Tuesday, February 9, 2010

SMS



கொடும் கனவுகளூடே
கரையும் யாருமற்ற இரவு
மயான அமைதியைக் கிழிக்கும்
நாய்களின் ஊளல்
தானாகவே திறந்து மூடும்
சன்னல்களும்,கதவுகளும்
பேயறைந்த உணர்வில்
தூக்கமில்லாமல் தவிக்கும் கண்கள்
பயம் நிறைந்து நீளும் இரவை
ஒரே நொடியில்
இல்லாமல் செய்து விடுகிறது
உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.

Monday, February 8, 2010

அச‌ல்‍-விம‌ர்ச‌ன‌ம்


விஜய்க்கு சரியான போட்டியாளன் தான் மட்டுமே என்பதை நிரூபிக்க சரண் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தான் அசல்.

அப்பா அஜித்திற்கு,இரண்டு மனைவிகள்.மூத்த மனைவிக்கு பிறந்தவர்கள் சம்பத்தும்,ராஜிவ் கிருஷ்ணாவும்.இரண்டாவது மனைவியின் பிள்ளை அஜித்.இதில் அப்பாவிற்கு விசுவாசமான 'அசல்' பிள்ளை யார் என்பதுதான் அசல் படத்தின் கதை.

படத்தின் பெரும் பகுதி ஃப்ரான்சில் நடப்பதால் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் காட்சிகளெல்லாம் அழகாக இருக்கின்றன்.'Fashion Show'-ல் மாடல்கள் நடப்பது போல் இன்னும் எத்தனை படங்களில் அஜித் இப்படியே நடந்து கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை.படத்தின் டைட்டிலில் 'கோ-டைரக்டர்' மற்றும் கதை,திரைக்கதை,வசனம் உதவி 'அஜித்' என்று போட்டிருந்ததைப் பார்த்த பொழுது,சரணுக்கு தன்னுடைய படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக,பதிலுக்கு சரண் பண்ணிய உதவியோ என்று தோன்றியது.முழுப் படத்தையும் பார்க்கும் பொழுதுதான் அஜித் உண்மையிலேயே 'Involve(?)' பண்ணியிருப்பது தெரிகிறது.தன் பெயருக்கு முன்னால் 'அல்டிமேட் ஸ்டார்' என்று போடுவதை இந்தப் படத்திலிருந்து நிறுத்தியிருப்பது போல்,படத்தின் வசனங்களிலும் 'தலை' என்பதைத் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அதைத் தொடர்ந்து கேட்கும் பொழுது நமக்குத்தான் 'தலை' வலிக்கிறது.

யூகி சேதுவின் சில காட்சிக‌ளும்,பட‌த்தின் இர‌ண்டாம் ப‌குதியில் ச‌மீரா ரெட்டியும்,பாவ‌னாவும் பேசிக் கொள்ளும் சில‌ வ‌ச‌ன‌ங்களும் நன்றாக‌ இருக்கின்றன.எல்லாப் படங்களிலும் 'ஹீரோ' பறந்து பறந்து அடியாட்களை அடிப்பார்.இந்தப் படத்தில் 'பறந்து பறந்து' வரும் அடியாட்களை 'ஹீரோ' அடிக்கிறார்.‌டைரக்டருக்கு அஜித்துடன்,பாவனாவைத்தான் கடைசியில் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால்,சமீரா கேரக்டரையே,பாவனாவிற்கு கொடுத்திருந்திருக்கலாம்.

ஒரு திறமையான‌ பேட்ஸ்மேன்,மிக‌ச் சாத‌ர‌ண பாலுக்கு அவுட்டாவ‌து போல்,அஜித் போன்ற ந‌ல்ல‌ ந‌டிக‌ர் 'அச‌ல்' மாதிரி ப‌ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுத்து ந‌டிப்ப‌தைப் பார்க்கும் பொழுது வ‌ருத்த‌மாக‌த்தான் இருக்கிற‌து.

இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்த‌திலே ஏற்ப‌ட்ட‌ ஒரே உருப்ப‌டியான‌ விச‌ய‌ம் 'Mercy' என்கின்ற‌ ஃபிரென்ச் வார்த்தைக்கு 'ந‌ன்றி' என்பது‌ அர்த்த‌ம் என்பதைத் தெரிந்து கொண்ட‌துதான்.

அச‌ல்‍-ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் நக‌ல்.

