Wednesday, September 8, 2010

Top 10 Songs-August

1) இரும்பிலே ஒரு இதயம்-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) யார் இந்த பெண்தான்‍-‍பாஸ் என்கிற பாஸ்கரன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) தட தட என்று-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) அடி சாரலே-‍சிக்கு புக்கு‌-இசை:கலோனியல் கசின்ஸ் & பிரவீன் மணி

5) ஆத்தாடி ஆத்தாடி-அய்யனார்-‍இசை:தமன்

6) இறகைப் போலே-‍நான் மகான் அல்ல‌-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) ஏதேதோ ஏதே ஏதோ-‍ஊலலா-இசை:சேகர் சந்திரா & வி.குமார்

8) பார்வை உந்தன்‍‍-நில் கவனி செல்லாதே-‍இசை:செல்வகணேஷ்

9) ஒரு வானவில்லின்‍-காதல் சொல்ல வந்தேன்-இசை:யுவன் சங்கர் ராஜா

10) இரவினில் உந்தன்-‍‍நீயே என் காதலி-‍இசை:பிரேம் குமார்

Tuesday, September 7, 2010

க‌மல்ஹாச‌ன்-ஒரு அற்புத‌க் க‌லைஞன்


இந்தப் பதிவு கண்டிப்பாக நண்பர் கருந்தேள் எழுதிய பதிவிற்கு எதிர் பதிவு கிடையாது. அவருடைய பதிவுகளை,அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே விரும்பி படித்து வருகிறேன். ஒவ்வொரு விசயத்தின் மீதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும்.இந்தப் பதிவில் கமலை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான‌ காரணங்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

கமல் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றச்சாட்டு அவர் ஆங்கிலப்படங்கள் சிலவற்றை காப்பி அடித்து தமிழில் பெயர் வாங்கிக் கொண்டார் என்பது. நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமல் ஆரம்ப‌த்திலிருந்து இப்போது வரை தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்துபவர்.அதற்கப்புறம்தான் அவருடைய மற்ற பரிமாணங்கள்.
கமலின் ஆரம்பக் காலத்துப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. அதற்கு முன் மகேந்திரன்,பாரதிராஜா,பாலசந்தர் என்று தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல சினிமாக்களையும் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா,தொடர்ந்து மசாலா படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல் நல்ல படங்கள் வந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பண்ண வேண்டிய மாற்றத்தை,வேறு வழியில்லாமல் நடிகரான கமல் பண்ண வேண்டியதாயிருந்தது.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த கமலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை.அதனால்தான்,அவரே வித்தியாசமான படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.இருப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்த‌ சாதா‌ர‌ண காமெடி ப‌ட‌மாகிய‌ 'எல்லாமே இன்ப‌ மைய‌ம்' ப‌ட‌த்தில் க‌ம‌லின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள‌லாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை' யைத் தானே தயாரித்து நடித்தார்.கமலினுடைய ஆசையெல்லாம் வெளி நாட்டில் நல்ல கதைகளோடு வரும் படங்களைப் போன்று தமிழிலும் நல்ல படங்கள் வர வேண்டுமென்பதே.இதில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.கமல் ஏதோ வெளி நாட்டுப் படங்களை படங்களை மட்டுமே தமிழுக்கு கொண்டு வந்தார் என்றில்லை. மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்தப் படங்களையெல்லாம் முடிந்த அளவிற்கு நன்றாகவும் கொடுத்திருக்கிறார்.(குருதிப்புனல் பார்த்துவிட்டு அதன் ஒரிஜினல் டைரக்டர் சொன்னது; "ஒரிஜினலை விடவும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்" என்பதுதான்.இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது.(இதில் பொதுவாக காப்பி அடிப்பதைப் பற்றி இந்தியர்கள் யாருமே பெரிதாக கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை.நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்).

