத்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்'.

M.G.R படத்துப் பேரை வைத்திருப்பதினாலேயே,M.G.R படப் பாடல்கள்,படத்தின் முதல் பாகம் முழுவதும் ஒலிக்கின்றன.செல்வராகவன் தன்னுடைய பழைய பாடத்தின் சாயல்களை கவனமாகத் தவிர்த்திருந்தாலும்,'கட்டிப்பிடி' வைத்தியம் போன்ற சில காட்சிகளில் பழைய செல்வராகவனைப் பார்க்க முடிகிறது.முதல் பாதியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,கொஞ்சம் தடுமாறுகிறது படத்தின் இரண்டாவது பாதி.பாம்பு,புதை குழியிலிருந்து தப்பிப்பது போன்று நம்ப முடியாத சில விஷயங்கள் இருந்தாலும்,இப்படிப்பட்ட படங்களைத் தமிழிலும் எடுக்க முடியும் என்று நிருபித்ததுற்காகவே செல்வராகவனைப் பாராட்டலாம்.இளையராஜா அல்லது ரகுமான் இசை அமைத்திருத்தால் படத்தின் பின்னணி இசை இன்னும் அழகாய் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தில் நடித்துள்ள/பங்களித்துள்ள கலைஞர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பின் குறிப்புகள்:

1) நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தியேட்டரில் ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட ஒரு கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி,மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட நூறு கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி,டிக்கெட்டின் விலை நூறு ரூபாய்தான்.அந்த வகையில் இந்தப் படம் எனக்கு திருப்தியளித்தது.

2) இந்தியா,ஆஸ்திரேலியா போன்ற 'டீம்' களுடன் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி,ஜெயிக்கும் நிலைமைக்கு சென்று,கடைசி நேரத்தில் சில தவறுகள் செய்து,நூலிழையில் தோற்றாலும் எனக்கு இந்திய'டீம்' மேல் கோபம் வருவதில்லை.அதற்குப் பதிலாக அவர்களைப் பாராட்டவே தோன்றும்.அதே நேரத்தில் 'பங்களாதேஷ்' போன்ற 'சொத்தை' 'டீம்' களுடன் விளையாடி,மிகவும் கஷ்டப்பட்டு கடைசி பந்தில் ஜெயித்தாலும்,இந்தியன் 'டீமை' அப்போதைக்கு திட்டத்தான் தோன்றுகிறது.

3) தமிழில் இப்பொழுது 'ரிலீஸ்' ஆகும் படங்களை,அதனுடன் வெளி வந்த அல்லது அந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன் வந்த மற்ற படங்களுடன்தான்(குறைந்த பட்சம் தென் இந்திய மொழிப் படங்கள்) ஒப்பிடத் தோன்றுகிறது‍‍-இங்கிலீஸ் படங்களுடன் அல்ல.(இந்தப் படம் தெலுங்கு 'அருந்தியை' விட நன்றாகவே இருப்பதாகத் தோன்றுகிறது)

4) ஒலிம்பிக் போன்ற போட்டிகளில்,இந்திய நாட்டின் சார்பாக விளையாடச் செல்லும் நபர் வெண்கலப் பதக்கமோ அல்லது நான்காவது இடமே பெற்றாலும் கூட எனக்கு அவரைத்தான் பாராட்ட தோன்றுகிறது.ஏனென்றால் இங்கே கிடைக்கும் வசதி வாய்ப்புகளையும்,பல முட்டுக்கட்டைகளையும் தாண்டி ஒருவர் வெண்கலப் பதக்கம் வாங்குவது,அமெரிக்கா அல்லது சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கப் பதக்கம் வாங்குவதை விட மேன்மையானது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம்.

5) தமிழில் மிக,மிக குறைவாக படம் பார்க்கும் ஒருவர் கூட 'மூன்று' அல்லது 'நான்கு' மாதங்களுக்கு இடையில் ஒரு படமாவது பார்த்து விடுவார்.அதன்படி,கடந்த மூன்று மாதங்களில் இதற்கு இணையான அல்லது இதைவிட 'நல்ல' படம் எதுவும் வந்து இருப்பதாக‌ எனக்குத் தோன்றவில்லை.

ஆயிரத்தில் ஒருவன்-'ரொம்ப' நல்ல படம் என்று சொல்ல முடியாவிட்டாலும்-நல்ல படம் என்று தயங்காமல்,மனம் திறந்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.

