Thursday, March 29, 2018

சுந்தர் சியும் அவர் பட இசையமைப்பாளர்களும்

தமிழ் சினிமாவில் ராசியான ஜோடி என்ற ஒன்று உண்டு. ஹீரோ, ஹீரோயின் ராசியை விட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ராசிதான் அது. பெரும்பாலான இயக்குனர்கள் தங்களுடைய ஆஸ்தான இசையமைப்பாளரை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவரமாட்டார்கள். அப்படி அவர்கள் வெளிவந்தால் ஒன்று இசையமைப்பாளருடனான சண்டையாக இருக்கவேண்டும்; இல்லையென்றால் அந்த இயக்குனர்/இசையமைப்பாளர் ஃபீல்ட் அவுட் ஆகியிருக்க வேண்டும். அதனால்தான் ஆரம்பகாலங்களில் எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றிய பாலசந்தர் பின்னர் இளையராஜாவுடன் தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிய ஆரம்பித்தார். இளையராஜாவுடன் தொடர்ந்து பணியாற்றிய மணிரத்னம் பின்நாட்களில் ரகுமானிடம் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். ஷங்கர்-ஏ.ஆர்.ரகுமான்,கவுதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ், செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா, பிரபு சாலமன்-இமான், விஜய்-ஜி.வி.பிரகாஷ் குமார், சரண்-பரத்வாஜ் என்று பல ஹிட் கூட்டணிகள் இருக்கின்றன.
ஆனாலும் 30 படங்களுக்கு மேல் இயக்கிய சுந்தர் சி, தமிழின் ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களோடும் பணியாற்றியிருக்கிறார். புதிய இசையமைப்பாளர், பழைய இசையமைப்பாளர் என்ற பேதமே பார்ப்பதில்லை. இத்தனைக்கும் சுந்தர் சியின் பெரும்பாலான படங்ளில் பாடல்கள் நன்றாகவே இருக்கும். இமான் ஃபேமசாக இல்லாத காலத்தில் அவருடன் பணிபுரிந்திருக்கிறார். பின்பு இமான் ஃபேமசான இப்போதைய காலகட்டத்தில் ஏனோ அவருடன் பணிபுரிவதில்லை.(இதேபோல் இருக்கும் மற்றொருவர் அர்ஜீன்.வித்யாசாகர் ஃபேமசாக இல்லாத காலகட்டத்தில் ஜெய்ஹிந்த், கர்ணா,வேதம் என்று தொடர்ந்து பணிபுரிந்தார். வித்யாசாகர் உச்சத்தில் இருந்தபோது அவருடன் அதிகப் படங்கள் பண்ணவில்லை)
30 படங்கள் இயக்கிய சுந்தர் சி போன்று இதுவரை வேறு எந்த இயக்குனராவது இத்தனை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
வித்யாசாகர் - முறைமாமன், அன்பே சிவம், லண்டன்
ஸ்வரராஜ் - முறைமாப்பிள்ளை
சிற்பி - உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ஜானகிராமன், கண்ணன் வருவான்
தேவா - அருணாச்சலம், உன்னைத்தேடி, அழகர்சாமி, உன்னை கண் தேடுதே, அழகான நாட்கள்
கார்த்திக் ராஜா - நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே
யுவன் சங்கர் ராஜா - உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, வின்னர்
இமான் - கிரி, தக்கதிமிதா, சின்னா, ரெண்டு
தமன் - நகரம் மறுபக்கம்
விஜய் எபிநேசர் - கலகலப்பு
சத்யா - தீயா வேலை செய்யனும் குமாரு
பரத்வாஜ் - அரண்மனை
ஹிப் ஹாப் தமிழா - ஆம்பள, அரண்மனை 2
விஜய் ஆண்டனி - மத கஜ ராஜா
ஏ.ஆர். ரகுமான் - சங்கமித்ரா

Monday, January 30, 2017

தமிழ் சினிமாவில் கல்லூரியைக் களமாக‌க் கொண்ட சமீபத்திய படங்கள்

இப்போதைய காலகட்டத்தில்  தியேட்டருக்கு சென்று படங்கள் பார்ப்பவர்கள் இளைஞர்கள்தான். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள்தான் திருட்டு சி.டி யில் படம் பார்க்காமல் படம் ரிலீஸான உடனேயே தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்கள். ஆனால் கல்லூரியைக் களமாக‌க் கொண்ட படங்கள் இப்போதெல்லாம் ஏனோ வருவதே இல்லை. இத்தனைக்கும் 1990 களில் கல்லூரியைக் களமாகக் கொண்டு வெற்றிப் படங்கள் ஒவ்வொரு ஆண்டும் இருந்தன. இயக்குனர் கதிரின் பெரும்பாலான படங்கள்(இதயம், காதல் தேசம், காதலர் தினம்) கல்லூரிகளை மையமாகக் கொண்டவைதான்.கடைசியாக தமிழில் கல்லூரியை மையமாகக் கொண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தை யோசித்தால் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்லத்தான் வேண்டியிருக்கிறது.