இன்னும் சொல்லவேண்டுமானால் இப்படி கமல் நடித்த பெரும்பாலான படங்கள் அவருடைய தயாரிப்பிலோ,இயக்கத்திலோ வ‌ந்த‌வை கிடையாது.க‌ம‌ல் என்ன‌வோ அந்த‌ மாதிரி ப‌ட‌ங்களில் ம‌ட்டுமே ந‌டித்து பெய‌ர் வாங்கிய‌து போல் சில‌ர் சொல்வ‌து ஒப்புக் கொள்ள முடியாது.க‌ம‌ல் த‌ன‌க்குக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த ப‌ட‌ங்கள் எந்த‌ மொழியிலிருந்தாலும் த‌ய‌ங்காம‌ல் ந‌டித்து வ‌ந்தார். அத‌னால்தான் புஷ்பக்,கோகிலா(க‌ன்னட‌ம்),ச‌ல‌ங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து(தெலுங்கு),ஏக் துஜே கேலியே(இந்தி) என்று அவ‌ரால் எல்லா மொழிக‌ளிலும் நல்ல ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க முடிந்த‌து. மேலும்,த‌மிழ்,தெலுங்கு,க‌ன்ன‌ட‌ம்,ம‌லையாளம்,இந்தி என்று அனைத்து மொழிக‌ளிலும் நேர‌டிப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இந்திய ந‌டிக‌ர் கமல் ஒருவர்‌‌ ம‌ட்டும்தான் என்பது மறக்க முடியாத உண்மை.

தமிழ் சினிமாவிற்கு கமல் செய்த மிக நல்ல விசயம் என்னவென்றால், வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததுதான். மற்ற மொழிகளிலெல்லாம் இப்போதிருக்கும் இளம் நடிகர்கள் கொஞ்சம் நன்றாக நடித்தால் கூட தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். இங்கே விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவதற்கு மிகக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது.அதற்குக் காரணம், கமல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கிற Standard தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அமிதாப்பின் நடிப்பை 'பா' படத்தில் எல்லா வட இந்தியப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதியிருந்தன. இதேபோல் வேறு ஒரு நடிகர் நடித்து,தமிழில் வந்திருந்தால் மக்கள் என்ன சொல்வார்கள்,கமல்தான் இதே மாதிரி ஏற்கெனவே பண்ணியிருக்கிறாரே என்று சாதாரணமாக நினைப்பார்கள்.(அதற்காக நான் அமிதாப்பின் உழைப்பைக் குறை கூறுகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம்). அதுதான் கமலின் வெற்றி. அதனால்தான் இங்கே உள்ள நடிகர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துப் பேர் வாங்குவதற்கான ஆரம்ப சுழி கமலிடமிருந்தே ஆரம்பமாகியது என்று கூறுகிறேன்(கமலுக்கு இதே போல் ஆதர்சனமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்).

கமல் காப்பி அடித்த படங்களை எல்லாம் ஒரு உதாரணத்திற்காக தமிழ் சினிமாவிலிருந்து நீக்கி விடுங்கள்.நமக்கு பல நல்ல படங்கள் கிடைத்திருக்காது;அது மட்டும்தான் உண்மை.விஜய் டிவி அவார்ட்ஸ்ஸில் பாலா பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நான் கடவுள் படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஸனே அன்பே சிவம்' தான் என்றார். ஒரு வேளை கமல் அன்பே சிவம் போல் ஒரு படம் எடுக்காமல் இருந்திருந்தால் 'நான் கடவுள்' போன்ற ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும்.இதில் சில வெளிநாட்டுப் படங்களை இன்ஸ்பிரேஸனாக வைத்துக்கொண்டு கமல் எடுத்த படங்களையெல்லாம் அப்பட்டமான காப்பி என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படிப்பார்த்தால் பருத்தி வீரனையே,விருமாண்டியின் காப்பி என்று சொல்லி விடலாம்-அது கொஞ்சம் கூட உண்மையில்லை என்றாலும் கூட‌(இரு படங்களும் மதுரை மண் சார்ந்தவை,ஹீரோ ஊதாரித்தனமாகத் திரிவது,காதல் வயப்பட்டவுடன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பது,காதலி கற்பழிக்கப்பட்டு இறப்பது).ஆனால் கமல் பருத்திவீரனுக்காக அமீரைப் பாராட்டித் தள்ளினார். கமல் படங்களைப் பார்த்து விட்டு, பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உத்வேகமாக படமெடுக்க ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