Tuesday, February 2, 2010

த‌மிழ்ப்ப‌ட‌ம்‍-விம‌ர்ச‌ன‌ம்



பிறந்தவுடனே சாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த குழந்தை ஒன்று,எப்படி 'வளர்ந்தவுடன்' பெரிய ஹீரோவாகிறது (அ) தன்னுடைய‌ பேரனைப் பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக,ஒரு பாட்டி அனுபவிக்கும் இன்னல்களும்,துயரங்களும் கொண்ட 'கண்ணீர் காவியம்தான்' தமிழ்ப்படம் (அ) அட போங்கப்பா....கதையா இப்ப முக்கியம்.
வெங்கட்பிரபு தன்னுடைய படங்களில் சின்னதாக ஆரம்பித்து வைத்த ஒரு விசயத்தையே 'முதலாகக்' கொண்டு,எல்லோரும் இரசிக்கக்கூடிய வகையில்,முழுப்படத்தையும் காமெடியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதன்.

கருத்தம்மா,தளபதி,பாட்ஷா,பாய்ஸ்,காதலுக்கு மரியாதை,7G ரெயின்போ காலனி,நாயகன்,சிவாஜி,மொழி,கஜினி,தூள்,மௌன ராகம்,காதலன்,காக்க காக்க,அபூர்வ சகோதரர்கள்,வைதேகி காத்திருந்தாள்,பாண்டவர் பூமி,சமுத்திரம்,அந்நியன்,ரன்,கந்தசாமி,போக்கிரி,பில்லா...இப்படி ஹிட்டான படங்களையே கிண்டல் பண்ணுவதால்,படத்தோடு ஒன்றி,எல்லாக் காட்சிகளையும் இரசிக்க முடிகிறது.

ஹீரோ சிவா ஒவ்வொரு வில்லன்களையும் கொல்வதற்குப் பயன்படுத்தும் 'உக்தி' யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 'அட்டகாசமாக' உள்ளது.தன்னை நெருங்கவிடாமல் செய்ய, வில்லன் ஏற்படுத்தும் மின்சாரம்,புயல்,தீ போன்ற மூன்று தடைகளை முறியடிப்பதாகட்டும்,முக்கியமான வேலையாக(?) பாண்டிச்சேரி செல்வதற்காக மேலதிகாரியிடம் 'லீவ்' அப்ளை பண்ணுவதாகட்டும், சிவாவைத் தவிர இந்தப் படத்திற்கு ஹீரோவாக வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.படத்தில் ஹீரோவின் குடும்பப் பாடல் வரும்பொழுது சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்தப் படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் வசனகர்த்தாதான்.'நான் சாகறதுக்குள்ளே பரத நாட்டிய அரங்கேற்றம் பண்ணனும்‍‍-அப்ப உங்களுக்கு சாவே வராதா' என்று காட்சிக்கு காட்சி நம்முடைய வயிற்றைப் பதம் பார்க்கிறார்.படத்தின் மிகப் பெரிய மற்றொரு பலம்,படத்தின் டைரக்டர் எல்லாவற்றையும் 'மாற்றி யோசி'த்திருப்பது.பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோவின் வயது '50'ற்கு மேல் இருந்தாலும் அவரின் நண்பர்களின் உண்மையான வயது '25' ஆக இருக்கும்.ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவிற்கு 25 வயது. அவருடைய நண்பர்களுக்கெல்லாம் வயது '50'ற்கு மேல்.கிட்டத்தட்ட 'எல்லா' காட்சிகளையும் இப்படி 'உல்டா' வாக்கியிருப்பதுதான் படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்கிறது.இடைவேளைக்குப் பிற‌கு சிறிது நேர‌ம் ப‌ட‌ம் தொய்வாக‌ செல்வ‌து ஒரு குறை.

பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம்... போன்றோரின் பல படங்களால் எப்படி தமிழ் சினிமா மற்றொரு தளத்திற்கு சென்றதோ,அதேபோல் இந்தப் படமும் கூட மாற்றத்தைக் கொண்டு வரலாம்.இனி வரும் படங்களில் எந்த ஹீரோவும் 'பஞ்ச்' டயலாக் பேசினாலோ அல்லது 'Opening Song'-ல் 'ப‌ந்தா' காட்டினாலோ,ம‌க்க‌ள் ம‌ன‌தில் இந்த‌ப் ப‌ட‌ம் ஞாப‌க‌த்திற்கு வ‌ந்து சிரிப்பைக் கூட‌ உண்டு ப‌ண்ணலாம்.

ஏறக்குறைய‌ எல்லா நடிக‌ர்க‌ளும் '2011'‍ல் முத‌ல‌மைச்சர் ப‌த‌விக்கு க‌ன‌வு கொண்டிருக்கும் இந்த‌ வேளையில்,இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்த‌த‌ற்காக‌ த‌யாரிப்பாளரை,அவ‌ருடைய‌ தாத்தா,அப்பா,சித்த‌ப்பா ம‌ற்றும் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ப் பாராட்டியிருப்பார்க‌ள்.