கடந்த 10 வருடங்களில் கல்லூரிகளை களமாகக் கொண்டு வெற்றி பெற்ற பலபடங்கள் ரீமேக் படங்களாகத்தான் இருக்கின்றன. ஹீரோக்கள் காலேஜ் படிப்பது போன்று வெற்றி பெற்ற பல படங்களான நண்பன்(இந்தி 3 இடியட்ஸ்), இனிது இனிது(தெலுங்கு காலெஜ் டேஸ்), நினைத்தாலே இனிக்கும்(மலையாளம் க்ளாஸ் மேட்ஸ்) ரீமேக் படங்கள்தான்.கல்லூரியை மையமாகக் கொண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று தமிழில் நேரடியாக வெளிவந்த படங்கள் என்றால் பத்து வருடங்களுக்கு முன்வந்த குஷி, உள்ளம் கேட்குமே, பாய்ஸ், கல்லூரிதான் நினைவுக்கு வருகின்றன. ரஜினி, கமல் கல்லூரி மாணவர்களாக நடிக்க முடியாது. நண்பன் தவிர்த்து விஜய் கல்லூரி மாணவனாக கடைசியாக நடித்த படமென்றால் சச்சின்(2005) தான். அஜித் அதிகப்படியாக கல்லூரி மாணவனாக நடித்ததுமில்லை(பூவெல்லாம் உன்வாசம், ராஜா);அவை பெரிதாக ஹிட்டானதுமில்லை. விக்ரம்(சேது), சூர்யா(சில்லென்று ஒரு காதல், ஆய்த எழுத்து) என்று சில படங்கள்தான் நடித்திருக்கிறார்கள். விஜய், அஜித், சூர்யா, விக்ரமெல்லாம் கல்லூரி மாணவர்களாக இப்போது நடிக்க முடியாது. ஆனால் அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களும் ஏன் நடிப்பதில்லை என்றுதான் தெரியவில்லை. தனுஷ் நடித்த குட்டி - தெலுங்கு ரீமேக்(3, இந்தி ரான்சனாவில் கூட ஸ்கூல் பையனாகத்தான் நடித்திருந்தார்-கல்லூரி மாணவனாக அல்ல) சிம்பு நடித்த தம், கோவில் எல்லாம் பத்து வருடங்களுக்கு முந்தைய கதை(கடைசியாக நடித்த சரவணா-தெலுங்கு ரீமேக்). சிபி நடித்த ஸ்டூன்ட் நம்பர் 1 ம் தெலுங்கு ரீமேக்தான். பிற நடிகர்களான(ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா-பத்து வருடங்களுக்கு முன் வந்த உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, விஷால் என்று யாரும் பெரிதாக நடித்ததுமில்லை, சில வருடங்களில் அறிமுகமான வேறு எந்த ஹீரோவோ அல்லது இயக்குனரோ சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் காலேஜ் பேக்ரவுன்டில் எடுத்ததுபோல் தெரியவில்லை.சில விதிவிலக்குகள் என்று நீதானே என் பொன்வசந்தம், இது என்ன மாயம் போன்ற படங்களை சொல்லலாம்வ. கல்லூரி மாணவனாக அதிகப்படங்களில் நடித்த முரளியின் மகன் அதர்வா கூட காலேஜ் ஸ்டூடன்ட்டாக நடிப்பதில்லை என்றால் என்ன சொல்வது?

தமிழில் மட்டும்தான் காலேஜ் பேக்ரவுன்டில் பெரிதாக படங்கள் வரவில்லை. மற்ற மொழிகளில் தொடர்ந்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிக் கொண்டுதானிருக்கின்றன‌.மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற பிரேமம் கூட சென்னையில் பெரிய ஹிட்டானதுக்குப் படத்தின் கன்டென்ட் தாண்டி இதுதான் காரணமென்று தோன்றுகின்றது.  கர்நாடவில் சூப்பர் ஹிட்டாகி ஓடிக் கொண்டிருக்கும் க்ரிக் பார்ட்டியைக் கூட சப் டைட்டிலுடன் சென்னையில் வெளியிட்டால் ப்ரேமம் போல் சூப்பர் ஹிட்டாகும். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தமிழக கல்லூரி மாணவனுக்கு அவனுடைய களத்தில் பார்ப்பதற்கு இப்போதைக்கு எத்தனை படங்கள் இருக்கின்றன.இத்தனைக்கும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை விட தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான‌ காலேஜ்கள் இருக்கின்றன.



Friday, July 3, 2015

கமலும் அவரின் தவறுகளும்(?)

தமிழ் நடிகர்களிலேயே, ஏன் இந்திய நடிகர்களிலேயே என்று கூட சொல்லலாம், ஒரு நடிகருக்கு அதிகமான அறிவுரைகளை சினிமா ரசிகர்கள் அளிப்பது கமலுக்கு மட்டும்தான். 55 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறார்;45 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நேற்று படம் பார்க்க ஆரம்பித்தவர்கள் முதற்கொண்டு தங்களுடைய அறிவுரைகளை அள்ளி வழங்குவது கமலுக்கு மட்டும்தான்.