க‌ம‌ல் வேறு மொழி ப‌ட‌ங்களைக் காப்பி அடித்து த‌மிழில் எடுத்த‌ பெரும்பாலான ப‌ட‌ங்க‌ள் அவ‌ருக்கு தோல்வியை ம‌ட்டுமே கொடுத்திருக்கின்ற‌‌ன‌‌.அவ‌ர் நினைத்திருந்தால் ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் தொட‌ர்ந்து ந‌டித்து காசு ஈட்டியிருக்க முடியும். ஆனால் சினிமாவில் உள்ள காத‌லால்தான் வித்தியாச‌மான ப‌ட‌ங்களைத் தொட‌ர்ந்து கொடுக்க வேண்டுமென்று நினைத்து,அவரால் அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற முடிந்திருக்கிறது.ந‌ன்றாக‌ நினைத்துப் பாருங்கள், ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை தேர்வு செய்து,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு அந்த‌ ப‌ட‌த்திற்காக‌ உழைத்து, ப‌ட‌மும் ந‌ன்றாக‌ வந்திருந்து ஃபிளாப் ஆவ‌து போல் கொடுமையான‌ விச‌ய‌ம் வேறு எதுவும் இருக்க‌ முடியாது. ஒரு த‌ட‌வை ஃபிளாப் ஆகிற‌தென்றால் பர‌வாயில்லை. ஆனால் தொட‌ர்ந்து தோல்வியடைந்தாலும்,தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிர‌மாதித்ய‌ன் போல் இருந்த ந‌டிக‌ர்க‌ள் இந்திய‌ சினிமாவில் மிக மிக‌ குறைவு.

க‌மலை ம‌ற்றொரு விச‌ய‌த்தில் எல்லோரும் குறை கூறும் விச‌ய‌ம் அவ‌ருடைய‌ 'உல‌க‌ நாய‌க‌ன்' ப‌ட்ட‌ம். அப்ப‌டிப் பார்த்தால் த‌மிழில் ப‌ட்ட‌ம் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா ந‌டிக‌ர்களையும் குறை கூற‌ வேண்டிய‌திருக்கும்.இதில் கமலை மட்டும் குறை கூறுவது ஏனோ?.க‌ம‌லுக்கும், இந்தியாவில் உள்ள‌ ம‌ற்ற‌ ந‌டிக‌ர்க‌ளுக்கும் உள்ள வித்தியாச‌ம் என்ன‌வென்றால்,மற்றவ‌‌ர்க‌ள் ந‌டித்த‌ எந்த‌ வேட‌த்தை வேண்டுமானாலும் க‌ம‌லால் ஓர‌ளவிற்கு ந‌டிக்க‌ முடியும். ஆனால் கம‌ல் ந‌டித்த‌ அனைத்து வேட‌ங்களையும்,இந்தியாவில் வேறு ஏதாவ‌து ஒரே ந‌டிக‌ர் ந‌டிப்ப‌து இயலாத‌ விச‌ய‌ம். ஏனைன்றால் க‌ம‌ல் வெறும‌னே ஒரு ந‌ல்ல‌ ந‌டிக‌ன் ம‌ட்டும‌ல்ல‌,க‌தை,திரைக்க‌தை,வச‌ன‌ம்,இயக்க‌ம்,த‌யாரிப்பு,ந‌ட‌ன‌ம்,பாட‌ல் எழுவ‌து,பாடுவ‌து,ச‌ண்டை காட்சிக‌ளில் ரிஸ்க் எடுத்து ந‌டிப்பது என்று பல விசயங்களையும் பண்ணிக் கொண்டிருப்பவர். உல‌க‌த்திலேயே வேறு ஏதாவ‌து ந‌டிக‌ர் இத்த‌னை திறமைக‌ளோடு இருப்ப‌தாக‌த் தெரிந்தால் பின்னூட்ட‌மிடுங்க‌ள்(டி.ராஜேந்த‌ர் என்று கூறுபவ‌‌ர்க‌ள் சொர்க்க‌த்திற்குப் போக‌க் க‌ட‌வ‌து).வேறு மொழிகளில் இந்த நடிக‌ரின் காமெடி படங்கள் நன்றாக இருக்கும்(அந்த நடிகருக்கு நடனம் வராமல் இருக்கும் என்பது வேறு விசயம்);மற்றொரு நடிக‌ரின் ஆக் ஷன் படங்கள் நன்றாக இருக்கும்; இந்த நடிகரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று வேண்டுமானாலும் கூற முடியும்.ஆனால் ஒரே நடிகர் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வேடங்களிலும் தொடர்ந்து பரிணமிப்பதுதான் கமலின் தனித்துவம்.கமல் நடித்த சிறந்த படங்களான "விருமாண்டி,அன்பே சிவம்,ஹேராம்,மகாநதி,தேவர் மகன்,மைக்கேல் மதன காமராஜன்,அபூர்வ சகோதரர்கள்,பேசும் படம்,நாயகன்,மூன்றாம் பிறை,மரோ சரித்ரா,சலங்கை ஒலி,16 வயதினிலே...என்று பல படங்கள் இருக்கையில் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் காப்பி அடித்து பெரும் புகழையும் இடத்தையும் அடைந்து விட்டார் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படி என்ன பெரிய இடத்தை நாம் அவருக்கு கொடுத்துவிட்டோம்;அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதற்கு.50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை மூச்சாகக் கொண்டு பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும்,தமிழ்நாட்டில் கமலுக்கு இப்போதும் இரண்டாவது இடம்தான்.(கமல் 50 ஆண்டு விழாவில் ரஜினியே ஆச்சரியப்பட்டு சொன்னது,"வட இந்திய நடிகர்களெல்லாம் இப்போது வரை ஆச்சரியப்படும் விசயம்,கமல் இருக்கையில் நான் எப்படி நம்பர் 1 என்பதுதான்"-அப்படி பொது மேடையில் ரஜினி சொன்னது,அவரின் பெருந்தன்மை என்பது வேறு விசயம்)