Tuesday, January 12, 2010

நிராகரிப்பு



தனிமை என்னை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கிய
வெம்மையான ஒரு பகல் வேளையில்
எறும்பு ஒன்று என்னுள்
ஊர்ந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் பிரியங்களையும்,வலிகளையும்
எறும்பின் மேல் ஏற்றிவிட்ட கணத்தில்
பாரம் தாங்காமல் கீழே விழ ஆரம்பித்தது
என் பிரியங்களை
என்னிடமே விட்டு விட்டு...

[உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது]

Thursday, January 7, 2010

பிரிய‌ச‌கி-3


நீரும் நெருப்பும்-அது
M.G.R படம்
நீயும் நானும்
காதலின் பிறப்பிடம்!

நீ பார்த்து செல்லும்
ஒவ்வொரு முறையும்
என் இதயம் Restart ஆகிறது!

உன் முகத்தில் விழும்
ஒற்றை முடி கற்றை
என் விரல்களுக்கு ஊஞ்சலாகிறது!

உன் பெயரை மட்டுமே
உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்
இரவு நேரத்துப் பூனை போன்று!

தேவதைகளும் வந்து
அழகுக் குறிப்புகள்
வாங்கிச் செல்லும் அழகி நீ!

என் பிறந்த நாளுக்கு
என்ன பரிசு வேண்டுமென்று கேட்டுவிட்டு
பரிசைச் சொன்னவுடன்-அப்போதைக்கு
கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு செல்கிறாய்!

Thursday, December 31, 2009

Top 10 Movies-2009

இந்த வருடத்தில் நான் பார்த்த தமிழ் படங்கள் பின் வருமாறு:

1.படிக்காதவன்
2.வில்லு
3.காதல்னா சும்மா இல்லை
4.வெண்ணிலா கபடிக்குழு
5.த.நா.07-அல-4777
6.சிவா மனசுல சக்தி
7.தீ
8.யாவரும் நலம்
9.அயன்
10.கார்த்திக் அனிதா
11.குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும்
12.பசங்க
13.நீயூட்டனின் மூன்றாம் விதி
14.சர்வம்
15.ராஜாதிராஜா
16.மாயாண்டிகுடும்பத்தார்
17.மாசிலாமணி
18.முத்திரை
19.வால்மீகி
20.நாடோடிகள்
21.வாமனன்
22.இந்திரவிழா
23.அச்சமுண்டு அச்சமுண்டு
24.மோதி விளையாடு
25.மலை மலை
26.சிந்தனை செய்
27.பொக்கிஷம்
28.நினைத்தாலே இனிக்கும்
29.ஈரம்
30.உன்னை போல் ஒருவன்
31.சொல்ல சொல்ல இனிக்கும்
32.திரு திரு துறு துறு
33.பேராண்மை
34.கண்டேன் காதலை
35.ஆதவன்
36.யோகி
37.வேலுபிரபாகரனின் காதல் கதை
38.ரேனிகுண்டா
39.கந்தசாமி
40.லாடம்
41.வேட்டைக்காரன்
42.நான் கடவுள்


இந்த‌ வ‌ருட‌ம் தமிழில் வ‌ந்த‌ நல்ல‌ ப‌ட‌ங்க‌ளின் எண்ணிக்கை மிக‌வும் குறைவு என்ப‌தாக‌த்தான் தோன்றுகிற‌து.என‌க்குப் பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ளில் நான் 'ரீமேக்' ப‌ட‌ங்க‌ளை சேர்க்க‌வில்லை.

1.வெண்ணிலா கபடிக்குழு
2.யாவரும் நலம்
3.நான் கடவுள்
4.அச்சமுண்டு அச்சமுண்டு
5.ஈரம்
6.ரேனிகுண்டா
7.அயன்
8.திரு திரு துறு துறு
9.சிவா மனசுல சக்தி
10.பசங்க


அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக‌ள்!

Wednesday, December 30, 2009

Top 10 Songs-2009

தினம் தினம் எத்தனையோ பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும்,சில பாடல்கள் மட்டும்,ஏதோ சில காரணங்களினால் நம் மனதுக்கு மிக பிடித்த பாடலாகிவிடுகின்றன.இந்த வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது,இந்த 10 பாடல்கள்தான் நான் அதிகமான முறை கேட்ட,கேட்க‌ விருப்பப்படுகின்ற‌‌ பாடல்களாக இருக்கின்றன.