1) ஒரு 'மார்க்கெட்' உள்ள நடிகராக அவர் காலம் முடிந்துவிட்டது. ஏனென்றால் அவர் கடைசியாக நடித்த உத்தம வில்லன் ஃப்ளாப் என்பது ஒரு குற்றச்சாட்டு. கமலின் கேரியரில் கடந்த 25 வருடங்களைப் பார்த்தால் அவர் 'தொடர்ந்து' ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்ததேயில்லை. ஆனாலும் அவரால் இதுவரை டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்க முடிகிறது. தேவர் மகன், சிங்கார வேலன் ஹிட் என்றால் அடுத்து வந்த கலைஞன் ஃப்ளாப். இண்டியன், அவ்வை சண்முகி ஹிட் என்றால் அடுத்து வந்த ஹேராம் ஃப்ளாப். பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஹிட் என்றால், அன்பே சிவம் ஃப்ளாப். விருமாண்டி, வசூல் ராஜா ஹிட்;மும்பை எக்ஸ்பிரஸ் ஃப்ளாப். வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஹிட்;உன்னைப் போல் ஒருவன் ஃப்ளாப். ஏதோ அவர் புதிதாக ஃப்ளாப் கொடுப்பது போன்று, அவர் கேரியர் முடிந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் ரொம்பவே அதிகம். ஃப்ளாப் படங்களே கொடுக்காத ரஜினிக்கு, அவரின் கடைசி இரண்டு படங்கள் ஃப்ளாப்தான். அட தமிழில் முன்னணியில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் முதற்கொண்டு எந்த நடிகர்தான் ஹிட் படங்களாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், கமலை மட்டும் குறை சொல்ல.

2) கமல் புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அடுத்த அறிவுரை. ஷங்கருக்கு இந்தியன் அவருடைய மூன்றாவது படம்தான். வேட்டையாடு விளையாடு, கவுதம் மேனனிற்கு மூன்றாவது படம்தான். ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனரையோ, இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனரையோ தலையில் தூக்கிவைத்து ஆடுவது நம்மில் சிலர்தான். அட நாமளே, அவர்களின் அடுத்த படங்களுக்கு, 120 ரூபாய் கொடுத்து முதல் நாள் டிக்கெட் புக் பண்ணுவதற்கு யோசிப்போம். அப்படி இருக்கையில் கமல் மட்டும் எப்படி நம்பி தன்னுடைய படத்தைக் கொடுக்க முடியும்? கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவதால் முதல் படமோ, இரண்டு படங்களிலேயோ தாக்குப் பிடிக்கும் இயக்குனர்கள், தங்களுடைய மூன்றாவது படத்திலிருந்து 'சரக்கு' காலியாகித் திணறியதற்கு எத்தனையே உதாரணங்கள் இருக்கிறது, லவ் டுடே பாலசேகரனாகட்டும், துள்ளாத மனமும் துள்ளும் கொடுத்த எழிலாகட்டும், பின்னர் என்ன ஆனார்கள்? சுப்ரமணியபுரம் பொன்ற 'க்ளாசிக்' படத்தைக் கொடுத்த சசிகுமாரின் அடுத்த படம் ஃப்ளாப். பருத்தி வீரன் கொடுத்த அமீர் அதன் பின் பெரிதாக வெற்றிப் படம் எதுவும் கொடுக்கவில்லை. ஓரளவிற்கு தாக்குப் பிடித்த இயக்குனர்களான கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சரண், ஷங்கர், கவுதம் மேனன் போன்ற அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் கமல் நடித்திருக்கிறார் . விடுபட்ட சில இயக்குனர்களாக பாலா, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், செல்வராகவன், சுசீந்தரன் போன்றோர் இருக்கலாம். செல்வராகவன், பாலாஜி சக்திவேல் போன்றோர் காதல் படங்கள்தான் பெரும்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மிஷ்கினுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்து ட்ராப்பாகிவிட்டது. பாலா, கமலுக்கான கதையுடன் இல்லாமலிருந்து அவர்கள் இணைவது தள்ளிப் போயிருக்கலாம். மற்றபடி, உன்னைப் போல் ஒருவன் இயக்குனருக்கு அது முதல்படம்தான், அடுத்து நடிக்கும் தூங்காவனம் படத்தின் இயக்குனருக்கும் அது முதல் படம்தான்.

3) கமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்படும் இன்னொரு அறிவுரை. அது கமலை ஒரு நடிகராக 'மட்டுமே' நினைத்துக் கொண்டிருப்பதால் வரும் பிரச்சனை. இரண்டு படங்கள் இயக்கி, பத்து படங்களில் நடித்திருக்கும் சசிகுமாரை நாம் நடிகர்-இயக்குனர் சசிக்குமார் என்றுதான் அழைப்போம். சுந்தர் சியையும் இயக்குனர்-நடிகர் என்றுதான் அழைப்போம். ஆனால் கமலை மட்டும் நாம் நடிகர் என்று மட்டுமே நினைப்போம்; இயக்குனராக ஒத்துக்கொள்ள மனம் வராது. இத்தனைக்கும் 2000-ல் இயக்குனராக கமல் தமிழில் அறிமுகமானார். இதுவரை ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார், இந்த மூன்று படங்களின் ஜானரும் வேறு. ஹேராம் 1940 காலகட்ட பின்புலத்தில் வந்த படம்;விருமாண்டியில் தென் தமிழக கிராமத்துப் பின்னணி;விஸ்வரூபத்தில் ஆக்சன். தமிழில் அவருடன் அறிமுகமான எந்த இயக்குனருக்கும் அவர் சளைத்தவரில்லை. இந்த மாதிரி வித்தியாசமான ஜானரில் ஓரளவிற்கு 'தரமான' படங்களை வேறு யாரும்  கொடுத்ததில்லை என்பதுதான் உண்மை. ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், தசாவதாரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் கதை, திரைக்கதை கமல்தான். அதேபோல் 50 வயதைக் கடந்த சூப்பர் ஹிட் இயக்குனர்களான பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ்,விக்ரமன் போன்றவர்கள் கூட இயக்குனராக 'ஹிட்' படங்கள் கொடுக்க திணருகையில் இப்போதும் இயக்குனராக வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பதும் கமல்தான்.