கமல் புது இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்போதிருக்கும் மற்ற முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமான இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறார்.ஷங்கர்,கவுதம் மேனன் போன்றோருக்கு கமலின் படங்கள் அவர்களுடைய மூன்றாவது படம்தான்.சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்புக் கொடுத்ததில் இருந்து சரண்,சுந்தர்.c,உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் என்று பல இன்றைய இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கின்றார். மிஷ்கினோடு கூட படம் செய்வதுதாக இருந்தது வேறு விசயம்.கமலுடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் அவர்களின் இயக்கத்தில் சிறந்த படமாக இன்றும் சொல்லப்படுவது கமலுடன் அவர்கள் சேர்ந்து பண்ணிய படங்கள்தான்.

க‌ம‌லின் மீது வைக்க‌ப்ப‌டும் மற்றொரு குற்ற‌ச்சாட்டு அவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் இரு முறை ம‌ணமுடித்து விவாகரத்து ஆனது.ஒரு க‌ணவன்,ம‌னைவி இருவ‌ரும் ம‌ன‌முவ‌ந்து ச‌ட்ட‌த்திற்கு உட்ப‌ட்டு விவாக‌ர‌த்து செய்வ‌தில் என்ன‌ பெரிய‌ த‌ப்பு இருக்க முடியும்,அதையும் விட இது அவர்களின் தனிப்பட்ட விசயமும் கூட.ம‌ற்றொன்று அவ‌ருடைய திருமண வாழ்க்கையைத்தான் எல்லோரும் பெரிய‌ குறையாக‌ சொல்கிறார்க‌ளே தவிர, அவரிட‌ம் உள்ள பல ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளான‌ அர‌சிய‌லுக்கு வ‌ர‌மாட்டேன் என்று சொல்லி இப்பொது வ‌ரை த‌ன் பேச்சைக் காப்பாத்துவ‌து,த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளையெல்லாம் முதல் ஆளாக‌ ந‌ற்பணி ம‌ன்ற‌ங்க‌ளாக‌ மாற்றிய‌து,சினிமாவில் ச‌ம்பாதித்த‌ காசை சினிமாவிலேயே முத‌லீடு பண்ணுவ‌து,த‌ன்னுடைய‌ உட‌லையே தான‌மாக‌க் கொடுத்த‌து,காட்சிக்கு தேவைப்ப‌டாத‌வ‌ரை த‌ண்ணி,சிகரெட் அடிப்ப‌து போன்று த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் நடிக்காமல் இருப்பது,முடிந்த வரை தூய தமிழிலேயே பேசுவது போன்றவற்றைப் பற்றி வாயே திறப்பதில்லை.