த‌மிழ்ப்ப‌ட‌ம்‍-I.S.I முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌ 'அக்மார்க்' த‌மிழ்ப்ப‌ட‌ம்

கோவா-திரை விமர்சனம்


கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் மூன்று இளைஞர்கள்,ஊர் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு,ஒரு 'உயர்ந்த' இலட்சியத்துடன் கோவா செல்கிறார்கள்.தங்களுடைய இலட்சியத்தை அவர்களால் அடைய முடிகிறதா என்பதுதான் கோவா படத்தின் கதை.

இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு தன்னுடைய முந்தையப் படங்களைப் போலவே பழைய படங்களை நன்றாகவே கிண்டலடித்திருக்கிறார்.ஜெய்,பிரேம்ஜி அமரன்,வைபவ் காதலோடு 'இன்னொரு' காதலும் ஒரே ட்ராக்கில் போவது நன்றாகவே இருக்கிறது.ஜெய்-பியா,பிரேம்ஜி அமரன்-வெள்ளைக்காரப் பொண்ணு காதலோடு ஒப்பிடும்போது,வைபவ்-சினேகா காதல் படத்துடன் ஒட்டவே இல்லை.வெள்ளைக்காரப் பொண்ணை ரொம்ப நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார்கள்.சம்பத்தை தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே,இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு 'அழகாகப்' பயன்படுத்தியிருக்கிறார்.சிம்புவையும் மிக அழகாக கதைக்குள் பொருந்திப் போகச் செய்திருப்பது வெங்கட் பிரபு 'டச்'.

6 Packs coming soon,தமிழ் நாட்டையே உங்களுக்கு கொடுக்கிறேன்னு சொல்லி-தமிழ்நாடு மேப்பைக் கொடுப்பது என்று பல சின்ன சின்ன விசயங்கள் நன்றாகவே இருந்தாலும்,முழுப் படமாகப் பார்க்கும் போது பல காட்சிகள் மனதில் ஒட்டாமலேயே இருக்கின்றன.எமோஷனாலான சில காட்சிகளையும் காமெடியாக மாற்றும் பொழுது சிரிக்கவும் முடிவதில்லை.அதிகமான பாடல்களும் படத்தின் வேகத்திற்கு தடையாகவே இருக்கின்றன.

கோவா‍‍-'பாண்டிச்சேரி'.

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்



பாண்டிய இனத்தினுடைய குலத் தெய்வ சிலையை,சோழ இனம் பறித்துக் கொள்கிறது.இதற்காக இவர்களுக்குள் மூளும் போரில்-சோழ நாடு எல்லாவற்றையும் இழந்து-எஞ்சிய சில மக்களுடன்-கண் காணாத இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.தங்களுடைய நாட்டிற்கு என்றாவது ஒரு நாள் திரும்பிச் செல்வோம் என்ற நம்பிக்கைதான்,சோழ இன மக்களை அவ்வளவு சிரமமான வாழ்விற்கு இடையிலேயும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.எங்கோ கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இனத்தைத் தேடிக் கண்டிபிடித்து,சிலையை மட்டும் கவர்ந்து வர எண்ணாமல்,பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னும்,அதே பழைய வன்மத்துடன்,அந்த இன மக்களை-திட்டமிட்ட சதி,நம்பிக்கைத் துரோகம் போன்றவற்றின் துணை கொண்டு,போர் தர்மங்களையும் காற்றில் பறக்க விட்டு,கூண்டோடு அழித்தொழிக்க முயலும் மற்றொரு இனத்தின் கதைதான்,செல்வராகவன் 'Fantasy' யோடு கொடுத்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்'.

M.G.R படத்துப் பேரை வைத்திருப்பதினாலேயே,M.G.R படப் பாடல்கள்,படத்தின் முதல் பாகம் முழுவதும் ஒலிக்கின்றன.செல்வராகவன் தன்னுடைய பழைய பாடத்தின் சாயல்களை கவனமாகத் தவிர்த்திருந்தாலும்,'கட்டிப்பிடி' வைத்தியம் போன்ற சில காட்சிகளில் பழைய செல்வராகவனைப் பார்க்க முடிகிறது.முதல் பாதியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,கொஞ்சம் தடுமாறுகிறது படத்தின் இரண்டாவது பாதி.பாம்பு,புதை குழியிலிருந்து தப்பிப்பது போன்று நம்ப முடியாத சில விஷயங்கள் இருந்தாலும்,இப்படிப்பட்ட படங்களைத் தமிழிலும் எடுக்க முடியும் என்று நிருபித்ததுற்காகவே செல்வராகவனைப் பாராட்டலாம்.இளையராஜா அல்லது ரகுமான் இசை அமைத்திருத்தால் படத்தின் பின்னணி இசை இன்னும் அழகாய் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தில் நடித்துள்ள/பங்களித்துள்ள கலைஞர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பின் குறிப்புகள்:

1) நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தியேட்டரில் ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட ஒரு கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி,மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட நூறு கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி,டிக்கெட்டின் விலை நூறு ரூபாய்தான்.அந்த வகையில் இந்தப் படம் எனக்கு திருப்தியளித்தது.