4) மோகன்லால், மம்மூட்டி போன்று வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும் என்பது அடுத்த குற்றச்சாட்டு. பாபநாசத்தில் கூட மோகன்லாலுடன் ஒப்பிட்டு கமல் நன்றாக நடிக்கவில்லை என்றுதான் கூறுவார்கள். ஒரிஜனல் படத்தைப் பார்த்துவிட்டு என்னதான் ரீமேக் படம் நன்றாக இருந்தாலும் நாம் முதலில் பார்த்த ஒரிஜினல்தான் நமக்குப் பிடிக்கும். மோகன்லால் நடித்த எந்த படத்தையும் 'தில்' லாக ரீமேக்கி கமலால் 'ஓரளவிற்கு' நடிக்க முடியும். ஆனால் கமல் நடித்த சில படங்களை ரீமேக்கி நடிக்க மோகன்லாலால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. மோகன்லால், மம்மூட்டி நடித்த 50 படங்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் நடிப்பு சூப்பர் என்பார்கள். விஜய், அஜித்தின் சில படங்களுக்கு போட்டியாக மோகன்லாலும், மம்மூட்டியும் சமீபத்தில் எத்தனையோ 'மொக்கை'ப் படத்தில் தொடர்ந்து நடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் கடந்த இருபது வருடங்களில் ஏதாவது ஒரு கமல் படத்தை இந்த மாதிரி ஒரு மோசமான படத்தில் கமல் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்று சொல்ல முடியுமா?  உத்தமவில்லன் ஃப்ளாப்தான்;அதை மோசமான படம் என்று ஒதுக்க முடியுமா?. மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா, கலைஞன், ஹேராம், அன்பேசிவம், நம்மவர் என்று எந்தப் படத்தையும் மோசமான மசாலா படம் என்று ஒதுக்க முடியாது. அவருடைய கடைசி மொக்கைப் படம் என்பதே இருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த மகராசன், சூரசம்ஹாரமாகத்தான் இருக்கும்


5) ஏதாவது ஒரு நல்ல படம் தமிழில் வந்துவிட்டால், இத்தனை வருடங்களாக சினிமா உலகில் இருக்கும் கமலால் ஏன் இது போல் ஒரு படம் கொடுக்க முடியவில்லை என்பது, நல்ல படம் அமைவது என்பது மொத்த டீம் ஒர்க்தான். இதில், கமலுக்கு மட்டுமே பெரிய பங்கு இருப்பதாக சொல்ல முடியாது. இளம் வயதில் யாராலும் வித்தியாசமான படங்கள் கொடுக்க முடியும். கமலால் இந்த வயதில் அதுபோல் படங்கள் கொடுக்க முடியாமல் இருப்பது உண்மைதான் என்றாலும், அதற்காக மொத்தமாக அவரை மட்டுமே குறை சொல்ல முடியாது. 30 களில் இருக்கும் தனுஷ் பண்ணிய சாதனைகளை விட கமல் செய்த சாதனைகள் மிக அதிகம். 40 களில் இருக்கும் சூர்யா, விக்ரம் பண்ணிய சாதனைகளை விட கமல் செய்த சாதனைகள் மிக அதிகம் இன்று புதிதாக கிரிக்கெட் உலகில் நுழையும் பேட்ஸ்மேன் 15 பால்களில் 50 ரன்கள் அடித்தால், இத்தனை வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் சச்சினால் அந்த சாதனையை ஏன் பண்ண முடியவில்லை என்று கேட்க முடியுமா?


6) சிவாஜி, அமிதாப் போன்று கமல் ஏன் தன் வயதிற்குரிய கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு. சிவாஜியும் சரி;அமிதாப்பும் சரி; தாங்கள் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து ஃப்ளாப்பானதால் வேறு வழியில்லாமல், ஹீரோவாக இல்லாமல், தங்களுடைய நடிப்பிற்கு தீனி போடும் சில படங்களில் நடித்தார்கள், ரஜினிக்கும் சரி;கமலுக்கும் சரி; அந்த நிலைமை இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இன்றும் மார்க்கெட் இருக்கிறது . இந்த கேள்வியை நாம் கேட்க வேண்டிய ஆட்கள் நடிப்புத் திறமை இருந்தும்,  ஹீரோவாக மார்க்கெட் இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கும் சத்யராஜூம், பிரபுவும்தான்.


7)  இவ்வளவு சொன்னாலும், கமல் மேல் எனக்கும் குற்றச்சாட்டு இருக்கிறது. தென்னிந்திய நடிகர்களிலேயே கமல் ஒருவர்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஒரே நடிகர். இப்போதைய நிலைமையில் கமலின் சம்பளத்திற்கு, மலையாளப் படங்களின் பட்ஜெட் ஒத்து வராது. சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என்று தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் தெலுங்கு படங்களில் நடித்த கமல் அதற்குப் பின் அதேபோன்ற தெலுங்கு படங்களில் நடிக்கவே இல்லை என்பதுதான் புரியாத விசயம். ஸ்டார் வேல்யு இருப்பதால், தமிழில் ஹீரொவாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமல் தயங்கியதில் நியாயம் இருக்கிறது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் வித்தியாசமான படங்கள் எடுக்கத் தொடங்கியிருக்கும் இந்தியில் அவர் துணிந்து ஹீரோவாக இல்லாமல், தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் தாராளமாக நடித்திருக்கலாம். அதை ஏன் பண்ணவில்லை என்பதுதான் தெரியவில்லை. அவர் நேரடியாக நடித்த வேற்று மொழி படமே 25 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளிவந்த இந்திரன், சந்திரனாகத்தான் இருக்கிறது.

நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருக்கும் கமலுக்கு, தன்னுடைய பட்ஜெட் தெரிந்தே இருப்பதால்தான், தன்னுடைய ஒன்றிரண்டு படங்கள் ஃப்ளாப்பானால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் நடித்து, அதை ஹிட் படமாக்கும் வித்தை தெரிந்திருக்கிறது. ஃப்ளாப் என்று சொல்லப்படும் உத்தம வில்லனே 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. பாபநாசம், உத்தமவில்லன் அளவிற்கு ஓடினால் கூட அது விநியோகஸ்தார்களுக்கும், தயாரிப்பளர்களுக்கும் இலாபத்தையே கொடுக்கும்; த்ருஷ்யம் படத்தின் மொத்த பட்ஜெட்டே 5 கோடிகள் என்கையில் பாபநாசத்தின் பட்ஜெட் 30 கோடிகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல் காமெடி படங்களிலோ, ரீமேக் படங்களிலோ நடித்துக் கொண்டே, தன்னுடைய உழைப்பை அதிகமாகக் கோரும் அடுத்த படங்களின் பட வேலைகளில் ஈடுபடுவது கமலின் பாணி. அதனால்தான் ஹேராமிற்கு முன் காதலா காதலா, ஆளவந்தானிற்கு முன் தெனாலி, அன்பே சிவம், விருமாண்டிக்கு முன், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், தசாவதரத்திற்கு முன் மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபத்திற்கு முன் மன்மதன் அம்பு, உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தவறுகள் செய்யாத மனிதனோ, குறைகள் இல்லாத மனிதனோ யாரும் இருக்க முடியாது. ஆனால் கமலை மட்டும் அவரிடம் சிறு தவறு/குறைகள் இருந்தாலும், அவருடைய நிறைகள் எதையும் கண்டு கொள்ளாமல், அவரைப் போட்டு துவைத்து எடுப்பதைத்தான் புரிந்து கொள்ள முடிவதில்லை. கமல் நல்ல நடிகர் என்றால், மோகன் லால், மம்மூட்டி அளவிற்கு அவர் நல்ல நடிகரில்லை என்பது. பாக்யராஜை விட விமல் கூட நல்ல நடிகராக இருக்கலாம். அதற்காக விமலையும், பாக்யராஜையும் ஒப்பிட முடியுமா? பாக்யராஜின் தகுதி நடிகர் என்பது மட்டுமா? கமலும் அதுபோல்தான்; நடிகர், இயக்குனர், தயாரிப்பாளார், கதை, திரைக்கதை, வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என்று பல முகங்கள். அவர் போல் நடிப்பிலும் மற்ற பிற துறைகளிலும் சிறந்து விளங்கும் யாராவது ஒருவரை கமலுடன் ஒப்பிட்டால் நியாயம். அட மோகன்லாலோ, மம்மூட்டியோ, அமிதாப்போ கமலை விட நன்றாக நடிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.இன்னும் வெறும் 'நடிகர்களாக' மட்டும் இருக்கும் இவர்களை கமலுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்? ஆப்பிளை, ஆப்பிளோடு ஒப்பிடுவதுதானே சரியாக இருக்க முடியும்.

நம்மை சுற்றி இருக்கும் அறுபது வயதான, நம்முடைய அப்பாவையோ, பெரியப்பா, சித்தப்பாவையோ, மாமாவையோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். ரிட்டையர்மென்ட் வாங்கிவிட்டு, ஹாயாக இந்துவோ, தந்தியோ படித்து பொழுதை போக்கிக் கொண்டிருப்பார்கள். இன்றைய இளம் நடிகர்களே வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வயதிலும், நடிகனாக உடல் உழைப்பு, கிரியேட்டராக மூளைக்கு வேலை என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் கமலை, இளைஞர்களான நாம் நம்முடைய இன்ஸ்பிரஸனாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். கமலைப் பாராட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அவரை தூற்றாமலாவது இருக்கலாமே!

Sunday, May 3, 2015

உத்தம வில்லன் - திரை விமர்சனம்


கலையும், கலைஞர்களும்தான் சாகா வரம் பெற்றவர்கள் என்று சொல்லும் படம்தான் கமலின் கதை, திரைக்கதையில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'உத்தமவில்லன்' படத்தின் கதை.