க‌டைசியாக‌,குறைக‌ள் இல்லாத ம‌னித‌ன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவ‌ரிட‌ம் உள்ள‌ சில‌ குறைக‌ளை ம‌ட்டும் மிகைப்ப‌டுத்தி,அவ‌ர் இத்த‌னை ஆண்டுகளாக‌ ப‌ண்ணிய‌ சாத‌னைக‌ளை மூடி‌ ம‌றைக்க‌ நினைப்ப‌து,ஒரு உண்மையான‌ க‌லைஞனுக்கு நாம் கொடுக்க‌ நினைக்கும் ம‌ரியாதையாக‌ இருக்க‌ முடியாது.

Sunday, September 5, 2010

பலே பாண்டியா-திரை விமர்சனம்

தன்னுடைய கடைசி ஆசையே உடனடியாக சாவதுதான் என்பதாக வைத்திருக்கும் ஹீரோவின் வாழ்வில், ஒரு தாதாவும்,பெண்ணும் குறிக்கிடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'பலே பாண்டியா' படத்தின் கதை.

பிறந்ததிலிருந்து தான் நினைத்தது எதுவுமே நடக்காமல்,வாழ்க்கையில் விரக்தி அடையும் பாத்திரத்திற்கு விஷ்ணு பொருத்தமாக இருக்கிறார்.ப‌ட‌த்தில் விஷ்ணுவின் காஸ்ட்யூம்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கின்றன.குறைந்த பட்ஜெட் படமென்பதால் சென்னையின் பெரிய தாதாவைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் போல்.விஷ்ணுவின் 'பேட் லக்கை' காட்டுவதற்காக வரும் காட்சிகளான 'அவருடைய ஜாதகத்தை எழுதின ஜோஸியக்காரர் சாவது;அவர் வருகையில் குறுக்கே வரும் பூனை பஸ்ஸில் அடிபட்டு சாவது' போன்ற ஆரம்பக்கட்ட காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன.தாதா RKP ஆக வருபவர் நல்ல தேர்வு.பிணம் போனாத்தான் அழணும்;பணம் போனா அழக்கூடாது என்று சொல்லி விஷ்ணுவிற்கு படத்தில் கார்டியன் போல் இருக்கிறார். ஜான் விஜய் வாயைத் திறந்தாலே, நம் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஷ்ணு காதல் வயப்பட்டவுடன் அவர் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதும்,காதலித்த பெண் அவருடைய நண்பரை தேர்வு செய்தவுடன் பட்டாம் பூச்சிகள் இடம் மாறுவதும் நன்றாக இருக்கிறது.படத்தின் ஒரு பாடலுக்கு அதைப் பாடிய அனைத்து பாடகர்களும் நடித்திருக்கிறார்கள்(விஜய் யேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார்).ஹீரோவிற்கு வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கையில்,அவருடைய சாவு தேதி நெருங்கி வருவது பரபரப்பைக் கூட்டினாலும்,அதன் பின் வரும் காட்சிகள்,படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத் தொடங்குகின்றன.

முதல்பாதியில் கொஞ்சம் சுவாரசியமாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்கிறது.குறிப்பாக விவேக் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் மயான அமைதி.ஹீரோ தன்னைக் கொலை செய்யச் சொல்லி தாதாவிடம் கேட்பது(சிந்தனை செய்),அவர் ஸ்கூட்டரில் செல்லும் போது,நடப்பவர்கள் முதற் கொண்டு அவரை முந்திச் செல்வது(ஓரம் போ) என்று சில படத்தின் காட்சிகளை இயக்குனர் அப்படியே உருவியிருக்கிறார்.

சின்ன சின்ன ஐடியாக்கள் ஒரு விளம்பர படத்திற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாமே தவிர, ஒரு முழு படத்தையும் காப்பாற்ற‌ உதவாது என்பது விளம்பரபட இயக்குனராக இருந்து,தன் முதல் படத்தை இயக்கியிருக்கும் சித்தார்த் சந்திரசேகருக்கு இப்போது தெரிந்திருக்கும்.

பலே பாண்டியா-முதல் பாதி 'ஹையோ' பாண்டியா;இரண்டாம் பாதி 'ஐயோ' பாண்டியா.

Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல-திரை விமர்சனம்


வெண்ணிலா கபடி குழு' பட இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் கஜல் அகர்வால் ந‌டித்து வெளி வந்திருக்கும் படம் 'நான் மகான் அல்ல'.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வேலைக்காக காத்திருக்கும் கார்த்தி,கஜல் அகர்வாலைக் காதலிக்கிறார்.காலேஜில் படித்துகொண்டே பெண்களைக் கடத்திக் கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு ரவுடி கும்பல் செய்த கொலைக்கு,கார்த்தியின் அப்பா சாட்சியாகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சாதாரண ஒரு கதையை வைத்துக்கொண்டு திரைக்க‌தையின் மூல‌ம் ப‌ட‌த்தை சுவார‌சிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள்.ம‌ன‌தில் உள்ள‌தை அப்ப‌டியே வெளிக்காட்டிக் கொள்ளும் கேர‌க்ட‌ர் கார்த்திக்கு ந‌ன்றாக‌ப் பொருந்தியிருக்கிற‌து.கார்த்தி மற்றும் க‌ஜ‌ல் அக‌ர்வால் சம்ப‌ந்தப்ப‌ட்ட‌ காத‌ல் காட்சிகள் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.கார்த்தியின் சாயலை ஓரளவிற்கு கொண்டிருக்கும் ஜெய்ப்பிர‌காஷ்,அப்பா வேடத்திற்கு ந‌ல்ல‌ தேர்வு.ப‌ட‌ம் முழுவதும் ஆங்காங்கே வ‌ரும் குழந்தைக‌ள் ம‌ன‌தைக் கொள்ளை கொள்கிறார்க‌ள்.மானேஜ‌ரின் பைக்கை யாருக்கும் தெரியாம‌ல் தூக்கிவிட்டு,கார்த்தி ம‌றுப‌டியும் வேலையில் சேருவ‌து சுவார‌சியம். படம் ஆர‌ம்பித்த இடத்திலேயே க்ளைமாக்ஸும் வ‌ருவ‌து ந‌ன்றாக இருக்கிற‌து.வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்களும்,யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பெரிய‌ பலம்.(நல்ல மெலடியான 'ஒரு மாலை நேரம்' பாடலை படத்தில் வைத்திருந்திருக்கலாம்).

காலேஜ் மாணவ‌ர்கள் பெண்க‌ளைக் கட‌த்தும் காட்சிக‌ள் 'வேட்டையாடு விளையாடு' ப‌ட‌த்தையும் ம‌ற்ற‌ சில காட்சிக‌ள் ஷாம் நடித்த‌ 'பாலா' ப‌ட‌த்தையும் ஞாப‌க‌ப்ப‌டுத்துகின்றன.மிக‌ப் பெரிய‌ தாதாவாக காட்டப்படுபவர் காலேஜ் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு சாகும் காட்சி ந‌ம்பும்படியாக‌ இல்லை.இத்த‌னைக்கும் அந்த நேரத்தில் தாதாவின் கையில் செல்ஃபோன் வேறு இருக்கிற‌து.படத்தின் வில்லன்களாக லோக்கல் தாதா,கொலை மற்றும் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து தமிழ் சினிமா,கல்லூரி மாணவர்களிடம் வந்திருப்பது உறுத்தலாக‌ இருக்கிற‌து.

ஆனாலும் கார்த்தி மாதிரி ஒரு ந‌டிக‌ரை வைத்துக்கொண்டு பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்,மிகவும் குறைந்த‌ ப‌ட்ஜெட்டில்,அதிக‌மான‌ ச‌ண்டைக் காட்சிகளோ,பாடல் காட்சிகளோ இல்லாமல் விறு விறுப்பான‌ ஒரு ப‌ட‌த்தைக் கொடுத்த‌‌தில் வெற்றி பெற்றிருக்கிறார் இய‌க்குன‌ர் சுசீந்த‌ர‌ன்.

நான் மகான் அல்ல‌-கார்த்தி காட்டில் ம‌ழை.