1. அங்காடித் தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
2. அய‌ன்‍-விழி மூடி யோசிக்கையில்-இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
3. அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
4. நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
5. பொக்கிஷம்-நிலா நீ காற்று-‍இசை:ச‌பேஷ் முர‌ளி
6. குளிர் 100-ம‌ன‌செல்லாம் உன்னை -இசை:பாபோ ச‌ஷி
7. ஈர‌ம்-ம‌ழையே ம‌ழையே-இசை:தம‌ன்
8. குங்கும‌ப் பூவும் கொஞ்சும் புறாவும்-சின்ன‌ஞ் சிறுசுக‌-‍இசை:யுவ‌ன் ஷங்க‌ர் ராஜா
9. லீலை-ஜில்லென்று ஒரு கலவரம்‍-‍இசை:சதீஷ் சக்ரவர்த்தி
10. யாவரும் நலம்-காற்றிலே வாச‌மே‍-ச‌ங்க‌ர்-எசான்-லாய்

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்-விமர்சனம்


பாபு சிவன் இயக்கத்தில், விஜயின் 49- வது படமாக வெளிவந்திருக்கும் படம்தான் 'வேட்டைக்காரன்'. ஏற்கெனவே 'ஃப்ளாப்' ஆன 'சத்யம்' படத்தோட கதையவே உல்டா பண்ணி வேட்டைக்காரனாக எடுத்திருக்கும் பாபுசிவன்,விஜய் இருவரின் 'மன உறுதியையும்' கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.முந்தைய படங்களில் திருப்பாச்சி,மதுரை..யிலிருந்து சென்னைக்கு வருவது போல்,இந்தப் படத்தில் விஜய் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வருகிறார்.இந்தப் படத்திலும் சின்ன வில்லன்,பெரிய வில்லன் மற்றும் இன்னும் கொஞ்சம் பெரிய வில்லனோடு மோதி அவர்களை துவம்சம் செய்கிறார்.

திருப்பாச்சி படத்திலாவது விஜய் முகத்தில் சந்தனம் பூசியிருப்பதால் வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருந்தது. ஆனால்,இந்தப் படத்தில் டைரக்டர்,இன்னும் பல படி மேலே போய்,விஜய் நெற்றியில் மஞ்சள் கலர் ரிப்பன் இல்லையென்றால்,வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாதபடி 'வித்தியாசமாக' யோசித்திருக்கிறார்.வேட்டைக்காரனை பார்க்கும் பொழுதுதான் அழகிய தமிழ் மகன்,வில்லு படங்களின் அருமை தெரிகிறது.


விஜயின் தீவிர ரசிகர்களுக்கே படத்தின் இரண்டாவது பாதி பிடிக்குமா என்று தெரியவில்லை.விஜயிற்கு பின் சினிமா உலகில் நுழைந்து,அவரோட நடிப்பை 'காப்பி' அடித்த நடிகர்களே,இன்று வித்தியாசமான (அ) நல்ல படங்களில் நடிக்க முயற்சிக்கும் பொழுது,விஜய் மட்டும் 'ஒரே' மாதிரி படங்களில் நடிப்பதை பார்க்கும் பொழுது அவர் மேல் பரிதாபம்தான் எழுகிறது.ரஜினி 'ஃபார்முலாவில்',ரஜினியே இன்று படம் நடித்தாலும் ஓடாது என்பதுதான் உண்மை.


இந்தப் படம் பார்த்து மூன்று மணி நெரம் 'Waste' பண்ணதும் இல்லாமல்,இந்தப் படத்துக்கு விமர்சனம் வேற எழுதணுமானு யோசிச்சப்ப விஜய் இந்தப் படத்தில் சொன்ன ஒரு வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது, "தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".


வேட்டைக்காரன்‍-விஜய்

Friday, December 4, 2009

ஊடல்


உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஓடாத கடிகாரம் போல்
அசைவற்றுக் கிடக்கிறேன்!
*******
ஆறு வளைகையில்
கரையும் வளைவது போல்
நீ சிரிக்கையில்
நானும் சிரிக்கிறேன்
நீ அழுகையில்
நானும் அழுகிறேன்!
*******
ஊடலுற்ற ஒரு தருணத்தில்
காய்கறிகளை நறுக்கிக்கொண்டே
என் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
வெட்டத் தொடங்கினாய்
கடைசியில்
காயம் பட்ட உன் விரல்களுக்கு
என் வார்த்தைகளே மருந்தாகியது!
*******