சூப்பர் ஸ்டாராக இருக்கும் கமலுக்கு இனிமேல் தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என்று தெரிய வருகிறது.தன்னை வைத்து நல்ல படங்களைக் கொடுத்த பாலசந்தர் இயக்கத்தில் கடைசியாக ஒரு படத்தில் நடிக்க ஆசை. இதற்கு நடுவில் குடும்பத்துக்குள் வரும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை. தான் நினைத்தபடி குடும்பப் பிரச்சனைகளையும், திரைப்படத்தையும் முடிக்க முடிந்ததா என்பதை சென்டிமென்ட், காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

திரைக் கலைஞனின் வாழ்வில் வரும் புயல் காரணமாக சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்திற்குள் எடுக்கும் கதையை காமெடியாக வரும்படி பார்த்துக் கொண்டது புத்திசாலித்தனம். ஆனால், எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகள் பெரிதாக சிரிப்பை வரவைக்காமல் இருப்பதுதான் படத்தின் பெரிய பலவீனம். ஒருவேளை குழந்தைகளை மனதில் கொண்டு அக்காட்சிகள் எடுக்கப்பட்டனவோ என்று தோன்றுகிறது. செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விக்க சினிமாவில் சிரித்து நடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை சரியாகக் காட்ட முடியாமல் போனதற்கும் இக்காட்சிகள்தான் காரணம். அதுவும் படத்தின் சரிபாதிக் காட்சிகள் எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகளாய் இருப்பதால் படமும் 'கொஞ்சம்' சுவாரசியமற்று நகர்கிறது. சாகாவரம் பெற்ற இரணியன்,வில்லுப்பாட்டு-தெய்யம் கலைகள் படத்தின் கதைக்கும், க்ளைமாக்சுக்கும் பெரிதும் துணை நின்றாலும், படத்திற்குள் வரும் சினிமாவில் கமலின் வழக்கமான சமகாலத்திய காமெடி கொண்டு படம் விரிவடைந்திருந்தால் ஒரு திரைப் படத்திற்குள் இரண்டு வெவ்வேறு(சென்டிமென்ட்+காமெடி) கதைகள் என்று அட்டகாசமாய் இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.

நீண்ட நாட்களுக்குப் (மகாநதி) பிறகு முழுமையான சென்டிமென்ட் படத்தில் கமல். ஜெயராம்-கமல் பேசிக் கொள்ளும் இடம், கமல் தன் மகளுடனும், மகனுடனும் பேசும் இடங்களில் எல்லாம் சென்டிமென்ட் காட்சிகள் நச். மகள், மகன் முன் கமல் தன் முதல் மனைவியுடனான பந்தத்தை கடிதத்தில் வெளிப்படுத்தியிருப்பதைக் காட்டுவதும், பின் தன் மேக்கப்பைக் கலைப்பதும் அருமை. தன் சுயநலத்துக்காகக் கமலை அவர் முதல் மனைவியுடன் பிரித்து கல்யாணம் செய்து கொள்ளும் ஊர்வசி, பின் 'பேருக்கு' ஊர்வசிக்குக் கணவனாக இருந்து  ஆன்ட்ரியாவுடன் கமலுக்கு ஏற்படும் காதல் என்று கமலின் சினிமா கலைஞன் பாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறது.படம் முழுவதும் க்ளோசப் ஷாட் வைத்தாலும், கமலால் முகத்தில் மாறுபட்ட உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டே இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. என் பியூட்டியைத் தின்னே தீர்த்துட்டேன், உலகத்திலுள்ள மத்த குழந்தைங்க மாதிரி இருந்தா உடம்பு கெட்டுடும் போன்ற புத்திசாலித்தனமான வசனங்களும் படம் நெடுக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை ஓகே.

இந்தப் படத்தின் போஸ்டர்களில் 'சினிமா கலைஞர்களுக்கு அர்ப்பணம்' என்றே சொல்லியிருக்கலாம். சினிமா கலைஞர்கள் இறந்த பின்னாலும், சாகா வரம் பெற்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற கருத்தைச் சொல்லும் படத்தில், பாலசந்தர் நடித்திருப்பதும், அவர் இறந்த பின்னும் நாம் அவரை படத்தில் பார்த்துக் கொண்டிருப்பதும், கமல் இந்தப் படத்தை ஏன் பாலசந்தருக்கு அர்ப்பணம் என்று சொன்னாரென்றும் படம் பார்க்கையில் புரிகிறது,

Sunday, April 26, 2015

ஓ காதல் கண்மனி - திரை விமர்சனம்


திருமணம் என்பது தங்களுடைய சுதந்திரத்தைப்  பறிக்கும்;கனவுகளைச் சிதைக்கும் என்று நினைக்கும் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் லிவ்விங் டுகெதராக வாழ முடிவெடுக்கிறார்கள். கடைசியில், கல்யாணத்திற்குப் பிறகும் கூட ஒருவருக்கொருவர் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் வாழ முடியும் என்று உணர்ந்து, கல்யாணப் பிணைப்பில் இணைவதுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓ காதல் கண்மனி படத்தின் கதை.

இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயத்திலேயும் ஃபாஸ்டாகத்தான் இருக்கிறார்கள் என்பதால், ஒரு பெண்ணைப் பார்த்து, ஃபோன் நம்பர் வாங்கி, காஃபி ஷாப்பில் சந்தித்து என்று பர பரவென அறிமுகக் காட்சிகள் நகர்கின்றன. US போய் செட்டிலாக விரும்பும் சாஃப்ட்வேர் இளைஞன் வேடத்திற்கு துல்கர் சல்மானும், Paris போய் செட்டிலாக விரும்பும் பில்டிங் ஆர்க்கிடெக்ட் வேடத்தில் நித்யாவும் பொருத்தமாக இருக்கிறார்கள். படம் முழுவதும் மும்பையில் நடப்பதால், பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் தம்பதிகள் வீட்டில் துல்கர் வந்து தங்குவதும், பின்பு நித்யா வந்து சேர்வதும் இயல்பாக இருக்கின்றன.