Wednesday, August 18, 2010

பதிவுலகில் நான்-தொடர்பதிவு

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மோக‌ன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னுடைய‌ முழு பெய‌ர் மோகன் ராம்குமார். ஆனால் எல்லோரும் என்னை மோக‌ன் என்றே கூப்பிடுவ‌தால் நானும் மோக‌ன் என்றே வைத்துக்கொண்டேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ரொம்ப‌ நாட்களாக‌வே ப‌ல‌ருடைய ப‌திவை ம‌ட்டுமே ப‌டித்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் க‌ன‌வில் நான் ஒரு ப்ளாக் ஆர‌ம்பித்து ஒரு ப‌திவு போடுவ‌து போல‌வும்,அத‌ற்கு நான்கு பேர் வ‌ந்து க‌மெண்ட் போடுவ‌து போல‌வும் ஒரு க‌ன‌வு வ‌ந்தது.ம‌றுநாளே மிக‌வும் குஷியாகிப்போய் இந்த‌ப் ப‌திவுலகில் என் கால‌டி(கை) எடுத்து வைத்தேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ந‌ண்ப‌ர்க‌ளை க‌மெண்ட் மட்டுமே போட‌ சொன்னால் ஒரு ப‌திவிற்கோ அல்ல‌து இர‌ண்டு ப‌திவிற்கோதான் போடுவார்கள் என்று நினைத்து ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரை ப்ளாக் ஆர‌ம்பிக்க‌ தூண்டினேன்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் அவ‌ர்க‌ளுக்கு நான் க‌மென்ட் போட‌ வேண்டுமே என்ப‌தற்காக‌ எனக்கு வந்து க‌மெண்ட் போடுவார்க‌ள் என்று நினைத்து).பெரும்பாலானோர் ப‌திவு போடுவ‌தற்காக‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் வைத்து இருந்தாலும் நான் எழுதுகின்ற க‌விதைக்கெல்லாம்(?) க‌மெண்ட் போட‌ வேண்டுமே என்பதற்காக பயந்து த‌ங்க‌ளுடைய‌ ப்ளாக்கையே அப்டேட் பண்ணுவதில்லை. தமிழிஷ்,த‌மிழ்ம‌ணத்தில் இணைப்பதன் வாயிலாக‌ என் ப்ளாக்கை மற்றவர்களிடம் எடுத்து செல்ல முடிகிறது..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என‌க்கு சொந்தமாக‌ எதுவுமே இல்லாமல் போய்விட்டதால், இப்ப‌ வ‌ரைக்கும் சொந்த‌ விச‌ய‌ம் எதுவுமே என் ப‌திவில் எழுதிய‌தில்லை.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப‌திவுகள் மூல‌ம் ச‌ம்பாதிப்பதற்காக‌-ந‌ண்ப‌ர்க‌ளை ம‌ட்டும்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

தாய் மொழி தமிழிலேயே பெரிதாக எதுவுமே எழுத‌ முடிய‌வில்லை என்ப‌தால் நீங்கள் படித்து கொண்டிருக்கின்ற இந்த‌ ஒரு ப்ளாக் ம‌ட்டும்தான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

தின‌மும் ஒரு ப‌திவு போட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌ சுவாரசியமில்லாத ஒன்றை ப‌திவாய் போடும் ப‌திவ‌ர்க‌ள் மேல் கோப‌ம். பொறாமைப் ப‌ட‌ வைத்த பதிவ‌ர்க‌ள் என்றால் நான் நெடு நாட்க‌ளாய் ப‌டித்து வ‌ரும் அய்ய‌னார்,ஜ்யோவ்ராம் சுந்த‌ர்,மோக‌ன் தாஸ்,ராஜா சந்திரசேகர் ம‌ற்றும் ப‌ல‌ர்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் ப‌திவை ப‌டித்து பாராட்டிய‌து ப‌ழனிய‌ப்ப‌ன்(க‌மென்ட் போட‌ சொல்லி அவனை ரொம்ப‌வே டார்ச்ச‌ர் ப‌ண்ணினேன் என்ப‌து வேறு விச‌ய‌ம்)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுப‌விப்ப‌தற்கு ப‌திவுல‌க‌ம் மிக‌வும் உறுதுணையாக இருக்கிற‌து.ப‌திவுல‌கின் மூல‌மாக‌ என்னுடைய‌ வேலை விச‌ய‌மாக‌வும் அதிக‌மாக க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்.பதிவுலகம் கூட பெண் போன்றுதான்,நம்மை ஆக்கவும் செய்யும்;அழிக்கவும் செய்யும்.

தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் மனோவிற்கு மிக்க நன்றி!

Sunday, August 8, 2010

பாணா காத்தாடி-திரை விமர்சனம்


அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், புதுமுகங்கள் அதர்வா,சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் பட்ம் 'பாணா காத்தாடி'.

வட சென்னையில் வசிக்கும் அதர்வாவுக்கும், ஃபேசன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் நடுவில் காதல் அரும்புகிறது.இவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவே, அதர்வா ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது.இதிலிருந்து அதர்வா எப்படி 'விடுபடுகிறார்(?)' என்பதுதான் 'பாணா காத்தாடி' படத்தின் கதை.

அதர்வாவும்,சமந்தாவும் அவர்களின் அறிமுகப் படங்கள் என்ற நினைப்பே நமக்கு தோன்றாத‌வாறு நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடகி-‍நடிகை வசுந்தரா தாஸ் மற்றும் காமிலினி முகர்ஜி இருவரையும் ஒன்றாக வைத்து குழைத்தது போல் அழகாக இருக்கிறார் சமந்தா.இதே போன்று நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது.பிரசான்னா தாதாவாக ஆர்ப்பாட்டமான அமைதியான நடிப்பில் வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார்.

அதர்வாவுடன் சண்டையிட்டபின் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவரை தியேட்டருக்கு வரவழைத்து,சமந்தா காட்டும் 'குறும் படம்' நன்றாக இருக்கிறது.படத்தில் நம்மை பெரிதும் கவர்பவர் படத்தின் வசனகர்த்தா. 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்' என்பதாகட்டும், மௌனிகா அதர்வாவிடம் சொல்லும் 'என்னமோ அண்ணா சிலை மாதிரி எப்பவும் கையில புக்கை வைச்சிருக்க' மற்றும் 'கிட்ட வா நாயேன்னா, மூஞ்சியை நக்குற' என்று கிடைத்த‌ இடங்களிலெல்லாம் சிக்ஸ்ர் அடித்திருக்கிறார். ஜெயிலிலிருந்து வரும் அதர்வாவிடம்,மௌனிகா சொல்லும் 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை' என்பது உருக்கம்.

வட சென்னையைக் களமாகக் கொண்டு வரும் படங்களுக்கெல்லாம் மொத்த குத்தகை எடுத்தது போல் இந்தப் படத்திலும் காமெடி கருணாஸ்.அவரின் காமெடியும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் வரும் எல்லா பாடல்களும்(கடைசி குத்துப்பாட்டு தவிர்த்து),படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கின்றன.அதர்வாவை ஒரு தலையாகக் காதலிக்கும் அந்த ஸ்கூல் பெண் கேரக்டர் நன்றாக இருக்கிறது.

பல முடிச்சுகளைப் போட்டு விட்டு அதனூடே அழகாக பயணிக்கவும் செய்து விட்டு, அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் 'அபிமன்யு' மாதிரி இரண்டாம் பாதியில் இயக்குனர் மாட்டிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. பரபரவென நகர வேண்டிய இரண்டாம் பாதி காட்சிகள் சமந்தா அதர்வாவிடம் மன்னிப்பு கேட்பதும்,அவர் அதை நிராகரிப்பதுமாக நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருந்தால் 'பாணா காத்தாடி' இன்னும் கொஞ்சம் உயரப் பறந்திருக்கும்.

Sunday, August 1, 2010

Top 10 Songs-July

1) அரிமா அரிமா-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) ஓ ஷலா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) முழு மதி-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) ஒரு மாலை நேரம்-‍நான் மகான் அல்ல‌-இசை:யுவன் சங்கர் ராஜா

5) பச்சைக்கிளி போலே-அய்யனார்-‍இசை:தமன்

6) தாக்குதே கண் தாக்குதே-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) Missing Something-அரிது அரிது-இசை:தமன்

8) இதுதான் காதல்-‍நந்தி-‍இசை:பரத்வாஜ்

9) சஞ்சீவனா-‍வந்தே மாதரம்-இசை:D.இமான்

10) கண்டேனே காதல்‍-மாசி-‍இசை:தினா