2) இந்தியா,ஆஸ்திரேலியா போன்ற 'டீம்' களுடன் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி,ஜெயிக்கும் நிலைமைக்கு சென்று,கடைசி நேரத்தில் சில தவறுகள் செய்து,நூலிழையில் தோற்றாலும் எனக்கு இந்திய'டீம்' மேல் கோபம் வருவதில்லை.அதற்குப் பதிலாக அவர்களைப் பாராட்டவே தோன்றும்.அதே நேரத்தில் 'பங்களாதேஷ்' போன்ற 'சொத்தை' 'டீம்' களுடன் விளையாடி,மிகவும் கஷ்டப்பட்டு கடைசி பந்தில் ஜெயித்தாலும்,இந்தியன் 'டீமை' அப்போதைக்கு திட்டத்தான் தோன்றுகிறது.

3) தமிழில் இப்பொழுது 'ரிலீஸ்' ஆகும் படங்களை,அதனுடன் வெளி வந்த அல்லது அந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன் வந்த மற்ற படங்களுடன்தான்(குறைந்த பட்சம் தென் இந்திய மொழிப் படங்கள்) ஒப்பிடத் தோன்றுகிறது‍‍-இங்கிலீஸ் படங்களுடன் அல்ல.(இந்தப் படம் தெலுங்கு 'அருந்தியை' விட நன்றாகவே இருப்பதாகத் தோன்றுகிறது)

4) ஒலிம்பிக் போன்ற போட்டிகளில்,இந்திய நாட்டின் சார்பாக விளையாடச் செல்லும் நபர் வெண்கலப் பதக்கமோ அல்லது நான்காவது இடமே பெற்றாலும் கூட எனக்கு அவரைத்தான் பாராட்ட தோன்றுகிறது.ஏனென்றால் இங்கே கிடைக்கும் வசதி வாய்ப்புகளையும்,பல முட்டுக்கட்டைகளையும் தாண்டி ஒருவர் வெண்கலப் பதக்கம் வாங்குவது,அமெரிக்கா அல்லது சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கப் பதக்கம் வாங்குவதை விட மேன்மையானது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம்.

5) தமிழில் மிக,மிக குறைவாக படம் பார்க்கும் ஒருவர் கூட 'மூன்று' அல்லது 'நான்கு' மாதங்களுக்கு இடையில் ஒரு படமாவது பார்த்து விடுவார்.அதன்படி,கடந்த மூன்று மாதங்களில் இதற்கு இணையான அல்லது இதைவிட 'நல்ல' படம் எதுவும் வந்து இருப்பதாக‌ எனக்குத் தோன்றவில்லை.

ஆயிரத்தில் ஒருவன்-'ரொம்ப' நல்ல படம் என்று சொல்ல முடியாவிட்டாலும்-நல்ல படம் என்று தயங்காமல்,மனம் திறந்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.

Tuesday, January 12, 2010

நிராகரிப்பு



தனிமை என்னை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கிய
வெம்மையான ஒரு பகல் வேளையில்
எறும்பு ஒன்று என்னுள்
ஊர்ந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் பிரியங்களையும்,வலிகளையும்
எறும்பின் மேல் ஏற்றிவிட்ட கணத்தில்
பாரம் தாங்காமல் கீழே விழ ஆரம்பித்தது
என் பிரியங்களை
என்னிடமே விட்டு விட்டு...

[உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது]

Thursday, January 7, 2010

பிரிய‌ச‌கி-3


நீரும் நெருப்பும்-அது
M.G.R படம்
நீயும் நானும்
காதலின் பிறப்பிடம்!

நீ பார்த்து செல்லும்
ஒவ்வொரு முறையும்
என் இதயம் Restart ஆகிறது!

உன் முகத்தில் விழும்
ஒற்றை முடி கற்றை
என் விரல்களுக்கு ஊஞ்சலாகிறது!

உன் பெயரை மட்டுமே
உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்
இரவு நேரத்துப் பூனை போன்று!

தேவதைகளும் வந்து
அழகுக் குறிப்புகள்
வாங்கிச் செல்லும் அழகி நீ!

என் பிறந்த நாளுக்கு
என்ன பரிசு வேண்டுமென்று கேட்டுவிட்டு
பரிசைச் சொன்னவுடன்-அப்போதைக்கு
கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு செல்கிறாய்!