விவாகரத்தான பெற்றோருக்கு மகளான நித்யா, கல்யாணத்தை வெறுப்பதும்;பணத்திற்காகத்தான் தன்னைக் கல்யாணம் பண்ண ஒருவன் விரும்பினான் என்று அறிந்து கல்யாணத்தின் மேல் பிடித்தம் இல்லாமல் இருப்பதும்; பிரகாஷ்ராஜ் தம்பதிகளின் அந்நியோன்யத்தைப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக கல்யாணம் என்ற பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்  முடிவுக்கு வருவதும், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நித்யாவிற்காவது கல்யாணத்தின் மேல் வெறுப்பு வருவதற்கு இதுபோல் காரணமிருக்கின்றன.  அதேபோல் ரூம் மாறுகையில் மீனைக் கூட பத்திரமாக நித்யா எடுத்து வருகையிலேயே அவருடைய குணாதிசயம் 'கொஞ்சம்' புரிந்து விடுகிறது. அப்பா, அம்மா இல்லாததால் துல்கருக்கு கல்யாணத்தின் அருமை தெரியவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தாலும்;ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் போல் யாராலும் இருக்க முடியாது என்று சொல்லும் துல்கர், பின்னர் நித்யாவிடம் என்னாலும் பிரகாஷ்ராஜ் போல் இருக்க முடியும் என்று கூறினாலும், அவரின் கதாபாத்திரம் சரியாய் காட்சிப்படுத்தப்படாதது போல் இருக்கிற‌து. அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாண பந்தத்திற்குள் வரும் நித்யாவின் கண்களில் காதல் பொங்கி வழிகிறது. ஆனால், துல்கர் எந்த மாற்றமுமில்லாமல் தேமேவென்று இருக்கிறார். லிவ்விங் டுகெதர் வாழ்வும் கொஞ்ச நாட்களுக்குப் பின் போரடித்துவிடும் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்களோ என்னவோ இடைவேளைக்குப் பின் வரும் சில காட்சிகள் போரடிக்கின்றன. பொதுவாக மணிரத்னத்தின் காதல் படங்களில் ஹீரொயின்கள் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும், ஹீரோக்கள்தான்(கார்த்திக், அரவிந்த்சாமி, மாதவன்) மனதில் நிற்பார்கள். ஆனால் இப்படத்தில் நித்யா மேனன் மொத்தமாக மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார், ஃபிரிட்ஜ்ஜிற்குள் இருந்து அப்போதுதான் வெளிவந்தது போல் படம் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு முன் பெரிதாகக் கவராத பாடல்கள், படத்தோடு பார்க்கையில் நன்றாக இருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் ரகுமானின் இசையும், பின்னணி இசையும் இளமைத் துள்ளலோடு இருக்கிறது. வீடியோ கேம்ஸ் சாஃப்ட்வேட் இளைஞனுக்கு வைரமுத்துவின் காரா..ஆட்டக்காரா வரிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தன்னுடைய படங்களில் சில நல்ல பாடல்களை மணிரத்னம் முழுமையாகக் காட்சிப்படுத்தமாட்டார்(நெஞ்சமெல்லாம்-ஆயுத எழுத்து, பூங்காற்றிலே- உயிரே,), அதேபோல் இந்த படத்திலும் நானே வருகிறேன் பாடல் முழுமையாகக் காட்சிப்படுத்தவில்லை. பிசியின் கேமரா கச்சிதம். கல்யாணத்தை வெறுப்பவர்கள் கல்யாண வைபவத்தில் அறிமுகமாகிக் கொள்வது;கல்யாணத்தைப் பற்றி ஹீரோவும், ஹீரோயினும் என்ன நினைக்கிறார்கள் என்று முதல் சந்திப்பிலேயே சொல்லிவிடுவது;ஆக்சன் காட்சிகளாய் விரியும் அனிமேஷன் காட்சிகள், ரொம்பக் க்யூட்டான வசனங்கள் என்று ஓ.கேவான காதல் கதையைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.


Friday, December 12, 2014

லிங்கா - திரை விமர்சனம்


மக்களின் பல்ஸ் தெரிந்த நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் கே.எஸ், ரவிக்குமாரும் அடித்திருக்கும் ஹாட்ரிக் வெற்றிதான் 'லிங்கா'. தன் அப்பா(ரஜினி) கட்டிய அணைக்குப் பாதிப்பு வரும்போது மகன்(ரஜினி) வந்து அதைக் காப்பதுதான் 'லிங்கா' படத்தின் கதை.

பொதுவாக ரஜினி, ரவிக்குமார் கூட்டணியில் வரும் படம் எப்படி இருக்குமோ இம்மி பிசகாமல் இப்படமும் அப்படியே இருக்கிறது. இந்தப்படத்திலும் ராஜாவாக வரும் ரஜினி மக்களுக்காகத் 'தன்' பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், பின்பு சொத்துக்களை எல்லாம் இழந்து 'ஏழை' வாழ்க்கை வாழ்வதாகவும் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் திருடன் ரஜினி மரகதக் கல்லைத் திருடும் காட்சிகளுக்கெல்லாம் இயக்குனர், ரஜினி படத்திற்கு இதுவே அதிகம் என்ற அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார்.

திருடன் ரஜினியை விட கலெக்டர்+ராஜாவாக வரும் ரஜினி வசீகரிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா இருவரில் சோனாக்ஸிக்குத்தான் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். அவரும் அதை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ரஜினியின் வயதிற்கு அனுஷ்கா அவருக்குப் 'பொருத்தமாக' இருக்கிறார். எந்திரனை விட சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களை வைத்துக்கொண்டு இயக்குனர் படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது பெரும் சாதனைதான்.

"வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்லை;முயற்சி செஞ்சா எதுவும் கஷ்டமில்லை"," ஒரு காரியம் வெற்றி பெறுவதற்கு நிறைய பேர் துணையா இருப்பாங்க. ஆனால் ஒரு எதிரிதான் காரணமாய் இருப்பான்" , "இங்க(இதயத்தில்) சந்தோஷம் இருந்தா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கலாம்; இங்க சந்தோஷம் இல்லைனா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கமுடியாது" என்று ரஜினிக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் கவர்கின்றன. அரசியல் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். படத்தில் ராஜாவாக வரும் ரஜினி தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது, ரஜினியின் பிறந்தநாளில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையில் மக்கள் படும் கஷ்டங்கள் மனதில் பதிவது போன்று, சில கனமான காட்சிகளை வைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் காட்சிகளெல்லாம் சவுந்தர்யா ரஜினியின் கம்பெனி மூலம் பண்ணப்பட்டிருக்கும் போல். க்ளைமாக்ஸில் வரும் அக்காட்சிகளெல்லாம் பல்லிளிக்கின்றன. ரகுமானின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை.

ஒரே குடும்பத்தில் அப்பா, மகன்(அம்மா,மகள்) இருவருமே ரசிகர்களாக இருப்பது ரஜினிக்கு மட்டும்தான். அவர்கள் இருவருக்கும் பிடிக்கும்படி படம் பண்ணுவது சாதரணமான விசயமல்ல. ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி மறுபடியும் இதில் வெற்றி பெற்றிருக்கிறது. 

Saturday, August 2, 2014

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்


ஊரே பார்த்து பயப்படும் ஒரு ர‌வுடியை எப்படி அதே ஊர் பார்த்து சிரிக்கும் நிலை வருகிறது என்பதுதான் சித்தார்த், சிம்ஹா மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஜிகர்தண்டா' படத்தின் கதை.

குறும்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சித்தார்த், தன் படத்தின் கதைக்காக, மதுரையில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் சிம்ஹாவைப் பற்றி தெரிந்து கொள்ள மதுரை செல்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களை ஆக் ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்த ஜிகர்தண்டாவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

தாதாவான சிம்ஹாவை நெருங்க சித்தார்த் அவருடைய வலது கை ஆளுக்கு 'உலக(?)' சினிமா கொடுப்பதும், அதற்கு அவர் தமிழ் டப்பிங் வெர்ஷன் கேட்பதும், ஆங்கில கேங்ஸ்டர் படங்களின் காட்சிகளைத் தாதாவிற்கு ஐடியாவாகக் கொடுப்பதும் சுவாரசியம். இடைவேளைக்கு முன் வரும் அரை மணி நேரக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. 'பீட்சா' படத்தில் நடித்த 'மெயின்' கேரக்டர்கள் அனைவரும் இப்படத்திலும் இருக்கிறார்கள். யூகிக்க முடியாத திரைக்கதையாலும், புத்திசாலித்தனமான காட்சிகளாலும் படத்தை அழகாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சிம்ஹாவின் ப்ளாஷ்பேக் காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனம் பளிச். "தூரத்திலிருந்து பார்க்கும்போது இருந்த பயம் தோளில் கை போட்டவுடன் போயிடுச்சா", "நீ தோத்தாயா, ஜெயிச்சாயான்னு மத்தவன் சொல்லக் கூடாது, உனக்குள்ள இருக்கிறவன் தான் சொல்லனும்" என்று வசனங்களும் ஷார்ப்பாக இருக்கின்றன.

படத்தின் முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் செல்வதும், சித்தார்த், லட்சுமி மேனன் காதலில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதும் படத்தின் பலவீனம்; அதுவும் சித்தார்த்திற்கு லட்சுமி மேனன் மேல் காதல் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என்னதான் ரவுடியாக இருந்தாலும் சிம்ஹா, கேமரா முன்பு 'ஒப்புதல்' வாக்குமூலம் போல் கொடுப்பது நம்பும்படி இல்லை. ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் பயப்படுவதை விட, அதே ஆயிரம் பேர் கை தட்டிப் பாராட்டும்படி நடந்து கொள்வதுதான்  அவனுக்குப் போதையளிக்கும் என்று காட்டி விட்டு, சித்தார்த் கடைசிக் காட்சியில் 'நான்கு' பேர் சூழ நடந்து போவது போல் காட்டியிருப்பது ஒட்டவே இல்லை. சிம்ஹா, குழந்தையிடம் 'கை' கொடுக்கையிலேயே அவர் மனதில் முழுமையாக‌ மாற்றம் ஏற்பட்டு விடுகிறது, அத்துடனே படத்தை முடித்திருக்கலாம். கடைசி பத்து நிமிடக் காட்சிகளை, படத்தின் நீளம் கருதி  தாராளமாக வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக‌ சிம்ஹாவின் நடிப்பு கச்சிதம். ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு நன்கு துணை புரிந்திருக்கின்றன‌. 'பாண்டி நாட்டு கொடி' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் இயக்குனர் நன்கு உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது.

ஜிகர்தண்டா - குடித்து முடித்த பின்பும் நாக்கில் ருசி ஒட்டிக் கொண்டிருக்கும்